Monday, March 2, 2009

74 சதவீத சவுதி அரேபிய கம்பெனிகள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்துகின்றன

74 சதவீத சவுதி அரேபிய கம்பெனிகள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை இன்னும் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக, சவுதி அரேபியாவின் பிரதான தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே புதிதாக வேலைக்கு எடுக்கும் போக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறது. எஸ்ஏபிபி என்ற வங்கி, சவுதி அரேபியாவை சேர்ந்த 765 கம்பெனிகளிடம் இது குறித்து எடுத்த கருத்து கணிப்பில் இந்த விபரம் தெரிய வந்திருக்கிறது. இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், சவுதி அரேபியாவின் தொழில் வளர்ச்சி இன்னும் இரு காலாண்டுகளில் 42 சதவீதாக குறைந்துதான் இருக்கும் என்று பெரும்பாலான கம்பெனிகள் தெரிவிக்கின்றன. கொஞ்ச கம்பெனிகள் மட்டுமே வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்கின்றன. மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிட்டால், பொருளாதார மந்த நிலையால் சவுதி அரேபியா அவ்வளவாக பாதிக்கப்படாமல் தான் இருந்தது.எனினும் மற்ற அரபு நாடுகளை விட சவுதி அரேபியா அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்பதால், அங்கு வேலையில்லாதோர் பிரச்னை இப்போது எழுந்துள்ளது என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சத்திகரிப்பு நிறுவனமாகியது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ்

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் இன்று இணைந்திருப்பதன் மூலம் அது, உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சுந்திகரிப்பு நிலையம் என்ற பெருமையை கொண்டிருந்த அமெரிக்காவின் செவ்ரான் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி விட்டு, அந்த இடத்தை பிடித்துக்கொண்டது. இன்று காலை தனித்தனியாக நடந்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் போர்டு மீட்டிங்கில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூடன் ரிலையன்ஸ் பெட்ரோலியத்தை இணைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக 16 ரிலையன்ஸ் பெட்ரோலியம் பங்குகளுக்கு ஒரு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பங்கை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த இணைப்பின் மூலம், குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு இருக்கும் 33 மில்லியன் டன் திறன் கொண்ட, முற்றிலும் ஏற்றுமதிக்காக துவங்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துடன், அதற்கு பக்கத்திலேயே ரிலையன்ஸ் பெட்ரோலியத்திற்கு இருக்கும் 29 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையமும் சேர்ந்து கொண்டதால், அது உலகின் 13 வது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகிறது. இந்தியாவை பொருத்தவரை இப்போது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தான் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டிருக்கிறது. இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு 50.7 மில்லியன் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தான் இருக்கிறது. எனவே அது, இனிமேல் உலகின் 18 வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டதாக ஆகிறது.
நன்றி : தினமலர்


ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும் இணைந்தன

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டும், அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்டும் ஒன்றாக இணைந்தன. மும்பை பங்கு சந்தைக்கு இன்று அந்த நிறுவனம் தெரிவித்த தகவலில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம் ரிலையன்ஸ் பெட்ரோலியமும், இந்திய கம்பெனி சட்டம் 1956 ன் 391 முதல் 394 வரையிலான பிரிவுகளின் கீழ் ஒன்றாக இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த இணைப்பு ஏப்ரல் 1, 2008 முதல் அமலுக்கு வருவதாகவும் அது தெரிவித்திருக்கிறது. இதன்படி ரூ.10 மதிப்ள்ள 16 ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட் பங்குகளுக்கு ஒரு ரூ.10 மதிப்புள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட்டின் பங்கு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பு, அதன் பங்குதாரர்கள் மற்றும் மும்பை, அகமதாபாத் ஐகோர்ட்களின் ஒப்புதலை அடுத்தே அமையும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பு குறித்த தகவல் வெளியானதை அடுத்து, பிப்ரவரியில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் பங்கு மதிப்பு 4.5 சதவீதமும், ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் மதிப்பு 12 சதவீதமும் குறைந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


டி.எல்.எப்., நிறுவன முதலீட்டாளர்கள் புகார்: ரூ.40 - 70 லட்சம் பணம் கட்டியவர்கள் பாதிப்பு

டி.எல்.எப்., நிறுவனத்தின் சார்பில் கட்டும் அடுக்குமாடி வீடுகளுக்காக லட்சக்கணக்கில் பணம் கட்டியவர்கள், அந்நிறுவனத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ளனர். அதற்குள் பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு மொத்தத் தொகையிலிருந்து 32 சதவீதம் வரை குறைத்ததுபோல் சென்னை வாடிக்கையாளர்களுக்கும் குறைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டி.எல்.எப்., நிறுவனம் (டில்லி லீஸ் பைனான்ஸ்) சார்பில் சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3,493 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட 2008ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட குடியிருப்புகளுக்கு 40 லட்சம் முதல் 75 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் வசிக்கும் டாக்டர்கள், ஆடிட்டர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என, மொத்தம் 1,800 பேர் வீடுகளைப் பதிவு செய்தனர். இதில் பெரும்பாலானோர் 95 சதவீதம் வரை பணம் கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஓராண்டாகியும் செம்மஞ்சேரியில் கொடுத்த பணத்திற்குரிய கட்டுமானப் பணிகள் நடக்கவில்லை. மேலும், டி.எல்.எப்., நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்குச் சரியான தகவல் தொடர்பு இல்லாததால் பணத்தைக் கட்டியவர்களில் 1,100 பேர் ஒரு குழுவாகக் கூடினர். அதற்கு ஜான்சன் தலைவராகவும், முக்கிய நிர்வாகிகளாக வக்கீல் சியாம்சுந்தர், ராம்கோபால், முத்துக்கருப்பன், பிரசாத், மவுலி ஆகியோர் பொறுப் பாளர்களாகச் செயல்படுகின்றனர். டி.எல்.எப்., நிறுவனத்தில் பணம் கட்டியவர்களின் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 300க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் நிர்வாகிகள் ஜான்சன், வக்கீல் சியாம்சுந்தர் உள்ளிட்ட பலர் கூறியதாவது: டி.எல்.எப்., நிறுவனம் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு 13 மாதங்களாகியும் நகர ஊரமைப்பு பிளான் வரவில்லை. டி.எல்.எப்., நிறுவனம் - லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் கூட்டாக முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது அனைவரும் அறிந்ததே. இதில் அடுக்குமாடிக் குடியிருப்பு வேண்டி கட்டிய பணத்தில் 49 சதவீதம் லீமேன் பிரதர்ஸ் நிறுவனத்துடன் கலந்து விட்டதால், மீண்டும் செம்மஞ்சேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி கொடுப்பார்களா? வரும் 2011ம் ஆண்டுக்குள் கட்டிக்கொடுக்க முடியுமா என்ற பயம் எங்களுக்கு வந்துவிட்டது. எனவே தான், பணம் கட்டியவர்கள் ஒரு குழுவாக சென்னையில் செயல்படுகிறோம். அதில் உறுப்பினர்களாக 1,300 பேர் உள்ளனர். தமிழகத்தில் அனைத்து பில்டர்களும் யு.டி.எஸ்., பதிவு செய்த பின் தான் கட்டடம் கட்டுகின்றனர். அதுபோல் முழுமையாக கட்டடப் பணி முடிவதற்கு முன் டி.எல்.எப்., நிறுவனமும் யு.டி.எஸ்., பதிவு செய்ய வேண்டும். பெங்களூரில் டி.எல்.எப்., நிறுவனம் 32 சதவீதம் வரை மொத்த தொகையிலிருந்து குறைத்துள்ளது. அதுபோல் சென்னையில் 10 சதவீதம் தான் மொத்த தொகையில் குறைத்துள்ளது. பெங்களூரைப் போல் சென்னையிலும் மொத்தத் தொகையில் குறைக்க வேண்டும்.
செம்மஞ்சேரியில் 3,493 அடுக்குமாடி கட்டும் குடியிருப்புக்கு 10 ஆயிரம் வாகனங்கள் வரலாம். அதற்கேற்ப பாதை இல்லை. சுனாமி காலனி மக்கள் வசிக்கும் வழியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது. நல்ல பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி 13ம் தேதி டி.எல்.எப்., நிறுவனம் ஒரு கடிதத்தை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், 'தேவைப்படுபவர்கள் முழுப் பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளலாம்' என அறிவித்தது. இதை நம்பி நிறையபேர் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக கடிதம் அனுப்பினர். ஆனால், அவர்களுக்கு எந்தவிதப் பதிலும் வரவில்லை. கடந்த 23ம் தேதி மொத்தத் தொகையில் 10 சதவீதம் குறைப்பதாக டி.எல்.எப்., நிறுவனம் அறிவித்ததில் யாருக்கும் திருப்தியில்லை. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மீண்டும் மொத்தத் தொகையிலிருந்து குறைக்க வேண்டும். ஒரு வாரம் நாங்கள் கெடு விதித்துள்ளோம். மேலும், சென்னை டி.எல்.எப்., நிறுவனத்துடன் இனி பேசப் போவதில்லை. இங்குள்ளவர்கள் மீது நம்பிக்கை இல்லை. டில்லியில் இருந்து வரும் நிர்வாகிகளுடன் தான் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


மொபைலில் கணக்கு; மனப்பாடம் செய்ய 'ஐபாட்': இவங்க மாறிட்டாங்க; நீங்க...

நீங்கள் பள்ளியில் படிக்கும் மாணவரா? மொபைல் போன் வைத்து இருக்கிறீர்களா? எப்போதும் 'ஐபாட்' டில் சினிமா பாட்டு கேட்டுக்கொண்டிருப்பதில் ஆர்வம் உள்ளவரா? படிப்பு நிச்சயம் கெடுமே; அப்படீன்னா, மும்பை மாணவர்கள் சாதிப்பதை கண்டிப்பாக நீங்க படிக்கணும்! சினிமா பாட்டு கேட்கவும், வீடியோ படங்களை பார்க்கவும் தான் மெபைல் போன் , ஐபாட் என்ற எண்ணத்தை மும்பை பள்ளி மாணவ, மாணவிகள் மாற்றிக்காட்டியுள்ளனர். ஆம், மொபைல் போனில், கஷ்டமான கணக்குகளை போட்டுப் பார்க்கின்றனர்; ஆசிரியர்கள் நடத்திய பாடத்தை மீண்டும் கேட்டு புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இது போலவே, சினிமாப் பாட்டுக்களை பதிவு செய்து,காதில் மிஷினை மாட்டிக்கொண்டு எப்போதும் கேட்டபடி இருப்பதற்கு பயன்படும் 'ஐபாட்' சாதனமும் இப்போது இந்த மாணவ, மாணவிகளுக்கு படிப்புக்கு உதவும் கருவியாகி விட்டது. பொழுதுபோக்கு சாதனங்களாக இருக்கும் இந்த இரு சாதனங்களையும் படிப்புக்கு பயன்படும் வகையில், மாணவர்களே மாற்றி வருவதால், பாடம் நடத்துவதை மொபைலில், பதிவு செய்து கொள்ளவும் ஆசிரியர்கள் அனுமதிக்கின்றனர்.
மும்பையில் உள்ள ஜம்னாபாய் நர்சி பள்ளியில் தான் இந்த புதுமையான வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஜெஸ்சி வாஸ் கூறுகையில்,'பொழுதுபோக்கு சாதனங்களாக உள்ள மொபைல் போன், ஐபாட் இரண்டும் எங்கள் பள்ளி மாணவர்களை பொறுத்தவரை படிப்புக்கு உதவும் கருவியாகி விட்டன. எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. வகுப்பில் புரியாத பாடங்களை மீண்டும் மீண்டும் கேட்டு புரிந்து கொள்ள இவர்களுக்கு இவை உதவும், மொபைல் போனில் கணக்குகளை போட்டுப்பார்க்க ஆலோசனை கூறி வருகிறோம்; அதுபோல, ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஐபாடில் கேட்க வைக்கிறோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' என்று தெரிவித்தார். இந்த மாணவ, மாணவிகள் வெப்சைட்சகளில் தேடி, பாட விஷயங்கள் தொடர்பான ஆடியோ தகவல்களை 'டவுன்லோடு' செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆங்கிலக்கவிதைகள், நாடகங்கள் மற்றும் கணக்கு சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் போன் வற்றையும் இப்படி மொபைல், ஐபாடில் ஏற்றிக்கொண்டு, அதைத் திரும்ப திரும்ப கேட்டு மனப்பாடம் செய்கின்றனர்; கணக்குகளையும் புரிந்து கொள்கின்றனர். இந்த பள்ளி மாணவர்களை பார்த்து, மும்பையில் மற்ற பள்ளிகளிலும் மாணவர்களை இந்த வகையில் ஊக்குவித்து வருகின்றனர் ஆசிரியர்கள்.
நன்றி : தினமலர்