Friday, November 21, 2008

ஏழு நாள் சரிவிக்குப்பின் இன்று ஏறியது பங்கு சந்தை

தொடர்ந்து ஏழு வர்த்தக நாட்களாக சரிந்திருந்த பங்கு சந்தையில் இன்று ஏற்ற நிலை காணப்பட்டது. ஷார்ட் கவரிங் வர்த்தகத்தாலும், உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகவும் இந்திய பங்கு சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கடைசி நேர வர்த்தகத்தில் நிப்டி 2,700 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தாலும் அது அதிக நேரத்திற்கு நிலைக்கவில்லை. பவர், ஆயில் அண்ட் கேஸ், கேப்பிடல் குட்ஸ், பேங்கிங், டெலிகாம், மற்றும் டெக்னாலஜி பங்குகள் இன்று பெருமளவில் வாங்கப்பட்டன. இன்றைய வர்த்தகத்தில் 8,988.03 புள்ளிகள் வரை வந்திருந்த சென்செக்ஸ், பின்னர் வர்த்தக முடிவில் 464.20 புள்ளிகள் ( 5.49 சதவீதம் ) உயர்ந்து 8,915.21 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2,718.60 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் முடிவில் 140.30 புள்ளிகள் ( 5.50 சதவீதம் ) உயர்ந்து 2,693.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்ஃரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி., மாருதி சுசுகி, ஹெச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., நால்கோ, நிறுவன பங்குகள் 8 - 14 சதவீதம் உயர்ந்திருந்தன. இருந்தாலும் டி.எல்.எப்., யூனிடெக், ஏ.சி.சி., டாடா கம்யூனிகேஷன், மற்றும் டாடா பவர் நிறுவன பங்குகள் சரிந்திருந்தன. இன்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் வளர்ச்சி அடைந்திருந்தன. ஆசிய சந்தைகளை பொருத்தவரை, ஷாங்கை மற்றும் ஜகர்த்தா சந்தைகள் மட்டும் வீழ்ச்சி அடைந்திருந்தன. மற்ற சந்தைகளில் வளர்ச்சிதான்.
நன்றி : தினமலர்


சிங்கப்பூர் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக அறிவிப்பு

ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வந்த சிங்கப்பூர், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி அடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறது. இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சிக்கலில் சிக்கி, வீழ்ச்சி அடைந்திருக்கும் முதல் ஆசிய நாடு சிங்கப்பூர்தான். சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நாட்டின் ஜூலை - செப்டம்பர் மூன்றாவது காலாண்டு வளர்ச்சி, 6.8 சதவீத நெகட்டிவ் வளர்ச்சி என்று சொல்லப்பட்டிருக்கிறது. 6.3 சதவீத நெகட்டிவ் வளர்ச்சிதான் இருக்கும் என்று கணித்திருந்தார்கள். ஆனால் அதற்கும் மேலாக 6.8 சதவீத நெகட்டிவ் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் ஒரு நாடு நெகட்டிவ் வளர்ச்சி அடைந்து விட்டால் அந்நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லப்படும். இப்போது ஆசியாவிலேயே முதல் நாடாக சிங்கப்பூர், தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக நெகட்டிவ் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஹாங்காங் மற்றும் ஜப்பானும்கூட நெகட்டிவ் வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையல், அடுத்த ஆண்டிலும் ( 2009 ) அந்நாட்டின் வளர்ச்சி ஒரு சதவீத நெகட்டிவ் வளர்ச்சியாகத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஏற்றுமதியை மட்டுமே நம்பி சிங்கப்பூரின் வளர்ச்சி இருக்கிறது. இப்போது உலகெங்கும் நிலவும் பொருளாதார சீர்குழைவு காரணமாக சிங்கப்பூரின் பொருட்களுக்கு உலக நாடுகளிடையே டிமாண்ட் குறைந்து விட்டது. இதன் காரணமாக ஏற்றுமதி குறைந்து போய், ஒட்டு மொத்த வளர்ச்சியும் நெகட்டிவ் நிலைக்கு போய்விட்டது. வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு தவிர, பொதுவாக எல்லா நாடுகளிலுமே வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதால், வர்த்தகத்திற்காக சிங்கப்பூரின் டிரான்ஸ்போர்ட் மற்றும் அதன் சேமிப்பு கிட்டங்கியை பயன்படுத்துவதும் குறைந்து, அதனாலும் வளர்ச்சி பாதித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


10 சதவீத ஊழியர்களை குறைக்கிறது அசோசியேட்டட் பிரஸ்

அமெரிக்க செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் ( ஏ.பி.) அதன் ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை அடுத்த வருடத்தில் குறைக்க முடிவு செய்திருக்கிறது. நேற்று நியுயார்க்கில் நடந்த ஒரு கூட்டத்தில் ஏ.பி.,யின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரி டாம் கர்லி இதனை தெரிவித்தார். தற்போது அவர்களுக்கு, உலகம் முழுவதிலு ம் 3,000 செய்திப்பிரிவு ஊழியர்கள் உள்பட 4,100 ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் 10 சதவீதத்தை குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அப்படியானால் சுமார் 400 பேர் வேலை இழப்பர் என்று தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் பிரபல செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் சும் தப்பவில்லை என்கிறார்கள். அமெரிக்காவில் வெளியாகும் சுமார் 1,500 பத்திரிக்கைகள் ஏ.பி.,யின் செய்தி மற்றும் போட்டோக்களை சந்தா செலுத்தி வாங்கி பயன்படுத்துகின்றன. இப்போது ஏ.பி.,யின் சந்தா தொகை அதிகரிக்கப்படுகிறது என்ற செய்தியும் அமெரிக்க பத்திரிக்கைகளை கலக்கமடைய செய்திருக்கிறது. உலகின் மூன்று பிரபல செய்தி நிறுவனங்களில் ஒன்றாக அசோசியேட்டட் பிரஸ் இருந்து வருகிறது. மற்றவை இங்கிலாந்தின் ராய்ட்டர் மற்றும் பிரான்சின் ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ்.
நன்றி : தினமலர்


பெட்ரோல் விலை குறைய இன்னமும் ஒரு மாதம்...

சமையல் காஸ் மற்றும் கெரசின் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் திட்டம் இல்லையென, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 147 டாலராக அதிகரித்த போது, கடந்த ஜூன் மாதத்தில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும் உயர்த்தப்பட்டன. ஆனால், அதன் பின், கச்சா எண்ணெய் விலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 50 டாலராகக் குறைந்துள்ளது.இதனால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பெட்ரோலியத் துறை செயலர் ஆர்.எஸ்.பாண்டே கூறுகையில், 'பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையில் லாபம் பெற்றாலும், சமையல் காஸ் மற்றும் கெரசின் விற்பனையில், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. 'இந்த நிலை தொடரும் வரை, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படாது. விலைகளைக் குறைப்பது குறித்த திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை' என்றார்.ஆனால், நமது அரசு வாங்கும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 48 டாலர் என்று தற்போது அரசால் கணக்கிடப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான எக்சைஸ் வரி வரவு கடந்த மாதத்தில் அரசுக்கு குறைந்திருக்கிறது. ஏற்கனவே விலை அதிகரிப்பால் எக்சைஸ் வரிக் குறைப்பை மேற்கொண்ட மத்திய அரசுக்கு இழப்பு 6000 கோடி ரூபாயாகும். ஆகவே, தற்போது பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு எக்சைஸ் வரி ஒரு ரூபாய் விதிப்பது, அதற்குப் பின் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைக்கலாம் என்ற திட்டம் அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.அதே சமயம், தற்போது ஆறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடப்பதால், டிசம்பர் மாதக் கடைசி வரை இந்த விலைக் குறைப்பை அமல் படுத்த வேண்டாம். அதுவரை எண்ணெய் கம்பெனிகள் லாபம் அடையட்டும் என்ற கருத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


நிதி நெருக்கடியால் டி.எல்.எப்., திட்டங்கள் முடக்கம்

நிதி நெருக்கடியில், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் டி.எல்.எப்., சிக்கித் தவிக்கிறது; சில ஊழியர்களை நீக்கிய இது, தன் கட்டுமான திட்டங்களில், சிலவற்றையும் முடக்கி வைத்துள்ளது.டி.எல்.எப்., நிறுவன தலைவர் சிங் கூறுகையில்,'நிதி நெருக்கடி காரணமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. கட்டிய கட்டடங்களை வாங்கவும் ஆளில்லாததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சில ஊழியர்களை நீக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது' என்றார்.'வீட்டுக்கடன் மீதான வட்டிவீதம் பலமடங்கு உயர்ந்ததும் இதற்கு காரணம். அதனால் தான், பலரும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டுக்கடன் மீதான வட்டிவீதம் 7க்கு மேல் போகக்
கூடாது' என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.'டி.எல்.எப்., நிறுவனம் போட்டுள்ள சில திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. நிலைமை மாறினால், மீண்டும் இந்த திட்டங்களை ஆரம்பிக்க எண்ணியுள்ளது. 'கட்டுமான திட்டங்களில் பணம் முடக்கம் போன்றவை தொடர்ந்தால், பல பில்டர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மத்திய அரசு வட்டியை குறைக்க நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுமான திட்டங்கள் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம்' என்று
ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


மீண்டும் வெளிவந்தது அமிர்தாஞ்சன் பெய்ன் பாம்

பாரம்பரியமிக்க வலி நிவாரனியான அமிர்தாஞ்சன் பெய்ன் பாம் நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது. சந்தையில் அதன் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அதன் பேங்கிங் மற்றப்பட்டிருப்பதாக அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட்டின் மேலாண் இயக்குனர் சாம்பு பிரசாத் தெரிவித்தார். மேலும் இதன் விற்பனையை அதிகரிக்க புதுவிதமான டி.வி. விளம்பரம் வெளியிடவும் அது திட்டமிட்டிருக்கிறது. அதற்காக ரூ.6 கோடியை அமிர்தாஞ்சன் செலவு செய்கிறது. தற்போது அமிர்தாஞ்சன் நிறுவனம் ஆறு வகையான மருந்துக்களை வெளியிடுகிறது. அதன் பெய்ன் பாம் மூன்று மாடல்களில் ( பெய்ன் பாம், ஸ்டிராங் பாம், மகா ஸ்டிராங் பாம் ) வெளிவருகிறது. இது தவிர டிராகன் லிக்விட், ஜாயின்ட் ஏக் கிரீம் மற்றும் மஸ்குலர் பெய்ன் ஸ்ப்ரே யையும் வெளியிடப்படுகிறது. இதில் பெய்ன் பாம் மற்றும் டிராகான் லிக்விட் ஆகியவை இந்தியா முழுவதும் கிடைத்தாலும், ஜாயின்ட் ஏக் கிரீம் மற்றும் மஸ்குலர் பெய்ன் ஸ்ப்ரே ஆகியவை குறிப்பிட்ட சில தமிழக நகரங்களிலும் ஒரிசாவிலும் மட்டுமே கிடைக்கும். விரைவில் இவைகள் மேற்கு வங்காளத்திலும் விற்பனை செய்யப்படும் என்று அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் மனோஜ் நாயர் தெரிவித்தார். இந்திய பெய்ன் பாம் சந்தையில் அமிர்தாஞ்சனுக்கு 25 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. அதில் பாதிக்கு மேல் தென் இந்தியாவில் இருக்கிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை 50 டாலரை விடவும் குறைந்தது

அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடுமோ என்று அச்சப்பட்டுக்கொண்டிருப்பதால், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை ( டிமாண்ட் ) வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வருகிறது. நேற்று அது 50 டாலரை விடவும் குறைவான விலைக்கு சென்று விட்டது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 49.62 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 48.90 டாலராக இருந்தது. ஜூலை மாதத்தில் பேரலுக்கு 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது அதின் மூன்றில் ஒரு பங்கு விலையிலேயே கிடைக்கிறது. இந்நிலையில் உலக அளவிலான மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40 சதவீதத்தை வைத்திருக்கும் ஓபக் நாடுகள், வரும் 29ம் தேதி கூடி, எண்ணெய் விலை குறைந்து வருவது குறித்து ஆராய இருக்கிறது
நன்றி : தினமலர்


அக்வாஃபினா பாட்டிலில் பனிபடர்ந்த மலை படத்தை போடக்கூடாது : டில்லி ஹைகோர்ட் உத்தரவு

பெப்சி கம்பெனி வெளியிடும் அக்வாஃபினா மினரல் வாட்டர் பாட்டிலின் லேபிளில், இனிமேல் பனிபடர்ந்த மலை படத்தை போடக்கூடாது என்று பெப்சி நிறுவனத்திற்கு டில்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஆறு மாதத்தில் இந்த படத்தை எடுத்து விட வேண்டும் என்று சொன்ன ஹைகோர்ட் பெஞ்ச், அந்த லேபிளில் பிரின்ட் செய்யப்படும் ' பி.ஐ.எஸ் ஸ்டாண்டர்ட் படி' என்ற வாசகத்தையும் ' பியூரிட்டி கியாரன்டி ' என்ற வாசகத்தையும் எடுத்துவிட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. நீதிபதிகள் முகுள் முத்கள் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய இரு நபர் பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பனிபடர்ந்த மலையை பார்த்ததும், இந்த கம்பெனி, மலை மீதிருக்கும் அதன் தொழிற்சாலையில் இருந்துதான் இந்த மினரல் வாட்டர் பாட்டிலை தயாரிக்கிறது என்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறது என்று 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்' ( பி.ஐ.எஸ். ), பெப்சி மீது தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. ஏற்கனனே இந்த வழக்கில் ஒரு நபர் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் அந்த படத்தை எடுக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தது. அதை எதிர்த்து பி.ஐ.எஸ்., தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் இரு நபர் பெஞ்ச், படத்தையும் குறிப்பிட்ட வாசகத்தையும் எடுத்துவிட வேண்டும் என்று இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
நன்றி : தினமலர்