Thursday, February 19, 2009

தனலட்சுமி வங்கி ஆன்-லைன் சேவை

ரிசர்வ் வங்கியின் 'துரித பணம் அனுப்பும் சேவை திட்டத்தின் கீழ், கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட தனலட்சுமி வங்கி, 'தனம் எக்ஸ்பிரஸ்' என்ற 'ஆன்-லைன்' பணம் அனுப்பும் வசதியை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தனலட்சுமி வங்கி, அபுதாபியில் உள்ள மிகப் பெரிய 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிவர்த்தனை மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அபுதாபியில் உள்ள ஒருவர், இந்தியாவில் எந்த வங்கியின் எந்த கிளைக்கும் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும். இந்த வங்கியின் கொச்சியில் உள்ள தொழில் நிதியக் கிளை இதன் ஒரு பிரத்யேக கேந்திரமாக விளங்கும். பிற வங்கியின் வாடிக்கையாளர்கள் (ஆர்.டி.ஜி. எஸ்.,) மற்றும் என்.இ.எப்.டி., மூலம் பணம் அனுப்பி வைக்கப் படும்.
நன்றி : தினமலர்


சுகுணா 'டெய்லி பிரஷ்' கிளை துவக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் 150 சுகுணா, 'டெய்லி பிரஷ்' நேரடி விற்பனை நிலையங்களை துவக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிக்கன் கோழி உற்பத்தியில் சிகரத்தை எட்டியுள்ள சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் சார்பில், சுகுணா 'டெய்லி பிரஷ்' என்ற பெயரில் நேரடி விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. கோவை ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டில் முதல் விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, புதுச்சேரி உட்பட பல நகரங்களிலும், 'டெய்லி பிரஷ்' கிளைகள் துவக்கப்பட்டன. தற்போது கேரளாவில் அங்கமாலி, திருச்சூர், எர்ணாகுளம், எளமாக்காரா என பல நகரங்களிலும் இதன் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யப்படாத சிக்கன்களை வாங்க விரும்பாத சிக்கன் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளாக இந்த விற்பனை நிலையங்கள் அமைந் துள்ளன. லாலி பப், லெக் பீஸ், கறி கட், முழுக்கோழி என எட்டு விதமான சிக்கன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அசைவப் பிரியர்களை முழுமையாக திருப்திபடுத்தும் வகையில், ப்ரோசன் சிக்கன், ஹோம் பைட்ஸ் போன்ற உடனடி தயாரிப்பு சிக்கன் வகைகளும் இங்கு உள்ளன. ஒவ்வொரு 'டெய்லிபிரஷ்' கடையிலும் தினமும் 4,000 கிலோ சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக டோர் டெலிவரி வசதியும் துவக்கப்பட்டிருப்பதாக இப்பிரிவின் துணை பொது மேலாளர் பிரியா தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 150 கடைகளைத் திறக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில் செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த கிளைகள் துவக்க முன் வரலாம் என்று இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையை கீழே தள்ளியது இடைக்கால பட்ஜெட் : சேதுராமன் சாத்தப்பன்

பட்ஜெட், 600 புள்ளிக்கு மேல் வரை சந்தையில் இருந்து அள்ளிக் கொண்டு போய்விட்டது. இந்த வாரம் திங்கள் முதல் நேற்று வரை நஷ்ட வாரம் தான். என்ன செய்வது என்று தெரியாமல் முதலீட்டாளர்கள் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். சாண் ஏறி சாண் வழுக்காமல் முழம் வழுக்குகிறது. சந்தை 9,000த்திலேயே அல்லாடுகிறது. பட்ஜெட்டை அனைவரும் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். நடக்கும் என்பார் நடக்காது என்பது போல ஆகிவிட்டது.
உலகளவில் ஏற்படும் தொய்வு, சந்தைகளின் இறக்கம், இங்கும் பிரதிபலித்தது. பட்ஜெட்டில் இன்னும் ஒரு பேக்கேஜ் வருமென அனைவரும் எதிர்பார்த்தனர்; அதுவும் வரவில்லை, வேறு எவ்விதமான நல்ல அறிவிப்புகளும் வரவில்லை. அது, சந்தையை திங்களன்றும் தாக்கியது, நேற்று முன்தினமும் இறக்கிச் சென்றது. திங்களன்று 329 புள்ளிகளும், நேற்று முன்தினம் 270 புள்ளிகளும் குறைந்தது. இந்தத் துறை தான் என்று இல்லாமல் அனைத்து துறைகளும் கீழே இறங்கியது.
கடந்த 30 ஆண்டுகளில் எப்போதெல்லாம் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் சந்தை கீழே இறங்கியே வந்திருக்கிறது. அதுபோல தற்போதும் இறங்கியுள்ளது. ஒரு வேளை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்திருக்குமோ என்னவோ? உலகளவில் சந்தைகள் கீழேயே இருந்ததால், நேற்று துவக்கத்தில் சந்தை கீழேயே இருந்தது. இது தான் நல்ல சமயம் என்று வாங்குபவர்கள் இருந்ததால் சந்தை சிறிது மேலே சென்றது. முடிவாக மும்பை பங்குச் சந்தை 19 புள்ளிகள் கீழே சென்று 9,015 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 5 புள்ளிகள் மேலே சென்று 2,776 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 9,000க்கு மேலேயே இருப்பது ஒரு சிறிய ஆறுதல். இறங்கும் சந்தையும், ஏறும் டாலர் மதிப்பும்: சந்தை இப்படி இறங்குவதால், டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. 50 ரூபாயை தாண்டி பயமுறுத்துகிறது. ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இறக்குமதியாளர்களை கலக்கிக் கொண்டிருக்கிறது. வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்திருந்தாலும் இன்னும் விலை குறையுமா என்று தான் பலரும் காத்து கொண்டிருக்கின்றனர். ஸ்டேட் பாங்க் 8 சதவீதத்தில் கடன் அளிக்கிறேன் என்றாலும் அது முதல் ஆண்டுக்கு மட்டும் தான் என்பது ஒரு சிறிய குறை. ஆதலால், நீண்ட கால கடன் எடுப்பவர்கள் முடிவு எடுப்பதில் சிரமப்படுகின்றனர். வீடுகளை கட்டி வைத்துள்ள கம்பெனிகள் தள்ளுபடி செய்து விற்கவும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. டி.எல்.எப்., முதல் கட்டமாக டில்லி மற்றும் பெங்களூரில் சிறிது தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது கட்டுமானத் துறையை பலப்படுத்தப் போகிறதா என்று பார்க்க வேண்டும்.
தங்கமே தங்கமே: எல்லையே இல்லை என்ற அளவிற்கு ஏறிக்கொண்டு செல்கிறது. பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட், ஹெட்ஜ் பண்ட் போன்று எங்கு முதலீடு செய்தாலும் தற்போது பெரிய வருமானம் கிடைக்காது என்று சரியாக தெரிந்ததால் உலகளவில் தங்கம் மேல் அனைவரும் கண் வைத்திருக்கின்றனர். அது விலையைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.
திருமணத்திற்கு பெண் வைத்திருப்பவர்கள் அடிமடியில் பயத்தை கட்டிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டில் 25 சதவீதம் லாபத்தை தந்திருந்தாலும், சமீபகாலத்தில் 36 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது என்றால் ஆச்சரியமாக இல்லை? விலை உடனடியாகக் குறையாவிட்டாலும் சிறிது நாட்கள் கழித்து குறைய வாய்ப்பு உண்டு. இவ்வளவு விலை கொடுத்து வாங்குபவர்கள் இருக்கின்றனர் என்றால் இல்லை அதிகமாக இல்லை என்று தான் கூறவேண்டும். அத்தியாவசியமாக வாங்கத் தான் வேண்டும் என்பவர்களும், வேறு முதலீட்டு வாய்ப்புகள் இல்லை என்பதால் முதலீடு செய்பவர்களும் செய்கின்றனர். ஆனால், கூடும் விலையால் தங்கம் இறக்குமதி மிகவும் குறைந்து விட்டது. முன்பெல்லாம் தங்கம் விலை கூடும் போதெல்லாம் வரிசையில் நின்று விற்பவர்களும் இருப்பார்கள். தற்போது அதுவும் குறைந்து விட்டது. இந்த ஆண்டு அரசு நிறைய கடன் வாங்க இருப்பதாக வந்த செய்திகளும் சந்தையை கீழே இறக்க ஒரு காரணமாக இருந்தது. அதாவது, அப்படி அரசு கடன் வாங்கும் போது அது தற்போது குறந்து வரும் வட்டி விகிதங்களை கூட்டி விடும். அந்த பயத்தினாலும் சந்தைகள் சிறிது சரிந்தன என்று கூறலாம். இப்போது அனைவரும் பிரார்த்திப்பது ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டை தான். கட்டாயம் வரவேண்டும், அது தான் சந்தையை நிமிர்த்தும் என்பது பலருடைய எண்ணம்.
நன்றி : தினமலர்