கடந்த 3 ஆண்டுகளில் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் தனியார் துறையினர் ரூ.33161 கோடி முதலீடு செய்துள்ளனர், என அஸோசெம் (Association of Chambers of Commerce and Industry) தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள முதல் நிலை நகரங்கள் டெல்லி, மும்பை போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள தனியார் துறை முதலீட்டோடு ஒப்பிடுகையில் இது 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகும். இந்தியாவின் முதல் நிலை நகரங்களில் இதே காலகட்டத்தில் ரூ.14240 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அஸோஸெம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டிலேயே உள் கட்டமைப்பு வளர்ச்சியில் தனியார் துறையின் முதலீட்டை அதிகம் கவர்ந்திழுப்பவை இன்றைக்கு சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று தென்னிந்திய நகரங்கள்தான். தனியார் துறையின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட 70 சதவீதம் கடந்த மூன்றாண்டுகளில் இந்த நகரங்களில்தான் செய்யப்பட்டுள்ளன.கடந்த 6 மாதங்களில் மட்டுமே ரூ.12990 கோடி மதிப்பிலான 12 ரியல் எஸ்டேட் திட்டங்கள் இந்த நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 6 திட்டங்கள் பெங்களூரில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 12150 கோடியில் 5 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில் ரூ.4000 கோடி மதிப்பில் ஐடிசி ஓட்டல் உள்பட பல ஹோட்டல்கள் இந்த 6 மாதங்களில் துவங்கப்பட்டுள்ளன.பரப்பளவில், மக்கள் தொகையில் இவை சற்று சிறிய நகரங்களாக இருந்தாலும், சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான மக்கள், நிலையான அரசியல் தன்மை, கல்வியறிவு, குறைந்த ஊதியத்துக்கும் உழைக்கத் தயாராக உள்ள தொழிலாளர்கள் போன்ற காரணங்கள்தான் இந்த நகரங்களுக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதாக அஸோஸெம் தெரிவித்துள்ளது.
நன்றி : தட்ஸ்தமிழ்






