Thursday, January 7, 2010

ரோமாபுரிக்கு அவமானம்!

இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி எப்போதுமே பரபரப்பாகப் பேசப்படுபவர். ஏதாவது ஒரு காரணத்துக்காக அவர் சர்வதேச ஊடகங்களை எப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார். இப்போது அவரது பெயர் பரபரப்பாகியிருக்கும் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது.

÷அண்மையில் மிலன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் மக்களோடு மக்களாகக் கலந்திருந்த பெர்லுஸ்கோனியின் முகத்தில் இளைஞர் ஒருவர் சர்ச் போன்ற வடிவத்தைக் கொண்ட கரடுமுரடான பொருளைக் கொண்டு தாக்கிவிட்டார். இதில் நிலைகுலைந்துபோன பெர்லுஸ்கோனியின் மூக்கு உடைந்தது. வாயில் இரு பற்கள் பெயர்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

÷இத்தாலி மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியொரு சம்பவத்துக்கு இத்தாலி முழுவதுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருக்க வேண்டும். நாடே ஒன்றிணைந்து பிரதமர் விரைவாகக் குணமடைந்து வர பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். பிரதமருக்கான பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி விவாதம் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் நடக்கவில்லை.

÷இத்தாலியின் ஒரு பிரிவினர் பெர்லுஸ்கோனியின் மீதான தாக்குதலை வரவேற்று இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அவரைத் தாக்கிய இளைஞரை ஹீரோவாக்கினர். மூக்கிலும் வாயிலும் ரத்தம் சொட்டும் பெர்லுஸ்கோனியின் பொம்மைகள் கடைகளில் விற்றுத் தீர்ந்தன. ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பெர்லுஸ்கோனிக்கு எதிரான கருத்துகளால் நிரம்பின. அந்த அளவுக்கு பெர்லுஸ்கோனியின் மீது வெறுப்புக் கொண்ட மக்கள்கூட்டம் இத்தாலியில் இருக்கிறது. தேசம் பிளவுபட்டுக் கிடப்பதும் வெளிப்படையாகி இருக்கிறது.

÷நாட்டின் தலைவருக்கு விபத்து ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அந்த நாடே அவருக்காக அனுதாபப்படுவதுதான் இயல்பு. எதிர்க்கட்சியினர்கூட இந்த மாதிரியான சூழலில் விமர்சனத்தைத் தவிர்ப்பார்கள். பெர்லுஸ்ú கானி மீது மட்டும் ஏனிந்த வெறுப்பு? அதற்கும் காரணங்கள் இருக்கின்றன.

÷அண்மையில் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்து கொண்டிருந்தது. பருவநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக பல நாடுகளின் தலைவர்கள் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும், தன்னிடமிருந்த படத்தை, பக்கத்து மேஜைக்குத் தள்ளிக் கொண்டிருந்தார். பல்வேறு கால கட்டங்களில் பெண்கள் பயன்படுத்திய உள்ளாடைகள் என அந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது. அதை வாங்கிய சிலர் பார்த்தனர். சிலர் முகம் சுளித்தனர். சிலர் கண்டுகொள்ளவில்லை.

÷பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரெüன், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி போன்ற பெருந்தலைகளும், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஐரோப்பியக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் பரோனஸ் ஆஷ்டன் போன்ற பெண் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் இவ்வளவு மலிவான செயலைச் செய்த அந்த நபர், இத்தாலியின் பிரதமர் பெர்லுஸ்கோனிதான் எனப் பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இடம் பொருள் தெரியாமல் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்த மனிதருக்கு வயது 73.

÷இதுபோன்ற நகைப்புக்கிடமான செயல்களுக்குப் பெயர் பெற்றவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ். உலக நடப்புகள் பற்றிய அடிப்படையான கேள்விகளுக்குக்கூட ஏடாகூடமாகப் பதில் சொல்லி பத்திரிகையாளர்களின் கேலிக்கு ஆளானவர் அவர். இவரது பொது அறிவையும் நிர்வாகத் திறனையும் கிண்டல் செய்யாதவர்களே இல்லை.

÷ஊடகங்களின் கேலிக்கு ஆளான இன்னொருவர் பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி. ஆனால், இவரது நிர்வாகத்திறனைப் பற்றி யாரும் கேலி செய்யவில்லை. கேலிக்குள்ளானது இவரது தனிப்பட்ட வாழ்க்கைதான். இரண்டாவது மனைவியுடன் ஊர் சுற்றிய கதைகள் பத்திரிகைகளில் வெளியானதால் சர்கோஸியின் மரியாதை கிழிந்து போனது. மனைவியுடன் தனது உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்காக எக்கி நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களெல்லாம் இன்றைக்கும் இணையத்தில் ஹாட். பதவிக்கு வந்த காலத்தில் மாவீரன் நெப்போலியனுடன் ஒப்பிடப்பட்ட சர்கோஸி, இப்போது கேலிப் பொருளாகியிருக்கிறார்.

÷இந்த இருவரையும் விஞ்சி நிற்கிறார் பெர்லுஸ்கோனி. மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் இவர், அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே இளம் பெண்களுடன் வாழ்ந்து வருவதாகவும் பத்திரிகைகள் எழுதுகின்றன. விலைமாது ஒருவர், தனது சுயசரிதையில் பெர்லுஸ்கோனி பற்றி தாறுமாறாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

÷இதேபோல, பொது நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிறத்தைக் குறிப்பிட்டு, கேலி வெளிப்படும் தொனியில் பேசியுள்ளார் பெர்லுஸ்கோனி. அத்துடன் விடாமல், ஒபாமாவின் மனைவியையும் அதேபோல் குறிப்பிட்டுள்ளார். பெர்லுஸ்கோனியின் இந்தப் பேச்சால், இத்தாலியின் எதிர்காலத்துக்குச் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நாட்டின் மூத்த தலைவர்கள் ஒபாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று. இதையெல்லாம் பெர்லுஸ்கோனி பொருள்படுத்துவதில்லை. இதைக்கூட ஒபாமாவுக்கு ஜாலியாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா, எனக் கேட்பார்.

÷இன்னொரு நிகழ்ச்சியின்போது, உலகத் தலைவர்களையெல்லாம் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்த மிச்சேல் ஒபாமா, பெர்லுஸ்கோனியிடம் மட்டும் கைகுலுக்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இது இத்தாலிக்கு நேர்ந்த அவமானமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
இப்படித் தனது தனிப்பட்ட வாழ்க்கையாலும், செயல்களாலும் ஒரு பிரிவு மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் பெர்லுஸ்கோனி, இத்தாலிய ஊடங்களில் பெரும்பான்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். நாட்டின் மூன்றாவது பெரிய பணக்காரர். சிறந்த தொழிலதிபரும்கூட. அரசியல் ரீதியான எதிர்ப்புகளையெல்லாம் திறம்படக் கையாண்டவர். ஆனாலும், தனிப்பட்ட வாழ்க்கையால் தற்போது அவரது புகழுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவிலிருந்து அவர் மீண்டு வருவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் தனிப்பட்ட வாழ்வைக் கிளறிப்பார்ப்பது நியாயமாகுமா என அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு.

பெர்லுஸ்கோனியின் விவகாரத்தை மாதிரியாக எடுத்துப் பார்த்தால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிறது. நாட்டுத் தலைவரின் தனிப்பட்ட குறும்புகளாலும், நகைப்புக்கிடமான செயல்களாலும் உலக அரங்கில் அந்த நாட்டின் மரியாதை சரிந்து போகும், அரசு முறை உறவுகள் சிக்கலாகும் என்றால், அந்தத் தலைவர் மீது மக்களுக்கு வெறுப்புத்தான் ஏற்படும். அதற்காக, பெர்லுஸ்கோனியைத் தாக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இந்தக் காயங்கள் அவருக்கு உதவக்கூடும்.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி

வருமுன் காத்தலே நலம்!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. வழக்கத்தைவிட பருவமழை அதிக அளவில் பெய்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

÷வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

÷தேங்கியுள்ள மழைநீரில் உருவாகும் கொசுக்களால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதாகச் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் கிராமங்கள், நகர்ப்புறங்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக் கேடு உருவாகி கொசுக்களால் இந்நோய் எளிதில் பரவி வருகிறது.

÷வைரஸ் காய்ச்சல் தாக்கப்பட்டவர்கள் பலர் கால்வலி, மூட்டுவலி காரணமாக மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உள்ளது. இது சிக்குன் குனியா காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

÷திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழக்க நேரிட்டது. முக்கூடல் அருகே வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவருக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

÷இதேபோல, மேலப்பாளையத்தில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயதுச்சிறுவன் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலாக மாறி வருவதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.

÷தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், 900 பேருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் இருப்பதாகவும், இன்னும் 2 மாதங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே, போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

÷கடந்த சில தினங்களாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரில் குளோரின் கலந்து வழங்கப்படுகிறது.
இது தவிர வேறு எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

÷மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் மூலம் உருவாகி வரும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

÷பல ஊர்களில் பள்ளிகள், மாணவர் விடுதிகள், சத்துணவுக் கூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

÷அண்மையில் தேக்கடியில் சுற்றுலா சென்றோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து 60}க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வேதாரண்யத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் டிரைவராகப் பணி செய்தவர் ஓட்டிச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி ஓர் ஆசிரியை மற்றும் 9 மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டது.

÷இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு நீர்நிலைகளில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் உயிர் பாதுகாப்புக் கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் வாகன ஓட்டுநர்கள் 10 ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

÷கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 98 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏதாவது ஒரு விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகுதான் அரசின் நடவடிக்கையும் கடுமையாக்கப்படுகிறது. ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது?

÷வருமுன் காத்தலே நலம் என்பதற்கேற்ப, மழைக்கால நோயை எதிர்பார்த்து ஒவ்வோர் ஊரிலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம். ÷மக்களுக்காக வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உயிர் காக்கும் உயர் சிகிச்சை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு, இதுபோன்ற பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் :சா. ஷேக் அப்துல்காதர்
நன்றி : தினமணி

18.22%ஆக உணவு பணவீக்கம் சரிவு

டிசம்பர் 26ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், உணவு பணவீக்கம் 18.22 சதவீதமாக குறைந்து உள்ளது. இருப்பினும், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பின் விலை உயர்ந்தே காணப் படுகின்றன.

கடந்த வாரம், உணவுப் பொருட்கள் அடிப்படையில் கணக்கிடப் பட்ட, உணவு பணவீக்கம் 19.83 சதவீதமாக இருந்தது. இந்த வாரம் 18.22 சதவீதமாக சரிந்துள்ளது.

இந்த வாரம், உருளைக்கிழங்கின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் 110 சதவீதம் அதிகரித்துள்ளது. பருப்பின் விலை 42.21 சதவீதமும், காய்கறி விலை 30.97 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஆண்டு அடிப்படையில், வெங்காயத்தின் விலை 40.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் உணவு-சாரா பொருட்கள் அடிப்படையில் கணக்கிடப் பட்ட பணவீக்கம், 14.39 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வார அடிப்படையில், பழங்கள் மற்றும் காய்கறி விலை 6 சதவீதமும், கொள்ளின் விலை 3 சதவீதமும், டீ விலை 1 சதவீதமும் குறைந்துள்ளது. இருப்பினும், மீன் மற்றும் கோதுமை விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட பாசிபருப்பின் விலை 1 சதவீதம் உயர்ந்துள்ளது.
நன்றி : தினமலர்

உணவு பற்றாக்குறை பத்து ஆண்டுகளில் அதிகரிக்கும்

இந்தியா ஏற்கனவே பணவீக்கத்தால் தள்ளாடி வரும் நிலையில், உணவு தானிய பற்றாக்குறையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் உணவு தானியங்களுக்கான தேவை 30 சதவீதம் வரை உயரும் என தெரிகிறது.
புவி வெப்பமடைந்ததால், இந்தியாவில் பருவ நிலைகள் மாறின, கடுமையான வெப்பச் சூழல் நிலவியது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, வறட்சி நிலவியது. இது உணவு உற்பத்தியிலும் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. மக்கள் தொகை பெருக்கமும் கட்டுக்கு அடங்காமல் போனதால், வரும் பத்து ஆண்டுகளுக்கு உணவு உற்பத்தியை 30 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் கூறியதாவது:

கடந்த 1972ம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை 2007ம் ஆண்டில் 112 கோடியை தாண்டியது. இதனால், உணவு உற்பத்தியை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 20.34 கோடி டன்கள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வரும் 2020ம் ஆண்டில் 28.81 கோடி டன்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பால், காய்கறிகள், பழங்கள், சர்க்கரை ஆகியவற்றுக்கு மிகுந்த தேவை ஏற்பட்டுள்ளது.

மண் வளம் குறைந்து வருதல், நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருதல், விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களை பாதுகாத்து, வளப்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் வளர்ச்சியை எட்டலாம்.

விவசாய உற்பத்தியை பெருக்க மத்திய அரசு சமீபத்தில் புதிய புதிய விஞ்ஞான, தொழில் நுட்பங்களை கையாண்டு வருகிறது. 25 கோடி ரூபாய் செலவில் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதே நேரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு கழகமும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நன்றி : தினமலர்