Monday, July 27, 2009

வளைகுடா நாடுகளிலேயே யூ.ஏ.இ., தான் இந்தியர்களின் விருப்ப நாடாக இருக்கிறது

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அங்குள்ள ஐக்கிய அரபு குடியரசு ( யு.ஏ.இ.,) தான் இன்னமும் மிகவும் விருப்பமான நாடாக இருக்கிறது. அங்கு சுமார் 15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக சென்றிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய அரபு குடியரசில் இந்திய தூதராக இருக்கும் வேனு ராஜாமணி இது குறித்து கருத்து தெரிவிக்கையில் சுமார் 15 லட்சம் இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள். அதில் சுமார் 12 லட்சம் பேர் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திய பிரதேஷில் இருந்து வந்தவர்கள் என்றார் அவர். ' வளைகுடா நாடுகளின் பொருளாதார சீர்குழைவால் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்வர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ' என்பது குறித்து, சமீபத்தில் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ( சிடிஎஸ் ) நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய வேனு ராஜாமணி இவ்வாறு தெரிவித்தார். அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களிடையே ஐக்கிய அரபு குடியரசு தான் ஒரு விருப்பமான நாடாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்கு அடுத்ததாக சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், மலேஷியா மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் இருக்கின்றன. ராஜாமணி மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, 2007 ஐ விட 2008 ல் 11.87 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


மாணவர்களுக்குத் தலைமை தேவை!

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கல்வியியல் என ஆயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ளன. இதில், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, அரசுக் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்களும், தமிழ் மன்றம், துறைவாரியான மன்றங்களுக்குத் தேர்தல்களும் நடத்தப்பட்டு வந்தன.
தேர்தல் தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்னைகள், பூசல்களைக் காரணம் காட்டி பல கல்லூரிகளில் தேர்தல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.

அரசு நிதியுதவி, சுயநிதிக் கல்லூரிகளில் சிலவற்றில் மட்டும் இத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பல கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் அல்லது கல்லூரி நிர்வாகத்துக்கு நெருக்கமானவர்களின் வாரிசுகளை பேரவை நிர்வாகிகளாக அறிவித்து விடுகின்றனர்.

மாணவர்களைத் தலைமைப் பண்புக்குத் தகுதி அடையச் செய்தல், அவர்களின் தனித் திறன்களை வெளிப்படுத்துதல், கல்விசாராப் பணிகளில் ஆர்வத்தை உண்டாக்குதல், அவர்களின் பிரச்னைகளை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்காகவேதான் கல்லூரிகளில் மாணவர் பேரவைகள் உருவாக்கப்பட்டன.

இவை இன்று புறக்கணிக்கப்பட்டு, மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்படாமலும், கண்துடைப்புக்காக பேரவை நிர்வாகிகளை நியமித்தும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கல்வித் துறையோ அல்லது அரசோ கண்டும் காணாமலும் இருந்து வருகின்றன. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட மாணவர் சக்தியே காரணமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வீழ்ந்து, 1967-ம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்க இந்தி எதிர்ப்புப் போராட்டமும், அதற்கு மாணவர்களும், இளைஞர்களும் அளித்த ஆதரவும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

அக்காலக்கட்டத்தின்போது, திமுகவைச் சேர்ந்தவர்கள் பல கல்லூரிகளில் மாணவர் பேரவைகளிலும், தமிழ் மன்றம் உள்ளிட்டவைகளிலும் தேர்தல்களின் மூலம் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் மூலமாக கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடந்த விழாக்களில் கலந்துகொண்ட திமுக முன்னணித் தலைவர்கள் தங்களது கருத்துகளை மாணவர்கள் மத்தியில் பரப்பி, இயக்கத்தை வளர்த்தனர். அன்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்க மாணவர் சக்தியைத் திரட்டக் காரணமாக அமைந்தது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அமைந்த மாணவர் பேரவைகளே.

இன்றோ தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் முறையாக மாணவர் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்புகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தமிழக அரசு உள்ளது.

வட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆண்டுதோறும் முறையாக மாணவர் பேரவைக்குத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பு மாணவர் அமைப்பான என்எஸ்யூஐ, பாஜக சார்பு மாணவர் அமைப்பான ஏபிவிபி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளான எஸ்எப்ஐ, ஏஐஎஸ்எப் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகளை நிறுத்துவர்.

பொதுத்தேர்தல்போல இத்தேர்தல்களுக்கும் பல்கலைக்கழகம், கல்லூரி வளாகங்களில் பிரசாரம் நடக்கும். ஆரோக்கியமான போட்டிகளுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பேரவைகள், நற்பணிகள் பலவற்றை ஆற்றி வருகின்றன. இதோடு, பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் திறம்படச் செயல்படவும், மாணவர் பிரச்னைகளை உடனுக்குடன் களையவும் அவை உதவி புரிகின்றன.

தமிழகத்திலோ ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே இத்தேர்தல் நடத்தப்படுகிறது. இச்சூழ்நிலை மாற வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் தேர்தல்கள் முறையாக, ஜனநாயக முறைப்படி நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

கல்லூரிகளில் அமைக்கப்பட்ட மாணவர் பேரவைகள் மூலம், பல்கலைக்கழக அளவில் மாணவர் பேரவைகளை உருவாக்கவும் வேண்டும்.

இப்பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சிலரை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்யும் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் சூழ்நிலை தென்படுகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவியர் மன்றங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தல் முறையாக நடைபெறவும், பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவை உருவாக்கப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.

இந்த மாணவர் அமைப்புகள் அரசுக்கு எதிரான ஆதரவைப் பெற்றுவிடும் என்று ஆட்சியில் இருப்பவர்களும் இருந்தவர்களும் பயப்படுவதாலோ என்னவோ, கோரிக்கையை நமது ஆட்சியாளர்கள் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. அதற்கு பயம்தான் காரணமாக இருக்க முடியும்!

கட்டுரையாளர் :தி.நந்தகுமார்
நன்றி : தினமணி

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 68.44 டாலராக உயர்ந்தது

மோசமான நிலையில் இருந்த உலக பொருளாதாரம் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதால் ஆசிய சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் வெளியிட்ட காலாண்டு நிதி அறிக்கையில், அவைகள் லாபம் சம்பாதித்திருப்து தெரிய வந்திருப்பதை அடுத்து, கடந்த ஒரு வருட காலமாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வந்த பொருளாதார மந்த நிலை, முடிவுக்கு வந்து விடும் என்று தெரிகிறது. இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் மீண்டும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) விலை பேரலுக்கு 39 சென்ட் உயர்ந்து 68.44 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 38 சென்ட் உயர்ந்து 70.70 டாலராக இருக்கிறது.
நன்றி : தினமலர்


தார்மிக வரம்பு மீறல்!

எந்த ஒரு செயலும் சட்டப்படி சரியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. தார்மிக ரீதியாகவும் அந்தச் செயல் ஏற்புடையதாக இருக்க வேண்டும். கொலை செய்வது, கற்பழிப்பது போன்ற செய்கைகள் சட்டப்படி சரி என்று பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் ஒரு அரசு சட்டம் இயற்றுவதாலேயே, அந்தச் செயல்கள் சரியான செயல்கள் ஆகிவிடாது. அதேபோலத்தான், நமது அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்துக்குச் செலவு செய்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்கிற தார்மிக வரம்பு மீறலும்!

1994-ம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அப்போது நிதியமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை விவரம் தெரிந்த யாருமே ஆரம்பம் முதலே அங்கீகரிக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்பதை மக்கள் நலனில் அக்கறை உள்ள பலரும் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்தாலும், "பணம்' என்று வரும்போது கட்சி மாச்சரியங்களை மறந்து அனைத்துக் கட்சியினரும் கைகோர்த்துக் கொள்வதால் ஏற்படும் மக்களவைப் பெரும்பான்மை அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டிருக்கிறது.
நாடாளுமன்றக் குழு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இந்த நிதியை ஆண்டொன்றுக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப் பரிந்துரை செய்திருக்கிறது. ரூ.5 கோடியாக இந்த நிதி அதிகரிக்கப்பட்டாலே, இப்போதைய ரூ.1,600 கோடியிலிருந்து வருட நிதி ஒதுக்கீடு ரூ.4,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுவிடும். ரூ.10 கோடி என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தைப் பின்பற்றி, எல்லா மாநிலங்களிலும் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது.
இப்போது, ஒன்றன்பின் ஒன்றாக, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளையும் இந்த வியாதி தொற்றிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது.

2002-ம் ஆண்டுக்கான மத்திய தணிக்கை மற்றும் வரவு - செலவு மேற்பார்வை இயக்குநரின் அறிக்கை பல மாநிலங்களிலும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷயத்திலும் முறைகேடுகளும், குளறுபடிகளும் காணப்படுவதைக் கண்டுபிடித்துள்ளது. எதற்காக நிதி ஒதுக்கப்பட்டதோ அதற்கு அந்த நிதி சென்றடையவில்லை என்றும், நிதி ஒதுக்கீடு முறைகேடாகப் பயன்பட்டது என்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை விமர்சித்திருக்கிறது அந்த அறிக்கை.

ஒரு சில அரசியல் கட்சிகள், தங்களது உறுப்பினர்கள் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியை கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்த ஊக்குவித்திருப்பதும், இந்த நிதியின் மூலம் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்சிக்கு நன்கொடை என்கிற பெயரில் இந்த நிதியின் ஒரு பகுதியை அளிக்க வற்புறுத்தப்படுவதாகவும்கூட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2005-ல் புலனாய்வு முயற்சியில் ஈடுபட்ட ஒரு தொலைக்காட்சி அலைவரிசை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கித் தர கையூட்டுப் பெறுவதைப் படம்பிடித்து அம்பலப்படுத்தியது.
அரசு, தவறுகளைத் திருத்த என்ன வழி என்று ஆராய முற்பட்டதே தவிர ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் திட்டத்தைக் கைவிடத் தயாராகவில்லை.

நமது அரசியல் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களையும் திட்டங்களையும் முன்வைப்பதற்கும் நிர்வாக இயந்திரம் அதை நிறைவேற்றுவதற்கும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே என்னென்ன தேவை என்பதைப் பட்டியலிட்டு, அவர்களே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்களானால் பிறகு நிர்வாக இயந்திரமும், அரசு அதிகாரிகளும் எதற்கு?

2005 ஏப்ரல் மாதத்தில் நடந்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும், அதற்குச் செலவிடப்படும் நிதி ஒதுக்கீடு உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் தேவையைக் கேட்டறிந்து நேரடியாக அந்த அமைப்புகளுக்குத் தரப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் சோனியா காந்தி.

2007-ல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக் கமிஷனும் ""தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் - நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ எதுவாக இருந்தாலும் - தானே தனது தொகுதியின் மேம்பாட்டுக்கான பணியைத் தீர்மானித்துத் தமது நேரடி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றுவது ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்பதன் அடிப்படையையே இந்தத் திட்டம் தகர்த்து விடுகிறது'' என்று கருத்துத் தெரிவித்தது.

இடதுசாரிகளையும், காஷ்மீரத்தைச் சேர்ந்த சிறுத்தைகள் கட்சியினரையும் தவிர, ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் எல்லோருமே, தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாகவோ, ரூ.10 கோடியாகவோ அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். கடந்த 14 ஆண்டுகளாக ஒதுக்கப்படும் இந்த மேம்பாட்டு நிதியால் உறுப்பினர்கள் வேண்டுமானால் மேம்பாடு அடைந்திருக்கலாம், ஆனால் அவர்களது தொகுதி மேம்பாடு அடைந்ததாகத் தெரியவில்லை. ஊழலில் ஊற்றுக் கண் என்று தெரிந்தும் இந்தத் திட்டம் தொடர்வது நல்லதல்ல!
நன்றி : தினமணி

லண்டனில் ஷாருக்கான் வாங்கிய ரூ.160 கோடி விலையுள்ள வீடு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் லண்டனில் 2 கோடி பவுண்ட் ( சுமார் 160 கோடி ரூபாய் ) விலையில் ஒரு வீடு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. லண்டனில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாழக்கூடிய பார்க் லேன் என்ற பகுதியில் 20 மில்லியன் பவுண்ட்ஸ்க்கு ( சுமார் ரூ.160 கோடி ) ஒரு அபார்ட்மென்ட் வீட்டை அவர் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.வேறு எந்த பாலிவுட் நடிகரும் இவ்வளவு விலையில் அங்கு வீடு வாங்கியதில்லை. இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஷாருக் கானுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது. அதிலிருந்து அவர், அவரது குடும்பத்தினருடன் அடிக்கடி லண்டன் வந்து அதிக நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவர் நீண்ட நாட்களாகவே அங்கு ஒரு வீடு வாங்க நினைத்து, தேடிக்கொண்டிருந்ததாகவும் இப்போது வாங்கி விட்டார் என்றும் ' தஆசியன்-நியூஸ்.கே.யூகே.' என்று வெப்சைட் செய்தி வெளியிட்டிருக்கிறது. இப்போது ' மை நேம் இஸ் கான் ' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷாருக் கான், அதற்காக லண்டன் வந்தபோது இந்த வீட்டை வாங்கியதாக சொல்லப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே ஐக்கிய அரபு குடியரசில் சொத்துக்கள் இருக்கின்றன.
நன்றி : தினமலர்


இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் எச் 1 பி விசாவுக்கு போட்டியில்லை

இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான இன்போசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், 2009-10ம் நிதியாண்டிற்கு இதுவரை குறைந்த அளவாக 405 எச் 1பி விசாக்களுக்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை உட்பட பல காரணங்களால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், டி.சி.எஸ்., விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் எச் 1பி விசாக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 2009-10ம் நிதியாண்டிற்காக இதுவரை 405 எச் 1பி விசாக்களுக்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் பாய் என்பவர் கூறுகையில், 'வெளிநாடுகளில் வேலை மற்றும் பணியாளர்களின் தேவை குறைந்துள்ளதால், இந்தாண்டு குறைவான எண்ணிக்கையிலேயே எச் 1பி விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளோம். முன்னதாக, 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை மொத்தமாக 8,700 எச் 1பி விசாக்கள் பெறப்பட்டன. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 8,200 ஆக குறைந்தது. கடந்த காலங்களை விட தற்போது வெளிநாடுகளில் உள்ள கிளைகளுக்கு குறைவான பணியாளர்களே தேவைப்படுகின்றனர்' என்றார். அமெரிக்காவில் எச் 1பி விசா மூலம் பணியாற்றும் பணியாளர்களின் ஊதியம் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக அந்நாட்டு அரசு கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த காரணத்தாலும், இந்தாண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விண்ணப் பித்துள்ள எச் 1பி விசாக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தினமலர்