Sunday, November 30, 2008

வாங்க ஆளில்லாததால் பல மாடிக்குடியிருப்புகள் முடக்கம்: பிரபல நிறுவனங்கள் தவிப்பு

பல லட்சம் ரூபாய் போட்டு வாங்க ஆளில்லாததால், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பல மாடிக்குடியிருப்புகள் எல்லாம் பூட்டியே கிடக்கின்றன. டில்லி, மும்பை மட்டுமின்றி, சென்னையிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது. சர்வசேத நிதி நெருக்கடியால், கட்டுமான திட்டங் களும் முடங்கிப்போயுள்ளன. சாப்ட்வேர் உட்பட பல துறை நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நிலை போய், இப்போது பலரும், எப்போது வேலை போகுமோ என்று பயந்த வண்ணம் உள்ளனர்; அதனால், எதிலும் முதலீடு செய்ய அவர்கள் தயாரில்லை. அது மட்டுமின்றி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வேறு நெருக்கடியில் சிக்கியுள்ளதாலும், கிரெடிட் கார்டு பாக்கி, கடன் பாக்கி என்று பொது மக்களிடம் இருந்து சரியாக வராததால், கதி கலங்கிப்போயுள்ளன. அதனால், வீட்டுக்கடன் கொடுப்பதில் கடும் கெடுபிடிகளை போட்டுள்ளன. வங்கிகள் கடன் தருவதில் கட்டுப்பாடு, வாங்க ஆளில்லாத நிலை போன்ற காரணங்களால், டில்லி, மும்பை, சென்னை , பெங்களூரு நகரங்களில் கட்டப்பட்ட வானளாவ பலமாடிக்குடியிருப்புகளில், வீடுகள் 50 சதவீதம் விற்காமல் பூட்டி கிடக்கின்றன. இதனால், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதில் பல முன்னணி நிறுவனங்களும் தயக்கம் காட்டுகின்றன. பங்குச்சந்தையில், பங்குகளை வெளியிட்டசில மணி நேரத்தில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய டி.எல்.எப்.,நிறுவனம், தன் பல திட்டங் களை ஆறு மாதம் தள்ளிப்போட்டுள்ளது. அது போல, பார்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் நிறுவனமும் தன் திட்டங்களை தள்ளிப்போட்டுள்ளது. டில்லியில் குர்கான் பகுதியில் அடுத்த மாதம் முடிக்க வேண்டிய கட்டுமான திட்டங்கள், அடுத் தாண்டு மார்ச் வரை தள்ளிப்போடப்பட்டுள் ளது. வாடிக்கையாளர்கள் வாங்குவதில், தாமதம் ஆவது தான் காரணம். சென்னையிலும், இந்த நிலை தான் காணப்படுகிறது. சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களிடம் விற்று விடலாம் என்று கணக்கு போட்டு பல இடங்களில் கடன் வாங்கி, கட்டப் பட்ட பல மாடிக் குடியிருப்புகளில் பல வீடுகள் விற்கப்படாத நிலை நீடிக்கிறது. நிதி நெருக்கடியில் தாக்கு பிடிக்க முடியாத பில்டர்கள், வேறு பில்டர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. டில்லியில், டி.எல்.எப்., யுனிடெக், பார்ஸ்வநாத் நிறுவனங்களின் திட்டங்கள் முடங்கிப்போயுள்ளன. டி.எல்.எப்.,பின் பினாகில், ஐகான் திட்டங்கள் இப்போது முடிந்திருக்க வேண்டும்; இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. பெங்களூரு நகரில் பிரஸ்டீஜ் குரூப், மந்த்ரி குரூப், காத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நன்றி ; தினமலர்


வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு

சாப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமல்ல, அவற்றில் வேலை செய்ய ஆட்களை அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு அதிரடி நடந்து வருகிறது.சாப்ட்வேர் நிறுவனங்களின் தென்னக தலைநகராக இருந்து வரும் பெங்களூரு நகரில், டி.சி.எஸ்., இன்போசிஸ், சி.டி.எஸ்., சத்யம் போன்ற முன்னணி நிறுவனங்கள், அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்களைப் பெற்று சாப்ட்வேர் பணிகளை செய்து வந்தன.நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பல நிறுவனங்களும் சாப்ட்வேர் பணிகளை செய்து கொள்ள விரும்பவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவற்றுக்கு சாப்ட்வேர் பணிகளை கவனித்து வந்தது நின்று போனது.வெளிநாட்டு நிறுவனங்களின் பணிகளை செய்து வந்த பல இந்திய பி.பி.ஓ., அலுவலகங்களில் பணிகள் இல்லாததால், வருமானம் அடிபட்டது. இதனால், ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சாப்ட்வேர் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை; நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.பெங்களூரு நகரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்கள் புற்றீசல் போல பரவி இருந்தன. ஆனால், நெருக்கடி ஆரம்பித்த நிலையில், இவற்றின் தேவை குறைய ஆரம்பித்தது.நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி கன்சல்டன்சி நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்கள், இப்போது ஆட்களைக் குறைக்கும் அதிரடி சிக்கனத்தில் இறங்கி விட்டன. இதனால், கன்சல்டன்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது; அவற்றின் வருமானமும் குறைந்து விட்டதால், கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பெங்களூரு நகரில் சிறிய அளவில் இயங்கி வந்த கன்சல்டன்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஓரளவு சமாளிக்கக் கூடிய கன்சல்டன்சிகள் மட்டும், 10ல் இருந்து 30 சதவீதம் வரை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.கன்சல்டன்சி நடத்தி வரும் பிரவீன் சாஸ்திரி கூறுகையில், 'இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு காலாண்டுக்கு 500க்கு மேல் ஆட்களை அனுப்பி வந்துள்ளோம். ஆனால், இப்போது நிலைமை மோசமாகி விட்டது. எங்கள் அலுவலக கிளைகளிலேயே ஆட்களை குறைத்து விட்டோம். இன்னும் சில மாதங்களில் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட மும்பை 'அட்டாக்'- சேதுராமன் சாத்தப்பன்-

சோகங்கள் எல்லாம் மறக்கப்பட வேண்டியது தான். ஆனால், சோகங்களே வாழ்க்கையானால், வன்முறைக்கு மும்பை எப்போதுமே ஒரு டார்கெட்டாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது, சில நாட்களில் ஏற்பட்ட வன்முறைகள் யாருக் கும், எந்த நாட்டுக்கும் வரக்கூடாத ஒரு நிகழ்வு. பங்குச் சந்தை வர்த்தகத்தையே வியாழனன்று நிறுத்தி வைக்க வேண்டிய சூழ் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக் கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த பல வருடங்களில் பல முறை மும்பையில் இது போல வன்முறைகள் நடந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் வன்முறைக்கு பிறகு, பங்குச் சந்தை வீறு கொண்டு எழுவது தான் வாடிக்கை. அது போலவே இந்தத் தடவையும் நடக்கும் என்று பலரும் கூறினர். மேலும், இது போன்ற நிகழ்வுகளை தொடர் நிகழ்வுகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஸ்டாண்டர்டு அண்ட் பவர் நிறுவனம் கூறியதும் சந்தைக்கு வலு சேர்த்தது. அது போலவே வெள்ளியன்றும் மும்பை பங்குச் சந்தை வீறு கொண்டு எழுந்தது. வன்முறைக்கு பயப்படவில்லை. ஆனால், டிரைவெட்டிவ் டிரேடிங் முடிவுக்கு வருவதால், சந்தை மேலும் கீழுமாக இருந்தது.சந்தை 278 புள்ளிகள் மேலும் கீழுமாக இருந்தது. முடிவாக, மும்பை பங்குச் சந்தை 66 புள்ளிகள் கூடி 9,092 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 3 புள்ளிகள் கூடி 2,755 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.பணவீக்கம் குறைந்து வருகிறது. அதாவது, சென்ற வாரம் 8.9 சதவீதமாக இருந்தது இந்த வாரம் 8.84 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது, சமீபத்தில் ஏறியிருந்த கடந்த 16 வருடத்தின் அதிகபட்ச அளவான 12.91 சதவீதத்தை விட பல சதவீதங்கள் குறைவு என்பது ஒரு நிறைவு.பங்குச் சந்தை 56 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. ஆயில் 49 சதவீத நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. தங்கம் 5.5 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. இது தவிர, வங்கி டெபாசிட்கள் நிலையான வருமானத்தைக் கொடுத்துள்ளன.அமெரிக்காவில் பல கோடி டாலர்கள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்யலாம் என்று பலரும் எதிர்பார்க் கின்றனர். இரண்டாவது காலாண்டு முடிவில் இந்தியாவின் ஜி.டி.பி., 7.6 சதவீதமாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சந்தை குறைய வாய்ப்பில்லை. ஆனால், தற்போதைய சந்தையில் எது வேண்டுமானாலும் நடக்கிறது. ஏதாவது ஒரு பங்கை இந்த விலைக்கு வாங்காமல் விட்டு விட்டோமே; மறுபடி அந்த விலை வராதே என்று பலரும் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்த விலைக்கும் வந்து, அதை விடக் குறைந்த விலைக்கும் வருகிறது. அதுதான் பங்குச் சந்தை.
நன்றி ; தினமலர்


Saturday, November 29, 2008

ஒபராய் ஹோட்டல் தாக்குதலில் யெஸ் பேங்க் சேர்மன் கொல்லப்பட்டார்

மும்பை ஒபராய் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் யெஸ் பேங்க் சேர்மன் அசோக் கபூர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த புதன் கிழமை அன்று இரவில் மும்பையில் பல இடங்களில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் இரண்டு இடங்கள் பிரபல சொகுசு ஹோட்டல்களான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஓபராய் டிரைடன்ட். தீவிரவாதிகள் நுழைந்த அதே புதன் கிழமை இரவுதான் ஓபராய் ஹோட்டலுக்கு மனைவியுடன் டின்னர் சாப்பிட போயிருந்தார் யெஸ் பேங்க் சேர்மன் அசோக் கபூர். டின்னர் சாப்பிடப்போயிருந்த அசோக் கபூர், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அங்குதான் இருந்திருக்கிறார். அதன் பின்னர் நேற்று மாலை வரை அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. தீவிரடவாதிகளுடன் தாக்குதல் நடத்த ஓபராய் ஹோட்டலுக்குள் நுழைந்திருந்த கமாண்டோ படையினர், ஓபராய் ஹோட்டலில் எல்லா வேலைகளும் முடிந்து என்றும், எல்லோரையும் வெளியேற்றி விட்டேம் என்றும் அறிவித்து விட்டனர். இருந்தாலும் அசோக் கபூர் என்ன ஆனார் என்றும் அவர் உயிருடன் தப்பி விட்டாரா அல்லது இறந்து விட்டாரா என்றும் தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில் அவர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அசோக் கபூருடன் சென்றிருந்த அவரது மனைவி மது கபூர் கமாண்டோ படையினரால் காப்பாற்றப்பட்டு விட்டார். ஹோட்டலுக்குள் என்ன நடந்தது என்று சொன்ன மது கபூர், உள்ள நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவன் எங்களுக்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். அந்த குழப்பமான சூழ்நிலையில் நாங்கள் சிலர் எப்படியோ அங்கிருந்து நகர்ந்து விட்டோம். பின்னர் ஒரு ஸ்பானிஷ் தம்பதியின் உதவியுடன் நான் ஒரு இடத்தில் பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் தெரிந்தது, அங்கு என் கணவர் இல்லை என்பது. நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தேன். அவர் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. பின்னர் நான் கமாண்டோ படையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். அதன்பின் நான் அவரை பார்க்கவே இல்லை என்றார்.
நன்றி : தினமலர்


அரசு கேபிள் 'டிவி'யில் 800 சேனல்கள் ; வாடகைக்கு 'செட்டாப் பாக்ஸ்': உமாசங்கர் தகவல்

''அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன், வியாபார நோக்கத்தில்தான் செயல்படும்; இதனால், எல்லாத் தரப்பினருக்கும் பலன் கிடைக்கும்,'' என்று, தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் தெரிவித்தார்.
அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷனின் செயல் பாடுகள் குறித்த கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உமாசங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன், வியாபார நோக்குடன்தான் செயல்படும். ஒரு மடங்கு முதலீடு செய்தால் மூன்று மடங்கு வருவாய் பார்க்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷனுக்கு இதுவரை இந்தியாவில் யாரும் பயன்படுத்தாத அளவுக்கு அதிநவீன தொழில் நுட்பத்தில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதனால், மிக மிகத்துல்லியமாக டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு இருக்கும் என்பதோடு, 800 சேனல் கூட தர முடியும்.

வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறும் சேனல் களை அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் கேபிள் இணைப்புகளுக்கும், இங்கிருந்து பெறும் சேனல்களை பிற நிறுவனங்களின் இணைப்புகளுக்கும் மாற்றித்தருவது (பைரசி) சட்டத்துக்குப் புறம்பானது.

'செட்டாப் பாக்ஸ்'களை விலைக்கும், வாடகைக்கும் வழங்கலாம் என்று இரு வகையான ஆலோசனை உள்ளது. 30 ரூபாயிலிருந்து, 35 ரூபாய் க்குள் வாடகை வசூலிக்கலாம். கேபிளை வெட்டுவது சட்டவிரோதச் செயல். கேபிளை யார் வெட்டினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கேபிளில் விரைவில் எல்லா சேனல்களும் வரும்; அதற்கான முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. சட்டரீதியான முயற்சிகளுடன்,பேச்சுவார்த்தை மூலமாகவும் முயற்சி எடுக்கப்படுகிறது. கேபிள் தொழிலுக்கு எதிர்காலம் நன்றாகவுள்ளது. கேபிள் இணைப்பில் ஏதாவது பிரச்னை என்றால், நீங்கள் உடனடியாக சரி செய்து கொடுப்பீர்கள். ஆனால், டி.டி.எச்., உபகரணத்தில் ஏதாவது பிரச்னை என்றால் அதை சரி செய்ய பல நாட்களாகி விடும். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் கேபிள் களை வெளியாட்கள் யாரும் வெட்ட வாய்ப்பில்லை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.

கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இடையிடையே உமாசங்கர் தலையிட்டு கூறிய கருத்துக்களுக்கு பெரும் கைத் தட்டல் கிடைத்தது. இதுவரையிலும் அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் தேறுமா என்ற எண்ணத்தில் இருந்த ஆபரேட்டர்கள் பலரும், நேற்று நடந்த கூட்டத்துக்கு வந்த பின், புதிய நம்பிக்கை உடன் திரும்பினர்.

அரசு கேபிள் 'டிவி' சார்பில்

அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தற்போது செயல்பாட்டுக்கு வந்து விட்டது. வேலூர் மற்றும் சென்னையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் 'செட்டாப் பாக்ஸ்' உடன் இணைப்பு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் சார்பில், நடுநிலையான தமிழ் செய்தி சேனல் ஒன்றும், உள்ளூர் சேனல் ஒன்றும் துவக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசிடமிருந்து இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் எந்த நிபந்தனைக்கும் உட்படாமல் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. கோவையில் 100 சதவீத ஆபரேட்டர்கள், 'செட்டாப் பாக்ஸ்' வேண்டுமென்கின்றனர். 'செட்டாப் பாக்ஸ்' வைத்தால் இலவச சேனல்களைத் தவிர்த்து, கட்டண சேனல்களுக்கு ஒரு சேனலுக்கு ஐந்து ரூபாய் வீதம் கொடுத்தால் போதுமானது. கட்டண சேனல் வேண்டாமென்றால் இலவச சேனல்களுக்குரிய மாதாந்திர கட்டணம் செலுத்தினால் போதும். அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் சார்பில் இதுவரை 70 ஆயிரம் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. மேலும் மூன்று லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு உமாசங்கர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


மும்பை தாக்குதல்களால் டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடும் பாதிப்பு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்திய டெக்ஸ்டைல் ஏற்றுமதி துறை, மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களால் மேலும் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மும்பையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்குள் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய திடீர் தாக்குதல்களல் மேலைநாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பீதி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்றைக்கு முந்தின நாள் இரவில் இருந்து இப்போது வரை, முடியாமல் தொடர்ந்து வரும் மும்பை ஹோட்டல்கள் தாக்குதல்களை அடுத்து, மும்பை வருவதாக இருந்த பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் தங்களது வருகையை ரத்து செய்து விட்டனர். மும்பையின் பிரபல இரண்டு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களால் நாங்கள் எங்களது ' டிரிப் 'பை கேல்சல் செய்து விட்டோம் என்றும், வேறு தேதியில் வருகிறோம் என்றும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருக்கும் பல இறக்குமதியாளர்கள் இங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். அவர்களில் பெரும்மாபாலானவர்கள் டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி இறக்குமதியாளர்கள். டெக்ஸ்டைல் மற்றும் ஜவுளி துறையை சேர்ந்த டிசைனர்கள் மற்றும் வியாபாரிகள் அடிக்கடி இந்தியா வருவது வழக்கம். இங்கு வரும் அவர்கள் இங்குள்ள ஏற்றுமதியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களது ஆர்டர்களை உறுதி செய்வது வழக்கம். ஏனென்றால் டெக்ஸ்டைல் துறையை பொருத்தவரை, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் ஃபேஷன் மாறி விடும். மேலும் சீசனுக்கு தகுந்தபடியும் ஃபேஷன் மாறுவதுண்டு. எனவே அங்கிருந்து வரும் வியாபாரிகளுடன் டிசைனர்களும் அடிக்கடி இங்கு வந்து அவர்கள் கொடுத்திருக்கும் ஆர்டரை பார்வையிடுவது வழக்கம். அதன் தரத்தை நேரடியாக பார்த்து, அதன் பின்னரே அதற்கான விலையை உறுதி செய்வார்கள். மும்பையில்தான் பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களின் தலைமையகம் இருக்கிறது என்பதாலும், அதுதான் இந்தியாவின் வர்த்தக தலைநகராக இருப்பதாலும் அவர்கள் எல்லோரும் மும்பைக்குதான் வருவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்குவதும் இப்போது தாக்குதலுக்கு உள்ளான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டிரைடன்ட் ஹோட்டல்களில்தான் என்கிறார் ஃபெரரேஷன் ஆப் இன்டியன் எக்ஸ்போர்ட் ஆர்கானிஷேசன் தலைவர் ( மேற்கு பகுதி ) எஸ்,கே,ஷராப். நேற்று மட்டும் அனேக வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் மும்பை டிரிப் பை கேன்சல் செய்து விட்டதாக தகவல் சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் பெரிய இறக்குமதியாளர்கள் என்றார் அவர். ஜெர்மனி மற்றும் அமெரிக்க இறக்குமதியாளர்கள், அந்நாட்டு வியாபாரிகளை இப்போது இந்தியா போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன என்றார் அவர்.
நன்றி : தினமலர்


தீவிரவாதிகளை அடையாளம் கண்டுகொள்ள உதவிய சிசிடிவி

சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் தீவிரவாதிகளின் தாக்குதலை நம்மால் தடுக்க முடியாதுதான் என்றாலும், தாக்க வந்த தீவிரவாதிகள் யார் என்றும் அவர்கள் ஏகே 47 மற்றும் எம் 5 மூலம் யார் யாரை சுட்டார்கள் என்பதையும் துள்ளியமாக போலீசாருக்கு காட்டி கொடுத்து விட்டது. போலீசாரின் விசாரணைக்கு இது மிக உதவியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கள் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை துள்ளியமாக படம் பிடித்திருக்கின்றன.பொதுவாக மும்பையில் பல இடங்களில் சிசிடிவி மற்றும் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டிருக்கின்றன. செக்யூரிட்டி சாதனங்கள் தயாரிக்கும் ஸைகாம், ஹனிவெல், சீமன்ஸ் மற்றும் கோத்ரஜ் போன்ற பிரபல நிறுவனங்கள், மும்பை முழுவதும் ஆங்காங்கே சிசிடிவி யை வைத்திருக்கின்றன. நகர் முழுவதிலும் என்ன நடக்கிறது என்பது 24 மணி நேரமும் ரெக்கார்ட் செய்யப்படுகிறது. சி.எஸ்.டி. டெர்மினஸில் ( முன்னர் இது விக்டோரியா டெர்மினஸ் ) இருந்து தானே வரையுள்ள 30 கி.மீ.பாதை முழுவதிலும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கிறது. சர்ச்கேட்டில் இருந்து விரார் என்ற இடத்திற்கு செல்லும் 60 கி.மீ.பாதையெங்கும் ஸைகாம் நிறுவனம் 820 சிசிடிவி களை வைத்திருக்கிறது. இது தவிர மும்பை முழுவதும் டிராபிக்கை கண்காணிக்க ரூ.4 கோடி செலவில் 100 சிசிடிவி களையும் அந்த நிறுவனம் வைத்திருக்கிறது. தாதரில் இருக்கும் பிரபல சித்திவிநாயகர் கோயிலிலும் சிசிடிவி வைக்கப்பட்ட கண்காணிக்கப்படுகிறது. இவைகள் மூலம் போலீசார் எளிதில் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


Friday, November 28, 2008

சிறிது உயர்ந்து முடிந்த பங்கு சந்தை

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களால் நேற்று மூடப்பட்டிருந்த பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் நடந்தது. நவம்பர் மாதத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, வர்த்தகம் ஒன்றும் பிரமாதமாக நடக்கவில்லை. அதற்கு காரணம் நேற்றைக்கு முந்தின நாள் இரவில் துவங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் இன்று மாலையில் கூட முடிவுக்கு வராமல் இருந்ததுதான். இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பங்கேற்றது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி.,பங்குகள்தான். டெக்னாலஜி, தனியார் வங்கிகள், பெல், பார்தி ஏர்டெல், பங்குகளும் கொஞ்சம் வர்த்தகத்தில் கலந்து கொண்டன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் ( 0.73 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 9,092.72 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.85 புள்ளிகள் ( 0.10 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 2,755.10 புள்ளிகளில் முடிந்தது. நவம்பர் மாதத்திற்கான வர்த்தகம் நேற்றே முடிந்திருக்க வேண்டும். ஆனால் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களால் நேற்று பங்கு சந்தை மூடப்பட்டிருந்ததால் இன்று தான் நவம்பர் வர்த்தகம் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் மேலும் குறைந்தது

நவம்பர் 15ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.84 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 8.90 சதவீதமாக இருந்தது. மெட்டல், பழங்கள், சில உற்பத்தி பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், ரப்பர் போன்றவைகளில் விலை இந்த வாரத்தில் குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலைப்பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் 3.35 சதவீதமாகத்தான் இருந்தது. கடந்த அக்டோபரில் இருந்து ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ரூ.2,75,000 கோடியை புழக்கத்தில் விட்டிருக்கிறது. மேலும் வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்.மற்றும் ரிபோ ரேட்டையும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


ஜப்பானில் இருந்து வெளியேறுகிறது நோக்கியா

உலக அளவில் அதிகம் செல்போன் விற்பனை செய்யும் நிறுவனமான பின்லாந்தின் நோக்கியா, இனிமேல் ஜப்பானில் செல்போன் விற்கப்போவதில்லை என்று செய்திருக்கிறது. அவர்களின் அதிநவீன மாடலான வெர்சு வை மட்டும் அங்கு விற்பனை செய்யலாம் என்றும் மற்ற எந்தவொரு மாடலையும் அங்கு விற்க வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், உலக அளவில் செல்போன் விற்பனையில் 40 சதவீத மார்க்கெட் ஷேரை நோக்கியா வைத்திருந்தாலும், ஜப்பானிலோ அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ஜப்பானிலேயே பல நிறுவனங்கள், புதிய புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டை பிடித்து வைத்திருப்பதால், அவர்களுடன் போட்டி போட முடியாமல் நோக்கியா அங்கிருந்து வெளியேறுகிறது. பொருளாதார நெருக்கடி இருந்து வரும் இந்த வேளையில், நாங்கள், விற்காத ஒரு சந்தையில் மேலும் மேலும் அங்கு எங்களது தயாரிப்புகளுக்கான எக்கசக்கமான பணத்தை செலவு செய்ய விரும்பவில்லை என்று நோக்கியாவின் எக்ஸிகூடிவ் வைஸ் பிரசிடென்ட் டிமோ இகமோடிலா தெரிவித்தார். ஆனால் விர்சு மாடலை மட்டும் நாங்கள் ஜப்பான் சந்தையில் வைத்திருக்க விரும்புகிறோம் என்றார் அவர்.
நன்றி : தினமலர்


டீசல் சப்ளை செய்ய ஐ.ஓ.சி., மறுப்பு : அரசு விரைவு பஸ்கள் திடீர் நிறுத்தம்

டீசல் பணம் செலுத்தாததால் தமிழகத்தில் பல இடங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று முதல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்போக்குவரத்துக்கு 14 நகரங்களில் டெப்போக்கள் உள்ளன. அரசு விரைவு பஸ்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐ.ஓ.சி.,) மூலம் டீசல் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக விரைவு பஸ் டெப்போக்களால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்யப்படும்.
மதுரையில் பல நாட்களாக டீசலுக்கான தொகை சுமார் ஒரு கோடி ரூபாயை விரைவு போக்குவரத்துக் கழக பஸ் டெப்போ நிர்வாகம் செலுத்தவில்லை. தமிழகம் முழுவதும் 5 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து டீசல் தர ஐ.ஓ.சி., மறுத்து விட்டது. எனவே விரைவு போக்குவரத்துக் கழகத்தால் அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. பாதியளவு பஸ்களை ரத்து செய்துள்ளது. நிறுத்தப்பட்ட பஸ்கள், சாதாரண கட்டண பஸ்கள் என பல பஸ்களில் இருந்து டீசலை எடுத்து, வெளிமாநிலம் செல்லும் பஸ்களுக்கு நேற்று சப்ளை செய்துள்ளனர். மழை நேரத்தில் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி போன்ற நகரங்களில் இருந்து வரும் பஸ்களில் சில சீட்களை காலியாக வைத்திருக்கும்படி தெரிவித்து மதுரை பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த 'திடீர் நெருக்கடி' நிலையால் தமிழகம் முழுவதும் 40 சதவீத பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நன்றி :தினமலர்


Thursday, November 27, 2008

பெட்ரோல் விலை குறைப்பு : இழுபறி பதில் தந்தார் தியோரா

எத்தனை கேள்விகள் கேட்டாலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது என்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா வாய்திறக்க மறுத்துவிட்டார். கடந்த ஒருவாரமாகவே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அதிகம் பேசப்படுகிறது. மத்திய அமைச்சரவை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி ஆறு மாநிலத் தேர்தல்கள் முடிந்த பின் முடிவு செய்யும் என்ற கருத்து பேசப்பட்ட போது, நேற்று முன்தினம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விரைவில் வரும் என்ற கருத்தைக் கூறியிருந்தார் தியோரா. பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் தியோரா, அத்துறையின் செயலர் பாண்டே, துணைச் செயலர் சுந்தரேசன், ஓ.என்.ஜி.சி., தலைவர் உட்பட பலரும் சேர்ந்து நேற்று இப்பிரச்னைக்கு விளக்கமளித்தனர். குறிப்பாக பல தொழில் நுட்ப கேள்விகளுக்கு அந்தத் துறையைச் சேர்ந்த செயலர்கள் பதிலளிக்க அனுமதித்ததால், இப்பிரச்னை குறித்து ஒரு மணி நேரம் விளக்கம் தரப்பட்டது. இந்த மாநாட்டில் முரளி தியோரா தெரிவித்த கருத்துக்கள்: இன்று கச்சா எண்ணெய் பேரல் 50 டாலருக்கு கீழே குறைந்திருக்கிறது. முன், 147 டாலர் இருந்த போது நிர்ணயிக்கப்பட்ட விலையா இன்னமும் தொடர்வது என்று காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேட்கின்றனர். இந்த விலை குறைப்பில் சம்பந்தப்பட்ட பெட்ரோல், டீசல், மண்ணெண் ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகிய நான்கில், பெட்ரோல், டீசலில் மட்டும் லாபம் கிடைக்கிறது. இன்றைய தேதியில் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ. 8.17ம், டீசலில் லிட்டருக்கு 60 பைசாவும் கிடைக்கிறது. அதேசமயம் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 21.64ம், சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.330.20ம் நஷ்டம் ஏற்படுகிறது. மூன்று எண்ணெய் கம்பெனிகளும் தினமும் 90 லட்சம் முதல் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கின்றன. ஏற்கனவே, அதிக விலையில் கச்சா எண்ணெய் விற்றதில் இருந்து தொடர்ந்த நஷ்டமும், தற்போதைய நஷ்டமும் சேர்ந்து எண்ணெய் கம்பெனிகளுக்கு லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உள்ளது. இதே அளவு கச்சா எண்ணெய் விலை நீடித்தால், அதன் நஷ்டம் குறைய இன்னமும் ஆறு மாதங்கள் ஆகும். மேலும், எண்ணெய் பத்திரங்கள் மூலம் மத்திய நிதியமைச்சகம் 50 ஆயிரம் கோடியை முன்பே தந்திருக்கிறது. எது எப்படியானாலும் எல்லா அம்சங்களையும் அரசு ஆராய்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கும் முடிவை எடுக்கும். அதே சமயம், விலை குறைப்பு பற்றி பேசியதாக வந்த செய்தியை அடுத்து தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது என்பது முற்றிலும் தவறு. அப்படி நோட்டீஸ் ஏதும் வரவில்லை. பெட்ரோலுடன், எத்தனால் கலக்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டம். அதில் 44 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் மாநில அரசுகள் பின்பற்றும் வரித்திட்டம், மற்ற சில நடைமுறைகளால் பெரிய அளவில் ஊக்கம் பெறவில்லை. இவ்வாறு முரளி தியோரா கூறினார்.
நெருக்கடியான கேள்விகள் கேட்ட போது நகைச்சுவையாக பதிலளித்து பிரச்னையை சமாளித்தார். முன்னதாக செய்தி, ஒளிபரப்பு அமைச்சர் ஆனந்த் சர்மா, 'டிவி'களுக்கு ஒழுங்கு நடைமுறைத் திட்டம் கொண்டுவருவதில் அரசுக்கு உள்ள சிக்கல்களை விளக்கினார். அதே சமயம் ஒழுங்கு நடைமுறைகளை மீறும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் உரிமை என்றார். தேர்தல் ஆணையம் நோட்டீஸ் : கச்சா எண்ணெய் விலை குறைந் துள்ளதால், டிசம்பர் 24ம் தேதிக்குப் பின், பெட்ரோல், டீசல் விலை குறைக் கப்படும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். 'அவரின் இந்த அறிவிப்பு, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல்' எனக் கூறி, பாரதிய ஜனதா கட்சியினர், தேர்தல் ஆணையத்திடம் நேற்று புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து, இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி, அமைச்சர் முரளி தியோராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நன்றி : தினமலர்


மழையால் தத்தளிப்பதை போல் தத்தளிக்கிறது பங்குச் சந்தை

சந்தை 9,000 புள்ளிகளையே சுற்றி சுற்றி வருகிறது. சந்தையைக் காப்பாற்ற ஒரு நல்ல செய்தி வந்தால், இன்னொரு கெட்ட செய்தி வந்து எந்த ஏற்றமும் இல்லாமல் செய்து விடுகிறது. வரும் செய்திகளெல்லாம் நல்ல செய்திகளாக இல்லாததால் சந்தை, தமிழகம் மழையால் தத்தளிப்பது போல தத்தளிக்கிறது. புயல் கூட கரையைக் கடந்து விடும் போலிருக்கிறது; சந்தையைப் பிடித்த சனி இன்னும் கரையைக் கடக்கவில்லை.
திங்களன்று காலை சிட்டி வங்கியை காப்பாற்ற அமெரிக்க அரசு பல கோடி ரூபாய் கொடுக்கப் போவதாக செய்தி வந்துள்ளது. முக்கிய இடத்திலிருந்து சிட்டி வங்கி மூழ்குகிறது என்றால் பல இடங்களிலும் சந்தை பற்றி எரிந்திருக்கும். தற்போது வந்து கொண்டிருக்கும் செய்தி பாங்க் ஆப் அமெரிக்காவின் நிலைமையும் சரியில்லை என்பது தான். சமீப காலத்தில் தான் பாங்க் ஆப் அமெரிக்கா நலிந்த நிறுவனங்களை வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வங்கிக்கே இந்த நிலை என்றால் எங்கு போய் சொல்வது? இந்த வாரத்தில் மூன்று நாட்களுமே சந்தை ஏறி இறங்கிக் கொண்டு தான் இருந்தது. காலையில் ஒரே ஏற்றமாக இருக்கும். அப்பாடி இன்று தப்பித்தோம் என்று பல முதலீட்டாளர்கள் இருக்கும் சமயத்தில் சந்தை ஒரேயடியாக விழத்தொடங்கும். இது தான் வாடிக்கையாக இருக்கிறது. அமெரிக்காவில் கடந்த வெள்ளியன்று சந்தை மிகவும் கீழே இறங்கியே துவங்கின. அங்கு நிதி செகரட்டரியாக எல்லாரும் விரும்பிய நபர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் சந்தை யூ டேர்ன் அடித்தது. இதைத் தொடர்ந்து திங்களன்று இந்தியாவிலும் சந்தை பிரமாதமாக பரிணமிக்கப் போகின்றன என்று தான் எல்லாரும் எதிர்பார்த்திருப்பர். ஆனால் நடந்ததோ வேறு. காலை முதல் ஏறிக் கொண்டே இருந்த சந்தை முடிவாக 12 புள்ளிகள் இறங்கியே முடிவடைந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் வருமானங்கள் வருங்காலங்களில் குறைவாக இருக்கும் என்று ஜே.பி. மோர்கன் கணித்திருந்ததாக வெளிவந்த செய்திகள் அந்த வங்கியின் பங்குகளையும், மற்ற வங்கியின் பங்குகளையும் கீழே தள்ளியது. இது சந்தையை குறைத்தது.
நேற்று முன்தினமும் 207 புள்ளிகள் சரிவைத்தான் சந்தித்தது. சரிவே வாழ்க்கையாகிப் போனது. ஏன் குறைந்தது? டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதிகள் நெருங்குவதால் ப்ளூ சிப் கம்பெனிகளின் பங்குகள் அதிகம் விற்கப்பட்டதாலும், ஐரோப்பா பங்குச் சந்தைகள் அன்றைய தினம் கீழே இறங்கியே தொடங்கியதாலும் அதன் பாதிப்புகள் இங்கேயும் தெரிந்தது. ஆதலால் சந்தை இங்கும் மிகவும் இறங்கியது. சீன மத்திய வங்கி கடந்த செப்டம்பரில் இருந்து இது வரை நான்கு முறை ரேட் கட் செய்துள்ளது. இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி அது போல செய்யலாம் என்ற எண்ணத்தில், நேற்று சந்தை கடகடவென மேலே சென்றது. மும்பை பங்குச் சந்தை 331 புள்ளிகள் கூடி 9,028 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 98 புள்ளிகள் கூடி 2,752 புள்ளிகளுடன் முடிவடைந்தது. என்ன செய்யலாம்?: நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையை தொடர்ந்து கவனிக்காதீர்கள். அது உங்கள் போர்ட் போலியோவுக்கும் நல்லதல்ல, உடலுக்கும் நல்லதல்ல. வங்கியில் பிக்சட் டிபாசிடில் போட்டால் தொடர்ந்து பார்த்துக் கொண்டேவா இருப்பீர்கள். அப்படி இருந்து விடுங்கள். ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டை எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அது வந்தால் சந்தையை சிறிது உயர்த்தலாம்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


கட்டணத்தை குறைத்து விமான நிறுவனங்கள் அதிரடி

விமான டிக்கெட்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் புக்கிங் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளின் மீதான பரிவர்த்தனை கட்டணத்தை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் ஆகிய நிறுவனங்கள் வாபஸ் பெற்றுள்ளன. உள்ளூர் எகனாமி டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 300 ரூபாய் வரையிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 1,200 முதல் 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளதால், விமானக் கட்டணத்தைக் குறைக்கும் படி, மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல், விமான நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்ற விமான நிறுவனங்களும் விரைவில் விமான டிக்கெட் பரிவர்த்தனை கட்டணத்தை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி : தினமலர்


800 மெகாவாட் மின் உற்பத்தி: 2 திட்டங்கள் கையெழுத்து

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 8,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசின் 'பெல்' நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் இந்த இரண்டு மின் திட்டங்களையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் முதல்வர்
கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. மின்வாரியத் தலைவர் மச்சேந்திரநாதன் மற்றும் 'பெல்' தலைவர் ரவிக்குமார், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உடன்குடியில் கண்டறியப்பட்டுள்ள 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் இந்தத் திட்டங்கள் அமைகின்றன. திட்டத்தின்படி, முக்கிய இயந்திரங்களை 'பெல்' நிறுவனம் வழங்கும். திட்டத் தைச் செயல்படுத்தி, மின் நிலையத்தை இயக்குவதற்கான பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்ளும். மின் நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். திட்டங்களுக்கான நிலக்கரி, கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் என்பதால், கடலில் தளம் அமைப்பதற்கான ஆய்வுப் பணியை முடித்து, சென்னை ஐ.ஐ.டி., அறிக்கை வழங்கியுள்ளது. முதல் திட்டம் 2012ம் ஆண்டு மார்ச்சிலும், இரண்டாவது திட்டம் அதே ஆண்டில் செப்டம்பரிலும் இயக்கப்படும்.
நன்றி : தினமலர்


பொது சேமநல நிதி: வங்கிகள் புறக்கணிப்பு

அரசு நிர்வகித்து வரும் பொது சேமநல நிதியில், தேசிய வங்கிகளில் முதலீடு செய்யும் போது, கூடுதல் சுமையை, தவிர்ப்பதற்காக சேமிப்பு கணக்கு ஒன்றையும் துவக்கும் படி வற்புறுத்தப்படு கிறது. இது சட்டவிரோதம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பொது சேமநல நிதி கணக்கு துவக்குவோரிடம், தனியாக சேமிப்பு கணக்கையும் துவக்கும் படி வலியுறுத்துகின்றனர். ஆனால், இது சட்ட விரோதம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பொது சேமநல நிதி துவக்குவோரிடம், சேமிப்பு கணக்கும் துவக்க நிர்பந்தித்தால், இது குறித்து, வங்கியின் தலைமை அதிகாரியிடம் புகார் மனு அளிக்கலாம். அதன் பிறகும், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், ரிசர்வ் வங்கி நியமித்துள்ள வங்கிகள் மத்தியஸ்த அமைப்பிடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Wednesday, November 26, 2008

மும்பையில் குண்டுவெடிப்பு : 10 பேர் பலி

மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு 10 பேர் பலியாயினர். மும்பையில் இன்றிரவு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மும்பை கார்பரேஷன் அலுவலகம், விக்டோரியா டெர்மினல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் 10 பேர் பலியாயினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நன்றி : தினமலர்

பங்கு சந்தை உயர்ந்தது ; சென்செக்ஸ் 9,000 புள்ளிகளை எட்டியது

மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து மாலை 3 மணி வரை சரசரி அளவில் உயர்ந்திருந்த சென்செக்ஸ், கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தில் வேகமாக உயர துவங்கியது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கு மேலும் சென்றுள்ளது. சீனாவை போலவே இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று பலமாக இருந்தது. சீனாவில் சி.ஆர்.ஆர்.,மற்றும் மற்ற வட்டி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோலிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்போவதாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று அறிவித்திருந்ததை அடுத்து, விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த இரண்டு நல்ல செய்திகளும் இன்று சந்தையை மேலே இழுத்து சென்றது. ஆயில், பேங்கிங், பவர், கேப்பிடல் குட்ஸ், மெட்டல் மற்றும் டெலிகாம் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 331.19 புள்ளிகள் ( 3.81 சதவீதம் ) உயர்ந்து 9,026.72 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 98.25 புள்ளிகள் ( 3.7 சதவீதம் ) உயர்ந்து 2,752.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி.பேங்க், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி., என்.டி.பி.சி., ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ஓ.என்.ஜி.சி., டி.சி.எஸ்., விப்ரோ, ரிலையன்ஸ் இன்ஃரா, இன்போசிஸ் டெக்னாலஜிஸ், பெல் ஆகிய பங்குகள் அதிகம் லாபம் பார்த்தன. ஆசிய பங்கு சந்தைகள் எல்லாவற்றிலுமே இன்று ஏற்ற நிலைதான் காணப்பட்டது.
நன்றி : தினமலர்


அவுட்சோர்ஸிங் வேலைகளுக்கு இந்தியாதான் இன்னமும் முதலிடத்தில் இருக்கிறது

அவுட்சோர்ஸிங்/ ஆஃப்ஸோரிங் வேலைகளுக்கு உலகிலேயே இன்னமும் இந்தியாதான் சிறந்த இடமாக இருக்கிறது என்று டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் ( டி அண்ட் பி ) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. குறைவான சம்பளம் என்பதால் மட்டுமில்லாமல், மற்ற நாடுகளை விட இந்திய நிறுவனங்கள் இந்த துறையில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பதால் அவர்களால் சிறந்த சேவை அளிக்க முடிகிறது என்பதால்தான் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 'இந்தியாவின் மிகப்பெரிய ஐடிஇஎஸ் மற்றும் பிபிஓ கம்பெனிகள் 2008' என்ற வெளியீட்டின் நான்காவது பதிப்பை வெளியிட்ட டி அண்ட் பி நிறுவனம், சீனா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, மலேஷியா, பிரேசில், செக் குடியரசு, சிலி ஆகிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவில் தான் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை கிடைக்கிறது என்று சொல்லியிருக்கிறது. ஐடிஇஎஸ்/பிபிஓ க்கான சம்பள விஷயத்தில், இந்தியாதான் இரண்டாவது குறைந்த சம்பளம் கேட்கும் நாடாக இருக்கிறது என்கிறது. சீனாதானா உலகிலேயே குறைந்த சம்பளத்தில் ஐடிஇஎஸ்/பிபிஓ வேலைகளை செய்து கொடுக்கும் நாடாக இருக்கிறது. சீனாவில் சம்பளம் 7,00 - 8,000 டாலராக இருக்கிறது. இந்தியாவிலோ அது 7,500 - 8,500 டாலராக இருக்கிறது. பிலிப்பைன்ஸ் இல் சம்பளம் 9,000 - 10,000 டாலராக இருந்தாலும் அங்கு மற்ற நாடுகளை விட டெக்னிக்கல் பட்டதாரிகள் அதிகம் இருப்பதாக சொல்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு, இங்கு இங்கிலீஷ் பேசும் இஞ்சினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட் பட்டதாரிகள் அதிகம் இருப்பதால்தானாம். இதனால்தான் இந்திய நிறுவனங்களால் இந்த துறையில் நல்ல சேவை அளிக்க முடிகிறது என்கிறது டி அண்ட் பி.
நன்றி : தினமலர்


அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை கொடுக்கிறது அமெரிக்க அரசு

சீரழிந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்ய இன்னும் ஒரு 800 பில்லியன் டாலர்களை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடனாக கொடுக்க முன்வந்திருக்கிறது. ஏற்கனவே 700 பில்லியன் டாலர்கள் போக இது இரண்டாவது கடன் திட்டம். இது குறித்து பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஹென்றி பால்சன், இதன் மூலம் மக்கள், அவர்களுக்கு வேண்டிய கடன்களை மீண்டும்எளிதாக பெற வாய்ப்பு ஏற்படும் என்றார். இதில் 600 பில்லியன் டாலர்களை அடமான கடன்களை ஏற்றுக்கொள்வதற்காகவும், 200 பில்லியன் டாலர்களை கன்சூமர் கிரிடிட் மார்க்கெட்டை எளிதாக்கி விடுவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என்றார் பால்சல். பொருளாதாரம் சீர்குழைந்திருப்பதால் நிதி நிறுவனங்கள், கடன் கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வந்தன. அது மேலும் மோசமாக மோசமாக கடன் கொடுப்பது இன்னும் கடினமானது. அக்டோபர் மாதத்தில் அங்கு கிரிடிட் கார்டு லோன், கார் லோன், மாணவர்களுக்கான கல்வி கடன் போன்றவைகள் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டன. இப்போது அறிவித்திருக்கும் கடன் திட்டத்தால் நிறுத்தி வைத்திருக்கும் கடன்கள் மீண்டும் கொடுக்கப்படும் என்றார் பால்சன். அமெரிக்க வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அந்நாட்டின் ' மொத்த உள்நாட்டு உற்பத்தி' ( ஜி.டி.பி ) மூன்றாவது காலாண்டில் 0.5 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவித்திருந்தது. மக்களின் வாங்கும் சக்தியும் கடந்த 28 வருடங்களில் இல்லாத அளவாக குறைந்து விட்டதாக தெரிவித்திருந்தது. இதனால்தான் அவசரமாக 800 பில்லியன் கடன் திட்டத்தை அறிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. இப்போது அறிவித்திருக்கும் 800 பில்லியன் டாலர்களை, நிதி நிறுவனங்களின் வராக்கடன்களை ஏற்றுக்கொள்வதற்கும், அடமான திட்டத்தின்படி உள்ள செக்யூரிட்டிகளை ஏற்றுக்கொள்வதற்கும் கொடுக்க இருக்கிறது.
நன்றி : தினமலர்


650 மேனேஜர் லெவல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கிறது ஐ.டி.பி.ஐ பேங்க்

சர்வதேச அளவில் நிதித்துறையில் கடும் குழப்பம் ஏற்பட்டு, அதனால் நிறைய வங்கிகளை மூடக்கூடிய நிலைக்கு வந்திருந்தும்; இன்னும் பல வங்கிகள் செலவை குறைக்கும் விதமாக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருந்தாலும் இந்தியாவின் ஐ.டி.பி.ஐ.வங்கி புதிதாக 650 பேரை மேனேஜர் லெவல் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது. இன்டஸ்டிரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா ( ஐ.டி.பி.ஐ.), அதவன் ரீடெய்ல் பேங்கிங் வேலைக்காக 256 பேரை மேனேஜர் வேலைக்கும், இன்னொரு 220 பேரை அதன் நிதித்துறைக்கு மேனேஜர் வேலைக்கும் எடுக்க இருக்கிறது. இன்னொரு 176 பேரை நிதித்துறையில் உதவி ஜெனரல் மேனேஜர் வேலைக்கு எடுக்கவும் அந்த வங்கி திட்டமிட்டிருக்கிறது. மார்ச் 2008 வரை அந்த வங்கியின் அக்கவுன்டன்ஸி, மேனேஜ்மென்ட், இஞ்சினியரிங், சட்டம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பேங்கிங், மற்றும் பொருளாதாரத்துறையில் மொத்தம் 8,989 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த எண்ணிக்கைதான் இனிமேல் கூட்டப்படுகிறது. இவர்கள் தவிர இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க், இந்த நிதி ஆண்டுக்குள் 25,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக சொல்லியிருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே இந்திய வங்கிகள் யாரையும் புதிதாக வேலைக்கு எடுக்கவில்லை. இந்த வருடத்தில் நாங்கள் கிரிக்கள் லெவலில் 20,000 பேரையும் சூப்பர்வைசர் லெவலில் 5,000 பேரையும் வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று ஸ்டேட் பாங்க் கின் சேர்மன் ஓ.பி.பாத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களின் திடீர் முற்றுகையால் பாங்காக் விமான நிலையம் மூடல் ; விமானங்கள் ரத்து

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று அதிகாலை திடீரென்று பாங்காக் விமான நிலையத்திற்குள் நுழைந்து முற்றுகையிட்டதால், விமானங்கள் எதையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் இயங்காததால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் செய்வதறியாமல் திணறிப்போய் இருக்கிறார்கள். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பீப்பில்ஸ் அலையன்ஸ் ஃபார் டெமாகிரசி ( பிஏடி ) என்ற அமைப்பினர் இன்று அதிகாலை வேளையில் திடீரென பாங்காங் சுவர்னபூமி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டனர். விமானம் புறப்படுகிற இடம் வரை வந்து விட்ட அவர்கள் அங்கேயே அமர்ந்து விட்டனர். இதனால் நிலைகுழைந்து போன விமான நிலைய அதிகாரிகள், விமானங்களை நிறுத்த வேண்டியதாகி விட்டது. எங்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. எனவே காலை 4.00 மணியில் இருந்து ( தாய்லாந்து நேரம் ) விமானங்கள் இறங்குவதையும் புறப்படுவதையும் முற்றிலுமாக நிறுத்தி விட்டோம். இதனால் 78 விமானங்கள் நிறுத்தப்பட்டு விட்டது என்று பாங்காக் விமான நிலைய இயக்குனர் செரிராத் பிரசுதனன் தெரிவித்தார். விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதால் அங்கிருந்த சுமார் 3,000 பயணிகள் அங்கேயே இருக்க வேண்டீயதாகி விட்டது. பயணிகளால் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள்ளும் போக முடியவில்லை. ஏனென்றால் அங்கேயும் போராட்டக்காரர்கள் அமர்ந்து ரோட்டை மறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள பெரு நாட்டுக்கு சென்றிருக்கும் தாய்லாந்து பிரதமர் சொம்சாய் வோங்சவாத்தை, தாய்லாந்து திரும்ப விடாமல் தடுக்கும் நோக்கத்தில்தான் இவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்



Tuesday, November 25, 2008

சரிவில் முடிந்தது இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில், பகல் 2 மணி வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ்,பின்னர் குறைய துவங்கியது. ஆசிய சந்தைகள் உயர்ந்திருந்ததை தொடர்ந்து உயர்ந்திருந்த சென்செக்ஸ், பின்னர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து சரிய துவங்கியதாக சொல்கிறார்கள். காலையில் உயர்ந்து கொண்டிருந்த சந்தையை பார்த்து உற்சாகத்தில் இருந்த வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கிய சந்தையை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 207.59 புள்ளிகள் ( 2.33 சதவீதம் ) குறைந்து 8,695.53 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 54.25 புள்ளிகள் ( 2 சதவீதம் ) குறைந்து 2,654 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி., டி.சி.எஸ்., பெல், ஐ.டி.சி., மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை இன்று சரிவை சந்தித்தன. இன்று ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் சரிவில் இருந்தாலும் ஆசிய சந்தை உயர்ந்து தான் முடிந்திருந்தது.நிக்கி 5.22 சதவீதம், ஸ்டெயிட் டைம்ஸ் மற்றும் தைவான் முறையே 2 மற்றும் 2.6 சதவீதம், ஹேங்செங் 3.38 சதவீதம், ஜகர்தா மற்றும் கோஸ்பி முறையே 1.12 மற்றும் 1.36 சதவீதம் உயர்ந்திருந்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிவில்தான் இருக்கின்றன.
நன்றி : தினமலர்


ஒப்பந்த ஊழியர்களை குறைக்க கூகிள் நிறுவனம் முடிவு ?

இன்டர்நெட் நிறுவனமான கூகிள், அதன் ஒப்பந்த ஊழியர்களை கணிசமாக குறைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.பொருளாதார சீர்குழைவு ஆரம்பித்ததற்கு முன்பிருந்தே நாங்கள் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கையை குறிப்பிட்ட அளவு குறைத்து விடயோசித்து வருகிறோம் என்று கூகிள் நிறுவனத்தை சேர்ந்த ஜேன் பென்னர் தெரிவித்தார்.ஆனால் எத்தனை ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள் என்பதை அவர் சொல்ல மறுத்து விட்டார். கூகிள் நிறுவனத்தில் 20,123 நிரந்தர ஊழியர்களும் சுமார் 10,000 ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள்.
நன்றி : தினமலர்


ரூ.3 கோடி விலையுளள பென்ஸ் கார் இந்த மாதம் இந்தியா வருகிறது

பிரபல ஜெர்மன் கார் கம்பெனியான மெர்சிடஸ் பென்ஸ், அதன் ஏ.எம்.ஜி. வரிசை கார்களில் 6 மாடல்களை இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சர்வதேச அளவில் கார் மார்க்கெட் சரிந்திருந்தபோதும் உலகின் மிக காஸ்ட்லியான கார்களை தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அதன் ஏ.எம்.ஜி., மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அதன் விலை ரூ.1.25 கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை இருக்கும் என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. மெரிசிடஸ் பென்ஸ் கார்களிலேயே அதிக காஸ்ட்லியான கார்கள் என்று சொல்லப்படும் இந்த வகை கார்களுக்கு இந்தியாவில் ஆர்டர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். கார்கள் ஜெர்மனியில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கார்கள் இங்கு வந்து சேர இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம். மெர்சிடஸ் பென்ஸின் ரேஸ் கார்கள் தயாரிக்கும் பிரிவு ஏ.எம்.ஜி., என்று அழைக்கப்படுகிறது. கார் மார்க்கெட்டை பொருத்தவரை, மிட்சைஸ் கார் விற்பனைதான் 5 சதவீதம் குறைந்திருக்கிறது. ரூ.25 லட்சத்துக்கு மேல் ரூ.ஒரு கோடி வரை விலையில் இருக்கும் சொகுசு கார்கள் விற்பனை சரியவில்லை. மாறாக உயர்ந்துதான் இருக்கிறது. ஜெர்மனியின் மிகப்பெரிய மூன்று சொகுசு கார் தயாரிப்பாளர்களான பென்ஸ், பி.எம்.டபிள்யூ.,மற்றும் ஆடி ஆகியவையின் சொகுசு கார் விற்பனை, கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இரட்டிப்பாக உயர்ந்து தான் இருக்கிறது. இந்திய சந்தையில் சொகுசு கார்களான லம்போர்கினி, பென்ட்லி, ரால்ஸ் ராய்ஸ், போர்ச் ஆகியவற்றின் விற்பனை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரால்ஸ் ராய்ஸ் நிறுவனம், இந்த வருடத்தில் விற்க எண்ணியிருந்த கார்களை இப்போதே விற்றுவிட்டதாக சொல்கிறது.போர்ச் கார்களின் விற்பனை இரட்டிப்பாகி இருக்கிறது. லம்பார்கினி, இந்த வருட இலக்கை இப்போதே அடைந்து விட்டதாக சொல்கிறது. ஏப்ரல் - அக்டோபரில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் 1,936 கார்களை இந்தியாவில் விற்றிருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 46 சதவீதம் அதிகம். இந்த மாத இறுதிக்குள் வர இருக்கும் சொகுசு கார்கள் உட்பட மெர்சிடஸ் பென்ஸ் கார்களின் எல்லா மாடல்களையும் எளிய முறையில் வாங்க இனிமேல் நாம் ஐசிஐசிஐ பேங்க்கை அனுகலாம். அதற்கான ஏற்பாட்டை ஐசிஐசிஐ பேங்க்குடன் பென்ஸ் நிறுவனம் ஏற்படுத்தி கொடுக்கிறது.
நன்றி : தினமலர்


பதவி விலகியதும் நூலகம் துவங்குகிறார் ஜார்ஜ் புஷ்

அமெரிக்க அதிபராக இருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் அவர் என்ன செய்யப்போகிறார் என்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது. இந்நிலையில் பெரு நாட்டுக்கு சென்ற அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ்ஷை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் இது பற்றி கேள்வி கேட்டு துளைத்தனர். அப்போது அவர், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதும் அவர்களது சொந்த மாகாணமான டெக்ஸாஸ் செல்ல இருப்பதாகவும், அங்கு டல்லஸ் நகரில் நூலகம் ஒன்று துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஃபிரீடம் இன்ஸ்டிடியூட் ஒன்றை துவக்கவும் புஷ் விரும்பமாக இருக்கிறார் என்றார். நூலகத்திலும் ஃபிரீடம் இன்ஸ்டிடியூட்டிலும் புஷ் பொழுதை போக்கும்போது, லாரா புஷ் கல்வித்துறையில் சேவை செய்ய செல்ல இருக்கிறார். லாரா புஷ், அதிபர் மனைவியாக வெள்ளை மாளிøக்கு செல்லும் முன் டீச்சராகத்தான் வேலை பார்த்து வந்தார். மேலும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான மனித உரிமையை நிலைநாட்ட, அவர் போராட்டப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் இன்னொரு நபரிடம் ஜார்ஜ் புஷ், அவரது எதிர்காலம் குறித்து பேசியபோது, தான் ஒய்வு பெற்றபின் சொற்பொழிவு ஆற்றப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


டிசம்பர் 24ம் தேதிக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : முரளி தியோரா

சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 24 ம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை அடுத்து, இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நானும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறேன். ஆனால் டிசம்பர் 24ம் தேதிக்குப்பின்தான் விலையை குறைக்க முடியும் என்றார் தியோரா. சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய், சராசரியாக இருந்த விலையின் அடிப்படையில் எடுத்த கணக்கின்படி, இந்திய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.16 கோடியும் டீசல் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடியும் லாபம் ஈட்டுகின்றன. இருந்தாலும் நியாய விலைகடை மூலம் மண்ணெண்ணெய் விற்கும்போதும் சமையல் கேஸ் விற்பனையிலும் நஷ்டம்தான் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு லிட்டர் மண்ணெண்ணெயிலும் ரூ. 22.40 ம்,ஒவ்வொரு சிலிண்டர் சமையல் கேஸ் விற்பவையிலும் ரூ.343.49 ம் நஷ்டம் ஏற்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இதனால் ஏற்பட்டு வந்த நஷ்டம் குறைந்திருக்கிறது என்றார் தியோரா.
நன்றி : தினமலர்


வெளிநாட்டு பைலட்களை வெளியேற்றுவது பற்றி விரைவில் முடிவு : ஜெட் ஏர்வேஸ் சி.இ.ஓ.

ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது பற்றி, கடந்த ஞாயிறு அன்று ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது, அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஊழியர்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் பைலட்களில் சம்பளத்தை குறைக்க மட்டும் பைலட்கள் ஒத்துக்கொள்ளவில்லை. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து, இங்குள்ள பைலட்களை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்று, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அத்தனை வெளிநாட்டு பைலட்களையும் ஜெட் ஏர்வேஸில் இருந்து வெளியேற்றினால் தான் சம்பள குறைப்பு குறித்து பரிசீலிப்போம் என்று இந்திய பைலட்கள் போர்க்கொடி தூக்கினர். இது குறித்து நேற்று பதிலளித்த ஜெட் ஏர்வேஸின் சி.இ.ஓ., வோல்பங்க் புரோசாவர், வெளிநாட்டு பைலட்களை முழுவதுமாக வெளியேற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார். ஆனால் இப்போதைக்கு நாங்கள் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். இது கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது. எனவே இப்போதைக்கு ஒரு முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை. எனினும் கூடிய விரைவில் அவர்களை குறைப்பது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றார். அநேகமாக வெளிநாட்டு பைலட்களில் 15 சதவீதத்தினரை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் விரைவில் குறைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய பைலட்களோ அத்தனை வெளிநாட்டு பைலட்களையும் வெளியேற்றற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஜெட் ஏர்வேஸில் இருக்கும் 1,000 பைலட்களில் 240 பேர் வெளிநாட்டு பைலட்கள். அவர்கள் ஜெட் ஏர்வேஸின் பெரிய விமானங்களை மட்டும் ஓட்டுகிறார்கள். அவர்கள் இந்திய பைலட்களை விட 40 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள். எனவே நிர்வாகம் செலவை குறைக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களிடமிருந்து அதை ஆரம்பிக்கலாமே என்று இந்திய பைலட்கள் சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


அமெரிக்க அரசின் உறுதிமொழியால் சிட்டி பேங்க்கின் பங்கு மதிப்பு 58 சதவீதம் உயர்ந்தது

மோசமான நிதி நிலையால் திவால் நிலை வரை வந்த அமெரிக்காவின் சிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அமெரிக்க நிதித்துறை ஒத்துக்கொண்டதை அடுத்து, பாதாளத்திற்கு சென்றிருந்த அந்த வங்கியின் பங்கு மதிப்பு நேற்று 58 சதவீதம் உயர்ந்து விட்டது. இது தவிர அந்த வங்கியில் வராக்கடனாக நீண்டகாலமாக இருக்கும் 306 பில்லியன் டாலர்களுக்கும், அமெரிக்க நிதித்துறை மற்றும் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது. கடந்த மாதத்தில் தான் சிட்டி பேங்க்கில் பொதுமக்கள் பணம் 25 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு முதலீடு செய்திருக்கிறது. 2006ல் 270 பில்லியன் டாலர்களாக இருந்த சிட்டி பேங்க்கின் மதிப்பு, மோசமான நிதி நிலைக்கு தள்ளப்பட்டதால் கடந்த வாரம் வெள்ளி அன்று வெறும் 20.5 பில்லியன் டாலராக இறங்கி இருந்தது. கடந்த வாரத்தில் மட்டும் அதன் சந்தை மதிப்பு 60 சதவீதம் குறைந்திருந்தது. ஆனால் இழந்த 60 சதவீத மதிப்பில் 58 சதவீதத்தை நேற்று திரும்ப பெற்று விட்டது. கடும் நிதி நெருக்கடியில் இருந்து வரும் அந்த வங்கி, உலகம் முழுவதிலும் இருக்கும் அதன் கிளைகளில் பணியாற்றி வருபவர்களில் 75,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது நினைவிருக்கலாம்.
நன்றி : தினமலர்


அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகிறார் திமோதி கெய்த்னர்

தற்போது நியுயார்க் மாகாண பெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக இருக்கும் திமோதி கெய்த்னரை, அடுத்த அமெரிக்க நிதி அமைச்சராக பாரக் ஒபாமா நியமித்திருக்கிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா, அந்நாட்டு வழக்கப்படி வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதி அதிபராக பொறுப்பேற்கிறார். இப்போது அவர், புதிய அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் வேலையை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார். நம்நாட்டைப்போல் இல்லாமல் அந்நாட்டின் அதிபர், யாரை வேண்டுமானாலும் தன் அமைச்சராக நியமித்துக்கொள்ளலாம். அமைச்சர்கள் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும் என்று அவசியமில்லை. அதிபராக பார்த்து அவருக்கு பொறுத்தமான நபர்களை அமைச்சர்களாக நியமித்துக்கொள்ள வேண்டியதுதான். இப்போது உலகம் முழுவதிலும் கடும் நிதி நெருக்கடி இருந்து வருவதாலும், அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வருவதாலும், ஒபாமா யாரை நிதி அமைச்சராக நியமிக்கப்போகிறார் என்றுதான் உலக நாடுகள்ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று அவர், தற்போது நியுயார்க் மாகாண பெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக இருக்கும் திமோதி கெய்த்னரைத்தான் புதிய நிதி அமைச்சராக நியமிப்பதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நிதி அமைச்சர் பதவிக்கு கெய்த்னர் ஒரு பொறுத்தமான நபர் என்றே பொருளாதார வல்லுனர்களும் நிதி வங்கி நிபுணர்களும் கருதுகிறார்கள். இவர் தவிர லாரன்ஸ் சம்மர்ஸ் என்பவரை வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சில் தலைவராகவும், அதிபரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக கிருஷ்டினா ரோமர் என்பவரையும் ஒபாமா நியமித்திருக்கிறார். புதிய அமைச்சர்களை தேர்ந்தெடுத்தது குறித்து சிகாகோவில் பேசிய பாரக் ஒபாமா, புதிய சிந்தனை உள்ளவர்களை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.
நன்றி : தினமலர்

சென்னையில் சாதா பெட்ரோல் இல்லை : 'ஸ்பீடு' மட்டும் விற்பனை

சென்னையில் தற்போது சாதா பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டு, 'ஸ்பீடு' ரக பெட்ரோல் விற்பனை மட்டுமே நடைபெறுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை நகரில் உள்ள பல்வேறு பெட்ரோல் 'பங்க்'களில் சாதா பெட்ரோலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாதா பெட்ரோல் இல்லை என அறிவிப்பு ஒட்டப் பட்டுள்ளது. 'ஸ்பீடு' ரக பெட்ரோல் மட்டும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் சாதா பெட்ரோல் இருக்கும் 'பங்க்'களில் வாகனங்களின் கூட்டம் அலைமோதியது. நேற்று பெரும்பாலான 'பங்க்'களில் 'சாதாரண பெட்ரோல் இல்லை. ஸ்பீடு பெட்ரோல் தான் உள்ளது' என்ற பதில் தான் கிடைத்தது.
சாதாரண பெட்ரோலை விட, 'ஸ்பீடு' ரக பெட்ரோல் விலை சற்று அதிகம். மேலும், ஸ்பீடு பெட்ரோல் போட்டால் தொடர்ந்து அந்த வகை பெட்ரோலை போட்டு வந்தால் தான் இன்ஜின் பழுதடையாமல் இருக்கும். சாதாரண பெட்ரோல் கிடைக்காததால் வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து 'ஸ்பீடு பெட்ரோல் வாங்கிச் சென்றனர். சில இடங்களில் இதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.
நன்றி : தினமலர்


பொருளாதார தேக்க நிலை எதிரொலி : கிரானைட் கல் வெட்டும் பணி நிறுத்தம்

ஆத்தூரில், அரிய வகை மஞ்சள் கிரானைட் கற்கள் எடுக்கும் பணியை, தமிழ்நாடு கனிம நிறுவனம் நிறுத்தியுள்ளது. பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியே இதற்கு காரணம்.தமிழகத்தில் சில பகுதிகளில், மட்டுமே உலகத்தரம் வாய்ந்த அரிய வகை மஞ்சள் கிரானைட் கற்கள் உள்ளன. அவற்றில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தில், உள்ள குவாரியும் ஒன்று.இங்கு, 60 ஏக்கர் வரையிலான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. 'டாமின்' நிறுவனத்தினர், கடந்த ஜனவரியில், கிரானைட் குவாரியை துவக்கினர். இந்த குவாரியில் இருந்து எடுக்கப்படும், மஞ்சள் நிற கிரானைட் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய உலகத்தரம் வாய்ந்தவை. சிவப்பு நிறம் தெளித் தார் போல், இருப்பது மஞ்சள் கிரானைட் கல்லின் சிறப்பு.ஏப்ரல் முதல் கிரானைட் முழுமையாக வெட்டி எடுக்கப்படும் பணி முழு வீச்சில் நடந் தது. மஞ்சள் கிரானைட் சிறிய கற்கள் ஒரு கனமீட்டர் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரையும், பெரியளவிலான கற்கள் 35 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைப்பதாக கூறப்படுகிறது. இப்பணி வரும் 2037 வரை 'டாமின்' செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத் திய நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. அந்நாடுகளில் கட்டுமானப்பணிகள் அனைத்தும், ஸ்தம்பித்துள் ளன. அதனால், வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்கள் வாங்கி செல்லும் வியாபாரி யாரும் வரவில்லை. கிரானைட் கற்கள் ஏற்றுமதியாகாமல் குவாரிகளில் தேங்கியுள்ளன. கற்கள் வெட்டும் எந்திரங்களுக்கு எரிபொருள் செலவு பிடிக்கிறது. அதனால், கல் வெட் டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மாநில அரசு வாய்மொழியாக, உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், கோவிந்தம் பாளையம் மஞ்சள் கிரானைட் குவாரியில் பல கோடி ரூபாய் மதிப்பில், வெட்டி எடுக்கப்பட்ட கற்களோடு தற்போது பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


சிரமமான காலத்தை தாண்டிவிட்டோம்: நம்பிக்கையூட்டுகிறார் சிதம்பரம்

'பொருளாதார மந்த நிலை பாதிப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் இந்த பாதிப்பு சுவடு குறையும்' என்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். டில்லியில் நேற்று பொருளாதார ஆசிரியர்கள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாட்டைத் துவக்கி வைத்த அவர், நாட்டின் இன்றைய பொருளாதார நிலையையும் அதற்கான தீர்வுகளையும் விளக்கினார். உலக பொருளாதார சுனாமி பாதிப்பு இந்தியாவை அதிகம் தாக்காமல் இருப்பதற்கு 'சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வெளிப்படையான அணுகுமுறையை' நாம் பின்பற்றுவது காரணம் என்ற அவர், இதுவரை கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் கூட்டணியில் இருந்ததால், பாதிப்பில் இருந்து தப்பியதாகக் கூறப்படும் கருத்தை நிராகரித்தார். காங்கிரஸ்காரர் என்ற முறையில் இந்த வெற்றியை தங்களது என்று கூறிக்கொள்வதில் தவறில்லை என்றும் சிதம்பரம் கூறினார்.நாடு இன்று சந்திக்கும் வளர்ச்சித் தேக்கம், அதற்குத் தீர்வு எப்படி, மத்திய பட்ஜெட் பற்றாக்குறை பாதிக்காது உட்பட பல தகவல்களைக் கூறினார்.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கள்:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, கடந்த ஐந்தாண்டுகளில் மொத்த வளர்ச்சி அதிகரிக்க சிறந்த பணியாற்றியிருக்கிறது. இந்த ஆண்டு சிரமமான காலம். இருந்தாலும் மொத்த வளர்ச்சி 7 சதவீதம் என்று ஏற்படும் போது நிச்சயம் வளர்ச்சி பாதிப்பு இருக்காது. அதற்கு நிதி ஆதாரங்கள், ஊக்கம் தரும் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். தற்போது வங்கிகள் சற்று பணப்புழக்கத்துடன் செயல்படுவதைக் காண்கிறீர்கள், பொதுத்துறை வங்கிகள் கடன் மீதான வட்டி சதவீதத்தைக் குறைத்திருக்கின்றன. உருக்கு விலை சற்று இறங்கி வருகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வ தேச அளவில் இறங்கியிருக்கிறது. அதனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அந்தத்துறை அமைச்சர் முடிவு கூறுவார்.இன்னமும் சில துறைகள் வளர்ச்சிக்காக அரசு உதவி செய்யும். ஆனால் அதற்கேற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படும். இப்படி அதிக அளவில் செலவானால் நிதிப்பற்றாக்குறை வருமே என்றால், கடந்த 50 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இன்னும் ஓராண்டிற்கு நீடிப்பதால் என்ன தவறு.இன்றைய நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையை அரசு அணுகும் விதத்தில் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தன் யோசனைகளைக் கூறினால் அதை ஏற்க அரசு தயார். முந்தைய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தை விட சிறந்த பொருளாதார அணுகுமுறையை இந்த அரசு தந்து, வெற்றியும் கண்டிருக்கிறது. அதேபோல கடந்த இரு மாதங்களுக்கு முன் இருந்த நிலை இன்று இல்லை.பங்குச் சந்தையிலிருந்து அன்னிய மூலதன முதலீட்டாளர் டாலராக எடுத்துச் சென்றது உண்டு. அதனால், நம் ரூபாய் மீது நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக அன்னிய முதலீட்டாளர் சந்தையில் முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றனர்.அடிப்படைக் கட்டமைப்பு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தர பல்வேறு முன்னுரிமைகளை மேற்கொண்டிருக்கிறோம். அதே போல பணவீக்கம் குறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், வித்தியாசமாக நம்நாட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வை விட காய்கறிகள், பழங்கள் விலை உயருகின்றன. அதற்கு தேவை, சப்ளை, ஒழுங்காகப் பாதுகாத்து வினியோகிக்கும் நடைமுறை தேவை. இந்த ஆட்சியில் விவசாயம், உணவு தானிய உற்பத்தி, சர்வ சிக்ஷா அபியான் திட்டம், சுகாதார அபிவிருத்தி ஆகியவற்றிற்கு, கடந்த முறை இருந்த தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியை விட இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.இன்றுள்ள நிலையை உணர்ந்து நாம் சந்தித்த பிரச்னைகளில் இருந்து மீள வழி காணப்பட்டிருப்பதால், தற்போது உள்ள சூழ்நிலையை 'பொருளாதார தேக்கம், அதனால் பாதிப்பு' என்று மீடியா வர்ணிக்க வேண்டாம், மாறாக தனிநபர் நுகர்வு, மூலதன முதலீடு அதிகரித்திருக்கிறது என்பது ஏற்கப்பட வேண்டிய விஷயம். அதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்கான புள்ளிவிவரம் இனி மேல் தான் வெளிவரும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.உடன், நிதித்துறைச் செயலர் அருண் ராமநாதன் மற்றும் அதிகாரிகளும், பி.ஐ.பி., தலைமை அதிகாரி தீபக்சந்து ஆகியோர் இருந்தனர்.
எம்.ஆர்.இராமலிங்கம்
நன்றி : தினமலர்


Monday, November 24, 2008

கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி சென்டர் அமைக்கிறது சவ்வியான்

பிசினஸ் பிராசஸிங் மேனேஜ்மென்ட் ( பிபிஎம் ) நிறுவனமான சவ்வியான், கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி மையத்தை அமைக்கிறது.இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கோயம்புத்தூரில்தான் இம்மாதிரியான மையம் அமைக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு தேவையான எல்லா வகையான சாப்ட்வேரையும் டிசைன் செய்து உருவாக்க, மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஈடுபட அது கூடுதலான பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த துறையில் இந்தியாவில் ஒரு முன்னணி நிறுவனமாக வளர அது முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் சிலிக்கான்வேலி, மற்றும் மும்பையில் இருக்கும் அதன் நிறுவனங்களுக்கு கோயம்புத்தூரில் இருந்து ஒரு உயர்மட்ட குழுவினர் சென்று இது குறித்து அறிந்து வர இருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


அமெரிக்க பங்கு சந்தை வீழச்சியால் இந்திய கம்பெனிகள் இழந்தது 5.74 பில்லியன் டாலர்கள்

போன வாரத்தில் அமெரிக்க சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் அங்குள்ள பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. அங்குள்ள பங்கு சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான கம்பெனிகளில் பங்கு மதிப்பு பாதாளத்திற்கு சென்று விட்டன. இதில் இந்திய கம்பெனிகளும் தப்பவில்லை. அங்குள்ள நியுயார்க் ஸ்டாக் எக்சேஞ் மற்றும் நாஸ்டாக்கில் 18 இந்திய கம்பெனிகள் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன. நவம்பர் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அங்கு லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் 18 இந்திய கம்பெனிகளில் 16 கம்பெனிகள் மொத்தமாக 5.74 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கின்றன. இரண்டு கம்பெனிகளின் மதிப்பு மட்டுமே உயர்ந்திருக்கிறது. டாக்டர் ரெட்டி'ஸ் லேபரட்டரீஸ் 37 மில்லியன் டாலர்களும், ஜென்பேக்ட் 4.3 மில்லியன் டாலர்களும் உயர்ந்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது மோசமான நிலைக்கு சென்று விட்டது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதனால்தான் அங்குள்ள பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவை வருகின்றன. நஷ்டமடைந்த 16 இந்திய கம்பெனிகளில் அதிகம் நஷ்டமடைந்தது ஹெச்.டி.எப்.சி.பேங்க் தான். அது மட்டுமே 1.37 பில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ பேங்க் 1.12 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. இன்போசிஸ் ஒரு மில்லியன் டாலர்கள், விப்ரோ 863 மில்லியன் டாலர்கள், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 457 மில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேபிடலைசேஷனை இழந்திருக்கின்றன. இது தவிர டாடா மோட்டார்ஸ், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், ஷிபி டெக்னாலஜிஸ், ரிடிஃப் டாட் காம், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், எம்.டி.எல்.எல்., பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் ஆகியவையும் பெருமளவு மார்க்கெட் கேபிடலைஷேசனை இழந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


சிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதற்கு 320 பில்லியன் டாலர் கடன் கொடுக்க அமெரிக்க அரசு ஒப்புதல்

கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குரூப்பை காப்பாற்ற, அதன் 300 பில்லியன் டாலர் வராக்கடன்களை ஏற்றுக்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்துள்ளது. மோசமான கடன் என்று அக்கவுன்ட் புக்கிலேயே நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கும் 300 பில்லியன் டாலர் ( சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ) கடனை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்வதாக ஓத்துக்கொண்டிருக்கிறது. இது தவிர மேலும் ஒரு 20 பில்லியன் டாலர்களை ( சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ) சிட்டி குரூப்பின் முதலீட்டிற்கு கடனாக கொடுக்கவும் அமெரிக்க நிதித்துறை ஒத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்க நிதித்துறை, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆகியவற்றுடன் நேற்று சிட்டி குரூப் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதலீட்டிற்காக கொடுக்கப்படும் 20 பில்லியன் டாலருக்கு அமெரிக்க நிதித்துறை, கொஞ்சம் அதிக வட்டியை, அதாவது 8 சதவீத வட்டியை சில வருடங்களுக்கு வசூல் செய்யும் என்றும் பேசப்பட்டிருக்கிறது. சிட்டி குரூப்பிடமிருந்து 8 சதவீத வட்டியை வசூலிப்பது போலவே, அமெரிக்க நிதித்துறை மற்ற வங்கிகளுக்கு கடந்த மாதத்தில் கொடுத்திருந்த 700 பில்லியன் டாலர் கடனுக்கும் 8 சதவீத வட்டியை வசூலிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இது தவிர சிட்டி குரூப்பின் நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்றும் பெடரல் ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது. 106 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள சிட்டி குரூப்பிற்கு 20 கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். மோசமான நிதி நிலையில் இருந்த அந்த பேங்க்கின் பங்கு மதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வந்தததை அடுத்து, திவால் ஆகி விடுமோ என்ற அச்சம் அதன் முதலீட்டாளர்கள் மற்றும் கஸ்டமர்களிடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.
நன்றி : தினமலர்


ஜெட் ஏர்வேஸின் சம்பள குறைப்பிற்கு பைலட்கள் கடும் எதிர்ப்பு

கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களில் சம்பளத்தை குறைக்க முடிவு செய்தது. இதற்கு அதில் பணியாற்றி வரும் இந்திய பைலட்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பைலட்களை இங்கிருந்து முழுமையாக வெளியேற்றும் வரை நாங்கள் சம்பள குறைப்பை ஒத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக சொல்லி விட்டனர். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்துடன், நேற்று சேர்மன் நரேஷ் கோயல் தலைமையில் ஊழியர்களின் கூட்டத்தை மும்பை ரமதா ஹோட்டலில் நடத்தியது. இதில் அதன் ஊழியர்களின் சம்பளத்தை, 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாதம் ரூ.75,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 5 சதவீதம் சம்பளத்தை குறைப்பது என்றும், ரூ.2 - 5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், ரூ.5 - 10 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும், அதை விட அதிகம் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளுக்கு 25 சதவீதமும் சம்பளத்தை குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை அதன் ஊழியர்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பைலட்களுக்கும் 20 சதவீதம் வரை சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் முடிவுற்கு இந்திய பைலட்கள் ஒத்துக்கொள்ளவில்லை. காரணம் அந்த நிறுவனத்தில் 750 இந்திய பைலட்களும் 240 வெளிநாட்டு பைலட்களும் பணியாற்றுகிறார்கள். இதில் வெளிநாட்டு பைலட்களுக்கோ, இந்திய பைலட்களை விட 50 சதவீதம் கூடுதலாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வேறு பல சலுகைகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸிடம் இருக்கும் பெரிய விமானங்களை ஓட்டுவதும் அவர்கள்தான். இந்திய பைலட்கள் சிறிய விமானங்களைத்தான் ஓட்டுகிறார்கள். இதனால் இரு தரப்பினருக்குமிடையே கடும் பணிப்போர் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், வெளிநாட்டு பைலட்கள் 27 பேரை வேலையில் இருந்து நீக்கியது. இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கி விட வேண்டும் என்று இந்திய பைலட்கள் கோரி வருகிறார்கள். எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கியபின்தான் நாங்கள் சம்பள குறைப்பு பற்றி முடிவு செய்யவோம் என்றும் அவர்கள் சொல்லி விட்டனர். நிர்வாக செலவு கூடி விட்டதாலும், பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் இந்த நிதிஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜெட் ஏர்வேஸ், ரூ384.53 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. இதன் காரணமாக அதன் ஊழியர்களில் 1,000 பேரை நீக்கிய ஜெட் ஏர்வேஸ்,பின்னர் அரசியல் நெருக்கடி காரணமாக இரண்டே நாளில் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொண்டது நினைவிருக்கலாம்.
நன்றி : தினமலர்


நிப்டி உயர்ந்தும் சென்செக்ஸ் குறைந்தும் முடிந்த பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை இன்று தள்ளாடியபடியே இருந்தது. அதிகம் உயராமலும் அதிகம் குறையாமலும் இருந்த பங்கு சந்தையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.09 புள்ளிகள் மட்டும் ( 0.14 சதவீதம் ) குறைந்து 8,903.12 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14.80 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 2,708.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 2,700 புள்ளிகளை எட்ட பல முறை முயன்று, பின்னர் 2,700 புள்ளிகளுக்கு மேலேயே நிலை கொண்டு முடிந்திருக்கிறது. இன்று சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் அப்படியும் இப்படியுமாக இருந்தது. ஆசிய பங்கு சந்தைகள் குறைந்து முடிந்திருந்தாலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்து இருந்தன. சத்யம், ஐசிஐசிஐ பேங்க், டி.எல்.எஃப், எம் அண்ட் எம், எஸ்.பி.ஐ.,யுனிடெக், சுஸ்லான் எனர்ஜி,டாடா கம்யூனிகேஷன் ஆகியவை 3 - 9 சதவீதம் குறைந்திருந்தன. ரிலையன்ஸ் இன்ப்ஃரா, மாருதி சுசுகி, டாடா பவர், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் பவர், கெய்ல், நால்கோ, ஐடியா செல்லுலார், ஹெச்.சி.எல்.டெக்., ஆகியவை 2.5 - 6 சதவீதம் உயர்ந்திருந்தன.
நன்றி : தினமலர்


மியூச்சுவல் பண்டில் 58 ஆயிரம் கோடி போச்சு!

சர்வதேச நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பங்குச் சந்தையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் வருமான இழப்பு ஏற்பட்டதை அடுத்து, பலரும் போட்ட பணத்தை திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டது. இதனால், திட்டமிட்டு அமல் செய்யப்பட்ட குறுகிய கால மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இருந்து பலரும் பணத்தை திரும்பப்பெறுவது அதிகரித்தது. முதிர்ச்சி பெறாமலேயே பலரும் பணத்தை திரும் பப் பெற முடிவு செய்ததால், நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
குறிப்பிட்ட காலம் வரை டிபாசிட் பணத்தை வைத்திருந்தால் தான் அதற்கு லாபம் தர முடியும். ஆனால், முதிர்ச்சி பெறாமலேயே போட்ட பணத்தை திரும்பப்பெற முடிவு செய்ததால், மியூச்சுவல் பண்ட் நிதியை அவசர அவசரமாக திரட்டி திரும்பத் தர வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.நிதி நெருக்கடியால், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டு பணம் மொத்தம் 58 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 'பிக்சட் மெச்சூரிட்டி பிளான்' கள் உட்பட, குறுகிய கால மியூச்சுவல் மெச்சூரிட்டி திட்டங்களில் இருந்து மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ரூடென்ஷியல் உட்பட பல நிறுவனங்களுக்கும் இந்த வகையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், நிதி ஆதாரத்தை திரட்டி காட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'அரையாண்டு, ஓராண்டு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பணத்தை திரும்பப்பெறுவது, நிறுவனங்கள் தந்த உத்தரவாதத்தை மீறிய செயலாகிறது. இப்படி செய்யும் போது, நிறுவனத்துக்கு தான் அதிக இழப்பு ஏற்படுகிறது.பணத்தை திரும்பப்பெற வேண்டாம் என்று நாங்கள் வாடிக்கையாளர்களை தடுத்து வருகிறோம்; அதே சமயம், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டவும் செய்து வருகிறோம்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


வெளிநாட்டு பிராண்டில் 'லோக்கல் சரக்கு'க்கு தடை

வெளிநாட்டு பிராண்டு பெயரைப் போலவே உள்ளூர் சரக்கு தயாரித்து, பொது மக்களிடம் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விற்பனை செய்வதற்கு, டில்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த ரிசோம் டிஸ்டிலரிஸ் என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம், 'இம்பீரியல் புளூ' மற்றும் 'ராயல் ஸ்டேக்' ஆகிய விஸ்கி ரகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது.
பிரான்ஸ் கம்பெனியின் விஸ்கி பாட்டிலில், மேல் பகுதியில் 'ராயல் ஸ்டேக்' என்றும் கீழ்பகுதியில் 'ஸீகிராம்' என்றும் முத்திரையிடப்பட்டிருக்கும். அந்த காலி பாட்டில்களையும் பயன்படுத்தி, உள்ளூர் சரக்கை நிரப்பியும் விற்பனை செய்தது இந்த நிறுவனம்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ரிச்சர்டு என்ற மதுபான தயாரிப்பு நிறுவனமும், அதன் 'ஸீகிராம்' என்ற இந்திய துணை நிறுவனமும் சேர்ந்து, டில்லி ஐகோர்ட்டில் இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து மனு செய்தன.
மனுவை விசாரித்த நீதிபதி ரிவா கெட்ராபால், இரண்டு நிறுவனங்களின் மதுபானப் பாட்டில்களைப் பார்த்து, அது தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்து பின்னர் தீர்ப்பளித்தார்.அவர் தீர்ப்பளிக்கையில், 'இம்பீரியல் கோல்டு என்ற பெயரில் பிரான்ஸ் நிறுவன பிராண்டு உள்ளது. அதுபோல, இம்பீரியல் புளூ, இம்பீரியல் ரெட் ஆகிய பெயர்களிலும் அந்த நிறுவனம் பிராண்டு பெயர்களை பதிவு செய்து, விஸ்கியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த பெயர் தொணிக்கும் வகையில், இம்பீரியல் என்பதை சேர்த்து பிராண்டில் மற்ற மதுபானத்தை விட, விஸ்கியை தயாரித்தது சட்டப்படி தவறு; இது மருத்துவ ரீதியாக உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இதை அனுமதிக்க முடியாது. அதனால், இந்த பெயர்களில் மது தயாரிப்பதை நிறுத்த உத்தரவிடப்படுகிறது' என்றார்.
'இம்பீரியல், ராயல் என்பதெல்லாம் பொதுவான பெயர்கள் தான். அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்' என்று டில்லி மதுபான தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நீதிபதி, 'இந்த இரண்டு பெயர்களும் பொதுமான பெயர்கள் தான்.
மற்ற பொருட்களுக்கு வைத்தாலும், மதுவுக்கு, அதிலும் குறிப்பாக விஸ்கிக்கு வைப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட முடியாது.பிரான்ஸ் கம்பெனியின் காலி பாட்டில்களைப் பயன்படுத்தி, அதில் உள்ளூர் சரக்கை ஊற்றி விற்பதும் சரியல்ல' என்று தெளிவுபடுத்தினார்.
நன்றி : தினமலர்


Sunday, November 23, 2008

அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி இந்தியாவிலும் எதிரொலி -சேதுராமன் சாத்தப்பன்

அமெரிக்காவில் வியாழனன்று பங்குச் சந்தையில் ஏற் பட்ட சரிவு உலகளவில் எதிரொலித்தது. அடுத்தாண்டு அமெரிக்காவில் பொருளாதாரம் ஏற்றம் காண வாய்ப் பில்லை என்ற அறிக்கையும், கார் கம்பெனிகளான போர்டு, ஜெனரல் மோட்டார், கிரிஸலர் ஆகியவை மூழ்கும் நிலைமையில் உள்ளன (அரசாங்கம் ஏதும் நடவடிக்கைகள் எடுத்து காப் பாற்றவில்லை என்றால்) என்பதும், வேலையில்லாதவர்கள் உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பவர்கள் கடந்த 16 வருடங்களில் தற்போது தான் மிகவும் அதிகம் என்ற செய்திகளும் வந்து அங்கு பங்குச் சந்தையை தாக்கின.
அந்த சுனாமி, உலகின் பல இடங்களிலும் அடித்தது. இந் திய பங்குச் சந்தையையும் விட்டு வைக்கவில்லை. மும்பை பங்குச் சந்தை 322 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் பங்குகள் 6.8 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பங்குகள் 8.3 சதவீதமும் சரிந்தன.பணவீக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாரம் 8.90 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது. இது சென்ற வாரத்தை விட சிறிது குறைவு. இருந்தாலும் சந்தை மேலே எழும்பவில்லை.பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கையும், அடுத்த வாரம் டிரைவேடிவ் கான்டிராக்ட்களின் முடிவுத் தேதி வருவதால் பங்குச் சந்தையில் சிறிது முன்னேற்றமும் வெள்ளியன்று தெரிந்தது.வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 464 புள்ளிகள் கூடியது. சமீப காலத்தில் இறக்கத்தையே சந்தித்து வந்த முதலீட்டாளர்களுக்கு வெள்ளி விடிவெள்ளியாகவே இருந்தது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,915 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,693 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
பணவீக்கம் இன்னும் குறையுமா?: கட்டாயம் குறைய வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அரசாங்கம் இன்னும் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்கவில்லை. இது குறைக்கப்படுமானால் பணவீக்கம் இன்னும் குறையும். ஏனெனில் பல பொருட்கள், போக்குவரத்துக் கட்டணங்கள் அதைத் தொடர்ந்து குறைக்கப்படலாம். அது பணவீக்கத்தைக் குறைக்கும்.
ஒவ்வொரு தினமும் எண்ணெய் கவனி என்ற வாசகம் போய்விட்டது. ஏனெனில் கச்சா எண்ணெய் அவ்வளவு குறைந்து விட்டது. வாங்க ஆள் இல்லை. இனி டாலரை கவனி என்று வந்து விடும் போலிருக்கிறது. அவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.டாலரின் மதிப்பு 50 ரூபாயையும் தாண்டி சென்றுள்ளது. ஏன் இப்படி பந்தயக் குதிரை போல ஓடுகிறது? வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் விற்று பணம் எடுத்துச் செல்கின்றன. அதனால், டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் கூடிவரும் டாலரைப் பார்த்து பயந்து பார்வேட் கான்டிராக்ட் போட ஓடுகிறனர். அது டாலரின் மதிப்பைக் கூட்டுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கு ஏற்றுமதி மூலம் வரும் டாலரை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொள்கின்றனர், இன்னும் கூடும் என்ற நம்பிக்கையில். இதனால், நாளுக்கு நாள் டாலர் மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது.தங்கமே, தங்கமே: என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடுவாரே, அது போல தங்கத்தைப் பார்த்து பாடத் தோன்றுகிறது. நாளுக்கு நாள் ஏறி வருகிறது. ஏன்? பங்குச் சந்தை சரிந்து கொண்டு வருகிறது, அதே சமயம் டாலர் மதிப்பும் கூடிவருகிறது. இருக்கும் பணத்தை பத்திரமாக முதலீடு செய்ய வேண்டும். இடம் வேண்டுமே? அதற்கு தான் தங்கத்தில் முதலீடு செய்ய எல்லாம் ஓடுகின்றனர். சமீப வருடங்களில் தங்கம் நல்ல முதலீட்டு சாதனமாக இருந்து வருகிறது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: ஒரே ஒரு ஆறுதல். இந்தியாவில் மட்டும் விழவில்லை; எல்லா நாடுகளிலும் சந்தை நிலமை இது தான். விழுந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்க சந்தைகள் எப்படி பரிணமிக்கப் போகிறதோ என்பதைப் பொறுத்தே அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கும் இருக்கும். ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளையும் பொறுத்து சந்தையின் போக்கு அமையும்.
நன்றி : தினமலர்


சலுகைகளை அள்ளி விடும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

'ஓசூர் ரோட்டில், ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 10 லட்சம் ரூபாய். இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் ரூபாய். வரிகள், பதிவு கட்டணம் இலவசம். 100 சதவீத வீட்டுக் கடன் வாங்கித் தரப்படும்!''பேனர் ஹட்டா ரோட்டில், இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சம் ரூபாய். முழுவதும் பர்னிஷிங் செய்யப் பட்டது. அத்துடன் 30க்கு40 அளவுள்ள வீட்டு மனையும் இலவசம்!'இப்படிப்பட்ட அறிவிப்புகள் சமீப நாட்களாக பெங்களூரில் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன. வீடு வாங்க நினைப்போர், விலை குறையட்டும், கொஞ்ச காலம் பொறுத்திருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்கும் நிறுவனங்களும், ஏற்கனவே ஒருவர் குடியிருந்த வீட்டை, இரண்டாவது முறையாக விற்க நினைப்பவர்களும், வாங்குவோரை கவர்ந்திழுக்கும் வகையில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டபடி உள்ளனர்.இதற்கெல்லாம் காரணம், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலைமையே. கட்டி வைத்த வீடுகள் விலை போகாததால், பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு, வீடு வாங்குவோரை கவர நினைக்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இருந்தாலும், எதிர்பார்த்த பலன் இல்லை.இது தொடர்பாக, 'சில்வர் லைன்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரூக் முகமது கூறுகையில், 'வீடு வாங்குவோருக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் குறிப்பிட்ட அளவு தருவதாகக் கூறி கூட வீடுகளை விற்க தயாராக உள்ளோம். ஆனாலும், விற்பனை சரிவர இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், குடியிருப்புகளின் விற்பனை 30 முதல் 60 சதவீதம் குறைந்துள்ளது' என்றார். இதேபோன்ற நிலைமை மும்பை, டில்லி, குர்கான் என, பல நகரங்களிலும் காணப்படுகிறது.
நன்றி : தினமலர்


சான்யோவை வாங்குகிறது: பானாசோனிக் நிறுவனம்

ஜப்பானின் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனம் பானாசோனிக், கார் பேட் டரி தயாரிப்பில் பிரபல சான்யோ எலக்ட்ரிக் நிறுவனத்தை வாங்க உள்ளது.இந்த இரு நிறுவனங்களும் அதனதன் தயாரிப்பில் பிரபலமாக உள்ளன. ஆனால், சர்வதேச அள வில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடியில், ஒன்றாக இணைந்துவிட் டால், சந்தையில் கொடிகட்டிப்பறக்கலாம் என்று பானாசோனிக் நினைக்கிறது.இதற்காக, சான்யோ நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக உள்ள மூன்று நிதி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.'டிவி', டிஜிட்டல் கேமரா உட்பட பல எலக்ட்ரானிக் பொருட் களை தயாரிக்கும் பானாசோனிக் நிறுவனம், சான் யோவின் பங்குகளை கூடுதல் விலைக்கு வாங்கி அந்த நிறுவனத்தை நடத்த தீவிரமாக உள்ளது.டொயோடா கார் தயாரிப்பு நிறுவனத்துடன் பானாசோனிக் நிறுவனம் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துள்ளது. டொயோடா கார் களுக்கு ரேடியோக்களை பானாசோனிக் நிறுவனம் தான் சப்ளை செய்து வருகிறது; அது மட்டுமின்றி, கார் பேட்டரிகளையும் அது சப்ளை செய்து வருகிறது.போர்டு, ஹோண்டா, வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களின் கார் களுக்கு கார் பேட்டரிகளை சான்யோ நிறுவனம் சப்ளை செய்து வருகிறது.இதனால், சான்யோ நிறுவனத்தை வாங்கி விட் டால், டொயோடா நிறுவன கார்களுக்கு மட்டுமின்றி, மற்ற பிரபல கார் நிறுவனங்களுக்கும் கார் பேட்டரி சப்ளை செய்யும் ஆர்டரும் தனக்கு கிடைக் கும் என்று பானாசோனிக் எதிர்பார்க்கிறது.அதுபோல, சான்யோ தயாரிக்கும் பேட்டரிகளை தான் பல மொபைல் போன் நிறுவனங்கள் தங் கள் போன்களுக்கு பயன் படுத்துகின்றன. அந்த வகையிலும் தனக்கு வர்த்தகம் அதிகரிக்கும் என்று பானாசோனிக் எதிர்பார்க் கிறது.
நன்றி : தினமலர்

Saturday, November 22, 2008

2010ல் சிறிய கார் : போர்டு இந்தியா திட்டம்

அமெரிக்காவின் போர்டு கார் நிறுவனம், 2010ல் அதன் சிறிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி திட்டமிட்டிருக்கிறது. அத்துடன் பல புதிய மாடல்களையும் இங்கு அறிமுகப்படத்த திட்டமிட்டிருப்பதாக, போர்டு இந்தியாவின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( மார்க்கெட்டிங், சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ) நிகல் வார்க் தெரிவித்தார். சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் கடும் நிதி நெருக்கடிலும் கூட, இந்திய கார் சந்தை எப்போதுமே எங்களுக்கு ஒரு சாதகமான சந்தையாகவே இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கார் விற்பனை சரிந்திருந்தாலும் இந்திய சந்தையில் பெரிய சரிவு ஏதும் ஏற்படவில்லை என்று சொன்ன அவர், 2010ல் நாங்கள் சிறிய காரைத்தான் அறிமுகப்படுத்த இருக்கிறோம். மினி காரை அல்ல என்றும் சொன்னார். 2010 முதல் காலாண்டில் எங்களது சிறிய கார் இந்திய சந்தைக்கு வரும். அதன் பின் பல புதிய மாடல்களையும் இங்கு அறிமுகப்படுத்த இருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


துபாய் செயற்கை தீவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ரிசார்ட் நேற்று திறப்பு

ஐக்கிய அரபு குடியரசில் உள்ள வளைகுடா கடற்கரையில், செயற்கையாக பனைமர ஓலை வடிவில் அமைக்கப்பட்டுள்ள தீவில் கட்டப்பட்டுள்ள உலகின் அதிக காஸ்ட்லியான பிரமாண்ட ரிசார்ட் அட்லாண்டிஸ், நேற்று திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்காக 20 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. திறப்பு விழா நிகழ்ச்சியில் உலகின் முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ உள்பட பல முன்னணி பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட பிரமாண்ட வானவேடிக்கை, வேறு கிரகத்தில் இருப்பவர்களுக்குகூட தெரிந்திருக்கும் என்று சொல்லும் அளவுக்கு நடத்தப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக இங்கு நடத்தப்பட்டது. துவக்கவிழா நிகழ்ச்சியில் பாட்டு பாடிய ஆஸ்திரேலிய பாப் பாடகி கைலி மினோகுவுக்கு, அதற்காக 4 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டதாம். 1.5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த பிரமாண்ட ரிசார்ட்டில் 1539 ரூம்களும், 150 சூட்களும், 35 அதி நவீன சூட்களும் இருக்கின்றன. இதில் உள்ள சாதாரன ரூமில் ஒரு நாள் தங்குவதற்கான, குறைந்த பட்ச வாடகையே 1,675 பவுண்ட் ( சுமார் ரூ.1,24,000 ) என்று சொல்லப்படுகிறது. ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.18 லட்சம் வாங்கும் ஸ்பெஷல் சூட்டும் அங்கு இருக்கிறது. இந்த ஹோட்டலின் இரு மெயின் பில்டிங்களுக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கும் ஸ்பெஷல் சூட்டில் நேற்று ஆரம்ப நாளில், அமெரிக்காவின் டி.வி. ஷோ பிரபலலம் ஓபரா வின்ட்ஃபிரே தங்கியிருந்தார். கொஞ்சம் நேரத்தில் அவர் அங்கிருந்து கிளம்பி விட்டதால் அந்த சூட்டில், பின்னர் நம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தங்கியிருக்கிறார்.
நன்றி : தினமலர்

அடுக்கு மாடி குடியிருப்புகள் விலை கடும் சரிவு: கூவி, கூவி விற்கின்றனர் குர்கான் பில்டர்கள்

வட்டி வீதம் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் குர்கானில் ஒரு கோடி ரூபாய்க்கு விலை கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்கு கூவி, கூவி விற்கப்படுகின்றன.டில்லி அருகே குர்கானில், செக்டார் 37 பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன், மூன்று படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியுள்ள மந்தநிலை போன்ற காரணங்களால், தற்போது அதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 38 முதல் 40 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன.அதேபோல், முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட, நான்கு படுக்கை அறை மற்றும் வேலையாட்கள் தங்கும் வசதியுடன் கூடிய குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன. அதுவும் கூவி, கூவி விற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.'சில மாதங்களுக்கு முன், நான்கு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை எல்லாம் பில்டர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்று வந்தனர். தற்போது, அவற்றை வாங்குவோரும் இல்லை. அவற்றில் முதலீடு செய்வோரும் இல்லை. 'ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கான கமிஷன் இரு மடங்காக அதிகரிக்கப் பட்டும் பயனில்லை. அவர்களால் ஆட் களை கொண்டு வர முடியவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க, பில்டர்கள் படாதபாடு படுகின்றனர்' என்கிறார் கவுரவ் மோசஸ் என்ற ரியல் எஸ்டேட் டீலர்.
'கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க பில்டர்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டை வாங்க நினைப்பவர், அவற்றைப் பார்த்த உடனேயே, பில்டர்கள் எங்களை பல முறை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். ஏராளமான பில்டர்கள் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், பல பில்டர்களின் நிலைமை கேள்விக் குறியாகி விடும்.'புதிதாக வீடு கட்டும் திட்டத்தை, பல பில்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த ஜூலை மாதங்களில் வீடு கட்டும் திட்டங்களை துவக்கிய பலர், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றனர். அடுத்த சில மாதங்களிலாவது நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் சதுர அடி விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது' என்கிறார் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர்.
நன்றி : தினமலர்