Saturday, October 18, 2008

இந்திய பங்கு சந்தையின் எழுச்சியும் வீழ்ச்சியும் அன்னிய முதலீட்டாளர் கையில்


இந்திய பங்கு சந்தையில் ஒரு காலத்தில் 20 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டிச்சென்ற சென்செக்ஸ், இப்போது 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போய்விட்டது. 10,000 புள்ளிகளை ஒட்டியே இருந்த சென்செக்ஸ் 20,582 புள்ளிகளை எட்டுவதற்கு 23 மாதங்கள் வரை தேவைப்பட்டிருந்த நிலையில், அது மீண்டும் 10,000 புள்ளிகளுக்கும் கீழே போய் 9,975 புள்ளிகளாக ஆனதற்கு 9 மாதங்கள் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கிறது. சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்ததற்கும், மீண்டும் அது 10 ஆயிரம் புள்ளிகளாக குறைந்ததற்கும் பெரும் காரணமாக இருந்தது எஃப்.ஐ.ஐ. என்று சொல்லப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்தான். பிப்ரவரி 7,2006 அன்று 10,082 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் ஜனவரி 10,2008 அன்று 20,582 புள்ளிகளாக உயர்ந்த போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,00,951 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். இதன் காரணமாக அந்த காலகட்டத்தில் இந்தியாவின் பணபுழக்கம் நல்லவிதமாக இருந்தது. சென்செக்ஸ் 20,582 புள்ளிகளில் இருந்து 9,975 புள்ளிகளாக இறங்கியபோது, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் இருந்து ரூ.47,299 கோடியை எடுத்திருந்தார்கள். இது இந்தியாவின் பணப்புழக்கத்தை வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது. அதாவது சென்செக்ஸ் உயர்ந்து கொண்டிருந்த போது, ஒவ்வொரு புள்ளி உயர்வதற்கும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதற்காக ரூ.9.61 கோடியை செலவு செய்திருந்தனர். ஆனால் சென்செக்ஸ் இறங்கிக் கொண்டிருந்தபோது, ஒவ்வொரு புள்ளி இறங்கும்போதும் அவர்கள் ரூ.4.46 கோடியை எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் இருந்த போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்களில் முதலீடு பங்கு சந்தையில் ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. அது இப்போது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருக்கிறது. ரூ.8 லட்சம் கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே திரும்ப எடுத்திருந்தாலும் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 50 சதவீதம் குறைந்து போனது.

நன்றி : தினமலர்