Tuesday, December 9, 2008

வேறு தொழில் தேடும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள்

நிலத்தின் மதிப்பு உயர்வு, பொருளாதார சிக்கல், கடனுக்கான வட்டி உயர்வு உள்ளிட்டவை, ரியல் எஸ்டேட் துறையை தற்போது புரட்டி போட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உச்சத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த இத்துறை, தற்போது சரிவை கண்டுள்ளது.
நிலங்கள், வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை சரிந்து, பல புரோக்கர்கள் வேறு தொழிலுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக, ஒருவர் தன்னுடைய நிலம், வீடு எதுவாக இருந்தாலும் நேரடியாக விற்பதை விட புரோக்கர்கள் மூலம் எளிதாக விற்க முடியும் என்ற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. சென்னை நகரில் ஐ.டி., நிறுவனங்கள் கால் பதித்த காலம் அது.
நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் புரோக்கர்கள், தாங்கள் வைத்தது தான் விலை என்ற அளவில் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலங்களின் விற்பனை கனஜோராக நடந்ததுடன், நிலங்களின் மதிப்பும் உயரத்துவங்கியது. நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட புரோக்கர்கள், அதிக ஆசையில் ஆங்காங்கே விற் பனைக்கு உள்ள நில உரிமையாளர்களை அணுகி, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து, தாங்களே நிலத்திற்கான விலையை நிர்ணயம் செய்து, சந்தை விலையை அதிகரிக்கத் துவங்கினர். இதனால், ஒரு கிரவுண்டு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலங் கள் எல்லாம், குறுகிய காலத்தில் 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டன. முழு நேர ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அதிகளவில் களமிறங் கினர். இதில் கிடைத்த லாபத்தைப் பார்த்த பலர், வெளியூர்களிலிருந்தும் சென்னைக்கு வந்தனர். சென்னையை தொடர்ந்து, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் எல்லை தாண்டி புரோக்கர்கள் நெட்ஒர்க் விரிந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தே ஐ.டி., தொழிலில் சுணக்கம் ஏற்பட்டது. தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள், ஊழியர்களை வெளியில் அனுப்பத் துவங்கின. அதே நேரம், ஐ.டி., நிறுவனம் மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்களை நம்பி லோன் மேளாக்களை நடத்திய வங்கிகள், வட்டி வீதத்தை உயர்த்த ஆரம்பித்தன. இதனால், மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக சம்பளம் பெற்று வந்தவர்கள் வீடோ, நிலமோ வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பாகவே, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி துவங்கியது. இந்த வீழ்ச்சி அலையில், புரோக்கர் தொழிலில் நீண்ட நாட்களாக இருப்பவர்கள் தாக்கு பிடித்தனர். மற்றவர்கள், இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். நிலத்திற்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டவர்கள், குறிப்பிட்ட காலம் முடிந்ததால் பணத்தைத் திரும்பப் பெற முடியாமல், தொழிலைத் தொடர முடியாமல் நொடித்துப்போயுள்ளனர். தங்களது சொந்த ஊர்களில் பல்வேறு தொழில்களை பார்த்துவந்த நிலையில் புரோக்கர் தொழிலில் ஆர்வத்துடன் இறங்கியவர்களில் பலர், 'அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை'யாக, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து, தென்சென்னை பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் கூறுகையில், ''இப்போது சென்னையில் பல இடங்களில் நிலங்களை விற்க முடியாமல் உரிமையாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். பலர் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லத் துவங்கிவிட்டனர். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டதால் ஏற்பட்ட நஷ்டம் தான் இதற்கு காரணம்,'' என்றார். - நமது சிறப்பு நிருபர் -

நன்றி : தினமலர்


Sunday, December 7, 2008

பங்குச் சந்தை சாண் ஏறி முழம் வழுக்குகிறது

வெள்ளியன்று மறுபடி சந்தை 9,000க்கும் கீழே சென்று முடிவடைந்திருக்கிறது. முழம் ஏறி சாண் வழுக்கினால் பரவாயில்லை. சந்தையில் இப்போதெல்லாம் சாண் ஏறி முழம் வழுக்குகிறது. வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 482 புள்ளிகள் வரை மேலே சென்றது. வெள்ளியன்று அதற்கு நேர்மாறாக அதற்கு பாதியளவு சரிந்தது. மும்பை பங்குச் சந்தை 265 புள்ளிகள் குறைந்து 9,000க்கும் கீழே வந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,965 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,714 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பணவீக்கம் இந்த வாரம் 8.4 சதவீதமாக முடிவடைந்திருக்கிறது. சென்ற வாரம் 8.84 சதவீதமாக இருந்தது. நல்ல இறக்கம் தான். ஆனால், சந்தையில் வெள்ளியன்றும் அது பரிணமிக்கவில்லை. வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வந்த நல்ல செய்தி, பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும், டீசல் விலை மூன்று ரூபாயும் குறையவுள்ளது. பெட்ரோல் விலை 10 ரூபாய் அளவு குறையும் என்று எதிர்பார்த்தன. குறைவு குறைவாக இருக்கிறது. ஆதலால், சந்தை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 147 டாலராக உச்ச பட்சமாக இருந்தது, தற்போது 44 டாலர் அளவில் வந்துள்ளது. கிட்டத்தட்ட 66 சதவீத தள்ளுபடியில் வந்து நிற்கிறது. ஆனால், தற்போது பெட்ரோல் விலையோ 10 சதவீதம் அளவு தான் குறைக்கப் பட்டிருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்போசிஸ் வரும் ஆண்டில் ஆள் எடுப்பதைக் குறைக்கும் என்று செய்தி வந்தவுடன், அது சந்தையில் சாப்ட்வேர் பங்குகளை ஒரு இறக்கு இறக்கிப் பார்த்தது வெள்ளியன்று. ஏனெனில், இன்போசிஸ் இந்த முடிவை எடுத்தால், மற்ற கம்பெனிகளுக்கும் அதே போலத்தானே இருக்கும் என்ற முடிவுக்கு சந்தை வந்தது. அது, சந்தையை அசைத்துப் பார்த்தது. இது தவிர, வெள்ளியன்று வங்கிப் பங்குகளும், கட்டுமானத்துறை பங்குகளும் குறைந்தன. மும்பையில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாதது ஒரு பெரிய நிம்மதி. வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் எப்படி இருக்கும்? எல்லாரும் தற்போது எதிர்பார்ப்பது சனியன்று ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ சதவீதத்தை முறையே 200 புள்ளிகளும், 125 புள்ளிகளும் குறைக்கலாம் என்பது தான். அப்படி குறைக்கப்பட்டால், சந்தையில் குறைந்து வரும் பணவீக்கம், பெட்ரோல் விலை குறைப்பு ஆகியவைகளை வைத்து திங்களன்று மேலே செல்லும். வரும் 12ம் தேதி இண்டஸ்டிரியல் டேட்டா புள்ளிவிவரம் வரவுள்ளது. அது ஒரு முக்கிய நிகழ்வாகும். அதைப் பொறுத்தும் சந்தையில் மாற்றங்கள் இருக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


வீட்டுக்கடன் வட்டி குறையும்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, விலைவாசியை குறைப்பதற்கும், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கும், சுணக்கம் கண்டுள்ள உற்பத்தித் துறை மீண்டும் உற்சாகமடைவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்புக்கு நிதித்துறை வந்ததும், பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வங்கிகளுக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களுக்கும், வங்கிகளிடம் இருந்து பெறும் குறைந்த கால டிபாசிட்களுக்குமான வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக, வங்கிகளிடம் இருந்து பெறப்படும் குறைந்த கால டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளுக்கு கூடுதல் நிதிவசதி கிடைக்கும். தாராளமாக கடன் கொடுக்க முடியும். கடன்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இது டிசம்பர் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகள் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். சமீப காலமாக உற்பத்தித் துறை முடக்கம் கண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிட்கோவுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி மறுநிதி அளிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம், வங்கிகளின் நிதி இருப்பு விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதில் மாற்றம் ஏற்படுத்தாமல், தற்போது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் கூறியதாவது; ''பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை தொடர்ந்து, தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் பணவீக்கம் குறையும் என்று நம்புகிறோம். சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் நிலையை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்,'' என்று கூறினார். வட்டிவிகித குறைப்பைத் தவிர, சில குறிப்பிட்ட வங்கிகள், அன்னிய செலாவணி மாற்று பாண்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள் ளது. இந்த பாண்டுகள், கவர்ச்சிகரமான கட்டணத்தில் இருப்பதால், வங்கிகள் இதனால் பலன் பெறும். சர்வதேச நிதி நெருக்கடியால் பண பட்டுவாடாவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதி கிடைக்கும்.
நன்றி : தினமலர்


Saturday, December 6, 2008

கூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள்: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்

கூடங்குளத்தில் கூடுதலாக நான்கு அணுசக்தி உலைகள் அமைப்பது, ரஷ்ய டிசைனில் அணு உலைகள் மேலும் அமைப் பது தொடர்பாக, இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நேற்று கையெழுத்தானது. மேலும், எம்.ஐ.,-17 ரகத்தைச் சேர்ந்த 80 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப் பை வலுப்படுத்துவது என்றும், குறிப்பாக மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து, இதை கண்டு கொள்ளாத நாடுகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவது தொடர்பாகவும் கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இவற்றில் பிரதமர் மன் மோகன் சிங், ரஷ்ய அதிபர் மெட்வேதவ் கையெழுத் திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மெட்வேதவுடன் பத்திரிகையாளர் களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், 'இருநாட்டு உறவுகளில் இது ஒரு மைல் கல்' என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது: வரும் 2010ம் ஆண்டுக் குள் இரு நாட்டு வர்த்தகத்தை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். அதேபோல, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மனதை நோகடித்த சம்பவம். பக்கத்து நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அந்த நாடுகள் அவர்களுக்கு தங்குமிடமாக இருப்பது பற்றியும் உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இந்தியாவுக்குப் பக்க பலமாக ரஷ்யா நின்றது, மிகவும் நல்லெண்ண நடவடிக்கை. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். உடனிருந்த அதிபர் மெட்வேதவ், 'இருநாடுகளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வகையில் அணுசக்தி ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. ராணுவ ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் இடையே இருந்த சில தடைகள் நீங்கவும், மேலும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் பேச்சுக்கள் நடந்தன' என்றார். இந்த ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு தொடர் பாகவும், அதேபோல, கலாசாரம், சுற்றுலா, சுங்கத்துறை, வர்த்தகம் தொடர்பாகவும் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.
நன்றி ; தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறையும்

கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிந்து, பேரல் ஒன்றுக்கு 1,125 ரூபாய் அளவிற்கு வரும் என்றும், அடுத்தாண்டின் பாதிக்கு மேல் தான் சரிவில் இருந்து மீளும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
அமெரிக்க வங்கியைச் சார்ந்த மெரில் லிஞ்ச் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்தாண்டின் பின்பகுதியில் தான் கச்சா எண்ணெய் விலை ஏற துவங்கும். பொருளாதார நெருக்கடியால், அதிகமாக எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் எண்ணெய் தேவை குறைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை குறைந்துள் ளது. சீனா மற்றும் 'ஓபெக்' அல்லாத நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது, கச்சா எண்ணெய் தற்காலிகமாக பேரல் ஒன்றுக்கு 25 அமெரிக்க டாலர் (1,125 ரூபாய்) அளவிற்கு வீழ்ச்சி காணும். 2009ம் ஆண்டு முதல் காலாண்டின் இறுதி மற்றும் இரண்டாம் காலாண்டில் இந்த விலை சரிவு ஏற்படும். இரண்டாம் காலாண்டிற்கு பின் மீண்டும் விலை அதிகரிக்க துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Friday, December 5, 2008

வீட்டு கடன் வட்டி விகிதம் குறையும்

ஆட்டோ மொபைல் துறையில், பல லட்சக்கணக்கானோர் வேலை இழப்பை தவிர்ப்பதற்காக, வர்த்தக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் சுங்க வரி குறைத்து அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரம், வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள வீட்டுக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கு, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. நிதித்துறையைக் கையில் எடுத்துக் கொண்ட பின், பிரதமர் மன்மோகன் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு பற்றி அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதில், முக்கியமாக கேபினட் செயலர் கே.எம். சந்திரசேகர் தலைமையிலான செயலர்கள் கமிட்டி, முக்கிய முடிவுகளை நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து ஆலோசித்ததால், இன்று கடன் வட்டிவிகித அளவு குறைப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டும், 65 பேர் வேலையிழந்தது குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. தற்போது உரிய முடிவு எடுக்கப்படாவிட்டால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுவிடும். அதே நேரத்தில், குறைந்த கால கடன்களுக்கான வட்டி விகித்தத்தை ரிசர்வ் வங்கி குறைக்க உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சந்தைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் 2,000 கோடி ரூபாயில் திட்டமும் அறிவிக்கப்பட உள்ளது. நிறுவனங்கள் பணப்புழக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொள்ள, விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. வர்த்தக வாகன உற்பத்தி துறையில், உற்பத்தி சரிந்து வருவதைத் தொடர்ந்து, அவற்றுக்கு விதிக்கப்பட்டு வரும் சுங்க வரியில் சலுகை அளிக்கப்பட உள்ளது. தற்போது, பஸ்களுக்கு 12 சதவீதமும், டிரக்குகளுக்கு 14 சதவீதமும் சுங்க வரி விதிக்கப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளில் தேவை அதிகரிப்பு இருந்தும் கூட, கடந்த அக்டோபர் மாதத்தில், ஏற்றுமதியாளர்கள் 12 சதவீத சரிவை சந்திக்க நேர்ந்தது. இதைத் தவிர்க்க, நிச்சயம் சலுகை அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


Thursday, December 4, 2008

நெட்ஒர்க் கிடைப்பதில் சிக்கல்

சில தினங்களாக, ஏர்டெல் மொபைல் போன் நெட்ஒர்க் சரியாகக் கிடைக்காததால், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் தனது டவர்களை நிறுவி, ஏர்டெல் நிறுவனம் தனது நெட்ஒர்க்கை விரிவுபடுத்தியுள்ளது. பெரும்பான்மை மக்கள், ஏர்டெல் நிறுவனத்தின் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு இணைப்புகளைப் பெற்றுள்ளனர். சில தினங்களாக, சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஏர்டெல் இணைப்பு பெற்றவர்கள் உள்ளூரிலும், வெளியூர்களுக்கும் பேசும்போது சரியாக நெட்ஒர்க் கிடைக்கவில்லை என்றும், இணைப்பு கிடைத்து பேசத் துவங்கும்போது, இணைப்பு துண்டிக்கப் படுவதாகவும், பேசுபவர்களில் ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு கிடைக்காமல் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். சமீபத்தில், மழை பெய்த பின், இப்பிரச்னை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 'சி.யு.ஜி.,' திட்டத்தின் கீழ் வரும் இணைப்புகளுக்கு இடையில் பேசும்போது பல நேரங்களில் இணைப் பே கிடைப்பதில்லை என்றும், எதிர்முனையில், போனை பயன்படுத்தாத நிலையிலும், 'நெட்ஒர்க் பிசி அல்லது போன் சுவிட்ச் ஆப்' என்று வருவதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, ஏர்டெல் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, ''இதுபோன்ற புகார்கள் எதுவும் எங்களுக்கு இதுவரை, குறிப்பிட்டு வரவில்லை. சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார்கள் வரும்போது, அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள டவர்களில் ' பூஸ்டர்கள்' அமைத்து சரி செய்துவிடுவோம். ''தற்போதுள்ள சூழலில் நெட்ஒர்க்கிலோ, டவர்களிலோ எந்த பிரச்னையும் இல்லை. இது போன்ற நெட்ஒர்க் பிரச்னைகளுக்காக வரும் புகார்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகின்றன,'' என்றார்.
நன்றி : தினமலர்