Thursday, July 30, 2009

லிட்டருக்கு 80 கி.மீ., தரும் பஜாஜ் புதிய பைக் அறிமுகம்

மகாராஷ்டிரா, புனேயில் கடந்த 17ம் தேதி, 100சிசி திறனுள்ள பஜாஜ் டிஸ்கவர் டி.டி.எஸ்., - எஸ்.ஐ., பைக்கை, அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் ஆர்.சிதம்பரம் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர், ராகுல் பஜாஜ் கலந்து கொண்டார். ஒரு லிட்டருக்கு 80 கி.மீ., மைலேஜ் கொடுக்கும், நீண்ட தூர பைக் போன்றே, இந்த, புதிய 100சிசி டிஸ்கவர் டி.டி.எஸ்., - எஸ்.ஐ., பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக், நாட்டில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். அனைத்து சூழ்நிலைகளிலும் எளிதாக ஸ்டார்ட் செய்யும் வகையிலான ஆட்டோ சோக் வசதியும் இந்த புதிய டிஸ்கவர் பைக்கில் உள்ளது.
நன்றி : தினமலர்


இந்தியன் ஆயில் கார்பரேஷனின் நிகர லாபம் கடந்த வருடத்தை விட ஒன்பது மடங்கு அதிகம்

ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.3,682.83 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலாண்டில் பெற்றிருந்த நிகர லாபமான ரூ.415.13 கோடியை விட 9 மடங்கு அதிகம். ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.89,148.57 கோடியாக இருந்த அதன் மொத்த வருவாய் இந்த வருடத்தில் ரூ.60,683.97 கோடியாக குறைந்திருக்கிறது. பாம்பே பங்கு சந்தைக்கு அந்த நிறுவனம் அளித்த அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2009 மார்ச்சில் பொங்கைகான் ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன் தன்னுடன் இணைத்துக்கொண்டது. எனவே கடந்த நிதி ஆண்டுடன் இந்த ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது.
நன்றி : தினமலர்


தோல்வியை தோளில் போட்டு நடந்தால்தான்...

தமிழகத்தில் இடைத்தேர்தல்களைப் புறக்கணித்திருக்கும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா சொல்லும் நியாயங்களில், வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்ற ஒன்றைத் தவிர எதுவுமே ஏற்புடையதல்ல.

அதற்காக தேர்தலைப் புறக்கணிப்போம் என்று சொல்வது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக இல்லை என்று சொல்லாமல் "புறக்கணிக்க' நம்மால் முடியவில்லை.

பணபலமும், அதிகார பலமும் பெற்றிருக்கும் ஒரு ஆளும்கட்சி எப்படியாகிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, விதிமுறைகளை மீறும் என்பதுதான் உலக நடைமுறை. அதிமுக ஆளும்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும்கூட, பணபலம், அதிகார பலம் இருக்கவே செய்தன. "அம்மா'வின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற அச்சத்தில் அதிமுக அமைச்சர்கள் அன்றைய தினம் "வழியற்ற வழி'களைக் கையாண்ட சம்பவங்கள் இல்லாமலில்லை.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் சொல்லக்கூடிய ஒரே பதில்-"நாங்கள் இந்த அளவுக்கு மோசமாக விதிகளை மீறவில்லை. பணத்தை இறைக்கவில்லை' என்பதாக இருக்கலாம். ஆனால், உலகத்தில் எல்லாமும் ஒன்றையொன்று விஞ்சுவதாகத்தான் இருக்கும். இன்றைய ஸ்பெக்டரம் ஊழலை ஒப்பிட்டால் போஃபர்ஸ் ஊழல் ஒரு விஷயமே அல்லதான். அதற்காக, அது ஊழல் இல்லை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியுமா?

இப்போது ஜெயலலிதா முன்வைக்கும் மிக முக்கிய குற்றச்சாட்டு- வாக்குஇயந்திரங்களில் முறைகேடுக்கான வாய்ப்பு என்பதுதான்.

வாக்கு இயந்திரங்களைக் கையாள்பவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள். ஒரே நாளில் துணிச்சலாக அனைத்து அரசு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்த தன்னை (ஜெயலலிதாவை) வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள் என்பதையும், அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு எப்போதுமே சம்பளம், படி எல்லாவற்றையும் அள்ளித்தருபவர் தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்பதையும் கருதிப் பார்க்கும் ஜெயலலிதா, வாக்கு இயந்திரத்தில் முறைகேடு இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது. மேலும், கடைசி ஒரு மணிநேரத்தில் 30 சதவீத வாக்குப் பதிவுகள் என்பதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது அவர் சந்தேகம் கொள்வதும் நியாயம்தான்.

அதற்காக, ஒரு ஜனநாயக வாய்ப்பை, மிக முக்கியமான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் தவற விடுவதன் மூலம் ஆட்சியாளருக்கு எதிராக மக்களுக்குக் கிடைக்கும் ஒரேயொரு வாய்ப்பை இல்லாமல் செய்துவிடுகிறார். "ஆளும்கட்சியையே தேர்வு செய்து கொள்ளுங்கள்' என்று மறைமுகமாகச் சொல்வதைப் போலத்தான் அமையும்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், அவரது கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிமுக மட்டுமே. ஜெயலலிதா குறிப்பிடும் வாக்கு இயந்திர முறைகேடுகள் அனைத்தையும் மீறித்தான் அதிமுகவால் இந்த வெற்றியைப் பெற முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம், ஆளும்கட்சி மீதான வெறுப்பை வெளிப்படுத்த ஓர் இடமாக அதிமுகவை மக்கள் கருதுகிறார்கள் என்பதுதான். இதை அவர் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

இப்போது நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களிலும்கூட வேட்பாளரை நிறுத்தி, ""இவர்தான் எனது வேட்பாளர், ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தால் என்னால் செயல்பட முடியவில்லை. அவர்களைப் போல பணத்தை இறைக்க என்னால் முடியாது. உங்கள் வாக்குகளை எனக்கு அளித்தால் சரி. இல்லையானாலும் சரி'' என்று அமைதியாக போட்டியில் பங்குகொண்டிருந்திருக்கலாம். அதைவிட நல்லதொரு அரசியல் சத்யாகிரகம் வேறு எதுவாக இருக்க முடியும்?

அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால், கட்சிக்குள் தற்போது இருக்கும் தீப்பொறியை அணைந்துபோகச் செய்யும் ஆபத்து அதிகம். குறிப்பாக, அதிமுகவின் வாக்குவங்கியை உடைத்து, வெற்றியை தடுக்கும் தேமுதிக-வுக்கு ஜெயலலிதாவே ரத்தினக்கம்பளம் விரித்து வாழ்த்துக் கூறுவதற்கு இணையானது இந்த தேர்தல் புறக்கணிப்பு. கிராமத்தில் சொல்வார்கள், "சொந்த காசுல தனக்கே சூனியம் வச்சிக்கிட்டாப் போல' என்று. அதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

வாக்கு இயந்திரத்தில் அதிமுகவுக்கு குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கை சேர்ந்த பிறகு, இரட்டை இலையை அழுத்தினாலும் வேறு சின்னங்களில் வாக்குப் போய்ச் சேரும் மென்பொருள் (சாப்ட்வேர்) வாக்கு இயந்திரத்தில் இருக்கிறது என்று ஜெயலலிதா சந்தேகப்பட்டால், அதை அவர் நிரூபிக்க வேண்டும். சிறந்த கணினி நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளிப்படையான செயல்விளக்கத்தை, ஒரு ஒத்திகை வாக்குப்பதிவை, நாடே காணும்படி செய்துகாட்டி, வாக்கு இயந்திரத்தின் மென்பொருளை மாற்றி அமைக்க முடியும் என்று நிரூபித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து வெறுமனே வாக்கு இயந்திரத்தில் முறைகேடு என்று பேசிக்கொண்டிருப்பதும், தேர்தலைப் புறக்கணிப்பதும் அர்த்தமற்ற செயல்கள்.

ஆளும்கட்சி எதுவாக இருந்தாலும் பணபலம், அதிகார பலம், விதிகளை மீறுதல் என்று எல்லாமும் இருக்கவே செய்யும். ஒரு எதிர்க்கட்சி இதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, தேர்தலைப் புறக்கணிக்கக் கூடாது.

அரசியல் கட்சித் தலைமை என்றால் தோல்வியைத் தோளில் போட்டு நடந்தால்தான், நாளை நமதே.

இல்லையானால், இன்றைய பொழுதும் இல்லையென்றாகும்!

கட்டுரையாளர் : இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

ஏறியது பங்கு சந்தை

நிதி, டெக்னாலஜி, எஃப் எம் ஜி சி, சிமென்ட், பவர், மெட்டல் மற்றும் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு மதிப்பு உயர்ந்திருந்ததால் இன்று பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்திருக்கிறது. நிப்டி மீண்டும் 4,500 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிந்திருக்கிறது. இருந்தாலும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பெல், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஜின்டால் ஸ்டீல், சன் பார்மா, டாடா பவர், ஏபிபி, நால்கோ, மற்றும் சுஸ்லான் எனர்ஜி நிறுவன பங்கு மதிப்பு குறைந்திருந்ததால் சந்தை வளர்ச்சி தடைபட்டது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம், எதிர்பார்த்ததையும் மீறி 42 சதவீதம் அதிகமாக வந்திருப்பதால் அதன் பங்கு மதிப்பு இன்று 4 சதவீதம் உயர்ந்திருந்தது. அதேபோல் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி பேங்க் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்திருந்தது. கோடக் மகிந்திரா மற்றும் பேங்க் ஆப் பரோடா பங்கு மதிப்பு 0.7 சதவீதம் உயர்ந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 214.50 புள்ளிகள் ( 1.41 சதவீதம் ) உயர்ந்து 15,387.96 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 57.95 புள்ளிகள் ( 1.28 சதவீதம் ) உயர்ந்து 4,571.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் வேலைக்கு ஆட்களை எடுக்க துவங்குவோம் : இன்போசிஸ் சி.இ.ஓ.

பொருளாதார மந்த நிலை காரணமாக புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருந்த இன்போசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்., அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் ஆட்களை எடுக்க துவங்கி விடும் என்று அதன் சி.இ.ஓ.,மற்றும் மேலாண் இயக்குனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த சி.ஐ.ஐ., கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, இந்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் இருந்து பொருளாதார நிலை மேம்பட்டு விடும் என்றும், எனவே மீண்டும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் வேலை நாடு முழுவதும் துவங்கிவிடும் என்றும் சொன்னார். பொருளாதார மந்த நிலையால், இன்போசிஸ் உள்பட எல்லா ஐ.டி.,நிறுவனங்களுமே கடும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தன என்றார் அவர்.
நன்றி : தினமலர்


தங்கம் விலை அதிரடி சரிவு ஒரே நாளில் ரூ.200 குறைவு

ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்தது. நேற்று சவரன் 10,960 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் விலை நிலையில்லாமல் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆபரணத் தங்கம், சவரன் 11 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விற்றது. நேற்று காலை நிலவரப்படி கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 1,376 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து எட்டு ரூபாய்க்கும் விற்றது. மாலையில், கிராமுக்கு மேலும் ஆறு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 1,370 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. அதாவது நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்தது.
நன்றி : தினமலர்