Friday, July 25, 2008

பங்கு சந்தையில் மீண்டும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது


பங்கு சந்தையில் இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயராமல் இருந்தபோதும், பணவீக்கம் சிறிது குறைந்திருந்த போதும் அது பங்கு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தாதது சர்வதேச அளவில் பங்கு சந்தையில் இருந்த சரிவு நிலைதான் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து இரண்டு நாட்களாக சந்தை சரிவில் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாரத்தில் மொத்தமாக சென்செக்ஸ் 4.5 சதவீதமும், நிப்டி 5.5 சதவீதமும் குறைந்து இருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 502.07 புள்ளிகள் ( 3.40 சதவீதம் ) குறைந்து 14,274.94 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ், அதிக பட்சமாக 14,484.39 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. குறைந்ததாக 14,210.63 புள்ளிகள் வரை சென்றது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 121.70 புள்ளிகள் ( 2.74 சதவீதம் ) குறைந்து 4,311.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிப்டி அதிக பட்சமாக 4,440.85 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 4,297.15 புள்ளிகள் வரையிலும் சென்றது. இன்றைக்கு அதிகம் நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஐ சி ஐ சி ஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேஷன் மற்றும் ஓ என் ஜி சி. இருந்தாலும் ரான்பாக்ஸி லேப்ஸ், ஏ சி சி, ஹெச் யு எல், கிராஸிம் பங்குகள் உயர்ந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று அதிகம் பாதித்தது பேங்கிங் துறைதான். 5.75 சதவீதம் குறைந்திருந்தது. ஐ சி ஐ சி ஐ பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கனரா பேங்க், கர்நாடகா பேங்க், யெஸ் பேங்க், கோடக் மஹேந்திரா பங்குகள் 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை குறைந்திருந்தது.


நன்றி : தினமலர்


வருமான வரி கட்டும் முறை மேலும் எளிமையாகிறது


வரி கட்டுபவர்கள், இனிமேல் எந்த ஒரு நபரின் எந்த பேங்க் அக்கவுன்ட் மூலமாகவும் வரியை கட்டலாம் என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் ( சி பி டி டி ) தெரிவித்திருக்கிறது. இப்போதைய பணம் செலுத்தும் முறையில் பல சிக்கல்கள் இருப்பதாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் வரி செலுத்துபவர்கள் சொல்லி வந்ததை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சி பி டி டி தெரிவித்திருக்கிறது. டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு மூலமாகவும் இனிமேல் வரி கட்டலாம். இந்த வருடம் ஏப்ரலில் இருந்து தான் நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்கள் எலக்ட்ரானிக் முறையில் வரி கட்டலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இனிமேல் வரி கட்டுபவர்கள் யாருடைய அக்கவுன்டில் இருந்தும் எலக்ட்ரானிக் முறையில் பணம் கட்டலாம். ஆனால் அதற்கான செலானில் மட்டும் வரி கட்டுபவரது பான் நம்பரை தவராமல் குறிப்பிட வேண்டும் என்று சி பி டி டி தெரிவித்திருக்கிறது. அவரவர்கள் பேங்க் அக்கவுன்டில் இருந்துதான் பணம் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை.

நன்றி : தினமலர்


பணவீக்கம் சிறிது குறைந்தது


மே மாதத்திற்குப்பின் முதன் முறையாக இப்போது பணவீக்கம் 0.02 சதவீதம் குறைந்து 11.89 சதவீதமாகி இருக்கிறது. சில உணவுப்பொருட்கள், மீன், டீ, சமையல் எண்ணெய் போன்றவைகளின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் சிறிது குறைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஜூலை 12ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், பணவீக்கம் 11.89 சதவீதம் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 11.91 சதவீதமாகவும், கடந்த வருடத்தில் இதே காலத்தில் 4.76 சதவீதமாகவும் இருந்திருக்கிறது. நிதி அமைச்சகத்தில் தகவலின்படி, மொத்தமுள்ள 98 முக்கிய பொருட்களில் 10 பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. 54 பொருட்களின் விலை உயரவில்லை என்கிறது. சில உணவுப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் சில பொருட்களின் விலை அதிகரித்துதான் இருந்தது. காபி, பழங்கள் மற்றும் காய்கறிகள், மட்டன், பாசிப்பயிறு, துவரம்பருப்பு போன்றவைகளின் விலை உயர்ந்துதான் இருந்தது.


நன்றி :தினமலர்


இலக்கு ரூ.28 ஆயிரம் கோடி கே.வி.பி., சேர்மன் அறிவிப்பு


''கரூர் வைஸ்யா வங்கியின் நடப்பாண்டு வணிக இலக்கு, ரூ.28 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது,'' என்று மகா சபை கூட்டத்தில் சேர்மன் குப்புசாமி அறிவித்தார்.
கரூர் வைஸ்யா வங்கி 89வது மகா சபை கூட்டம், கரூர் தலைமை அலுவலகத்தில் நடந்தது. வங்கி சேர்மன் குப்புசாமி பேசியதாவது: கடந்த நிதியாண்டில் கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் ரூ.22 ஆயிரத்து 118.83 கோடி எட்டியதுடன், மொத்த வணிக வளர்ச்சியில் 33.77 சதவீதத்தை எட்டியுள்ளது.
வங்கியின் மொத்த வருமானம் 30.69 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. ஆயிரத்து 289.33 கோடியை எட்டியது. வங்கியின் நிகர லாபம் ரூ.160.01 கோடியில் இருந்து 30.2 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.208.33 கோடியை எட்டியது. நடப்பு நிதியாண்டில் வங்கியின் மொத்த வணிகம் ரூ.28 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டை, 'இளைய சமுதாயத்தினர்' ஆண்டாக கடைப்பிடிக்கிறது. 'யுவசக்தி' என்ற புதிய சேமிப்பு கணக்கு திட்டத்தை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விமானம் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய டெபிட் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஆன்-லைன் பில் பேமன்ட்,' 'ஆன்-லைன் ஷாப்பிங்,' 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம், 'டிராவல் கார்டு' மற்றும் 'கிப்ட் கார்டு' வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.இவ்வாறு சேர்மன் குப்புசாமி பேசினார்.


நன்றி :தினமலர்


கிரெடிட் கார்டு நடைமுறையில் வங்கிகள் கெடுபிடி : தடுக்க ரிசர்வ் வங்கி புது உத்தரவு


கிரெடிட் கார்டுகளுக்கு அதிக கட்டணம் மற்றும் பயனீட்டாளர்களை பாதிக்கும் வங்கி கெடுபிடி நடவடிக்கைகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை, வழிகாட்டிக் குறிப்புகளை வகுத்துள்ளது.
கிரெடிட் கார்டு பாதிப்பு குறித்து ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி அடிப்படையில் எழுப்பப்படும் பிரச்னைகளைக் குறைக்க வழிகண்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டிக் குறிப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல்: தேவைப்படாதவர்களுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்குவதோ, அப்படி வழங்கப்படும்போது, அதை பெறுபவரின் கணக்கை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து அதற்கான விசேஷ கட்டணம் வசூலிக்கக் கூடாது.
அவ்வாறு கட்டணம் வசூலித்தால், அதை திரும்ப பயனீட்டாளருக்கு அளிப்பதோடு, அவர் பெற்ற மன உளைச்சலுக்காக அபராதத் தொகையாக வங்கிகள், இரண்டு மடங்கு திருப்பி அளிக்க வேண்டும். கார்டு தேவையில்லை என்பவருக்கு அனுப்பி, அதனால் வரும் பிரச்னைக்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும்.
அத்துடன், யார் பெயரில் கிரெடிட் கார்டு அனுப்பப்பட்டதோ, அவர் வங்கி ஓம்பட்ஸ்மேனை அணுகலாம். அங்கு, எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.
இதற்கு ஏற்படும் செலவு, துண் புறுத்தல்கள், மன அமைதி கெடுதல் போன்றவற்றுக்கு ஏற்ப, இழப்பீடு தொகை வரையறுக்கப்படும். கிரெடிட் கார்டு வழங்கப்படும் போது, சில வங்கிகள் அவற்றுக்கு காப்பீடு பாலிசிகளையும் அளிக் கின்றன. இதற்காக, வேறு சில காப்பீடு நிறுவனங்களுடன் உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்கின்றன.
அப்படிப்பட்ட நிலையில், கிரெடிட் கார்டு தாரர் விபத்தின் போது, இறந்து பேனாலோ, நிரந்தர ஊனமடைந் தாலோ, அதற்கான பயன்கள் யாரைச் சென்றடைய வேண்டும் என்ற நியமனதார் பெயருடன் விண்ணப்பத்தை நிரப்பி வாங்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கிரெடிட் கார்டு தாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு தவறாக பயன்படுத் துவதை தவிர்க்க, புகைப்படம், கையெழுத்துடன் லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளை வழங்கலாம். மாதம் தோறும் கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு பரிவர்த்தனைகள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தெரியப்படுத்தும் நடைமுறை உருவாக்க வேண்டும். கிரெடிட் கார்டு கணக்கு பாக்கி விபரம் முன்கூட்டியே தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்டவர் அத்தொகையைச் செலுத்த கால அவகாசம் குறைந்தது 15 நாட்களாவது இருக்க வேண்டும். அதற்குப் பின் தான் கட்டாத தொகைக்கு வட்டி வசூலிக்கலாம்.
இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறைகளை வங்கிகள் உடனடியாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நன்றி :தினமலர்