Wednesday, January 6, 2010

வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும்!

ஒரு நாட்டின் பொருளாதார இயக்கமும், வளர்ச்சியும், பலமும், வாங்கும் சக்தி, தாங்கும் சக்தி என்கிற இரண்டு வார்த்தைகளில்தான் மறைந்திருக்கின்றன. இன்றைய நவீன பொருளாதார யுகத்தில், பல நாடுகளின் வளர்ச்சியை, அந்த நாட்டு மக்களின் வாங்கும் சக்தி எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை, ஒரு முக்கிய அடிப்படையாகக் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

÷நம் நாடு, கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததைவிட, இப்பொழுது நன்கு வளர்ந்துள்ளது என்பது தெளிவு. ஒருகாலத்தில், இந்தியா முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் கார்கள்கூட உற்பத்தி செய்து, விற்பனை செய்ய முடியாத காலம் மாறி, தற்போது ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதுடன், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யுமளவுக்கு வளர்ந்திருக்கிறோம். தவிர, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்வது மட்டுமன்றி, மக்களின் தேவைக்கேற்ப வாங்கும் சூழ்நிலையும், அதற்குத் தேவையான தொகையைக் கடனாகப் பெறுவதற்கு ஏதுவாக வாய்ப்புகளும் ஏற்பட்டிருப்பது நம் நாட்டின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

÷விவசாயிகள் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலையைக் கேட்டு, ஒவ்வோராண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதை நாம் காண்கிறோம். குறிப்பாக, பால், கரும்பு, நெல், கோதுமை, பருத்தி, காய்கறிகள், பழங்கள் ஆகிய பொருள்களுக்கு நியாயமான விலையை விவசாயிகள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. விவசாய உற்பத்திச் செலவுகள் விலை உயர்வதால், விற்கும் பொருள்களின் விலையும் உயரும் என்பது தீர்க்கமான உண்மை.

÷நம் நாட்டில் விவசாயிகள் தங்களின் விவசாய உற்பத்திக்கான பொருள்களின் விலை அதிகரித்திருப்பதைக் கண்டித்துக் கிராமங்களிலும், விவசாயப் பொருள்களின் விலையேற்றத்தால் தங்களின் தாங்கும் சக்தி மீறியதைக் கண்டித்துப் பொதுமக்கள் நகரங்களிலும் போராடுவதுமான எதிர்மறைச் செயல்களைப் பார்க்கிறோம்.

÷தங்கத்தின் விலையேற்றம், அன்னியச் செலாவணி மாற்றம், அதிகமான பணவீக்கம், பணம் பற்றாக்குறை சூழ்நிலை, உலக அளவில் அதிகமான வட்டி விகிதம், பொருளாதாரச் சரிவு போன்ற உலகச் சூழ்நிலைகள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் போன்றவை கண்டிப்பாக நம் நாட்டையும் பாதிக்கும். நம் நாட்டின் இயற்கைச் சூழலும், பருவ மழை குறைவும், மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் காரணிகளாக அமையக் கூடும்.

÷ஆக, உற்பத்தி செய்வதற்குத் தேவையான நேரத்தில், தேவையான அளவு பணவசதி இருக்க வேண்டும். அதேபோல, நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வசதிகள் பெறுவதற்குத் தேவையான வழிவகைகளை வகுக்க வேண்டும். தவிர, மக்கள் செலவு செய்வது மட்டுமன்றி, நியாயமான அளவு பணம் சேமிப்பும் இருக்க வேண்டும். அப்படிச் சேமிக்கும் பணத்துக்கு அரசாங்கம் நியாயமான அளவு வட்டியும் அளிக்க வேண்டும்.

÷வங்கிகளில் போடும் பணத்துக்கு நியாயமான வட்டியும், வங்கிகளின் நிர்வாகச் செலவுகளுக்கு உலக அளவில் உள்ள நியாயமான தொகைகளும் இருக்க வேண்டும். தவிர, வட்டிக்குக் கடன் கொடுப்பதும் நியாயமான வட்டி விகிதத்தில் இருக்க வேண்டும். இத்தகைய சீரான இலக்கால் மட்டுமே மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் அதிகரிக்கும்.

÷ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் வரும்போது, ஒவ்வோர் அரசாங்கமும் தங்களுடைய வரவு செலவுகளுக்கும், திட்டச் செலவுப் பணிகளுக்காகவும், நிர்வாகச் செலவுக்கேற்ப, வரிவிதிப்பு முறைகளை மேற்கொள்கிறார்கள். இது எல்லோரும் அறிந்ததே.

÷சாதாரண நடுத்தர மக்கள், மாதாந்திரச் சம்பளம் வாங்குவோர், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்போர், சிறு தொழில் முனைவோர் போன்ற சமுதாயத்தின் இடைத்தட்டு மக்கள் எதிர்நோக்கும் சவால் வேறு வகையானது. ""மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் பற்றாக்குறைக்கு கூடுதல் வரிவசூல் செய்து விடுகிறார்கள் அல்லது வெளிநாடுகளில் கடன் தொகையாகப் பெற்று, நிர்வாகம் செய்கிறார்கள். ஆனால், யாருமே எங்களைப் பற்றியோ, எங்களது குடும்ப பட்ஜெட் தாங்குமா, எங்களால் குடும்ப நிர்வாகம் செய்ய முடியுமா என்று எள்ளளவும் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லையே என்பது அவர்களின் நியாயமான ஆதங்கம்.

÷ஒரே நேரத்தில் உணவுப் பொருள்கள், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டுவாடகை உயர்வு, பஸ் மற்றும் ரயில் கட்டண உயர்வு, மருத்துவச் செலவு உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் குடும்ப நிதிநிலை பற்றாக்குறைக்கு அவர்கள் என்ன செ ய்ய முடியும்? அதைச் சரிக்கட்ட அவர்கள் எங்கிருந்து கடன் வாங்குவது? அப்படி வாங்கிய கடனை எப்படித் திருப்பிக் கொடுப்பது? இன்றைய அத்தியாவசியத் தேவைகளான டி.வி., கம்ப்யூட்டர், ஆளுக்கொரு செல்போன் போன்றவைகளை வாங்கும் சக்தியின்றி, நடுத்தர வர்க்கத்தினர் மன அதிருப்தியில் உழல்கிறார்கள்.

÷இன்றைய இந்தச் சூழ்நிலையில், பலதரப்பட்ட குடும்பங்கள் அவர்கள் பெறும் சம்பளம், அவர்களின் மாதாந்திர வீடு, உணவு செலவினங்களுக்கும், அவர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகளுக்கும், மற்றைய இதர போக்குவரத்துச் செலவுகளுக்கும் போதுமான அளவில் இருக்கிறதா, அவர்கள் செலுத்தும் வரிவிகிதம் மாறிய சூழ்நிலையில் விலைவாசி ஏற்றத்திற்கேற்ப பொருள்களை வாங்கும் சக்தி அவர்களிடம் உயர்ந்து உள்ளதா என்பதையும், அதனைத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பது பற்றியும் பொருளாதார நிபுணர்கள் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் மற்றும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் பிரச்னைகளுக்கும் தரப்படும் கவனம் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கிடைப்பதில்லை.

÷நம் நாட்டில் 80 சதவிகித மக்களின் மாத வருமானம் ரூ. 5,000, 10,000, 15,000, 30,000 ஆகிய இந்த நான்கு பிரிவுகளில் அடங்கிவிடும். அப்படிப்பட்ட மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப திருப்தியாக இருப்பதற்கு வழிவகைகள் என்ன என்பதை அரசாங்கம் தொடர்ந்து ஆராய வேண்டும்.

பல பெரியவர்கள் நாங்கள் எல்லாம் அன்றைய காலத்தில் மிகக் குறைந்த வருவாயில் தங்கம் சவரன் ரூ.15 லிருந்து ரூ.100 விற்ற காலங்களில் நிறைய தங்க நகைகள் வைத்திருந்தோம். கவலையின்றி நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் எங்கள் பேரக் குழந்தைகளோ, நல்ல மேற்படிப்பு படித்திருந்தும், அத்தியாவசியத் தேவையான ஒரு சொந்த வீடு கூட இல்லாமல், நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வதைப் பார்க்கலாம்.

÷எல்லா மக்களும் தங்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, ஓய்வூதியப் பாதுகாப்பு, முதியோர் நலத் திட்டங்கள் என்ற அளவில், ஏழை பணக்காரன் என்ற வேறுபாடில்லாமல், சமவாய்ப்புக் கிடைப்பதுடன், கீழ்தட்டில் இருப்பவர்களை உயர்த்துவதற்குத் திட்டங்கள் தீட்டி, புதிய சமுதாயம் உருவாக்க வேண்டும்.
அதேநேரத்தில், மத்தியதர வகுப்பினரின் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் திட்டங்கள் தீட்டுவதும், நிதிநிலை அறிக்கை தயாரிப்பதும் செய்யப்பட வேண்டும்.

÷மத்திய, மாநில அரசுகள், சமுதாய நலம் பேணும் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். ஆனாலும், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினர் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அன்றாடச் செலவுகளைச் சந்திப்பது குறித்து பயந்துகொண்டே வாழ்கிறார்கள்.

திடீரென உடல்நலக் குறைவோ அல்லது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்தாலோ, அவர்களின் பாடு பெரும் திண்டாட்டம்தான். திடீர் விலையேற்றத்தால் உணவுப் பொருள்கள் வாங்குவதுகூட மிகவும் கடினமாகி விடுகிறது.

÷பெரும்பாலானோர் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் கடைகளில் திடீரென அதிக விலைக்கு விற்றால், அந்தப் பணம் ஏதோ அந்தப் பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குச் செல்வதாக எண்ணுகிறார்கள்.
ஆனால், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையில் இருக்கும் ஒருசிலர்தான் அந்த விலையேற்றத்தின் பலனை அனுபவிக்கிறார்கள். இந்த நிலை மாறி உற்பத்தியாளருக்கு நியாயமான விலையும், வாங்கும் சக்தியும் இருப்பதை அரசுதான் உறுதி செய்ய முடியும்;
செய்ய வேண்டும்.

÷அதேபோல, உணவுப் பொருள்கள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவோருக்கும் நியாயமான விலைக்கு வாங்கும், தாங்கும் சக்தி இருக்க வேண்டும். பட்ஜெட் மற்றும் பொருள்களின் விலை உயர்வு, வரி உயர்வு போன்றவை பலதரப்பட்ட மக்களுக்கும் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் தொடருமா என்பதன் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும்.

÷செலவுக்கேற்ற வரவை அரசுகள் செய்து கொள்ள முடியும். பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அது அசாத்தியம். ஆகவே, அவர்கள் வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் வகையில் மக்களின் வாங்கும் சக்தியும், தாங்கும் சக்தியும் இருப்பதை உறுதி செய்வதுதான் மத்திய, மாநில அரசுகளின் கண்ணோட்டமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட செயல்பாடு இருந்தால் மட்டுமே அரசு மக்கள் நல அரசாக இருக்கும். சுதந்திரம், மக்களாட்சி என்பதற்கெல்லாம் அர்த்தம் இருக்கும். வாங்கும் சக்தி அதிகரிப்பது மட்டுமே வளர்ச்சிக்கு அறிகுறி அல்ல. தாங்கும் சக்தியும் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்துவதுதான் நல்லதொரு பொருளாதாரக் கண்ணோட்டமாக இருக்கும்.
கட்டுரையாளர் :ஜெம் ஆர். வீரமணி
நன்றி : தினமணி

வீட்டு கடனுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்தது ஆக்சிஸ் வங்கி

இந்தியாவின் மூன்றாவது ‌பெரிய வங்கியான, ஆக்சிஸ் வங்கி வீட்டு கடனுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 31ம் தேதிக்குள் வாங்கும் கடனுக்கு மட்டும், எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினாலும், முதல் இரண்டு வருடங்களுக்கு 8.25 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் வசூலிக்கப் படும். அதற்கு பிறகு மாறும் வட்டி விகிதம் விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வீட்டு கடனுக்கான வட்டி, இரண்டு வருடங்களுக்கு பிறகு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் எனப்படும் வட்டி விகித்தின் அடிப்படியில் வட்டி விதிக்கப்படும்.
இதில் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் விட 3.5 சதவீதம் குறைவாக வசூலிக்கப்படும். ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான கடனுக்கு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் விட 3 சதவீதத்திற்கும் குறைவாக வட்டி வசூலிக்கப்படும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


22 மாதங்கள் இல்லாத அளவு உயர்வுடன் தொடங்கியது நிப்டி

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது, 22 மாதங்கள் இல்லாத அளவு நிப்டி உயர்வினை சந்தித்து 5,300 புள்ளிகளை நெருங்கியது. இதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5300 புள்ளிகளை நிப்டி தாண்டியது என்பது குறிப்பிடத் தக்கது.

காலை 9.01 மணி அளவில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 5,296 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 63 புள்ளிகள் உயர்ந்து 17,749 புள்ளிகளோடு தொடங்கியது.


அதிகமாக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடா ஸ்டீல், ஸ்டீலைட் இன்டஸ்டிரீஸ், ஐடியா, பார்தி ஏர்டெல், ஐ.டி.எப்.சி., ஜித்தால் ஸ்டீல் அன்ட் பவர், யுனிடெக், டி.எல்,எப்., மற்றும் செயில் ஆகியவற்றின் பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டப் பட்டன.


இருப்பினும், மாருதி, பி.என்.பி., ஹூரோ ஹோண்டா ஆகியவை நஷ்டத்தை சந்தித்தன.


டி.சி., கார்ப் பங்குகள் இன்று 25 சதவீத பிரீமியத்துடன் 265 ரூபாய்க்கு வர்த்தகமாயிற்று, இதன் பங்கு வெளியீட்டு விலை ரூ. 212.
நன்றி : தினமலர்