Monday, June 6, 2011

வங்கி வைப்பு நிதி முதலீட்டிற்கு கூடுதல் ஆதாயம்

வங்கி, அஞ்சலக சேமிப்பு, பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என, பலதரப்பட்ட முதலீட்டு இனங்களில், பாதுகாப்பான, நியாயமான வருவாய்க்கு உகந்த முதலீடு எது?


இந்த கேள்விக்கு, வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என, ”லபமாக விடை கூறி விடலாம். தற்போதைய நிலையில், முதலீடு மோசம் போகாமல், அதே சமயம், பணவீக்கத்தை ஓரளவு எதிர்கொள்ளும் வகையில், வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன.

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குறைந்தபட்ச வட்டி, 3.5 சதவீதமாகவும், அதிகபட்ச வட்டி, 9 சதவீதமாகவும் உள்ளது. இவற்றை விட அதிக வட்டியை, வங்கிகள் அவற்றின் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்குகின்றன.வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 3.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது, வங்கியில் சேமிப்பு கணக்கை கொண்டுள்ள வாடிக்கையாளருக்கு, கூடுதல் வருவாயை வழங்கும் எனலாம்.

மேலும், அன்றாட இருப்பு நிலைக்கேற்ப கணக்கிடப்படும் வட்டியை, மாதா மாதமோ அல்லது காலாண்டிற்கு ஒருமுறையோ, வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது குறித்தும், ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. இதனால், வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம், சராசரியாக 4.13 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த வட்டி விகிதத்தை விட, கூடுதல் வட்டி வருவாய் வழங்கக் கூடியதாக, 'பிக்சட் டிபாசிட்' எனப்படும், குறித்த கால வைப்பு நிதி திட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம் ஓராண்டு முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 10.25 சதவீத வட்டியை, வங்கிகள் வழங்குகின்றன.

மேலும், மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக இதைவிட வட்டி வழங்கப்படுகிறது.இந்த வகையில், குறித்த கால வைப்பு நிதிக்கு அதிக வட்டி வழங்குவதில், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டு வைப்பு கணக்கிற்கு, 10.25 சதவீத வட்டி வழங்குகிறது. அதாவது, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சி காலத்தில் 11 ஆயிரத்து 65 ரூபாய் கிடைக்கும். கரூர் வைஸ்யா வங்கி, ஓராண்டு கால வைப்புத் திட்டத்திற்கு 10 சதவீத வட்டி வழங்கி, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கர்நாடகா பேங்க், சவுத் இந்தியன் பேங்க் ஆகியவை, வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ஓராண்டு முதலீட்டிற்கு, 9.75 சதவீத வட்டியை வழங்குகின்றன. இந்த வரிசையில், பெடரல் பேங்க் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இவ்வங்கி, ஓராண்டிற்கான குறித்த கால வைப்புத் தொகைக்கு, 9.60 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதன்படி இவ்வங்கியில், 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சிக் காலத்தில் 10 ஆயிரத்து 995 ரூபாய் கிடைக்கும்.

பெரும்பாலான மூத்த குடிமக்களின் முதல் தேர்வாக, வங்கிகளின் டிபாசிட் திட்டங்கள் உள்ளன. அவர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, காப்பீடு ஆகியவற்றின் மூலம் பெறும் வருவாயை, வங்கிகளின் குறித்த கால வைப்புக் கணக்கில் சேமிக்கின்றனர். அவர்களைக் கவர்வதற்காக, வங்கிகள், இதர முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வட்டியை விட, கூடுதல் வட்டியை வழங்குகின்றன.

இவ்வகையில், மூத்த குடிமக்களின் ஓராண்டு கால வைப்புத் தொகைக்கு, கரூர் வைஸ்யா பேங்க் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஆகியவை, அதிகபட்சமாக 10.5 சதவீத வட்டியை வழங்குகின்றன. இதன்படி, 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வோருக்கு, முதிர்ச்சிக் காலத்தில் 11 ஆயிரத்து 92 ரூபாய் கிடைக்கும். இதேபோல், ஆக்சிஸ் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகியவையும், மூத்த குடிமக்களின் ஓராண்டு வைப்புத் தொகைக்கு, 10.25 சதவீத வட்டியை வழங்குகின்றன. பெடரல் பேங்க் 10.1 சதவீத வட்டியை வழங்கி வருகிறது.

பங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தால், இதை விட கூடுதல் வருவாய் பார்க்க முடியும் என்றபோதிலும், அவற்றில் இடர்பாடுகள் அதிகம் உள்ளன. தங்கத்தில் செய்யும் முதலீடு, லாபகரமானதாக கருதப்படுகிறது. கடந்த ஓராண்டில் தங்கம் விலை, 19.5 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை, 92 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை, 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களின் சராசரி வருவாய், 8.8 சதவீதமும், கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு மேற்கொள்ளும் பேலன்ஸ்டு பண்டு திட்டங்கள், 8.7 சதவீத வருவாயையும் அளித்துள்ளன. 'இன்கம் பண்டு' மீதான முதலீட்டின் சராசரி வருவாய், 5 சதவீதமாகவும், 5 ஆண்டு கால முதலீட்டின் சராசரி வருவாய், 6.5 சதவீதமாகவும் உள்ளது.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணியில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடிய,'லார்ஜ் கேப்' பரஸ்பர நிதி திட்டங்களின் 5 ஆண்டு கால சராசரி வருவாய், 11 சதவீதமாக உள்ளது.

இத்திட்டங்கள் வாயிலான வருவாயை ஒப்பிடும் போது , வங்கிகளின் குறித்த கால வைப்பு நிதிக்கான வட்டி வருவாய் குறைவுதான். எனினும், நியாயமான வட்டி வருவாயில், நிம்மதியாக காலம் கழிக்க விரும்புவோரின் விருப்பத் தேர்வாக, வங்கிகளின் வைப்பு நிதி திட்டங்கள் திகழ்வதில் வியப்பேதுமில்லை.

அதிக வருவாய்:வங்கிகளின், குறித்த கால வைப்பு நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் மீது, கடன் பெறும் வசதியும் உள்ளது. இக்கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு, வங்கி மாறுபடுகிறது. அவசர தேவை அல்லது பிற நிதியினங்களில், முதலீடு செய்து கூடுதல் வருவாய் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன்படி, தங்களின் வைப்பு நிதி டிபாசிட்டிலிருந்து பெறும் கடனுக்கு, கூடுதலாக, 2 அல்லது 3 சதவீத வட்டியை செலுத்த வேண்டும். வங்கிகள், குறித்த கால வைப்பு நிதியில், 30 சதவீத அளவிற்கு கடன் வழங்குகின்றன.

- ஏ.கே.விஜய்தேவ்
நன்றி : தினமலர்