Thursday, March 5, 2009

விமானங்களை குத்ததைக்கு கொடுக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் முடிவு

வீடுகள், கடைகளை குத்தகைக்கு கொடுப்பது போலவே, தங்களுக்கு தேவையில்லாமல் இருக்கும் விமானங்களையும் குத்தகைக்கு கொடுக்கும் வழக்கம் விமான கம்பெனிகளிடம் இருக்கிறது. விமானிகள், பணிப்பெண்கள், டெக்னிஷியன்கள், கிரவுண்ட் ஊழியர்கள், ரூட் லைசன்ஸ் போன்வைகளுடன் குத்தகைக்கு கொடுப்பதை ' வெட் லீஸ் ' என்கிறார்கள். வெறுமனே விமானத்தை மட்டும் குத்ததைக்கு கொடுப்பதை ' டிரை லீஸ் ' என்கிறார்கள்.இந்தியாவின் தனியார் விமான கம்பெனிகளில் ஒன்றான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸூம் அவர்களிடம் தேவையில்லாமல் இருக்கும் ஏர்பஸ் விமானங்களை குத்ததைக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறது. இதற்காக அது, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த 'அரிக் ஏர் ' நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நாங்கள் எங்களிடம் தேவையில்லாமல் இருக்கும் இரு ஏர்பஸ் 330 விமானங்களை குத்ததைக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். அதற்காக நைஜீரியா விமான கம்பெனியாஜன ' அரிக் ஏர் ' நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு ' தங்க மயில் ' விருது

உலகின் நான்காவது மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல், கோல்டன் பீகாக் விருது பெற்றுள்ளது. சமுதாய பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் நிறுவனம் என்ற தகுதி அடிப்படையில், டாடா ஸ்டீலுக்கு 2009ம் வருடத்திற்கான ' கோல்டன் பீகாக் ' விருது வழங்கப்படுகிறது. முன்னாள ஸ்வீடன் பிரதமர் ஓலா உல்ஸ்டன், முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பகவதி ஆகியோரை துணை தலைவர்களாக கொண்ட ' கோல்டன் பீகாக் ' நீதிபதிகள் குழு, டாடா ஸ்டீலை இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறது. போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள விலாமவுரா நகரில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. டாடா ஸ்டீல் சார்பாக போர்ச்சுக்கல்லில் இருக்கும் கோரஸ் இன்டர்நேஷனல் நிர்வாகி கிலாடியா ஸ்டீவ்ஸ் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
நன்றி : தினமலர்


பிப்ரவரியிலும் ஏற்றுமதி, இறக்குமதி குறைந்திருக்கிறது

பிப்ரவரி மாதத்திலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது. பிப்ரவரியிலும் அது, 13.7 சதவீதம் குறைந்திருக்கிறது. அதே போல இறக்குமதியும் 18.2 சதவீதம் குறைந்திருக்கிறது.ஜனவரி மாதத்தில்தான் முதல் முறையாக ஏற்றுமதியும் இறக்குமதியும் ஒரே நேரத்தில் குறைந்திருந்தன. அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதத்திலும் ஏற்றுமதி 13.7 சதவீதமும், இறக்குமதி 18.2 சதவீதமும் குறைந்திருப்பதாக வர்த்தக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 13.04 பில்லியன் டாலருக்கு நடந்திருக்கிறது என்றும், இறக்குமதி 17.02 பில்லியன் டாலருக்கு நடந்திருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே 2008 பிப்ரவரியில், ஏற்றுமதி 43.6 சதவீதமும், இறக்குமதி 47 சதவீதமும் உயர்ந்திருந்தது. இதற்கு முன் கடந்த 2001 ஜூலையில் இருந்து டிசம்பர் வரை தொடர்ந்து ஆறு மாதங்கள் ஏற்றுமதி குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்


சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்குவதில் தீவிரம் காட்டும் ஐ.பி.எம்

சுமார் ரூ.7,800 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டு,வழக்கில் சிக்கி சீரழிந்து போயிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க பல நிறுவனங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வருகின்றன. இப்போது அமெரிக்காவின் பிரபல ஐ.டி.நிறுவனமான ஐ.பி.எம்., இதில் முன்னணியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பெரும்பான்மை பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து அது, மத்திய அரசு நியமித்திருக்கும் சத்யம் போர்டில் பேசியிருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வக்கீல்களை ஐ.பி.எம்.,வரவழைத்து ஐதராபாத்துக்கு அனுப்பியிருக்கிறது. அவர்கள் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வர்த்தக அளவு, வருமானம், இதை வாங்குவதால் சந்திக்க வேண்டிய சிரமங்கள் போன்றவற்றை ஆராய்ந்து, எவ்வளவு தொகைக்கு இதனை வாங்கலாம் என்று ஐ.பி.எம்.,க்கு ஆலோசனை வழங்குவார்கள். ஏற்கனவே சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலரிடம் ஐ.பி.எம்., நிறுவன அதிகாரிகள் இது குறித்து கலந்தாலோசித்ததாகவும் தெரிகிறது. ஐ.பி.எம்., நிறுவனத்தை போலவே, எல் அண்ட் டி ( இதற்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸில் 12 சதவீத பங்குகள் இருக்கின்றன ), பி.கே.மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் குரூப் ஆகிய நிறுவனங்களும் சத்யத்தை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
நன்றி : தினமலர்


மூன்று ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றது பங்குச் சந்தை

சந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு சென்று விட்டது. மூன்று ஆண்டுகளுக்குள் சந்தைக்கு வந்தவர்கள் தான் அதிகம். மழைக்காக ஒதுங்கியவர்கள் எல்லாம், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கதை தான் நடந்து கொண்டிருக்கிறது. இது தான் கீழே, இனிமேல் மேலே தான் செல்லும் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத அளவிற்கு சந்தை தடுமாறுகிறது. திங்களும், நேற்று முன்தினமும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்றுக் கொண்டே இருந்ததால் சந்தை கீழேயே இருந்தது. நேற்று முன்தினம் மட்டும் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றனர். மும்பை பங்குச் சந்தை, திங்களன்று 285 புள்ளிகளும், நேற்று முன்தினம் 180 புள்ளிகளும் குறைந்து முடிவடைந்தது. இரண்டு நாட்களில் 465 புள்ளிகள் குறைந்தது அதிகம் தான். இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பணத்தை எடுத்துச் சென்றது ஏன்?: உற்பத்தி சதவீதம் குறைந்து வருவதாலும், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்று தெரியாததாலும் தற்போது போய் பின் வருவோம் என்ற நினைப்பில் பலர் தங்களது முதலீடுகளை எடுத்துச் செல்கின்றனர். அற்ற குளத்து அருநீர் பறவை போல் தான். நேற்று துவக்கம் கீழேயே இருந்தது. சீனாவின் சந்தைகளில் முன்னேற்றம் இருந்ததால் நஷ்டங்களை சரிக்கட்டி சிறிது லாபத்திலும் முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 19 புள்ளிகள் கூடி 8,446 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 22 புள்ளிகள் கூடி 2,645 புள்ளிகளுடனும் முடிந்தது. பொருளாதார பிரச்னைகள், உலகம் முழுவதும் உள்ள கம்பெனிகளுக்கு நல்ல பாடங்களை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. அதாவது, கையில் பணம் இருந்த கம்பெனிகள் வேறு கம்பெனிகளை என்ன விலை கொடுத்தாவது வாங்க வேண்டும் என்ற நினைப்பில் வாங்கிக் குவித்தன.
தற்போது பணத் தட்டுப்பாட்டில் அனைத்தும் தவிக்கின்றன. அது தவறு என்று தற்போது புரிந்திருக்கும்.
இந்நிலையிலும் சில பங்குகளின் முதலீடுகள் லாபங்களை வாரிக் கொடுத்துள்ளன. உதாரணமாக, ஜிந்தால் பாலி பிலிம், பிர்லா கார்ப், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர், ஆரக்கிள் பைனான்சியல், ரேணுகா சுகர், ஐ.வி.ஆர்.சி.எல்., இன்பிரா, ஆல்கார்கோ போன்றவை.
மியூச்சுவல் பண்டுகளின் வளர்ச்சி: மியூச்சுவல் பண்டுகள் கடந்த பிப்ரவரி மாதம் 8.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. அதாவது, பண்டுகளின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் கோடிகளை தாண்டி விட்டது. வங்கிகளில் லிக்யூடிட்டி சரியானதால் அவர்களிடம் இருக் கும் அதிகப்படியான பணத்தை மியூச்சுவல் பண்டுகளில் போட்டு வருவதால் இந்த வளர்ச்சி எனலாம். அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. வரும் 15ம் தேதி அதற்கு கடைசி நாள். எந்த கம்பெனி எவ்வளவு கட்டியிருக்கிறது என்ற தகவல்கள் வெளிவரும் போது அடுத்த காலாண்டுகள் எப்படி இருக்கும் என்று தெரிய வரலாம். மறுபடியும் யூகங்களிலேயே வாழ வேண்டியுள்ளது.
52 ரூபாயை தாண்டிய டாலர் மதிப்பு: டாலர்களை மாற்றாமல் வைத்திருக்கின்றனர். இவையெல்லாம் சேர்ந்து டாலர் ரூபாய் மதிப்பு 52யையும் தாண்டி அனைவரையும் தங்கத்தை விட மலைக்க வைத்துவிட்டது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: குழப்பமாகவே இருக்கிறது. கணிக்கமுடியாத நாட்கள்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்

வீடு, கார் கடன் மீதான வட்டி குறையும்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

வங்கிகளுக்கான ரெபோ வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, வீடு மற்றும் கார் வாங்குவதற்கான கடனுக்கான வட்டி குறையும். சர்வதேசப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுவரை மொத்தம் மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சீர்குலைவு இந்தியாவையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பயமுறுத்திக் கொண்டிருந்த பணவீக்கம், பல்வேறு சலுகை அறிவிப்புகள் காரணமாக ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கிகளில் பணப்புழக்கத்தில் தொய்வு ஏற்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை தற்போது அதலபாதாளத்தில் இருக்கிறது. பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் வந்துவிட்டதால் ரிசர்வ் வங்கி மேலும் சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கு (ரெபோ) 5.5 சதவீதம் வட்டி விதிக்கப்படடது. இதில் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான (ரிசர்வ் ரெபோ) வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் குறைக்கப்பட்டு 3.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி குறைய உள்ளது. வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டிகள் வெகுவாகக் குறையும். சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் ஐந்தாவது சலுகை இது. வர்த்தகத்துறையில் நம்பிக்கையிழப்பு, மூலதன முதலீட்டில் தொய்வு ஆகிய நிலையைச் சமாளிக்க இந்த அறிவிப்பு உதவும் என்று கருதப்படுகிறது. மேலும், ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைகள் மூலம் 3.88 லட்சம் கோடி பணப்புழக்கம் கிடைக்கும். உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகை அமையும் என வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளன. பொதுத்துறை வங்கியான கனரா வங்கி நேற்று வீடு, வாகனக்கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


ஏர் இந்தியா கோடை கால அட்டவணை அறிவிப்பு

சென்னையில் இருந்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கான பயண நேரத்தை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை : தினசரி சென்னையில் இருந்து லண்டன், பிராங்பர்ட், நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு செல்லும் வகையில் இணைப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நகரங்களுக்கான பயண நேரம் குறித்த கோடை கால அட்டவணையை தற்போது ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து செல்லும் பயணிகள், மும்பையில் இணைப்பு விமானத்திற்காக முன், நான்கு முதல் ஐந்து மணி நேரம் காத்திருந்தனர். தற்போது செய்துள்ள ஏற்பாட்டின் படி, காத்திருக்கும் நேரம் ஒரு மணி 30 நிமிடங்கள் முதல் மூன்று மணி என்ற அளவில் குறையும். சென்னை - லண்டன் பயண நேரம் 16 மணி 30 நிமிடம் என்பது, தற்போது 14 மணி 30 நிமிடமாக குறையும். சென்னை - நியூயார்க் பயண நேரம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் குறையும். சென்னை - சிகாகோ பயண நேரம் மூன்று மணி 50 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் பயணிக்கு சென்னையிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டு சென்றடையும் நகரத்திற்கு அவர்களின் பேக்கேஜ்கள் சென்றடையும் வசதியும் உள்ளது. வரும் 29ம் தேதி முதல் கோடை கால அட்டவணை திட்டம் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.