Monday, August 25, 2008

இந்தியாவில் 3ஜி சர்வீர் கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவு பணத்தை கொட்ட வேண்டியிருக்கும்

இந்தியாவில் இப்போது மூன்றாம் தலைமுறை ( 3 ஜி ) மொபைல் சர்வீஸை கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த 3 ஜி சேவையை கொடுக்க முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அது பொருளாதார ரீதியாக அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என்கிறார்கள். இதற்காக அவர்கள் பெருமளவு பணத்தை இங்கு கொட்டவேண்டியிருக்கும் என்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் சுமார் 50 லட்சம் மொபைல் சந்தாதாரர்களுக்கு 3 ஜி சர்வீஸ் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். சர்வதேச அளவில் 3 ஜி சர்வீஸ் கெடுத்து அனுபவமுள்ள நிறுவனங்கள், இங்கு ஏலத்தின் மூலம் 2.1 ஜிகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் பெற்று சர்வீஸ் கொடுக்க முன்வந்தால், அவர்கள் முதலில் யுனிவர்சல் அக்ஸஸ் சர்வீஸ் லைசன்ஸ் ( யு ஏ எஸ் எல் ) என்ற ஒன்றை பெற வேண்டும். இந்தியா முழுவதுக்கும் 3 ஜி சர்வீஸ் கொடுக்க யு ஏ எஸ் எல் பெற அவர்களுக்கு ரூ.1,651 கோடி கட்டணம் ஆகும். ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் எடுக்க ரூ.7,500 - 8,000 கோடி செலவாகும். எனவே லைசன்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் வாங்க மட்டும் அவர்கள் ரூ.9,651 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும். மேலும் 50 லட்சம் சந்தாதாரர்களுக்கு சர்வீஸ் கொடுக்க தேவையான சாதனங்கள் வாங்க மற்றும் நிர்வாக செலவு ரூ. 7,500 கோடி ஆகும் என்கிறார்கள். எனவே மொத்தமாக ஒரு வெளிநாட்டு நிறுவனம் இங்கு 3 ஜி சர்வீஸ் கொடுக்க வந்தால் முதலில் அவர்கள் ரூ.17,151 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். மேலும் இப்போது சராசரியாக ஒரு சந்தாதாரரிடமிருந்து கிடைத்து வரும் ரூ.200 வருமானமும் 3 ஜி சர்வீஸ் கொடுக்கும்போது அது ரூ.150 ஆக குறைந்து விடும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


தமிழ்நாட்டில் டீசல் பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறு விடுமுறை

தமிழ்நாட்டில் தற்போது டீசலுக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக வரும் செப்டம்பர் 15 ம் தேதியில் இருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிறுதோறும் விடுமுறை விடுவது என்று தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து இன்று சேலத்தில் தமிழ்நாடு பெட்ரோல்,டீசல் வினியோகஸ்தர்கள் சங்கம் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க, பிரதி ஞாயிறுதோறும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் வார நாட்களில் காலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரைக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் இயக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் செப்டம்பர்15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று, தமிழ்நாடு பெட்ரோல், டீசல் வினியோகஸ்தர்கள் சங்கங்க தலைவர் கண்ணன் தெரிவித்தார். இதற்கிடையே, டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்தில் நிலவி வரும் டீசல் தட்டுப்பாட்டு பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுறகிறது.
நன்றி : தினமலர்

சிறிது உயர்ந்து முடிந்த பங்கு சந்தை

சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு போன்ற காரணங்களால் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்தபோது வேகமாக உயர்ந்து வந்த சென்செக்ஸ், பின்னர் மதியத்திற்கு மேல் குறைய ஆரம்பித்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் 48.86 புள்ளிகள் ( 0.34 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 14,450.35 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 7.90 புள்ளிகள் ( 0.18 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,335.35 புள்ளிகளில் முடிந்தது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை 114 டாலராக குறைந்தது

சர்வதேச சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை இன்று திங்கட்கிழமை 114 டாலருக்கு வந்து விட்டது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாலும் உலக அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக சொல்கிறார்கள். அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( அக்டோபர் டெலிவரிக்கானது ) விலை பேரலுக்கு 14 சென்ட் குறைந்து 114.45 டாலராக இருக்கிறது. அதேபோல் லண்டனின் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 26 சென்ட் குறைந்து 113.66 டாலராக இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் தொடர்ந்து தேக்க நிலை காணப்படுவதாலும், அங்கு எண்ணெய்க்கான டிமாண்ட் குறைந்து வருவதாலும், இந்த நிலை ஐரோப்பாவிலும் நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலும் கச்சா எண்ணெய் விலை குறைவதாக சொல்கிறார்கள். டாலரின் மதிப்பு கூடினாலும் கச்சா எண்ணெய் விலை குறைந்து விடும்.
நன்றி : தினமலர்


கேபிள் வரி கட்டாமல் அரசுக்கு ரூ.265 கோடி இழப்பு: புதிய பணக்காரர்கள் உருவானது மிச்சம்

கேபிள் ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய சேவை வரியில் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசுக்கு 265 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 'டிராய்' என்னும் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சேகரித்த தகவலின் அடிப்படையில், வரி அமைப்புகள் நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2007-08ம் ஆண்டில் கேபிள் இணைப்புக்கான சேவை வரியாக 28 கோடி ரூபாய் வசூலானது. இதற்கு முந்தைய ஆண்டும் இதே அளவில் தான் சேவை வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில், 1.5 கோடி புதிய கேபிள் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு துறைகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கேபிள் இணைப்புகள் எத்தனை என்று திட்டவட்டமாக இன்னமும் வரித்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கான திட்டம் மற்றும் நடைமுறைகளை கேபிள் நிறுவனங்களோ அல்லது எம்.எஸ்.ஓ., எனப்படும் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்களோ உருவாக்க வில்லை. டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ஆகிய நான்கு மாநகரங்களில் அதிக கேபிள் இணைப்புகள் உள்ளன. மேலும் 20 நகரங்களில் கணிசமாக இந்த இணைப்புகள் கடந்த ஓராண்டில் லட்சக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. கணக்கில் வந்திருப்பது அதிகபட்சம் 12 லட்சம் கேபிள் இணைப்புகள் மட்டுமே. அப்படிப் பார்த்தால், கேபிள் இணைப்பு தரும் உள்ளூர் ஏஜென்டுகள் தங்கள் இஷ்டத்திற்கு பொத்தாம் பொதுவாக ஒரு தொகையைக் கட்டி, அதேசமயம் அதிகரிக்கும் இணைப்புகளைக் காட்டுவதில்லை என்று வரித்துறை கருதுகிறது.
டில்லியில் மட்டும் 26 லட்சம் வீடுகளில் கேபிள் இணைப்பு இருக்கிறது. சராசரியாக மாதம் ஒரு இணைப்புக்கு 150 ரூபாய் என்று கணக்கிட்டால், ஆண்டு வருமானம் 470 கோடி ரூபாய். அப்படிப்பார்த்தால், அதற்கு சேவை வரி 58 கோடி ரூபாய். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் வெறும் 5.7 கோடி ரூபாய் மட்டும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதே போல மற்ற நகரங்களில் இன்னமும் கணக்கெடுப்பு நடத்தவில்லை.இதைப் பற்றி மேலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில், வடமாநிலங்களில் இப்படி அதிகமாக வரும் வருவாய் கறுப்புப் பணமாக மாறி, அதிக பணக்காரர்களை திடீரென உருவாக்கியிருக்கிறது. ஏனெனில், கேபிள் மாதாந்திரக் கட்டணம் வசூலிக்கும் போது முறையான ரசீதை வாடிக்கையாளர்களுக்குத் தருவதில்லை. அப்படி ரசீது தரும் பட்சத்தில் சேவைவரி தானாக வந்து விடும். அது மட்டும் அல்ல, ஒரு தெருவில் அல்லது பகுதியில் ஆயிரத்து 500 கேபிள் இணைப்பு இருந்தால், வழக்கமாக 500 அல்லது 600 இணைப்புக்குப் பணம் தந்து விட்டு மற்றதை இருதரப்பும் சேர்ந்து சரிக்கட்டும் நடைமுறை இருக்கிறது. 'டிராய்' திட்டப்படி இக்கட்டணங்களுக்கு முறையான ரசீது தேவை.வடமாநிலங்களில் இம்மாதிரி கடந்த காலங்களில் பெரிய அளவில் கேபிள் இணைப்புகள் அதிகரித்ததால், அந்த எம்.எஸ்.ஓக்களை நிர்வகிப்பவர்கள் அல்லது கேபிள் ஒளிபரப்பாளர்கள் தாங்கள் சேகரிக்கும் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இந்தி, மொழி பத்திரிகை நடத்துபவர்கள் பலர் 'டிவி' சேனல்களையும், எம்.எஸ்.ஓ.,க்களையும் தங்கள் கட்டுப் பாட்டில் மறைமுகமாக வைத்துள்ளனர்.
பல கோடி ரூபாய் கறுப்பு பணத்தைக் கொடுத்து பெரிய நகரங்களில், அலுவலகங்களுக்கு நிலம் வாங்குவதும், பல கோடியில் அந்த நிலத்தில் கட்டடங்களைக் கட்டுவதும், நடத்த முடியாமல் திணறும் நாளேடுகளை விலைக்கு வாங்குவதும், பத்திரிகையின் விலையைக் குறைத்து போட்டிகளை நசுக்குவதும், நடைமுறையாக உள்ளது. இதில் பல அரசியல்வாதிகளின் ஆதரவு உள்ளதால், வருமான வரி அதிகாரிகள் இதில் தலையிட அஞ்சுகின்றனர்.பத்திரிகைகளின் விற்பனையை அதிகரித்துக் கணக்குக் காட்ட, இந்தக் கறுப்புப் பணம் பெரிதும் உதவுகிறது. பினாமி ஏஜென்டுகளை கணக்கில் வைத்திருப்பதும், பிற ஏஜென்டுகளுக்குத் தேவையில்லாப் பிரதிகளை அதிக அளவில் அவர்களுக்கு அனுப்பி வைத்து, விற்காதப் பிரதிகளை விற்றதாக கணக்குக் காட்ட, கறுப்புப் பணத்தை எடுத்து ஏஜென்டுகள் கணக்கில் மாதம் தோறும் கோடிக்கணக்கில் வரவு வைப்பதும் வடமாநிலங்களில் வாடிக்கையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விற்பனை, கணக்கு கச்சிதமாக எழுதப்படுவதால், பத்திரிகைகளின் விற்பனைக்கு அத்தாட்சி வழங்கும் ஏ.பி.சி., என்ற குழு இந்த போலி விற்பனையை உண்மை என்று நம்பி சான்றிதழ் கொடுக்கிறது.தற்போது, 'டிவி'யில் இன்டர்நெட் என்ற புதிய 'ஐபிடிவி' அறிமுகம் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பதால், இத்துறையிலிருந்து வரும் குளறுபடிகளைக் கண்காணிக்க முடிவு செய்திருக்கிறது. நூற்றுக்கணக்கான சேனல்கள் ஒளிபரப்பப்படுவதால், தானாக முன்வந்து சுயக்கட்டுப்பாட்டுடன் ஒளிவு மறைவற்ற அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய செய்தி, ஒளிபரப்புத்துறைச் செயலர் சுஷ்மா சிங் கூறியுள்ளார்.கேபிள் தொழில் தற்போது பன்முக வளர்ச்சி பெற்றிருப்பதால், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த தவறான அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு, வரி செலுத்துவதில் சரியான அணுகுமுறையைப் பின்பற்ற 'டிராய்' ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசுகளுடனும், வரித்துறையுடனும் சேர்ந்து செயல் பட்டால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி முழுவதும் கிடைக்கும் என்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்