Friday, April 10, 2009

சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் ரூ.33161 கோடி தனியார் முதலீடு!

கடந்த 3 ஆண்டுகளில் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் தனியார் துறையினர் ரூ.33161 கோடி முதலீடு செய்துள்ளனர், என அஸோசெம் (Association of Chambers of Commerce and Industry) தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள முதல் நிலை நகரங்கள் டெல்லி, மும்பை போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள தனியார் துறை முதலீட்டோடு ஒப்பிடுகையில் இது 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகும். இந்தியாவின் முதல் நிலை நகரங்களில் இதே காலகட்டத்தில் ரூ.14240 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸோஸெம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டிலேயே உள் கட்டமைப்பு வளர்ச்சியில் தனியார் துறையின் முதலீட்டை அதிகம் கவர்ந்திழுப்பவை இன்றைக்கு சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று தென்னிந்திய நகரங்கள்தான். தனியார் துறையின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட 70 சதவீதம் கடந்த மூன்றாண்டுகளில் இந்த நகரங்களில்தான் செய்யப்பட்டுள்ளன.கடந்த 6 மாதங்களில் மட்டுமே ரூ.12990 கோடி மதிப்பிலான 12 ரியல் எஸ்டேட் திட்டங்கள் இந்த நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 6 திட்டங்கள் பெங்களூரில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 12150 கோடியில் 5 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் ரூ.4000 கோடி மதிப்பில் ஐடிசி ஓட்டல் உள்பட பல ஹோட்டல்கள் இந்த 6 மாதங்களில் துவங்கப்பட்டுள்ளன.பரப்பளவில், மக்கள் தொகையில் இவை சற்று சிறிய நகரங்களாக இருந்தாலும், சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான மக்கள், நிலையான அரசியல் தன்மை, கல்வியறிவு, குறைந்த ஊதியத்துக்கும் உழைக்கத் தயாராக உள்ள தொழிலாளர்கள் போன்ற காரணங்கள்தான் இந்த நகரங்களுக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதாக அஸோஸெம் தெரிவித்துள்ளது.

நன்றி : தட்ஸ்தமிழ்


இந்தியாவிலிருந்து யுஎஸ் திரும்பும் பிபிஓ 'சல்லே மே'!

இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பிபிஓ பணிகளைச் செய்துவந்த சல்லே மே நிறுவனம் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்புவதாக அறிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார மந்தச் சூழலில் அமெரிக்காவில் வேலையின்றித் தவிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு இந்த முடிவை மேற்கொண்டதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்கர்களுக்கு 2000 புதிய ஐடி மற்றும் கால்சென்டர் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர உள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் புனே, பெங்களூரு மற்றும் பிலிப்பைன்ஸில் பிபிஓ பணிகள் மற்றும் மாணவர்களுக்கு கடன் வசதி பெற்றுத் தருதல், பல்வேறு நிதி அமைப்புகளுக்கு பணத்தை வசூல் செய்தல் என பல பணிகளைச் செய்துவந்தது சல்லே மே. இதுவரை 1 கோடி மாணவர்களுக்கு 180 பில்லியன் டாலர்கள் வரை கடன் வாங்கித் தந்துள்ளது இந்த நிறுவனம்.ஆனால் நிதி நெருக்கடி, பொருளாதார மந்தம் காரணமாக நிறுவனத்தின் செலவைக் குறைக்க, கடந்த 2008-ம் ஆண்டு தனது பல கிளைகளை மூடியது.இப்போது, அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர மீண்டும் திரும்புவதாக அறிவித்துள்ளது.
நன்றி : தட்ஸ்தமிழ்

Thursday, April 9, 2009

டெபாசிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் அபாயம்!

பொதுமக்களின் டெபாஸிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் என்று இந்திய வங்கிகள் சங்க தலைவர் டிஎஸ் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்புச் சலுகைகளைப் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்துவது குறித்து நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கித் தலைவர் டி சுப்பாராவவுடன் பேசினார் நாராயணசாமி. பின்னர் அவர் கூறியதாவது: "ரிசர்வ் வங்கி மிகச் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இனி கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இடமில்லை. வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். ஆனால் வங்கி நடைமுறைகள் இதற்கு இடமளிக்கவில்லை. இப்போது குறைக்கப்பட்டுள்ள கடன் வழங்கல் வட்டியைச் சரிகட்ட, பொதுமக்களின் வைப்புகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டியைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அனைத்து வங்கிகளும் வைப்புத் தொகை வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளன", என்றார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி இன்னும் 2 சதவிகிதம் அளவுக்கு முதன்மைக் கடன் வழங்கலுக்கான (PLR) கடன்களுக்கான வட்டி விகிதத்தை அனைத்து வணிக வங்கிகளும் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இல்லை எந்த வங்கியும். மாறாக மக்களின் வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியில் கை வைக்க முடிவு செய்துவிட்டன.இது கடன் வழங்கலை மட்டுமல்ல, மக்களின் சேமிப்பையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணம் தேக்கம்!இன்னொரு பக்கம், கடன்களுக்கான வட்டிகள் குறையாமலே உள்ளதாலும், கடன் வழங்கும் நடைமுறைகளை வங்கிகள் மிகவும் கடினமாக்கி வைத்திருப்பதாலும் அனைத்து வணிக வங்கிகளிலும் ரூ.1,22,000 கோடிக்கும் அதிகமாக பணம் தேங்கி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் ரிசர்வ் வங்கியில் 3.5 சதவிகித வட்டியில் டெபாஸிட்டாக வைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெற ஆர்வம் காட்டததாலும், பொதுமக்கள் கடன் பெறும் அளவு 34 சதவிகிதம் குறைந்துவிட்டதாலும் இந்த நிலை என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஓபி பட் தெரிவித்துள்ளார்.

நன்றி : தட்ஸ்தமிழ்



எல்லாம் தேர்தல் மயம்

திங்களன்று சந்தைகளின் துவக்கமே அபாரமாக இருந்தது. சந்தை 186 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. ஏறியதற்கு காரணம், ஜி-20 மாநாட்டின் தொடர்ச்சியாக விளையப்போகும் நன்மைகளும், ஷார்ட் கவரிங்கும் இருந்ததாலும் சந்தை மேலே சென்றது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியதும் சந்தை மேலே சென்றதற்கு ஒரு காரணம்.நேற்று துவக்கமே சந்தையில் பெரிய சரிவில் தான் துவங்கியது. 362 புள்ளிகள் கீழே சென்று 10,171 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், பீனிக்ஸ் பறவை போல சந்தை உயிர்த்தெழுந்து 362 புள்ளிகள் நஷ்டத்தையும் சரி செய்து பின்னர் 207 புள்ளிகள் மேலேயும் சென்றது. நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.இறுதியாக 207 புள்ளிகள் கூடி 10,741 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. இது, 30 சதவீதத்திற்கும் மேலே சென்றிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் இது தான் அதிகபட்ச உயர்வு. எல்லாம் தேர்தல் மயம்.ஏற்றுமதி புள்ளி விவரங்கள் ஏமாற்றம் தருவதாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் 17.25 பில்லியன் அளவு ஏற்றுமதி செய்திருந்தோம். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் அது 12 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. இது, 30 சதவீதம் குறைவு.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்


Wednesday, April 8, 2009

அதிமுக-மதிமுக சிக்கல் தீருகிறது?-4 தொகுதிகள்?

அதிமுக-மதிமுக இடையே நிலவி வந்த தொகுதி உடன்பாடு சிக்கல் தீர்ந்து வருவதாகத் தெரிகிறது.நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தூதராக இந்திய கம்யூனிஸிட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சந்தித்துப் பேசிய பின்னர் மதிமுக கேட்ட விருதுநகர், தஞ்சாவூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளை ஒதுக்க ஜெயலலிதா முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தத் தொகுதிகள் கிடைத்தால் விருதுநகரில் வைகோ, தஞ்சையில் ஜெயபாரதி விஸ்வநாதன், ஈரோட்டில் கணேச மூர்த்தி, திருவள்ளூரில் மல்லை சத்யா ஆகியோர் போட்டியிடலாம்.அதே நேரத்தில் வைகோ கேட்கும் 5வது தொகுதியான காஞ்சிபுரம் தரப்படாது என்று தெரிகிறது. இங்கு சசிகலாவின் அக்காள் மகனும் இப்போது போயஸ் கார்டனில் கொடி கட்டிப் பறப்பவருமான டாக்டர் வெங்கடேஷ் தனக்கு மிக வேண்டிய ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளாராம்.இதனால் தான் கேட்ட 4 தொகுதிகள் கிடைக்கும் ஆறுதலுடன் கூடுதல் சீட்டை வைகோ கைவிட்டால் உடன்பாடு ஏற்படும்.இந் நிலையில் இன்று மாலை கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார் வைகோ.
நன்றி : தட்ஸ்தமிழ்


Tuesday, April 7, 2009

நானோ காரை விட அதிக விலையுள்ள புல்லட் பைக்

டாடாவின் நானோ கார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதர வரிகள் எல்லாம் சேர்த்தால் ரூ.ஒரு லட்சத்தை விடவும் கொஞ்சம் அதிகம் வரும் என்று சொன்னாலும், அதன் எக்ஸ் ஃபேக்டரி விலை ரூ. ஒரு லட்சம் தான். ஆனால் அதைவிடவும் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் ஒன்று ராயல் என்ஃபீல்ட்டின் புல்லட் மேசிஸ்மோ மாடல் பைக். இதன் இப்போதைய விலை ரூ.1,06,000.
நன்றி : தினமலர்


வட்டியை மேலும் குறைக்க வங்கிகள் முன்வர வேண்டும் : ரிசர்வ் வங்கி கவர்னர் வேண்டுகோள்

இந்தியாவின் பணவீக்கம் ஜீரோ சதவீதத்தை ஒட்டியே இருந்து வருவதால், வங்கிகள், வட்டியை மேலும் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைம்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு செமினாரில் கலந்து கொண்டு பேசிய சுப்பாராவ், ரிசர்வ் வங்கி, முக்கிய வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. நிதி கொள்கையையும் எளிதாக்கியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மற்ற வங்கிகளும் வட்டியை குறைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பணவீக்கம் குறைந்து வருவதையடுத்து கடந்த அக்டோபரில் இருந்து பல தடவைகள் ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்திருக்கிறது. மற்ற வங்கிகளும் கடந்த காலத்தில் வட்டியை குறைத்திருக்கின்றன. இருந்தாலும் அவைகள் மேலும் வட்டியை குறைக்கலாம் என்றார் சுப்பாராவ். வங்கிகளில் கூடுதல் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ரிசர்வ் வங்கி, ரிபோ ரேட்டை 5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரிபோ ரேட்டை 3.5 சதவீதம் வரையிலும் குறைத்திருக்கிறது.
நன்றி : தினமலர்