Sunday, November 1, 2009

உன் கண்ணில் நீர்வழிந்தால்...

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இலவச கண் மருத்துவ முகாமில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 12 பேர், கண்களில் நோய்த் தொற்று ஏற்பட்டு, பார்வை பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் தீவிர சிகிச்சைக்காக சென்னை சங்கர நேத்ராலய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாலும், இவர்களில் 4 பேரின் கண்களில் நோய்த்தொற்று மிக அதிகமாக இருந்ததால், உயிரைக் காப்பாற்ற அவர்களது கண்களை அகற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என அகற்றப்பட்டது.

விழிப் படல மாற்றுச் சிகிச்சை முதலாக, கண்புரை அகற்றும் சிகிச்சை வரையிலும் கண் மருத்துவமனைகளில் எப்போதும் ஒரு கண்ணுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்படும். திரைப்படங்களில் காட்டப்படுவதைப்போல இரண்டு கண்களிலும் கண் அறுவைச் சிகிச்சை செய்து, இரண்டு கண் கட்டுகளும் ஒரே நேரத்தில் பிரிக்கப்படும் அபத்தங்கள் உலகின் எந்தக் கண் மருத்துவமனையிலும் நடப்பதில்லை என்பதால், இந்த 4 பேரும் தங்களது ஒரு கண்ணை மட்டுமே இழந்துள்ளனர். மற்ற கண்களின் புரையை தரமான மருத்துவமனைகளில் நீக்கி, பார்வையை எளிதில் பெற முடியும் என்பது நம் மனதுக்கு ஆறுதல் தருகிறது.

மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிடும். இன்னும் 2 பேருக்கு ஓரளவு பார்வை கிடைக்கச் செய்ய இயலும் என்று சங்கர நேத்ராலய நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்த் தொற்றுக்குக் காரணமான பாக்டீரியாவை அடையாளம் கண்டுள்ள சங்கர நேத்ராலய, தனது ஆய்வுக் கூடத்திலேயே இந்த பாக்டீரியாவின் மரபீனி (டிஎன்ஏ) அமைப்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், இந்த பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற மருத்துவச் சிகிச்சைகளை முறைப்படுத்தி, அனைத்து மருத்துவர்களும் பயன்பெற முடியும்.

இதேபோன்ற சம்பவம் ஓர் ஆண்டுக்கு முன்பு திருச்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையிலும் நிகழ்ந்தது. சிலர் பார்வை இழந்தனர். மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கண் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் காலம் நம் ஞாபகத்தை மூடி மறைத்துவிட்டது. தற்போது நெல்லூரில் நடைபெற்றுள்ளதால் மீண்டும் இப்போது நம் கண்களை இவர்களின் கண்கள் திறந்துள்ளன.

இந்தச் சம்பவங்களிலும் பொதுவான ஒரு விஷயம், இவை இலவச மருத்துவ முகாம்களில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு நிகழ்ந்தவை என்பதுதான். அதற்காக, நோயாளிகளைத் தேடிப் போய், கண்களைச் சோதித்து அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், இலவச கண்புரை அகற்றம், அதன் பின்னர் கண்ணாடி அனைத்தும் வழங்கும் இத்தகைய கண் சிகிச்சை முகாம்களின் சேவையைக் குறைத்து மதிப்பிடுவதும் சரியாக இருக்காது. இத்தகைய முகாம்கள் நடக்காவிட்டால், பல குடும்பங்களில் பார்வை இருண்டவர்கள் நிறையப் பேராக இருப்பார்கள்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய இந்த நோய்த்தொற்றுக்குக் காரணம் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. மருத்துவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், இத்தகைய இலவச அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவர்கள் கையாளும் கருவிகள், மருந்துகள், சிகிச்சையின்போது கண்களைக் கழுவும் மருத்துவ நீர், புரையை அகற்றியவுடன் பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (ஐ.ஓ.எல்.) எல்லாவற்றிலும் தரத்தைக் குறைத்துச் செலவை ஈடுகட்ட (அல்லது லாபத்தை பெருக்கிக்கொள்ள) முயற்சிக்கும்போதுதான் இத்தகைய விபரீதங்கள் நடந்துவிடுகின்றன. அதுதான் உண்மை.

இலவச மருத்துவச் சிகிச்சை என்று சொல்லப்படும் இந்தக் கண் மருத்துவச் சிகிச்சைகள் 99 சதவீதம் அரசு அல்லது ஏதாவொரு உள்நாடு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகளால் நிதி பெறுகின்றன. இவர்கள் கொடுக்கும் தொகையிலேயே மருத்துவமனைக்கு ஓரளவு வருவாய் கிடைக்கும் வகையில்தான் தருகிறார்கள். இருப்பினும் ஒரு சில கண் மருத்துவமனைகள், இந்தச் சேவையிலும் அதிக லாபம் பார்க்கக் கருதும்போது, மருந்துகள், செயற்கை லென்ஸ் எல்லாவற்றிலும் விலை மலிவான, தரம் குறைந்த பொருள்களுக்கு மாறுகின்றன.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், சில நடவடிக்கைகளை அரசு-எந்த மாநிலமானாலும்-மேற்கொள்வது அவசியம். ஒவ்வொரு தரமான கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு என்ன செலவாகிறது; அதற்காக தன்னார்வ அமைப்புகள் வழங்கும் தொகை எவ்வளவு? அந்தத் தொகை தரமான சிகிச்சைக்குப் போதுமானதா? தரமான மருந்துகள், என்னென்ன லென்ஸýகள் சந்தையில் உள்ளன, இவற்றை மட்டுமே மருத்துவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு கண்டறிய வேண்டும். அறுவைச் சிகிச்சை அரங்கம் தூய்மைக்குச் சான்றுகள் பெறச் செய்தல் வேண்டும்.

மேலும், மருந்துக் கம்பெனிகள் அனைத்தும் சுகாதாரமான உற்பத்தி முறையை (Good Manufacturing Practice) கையாளுகின்றனவா என்று மருந்து வாங்கும் மருத்துவமனைகளால் அறியமுடிவதில்லை. மருந்து நிறுவனத்தின் பெயரை வைத்து நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யத்தான் முடிகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, சுகாதாரமான உற்பத்தி முறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் குறித்த பட்டியலை அரசு வெளியிட்டால் மருத்துவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இத்தகைய சம்பவங்களால் சிலர் பார்வை இழந்தவுடன் அரசாங்கம் இழப்பீடு வழங்குவதைக் காட்டிலும் மிக முக்கியமானது இத்தகைய நடைமுறைகளும் அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும்தான், மருத்துவருக்கும் மருத்துவமனைக்கும் மட்டுமல்ல, மக்களுக்கும் அதுவே பயன் தரும்.
நன்றி : தினமணி

புதிய குறியீடுகளுடன் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை

ரூபாய் நோட்டுகளிலுள்ள பாதுகாப்பு அம்சங்களைக் கூட, அப்படியே காப்பியடித்து அச்சுஅசலாக கள்ளநோட்டுகளை அச்சடித்து பரப்பி வருகிறது பாகிஸ்தான். இதனால், இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுக்குரிய பாதுகாப்புக் குறியீடுகளை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் மீது வன்மத்துடன் இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவது, மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அவ்வப்போது 100, 500,1,000 ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்புக் குறியீடுகளை நுணுக்கமாக மாற்றிக் கொண்டே வந்தாலும், மாற்றம் செய்யப் பட்ட குறியீடுகளை, நோட்டின் பேப்பர் உட்பட காப்பியடித்து பாகிஸ்தான் கள்ளநோட்டு

களைத் தயாரித்து விடுகிறது.ரூபாய் நோட்டின் உயர்தரத்தாள், அதிலுள்ள வெள்ளிக்கோடு அல்லது பச்சைக் கோடு, அலங்காரப் பூக்கள், காந்திஜி, எண்கள், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து, வாட்டர் மார்க் எனப்படும் வெற்றிடம் போன்றவை கள்ளநோட்டுகளிலும் அப்படியே இருக்கின்றன.கடந்த 1996ல் அச்சான நோட்டுகளின் சாயலில் கள்ளநோட்டுகள் வந்ததால், 2006ல் ரிசர்வ் வங்கி புதிய பாதுகாப்புக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியது.

500 ரூபாய் நோட்டிலுள்ள பச்சைக் கோடு; அந்தக் கோட்டில் அச்சாகியிருக்கும் 'பாரத் ஆர்.பி.ஐ.,' என்ற வார்த்தை; நோட்டின் குறுக்கு மறுக்காக ஓடும் கண்ணாடி நூலிழைகள்; நோட்டின் ஒரு பக்கத்தில் உள்ள மலர் அலங்காரங்களில் 500 என்று தெரிவது; நோட்டு வெளியிடப்பட்ட ஆண்டு போன்றவை இந்தப் புதிய குறியீடுகளில் அடக்கம்.பாகிஸ்தானிலுள்ள குவெட்டா என்ற இடத்தில் அச்சாகி, நேபாளம் வழியாக உத்தரபிரதேச மாநிலத்துக்குள் இந்தக் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்தக் கள்ளநோட்டுகளில் மேலே சொல்லப்பட்ட புதிய பாதுகாப்புக் குறியீடுகள் அப்படியே இருந்தன. இது மத்திய

அரசைப் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கி யிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் உ.பி.,யிலுள்ள 'கொண்டா' வாரணாசிக்கருகிலுள்ள 'மலாகியாபுல்' என்ற இடங்களில் கள்ளநோட்டுகளைக் கண்டுபிடித்துள் ளது. கடந்த 2002ல் ஐந்து கோடியே 57 லட்ச ரூபாய்; 2004ல் ஆறு கோடியே 81 லட்ச ரூபாய்; 2007ல் எட்டு கோடி ரூபாய்; 2008ல் 15 கோடி ரூபாய் என்று ஆண்டுக்கு ஆண்டு பிடிபடும் கள்ளநோட்டுகளின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.தற்போது இந்திய அரசு நோட்டு தயாரிக்கும் உயர்தரத் தாள்களை இங்கிலாந்து,நெதர்லாந்து,ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஐந்து நாடுகளிலுள்ள ஆறு கம்பெனிகளிடம் வாங்கி வருகிறது.இந்தியாவிலுள்ள 'ஹொஷங்காபாத்' என்ற இடத்திலுள்ள நோட்டுத்தாள் தயாரிக்கும் கம்பெனி, 100,500,1,000 ரூபாய் நோட்டுக்களைத் தவிர்த்து பிற நோட்டுகளுக்கான தாள்களை மட்டும் தயாரித்து வருகிறது. இதன் உற்பத்தித் திறன் வெறும் இரண்டாயிரத்து 500 மெட்ரிக் டன் மட்டுமே. இதனால், பாதுகாப்பான உயர்தர தாள்களைத் தயாரிக்கும் 12 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு புதிய பேப்பர் மில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்த தகவல் களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. உள்நாட்டிலேயே தரமான கரன்சி நோட்டு பேப்பர்களைத் தயாரிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தப் புதிய மில் உருவாகி வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி தலைமையகம் ,'500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் எந்தெந்த பாதுகாப்புக் குறியீடுகளை கள்ளநோட்டுகளில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதைக்

கண்காணித்து வருகின்றோம். 'புதிய குறியீடுகள் உருவாக்குவது பற்றிய ஆலோசனை நடந்து வருகிறது. தேவைப்படும்போது அந்தக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.


கள்ளநோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் மேலிருந்து கீழாக பளபளக்கும் பச்சைக் கோடு ஒன்றிருக்கும். அதில் 'ஆர்.பி.ஐ.,' என்பது ஆங்கிலத்திலும், 'பாரத்' என்பது இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். பச்சைக் கோட்டினை வெளிச்சத்தில் பார்க்கும்போது நீல நிறத்தில் தெரியும். கள்ளநோட்டுகளில் பச்சைக் கோடு இருக்கும். ஆனால் அதில் 'ஆர்.பி.ஐ., பாரத்' என்று பொறிக்கப்பட்டிருக்காது. வெளிச்சத்தில் பார்க்கும் போது பச்சைக் கோடு பச்சையாகவே

தெரியும். வேறு நிறங்களுக்கு மாறாது.

Saturday, October 31, 2009

வினை விதைத்தவன்...

பயங்கரவாதம் மதமறியாது என்பது மட்டுமல்ல, மனிதாபிமானமும் அறியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது புதன்கிழமையன்று பெஷாவரில் அரங்கேற்றப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு. இதுவரை பாகிஸ்தான் கண்டறியாத மிகவும் கொடூரமான இந்தத் தாக்குதலில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் ஒரு புராதன நகரம். பெஷாவர் நகரில் கடைத்தெரு என்பது "பர்தா' அணிந்த மத்தியதர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மகளிர் அதிக அளவில் செல்லுகின்ற இடம். பெஷாவரின் மையப்பகுதியில் அமைந்த கிஷாகுவானி பஜார் எனும் நாற்சந்தியில் அமைந்த கடைத்தெரு மத்தியான வேளைகளில் குழந்தைகளுடன் பெண்கள் அதிக அளவில் காணப்படும் இடம். அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறார்கள் பயங்கரவாதிகள்.

இந்தத் தாக்குதலும் சரி, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டனின் பாகிஸ்தான் விஜயத்தன்று நடைபெற்றிருப்பது என்பது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. அமெரிக்காவின் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தும் போருக்கு எதிரான சவாலாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று கருதினால் தவறில்லை.

இதுபோன்ற தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் ஒரு நிர்வாகத்தின் தலைமையில் இயங்கும் ராணுவம் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் கட்டுப்படுத்தும் மனத்துணிவை இழந்துவிடும் என்று இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் நினைத்திருக்கலாம். அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படும் என்றுகூட அவர்கள் நம்பக்கூடும்.

கடந்த ஒருமாதமாகவே இதுபோன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடந்தேறியவண்ணம் இருக்கின்றன. சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்பட பல இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தேறியிருக்கின்றன. தீவிரவாதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக பாகிஸ்தானிய மக்களின் எண்ண ஓட்டம் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதுதான் உண்மை. தங்களது மானசீக ஆதரவால் வளர்ந்த தலிபான்கள் } மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று வித்தியாசம் பாராமல், தங்கள் மீதே தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தானியப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

தலிபான்களுக்கு ஆரம்பத்தில் பாகிஸ்தானிய பொதுமக்கள் மத்தியில் இருந்த ஆதரவு இப்போது கடுமையான எதிர்ப்பாகவும், வெறுப்பாகவும் மாறியிருக்கிறது. ராணுவத்தைவிடத் தீவிரமாக தலிபான்களையும் பயங்கரவாதக் குழுக்களையும் எதிர்க்க மக்கள் துணிந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை வேரறுக்க இதைவிட நல்ல வாய்ப்பு பாகிஸ்தான் ராணுவத்துக்குக் கிடைக்காது என்கிற நிலைமை. மக்களின் முழுமனதான ஆதரவு அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இருக்கும் நேரம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்குவதற்குப் பதிலாக, பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்றும், இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு நமக்கு உதவக்கூடியவர்கள் என்றும் பிரித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க முற்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ஒரு விபரீதமான கற்பனையை முன்வைக்க முற்பட்டிருக்கிறார் ஒரு மூத்த பாகிஸ்தானிய அதிகாரி. தலிபான்களுக்குப் பணஉதவி அளித்து அவர்களை வளர்ப்பதே இந்தியாதான் என்று திருவாய் மலர்ந்திருக்கும் அந்தப் பாகிஸ்தானிய அதிகாரி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். ஒரு வருடத்திற்கு முன்னால் இதே தலிபான்களை தேசபக்தர்கள் என்றும் தங்களது ராணுவத்துடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று இந்தியாவுக்கு எதிராகப் போராடும் சகோதரர்கள் என்றும் இதே பாகிஸ்தானிய ராணுவம் வர்ணித்ததை அவர் இப்போது சற்று நினைவூகூர்ந்தால் நல்லது.

பாகிஸ்தானிய மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருந்த காலம் கடந்துவிட்டது. பாம்புக்குப் பால்வார்த்ததன் விளைவை பாகிஸ்தான் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரம் இது. இனியும் கற்பனைப் பூச்சாண்டிகள் பயன்படாது என்பதையும் தீவிரவாதக் குழுக்களின் சகவாசத்தால் எந்தவித நன்மையும் ஏற்படாது என்பதையும் பாகிஸ்தானிய ராணுவமும் அரசும் உணர வேண்டிய தருணம் இது.

போதும், அப்பாவி மக்களை ரத்தம் சிந்த வைக்கும் கொடூரம். அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நேரம் அல்ல இது. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டிய நேரம்.
நன்றி : தினமணி

Thursday, October 29, 2009

எல்.ஐ.சி., சட்ட திருத்தம் : ஏஜன்டுகள் கடும் அதிருப்தி

எல்.ஐ.சி., சட்டம் 1938 பிரிவு 44ல், திருத்தம் செய்வதற்காக சமீபத்தில், பார்லிமென்டில் மசோதா சமர்பிக்கப்பட்டது குறித்து, நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் குறை கூறி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில், இந்திய எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் கூட்டமைப்பு நேற்று முன் தினம், எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் நல்வாழ்வு தொடர் பான கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், எல்.ஐ.சி., சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால், ஏற்படும் விளைவுகள் குறித்து மண்டல செயலர் டி.சத்யநாராயணா, பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் பலர், பாலிசிகள் மூலம் கிடைக்கும் கமிஷன்களை வைத்தே வாழ்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் கமிஷன்களே அவர்களை சிறப்பாக மேலும் செயலாற்றத் தூண்டுகிறது. இந்த சட்டப்பிரிவு, ஏஜன்ட்கள், உடல்ரீதியாக பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வழி வகை செய்கிறது. இத்தகைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, எல்.ஐ.சி., ஏஜன்ட்களின் பணியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுக்கும் பெரியளவில் நஷ்டம் ஏற்படும்.

பாலிசிதாரர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று தான் இன்சூரன்ஸ் ஏஜன்ட்கள் பாலிசி எடுக்கின்றனர். அதன் பின், பாலிசிதாரர் முறையாக பாலிசித் தொகையை செலுத்துகிறாரா என்பதை ஏஜன்ட் கள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால், நாட்டின் இன்சூரன்ஸ் செயல்பாடுகளில் பெரிய பின்னடைவு ஏற்படும்.

நன்றி : தினமலர்

Wednesday, October 28, 2009

மூன்று வாரங்கள் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு சரிவு

மும்பை வங்கிகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் அமெரிக்க டலாருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, மூன்று வாரங்கள் இல்லாத அளவு குறைந்துள்ளது. இன்று காலை 9.03 மணியளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 47.09/11 ஆக இருந்தது. இது கடைசியாக 46.88/90ஆக இருந்தது. டாலரின் மதிப்பு மீண்டு வருவதால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய வர்த்தகத்தில், ஆசிய கரன்சிகளில் பெரும்பாலானவையை விட டாலரின் மதிப்பு அதிகரித்தே .
நன்றி : தினமலர்


Tuesday, October 27, 2009

எதிர்பார்த்ததை விட அதிகரித்தது விப்ரோ நிகர லாபம்

விப்ரோ லிமிடெட்டின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி துறையில் மூன்றாம் இடத்தில் இருந்து வரும் நிறுவனம் விப்ரோ. தற்போது, முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்நிறுவனம், இந்த இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்த நிகர லாபத்தை விட அதிகளவு நிகர லாபத்தை அடைந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 11.71 பில்லியன் ரூபாயாக(252 மில்லியன் டாலர்) 21 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், 10.41 பில்லியன் ரூபாய் நிகர லாபம் கிடைக்கும் என்றே விப்ரோ நிறுவனம் கணிப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நிறுவனத்தின் நிகர லாபம் எதிர்பார்த்தை விட அதிகயளவு அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி : தினமலர்


Sunday, October 25, 2009

செலவை குறைக்க ஏர் – இந்தியா அதிரடி : கேன்டீனில் இனி அசைவம் இல்லை

செலவை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏர் – இந்தியா விமான நிறுவன கேன்டீனில் இனிமேல் முழுக்க, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்த நிலை, ஏர் – இந்தியா விமான நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை. கடும் நஷ்டத்தில் அந்த நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஏர் – இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை, கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. இதன்காரணமாக, செலவுகளை குறைக்கும் வகையில், பல்வேறு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விமான நிறுவன ஊழியர்களின் கேன்டீன்களிலும் சில சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் செயல்படும் கேன்டீனில் மட்டும், தினமும் 700 முதல் 1,100 ஊழியர்கள் வரை சாப்பிடுகின்றனர். ஊழியர்களுக்காக உணவுகள் குறைந்த விலையில் கேன்டீனில் விற் பனை செய்யப்படுகிறது. ஒரு வெஜிடேரியன் 'தாளி'யின் விலை ரூ.2.50க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாதம் தோறும் 20 லட்ச ரூபாயை ஏர் – இந்தியா செலவிடுகிறது. ஆனால், மிக குறைந்த அளவு தான் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, அதிக விலை கொடுத்து சிக்கன் வாங்கி, அவற்றை சமைத்து விற்பனை செய்வதற்கு அதிகமாக செலவாகிறது. அவற்றை மானிய விலையில் விற்பனை செய்வதால், வருவாய் அந்த அளவுக்கு கிடைப் பது இல்லை. இதுபோன்ற அதிகப்படியான செலவுகளை குறைக்கும் வகையில், கேன்டீனில் இனிமேல் அசைவ உணவுகள் தயாரிப்பதை கைவிடுவது என, ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மாதத் துக்கு மூன்று லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும் என, ஏர் இந்தியா நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

நன்றி : தினமலர்