கடந்த 30 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதை மெய்யாக்கிவிட கேரள மாநில அரசியல்வாதிகள் முயன்று வருகிறார்கள். பெரியாறு அணைப் பிரச்னையில் இந்தத் தந்திரத்தைத்தான் அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியாக இருந்தாலும், இடதுசாரிக் கூட்டணியாக இருந்தாலும் பெரியாறு அணைப் பிரச்னையிலும், மேற்கே பாய்ந்தோடும் ஆறுகளின் விஷயத்திலும் மிகை நீரை அரபிக்கடலுக்கு விட்டாலும் விடுவோமே தவிர, தமிழகத்திற்குத் தரமாட்டோம் என்பதில் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.
1963-ம் ஆண்டிலிருந்து திரும்பத் திரும்ப பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் இதன் விளைவாக அணை உடையுமானால் பல்லாயிரக்கணக்கான மலையாளிகள் உயிரிழப்பார்கள் என முற்றிலும் பொய்யான கூக்குரலை கேரளம் எழுப்பி வருகிறது.
அதே ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், தமிழக - கேரள அரசுகளின் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை இந்திய அரசு அனுப்பியது. இந்தக் குழு அணையைப் பார்வையிட்டு அணை நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்தது. 1978, 1979-ம் ஆண்டுகளில் மத்திய பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் அணையை மீண்டும் பரிசீலனை செய்து நல்ல நிலைமையில் இருப்பதாக அறிவித்தனர்.
எனினும் கேரளத்தின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையைப் பலப்படுத்த சில யோசனைகளைக் கூறினர். 20 ஆண்டு காலத்திற்கு மேலாக கேரள அரசின் முட்டுக்கட்டைகளைத் தாண்டி ரூ. 27 கோடி செலவில் தமிழக அரசு இந்த அணையைப் பலப்படுத்தியது. மத்திய நீர் வள ஆணையம் கூறியபடி அனைத்து வேலைகளையும் தமிழக அரசு செய்து முடித்தது. இந்த வேலைகள் முடியும் காலம் வரை அணையின் நீர்மட்டம் 136 அடிக்குக் குறைக்கப்பட்டது. இந்த வேலைகள் முடிந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொள்ள கேரளம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. இதுதான் பெரியாறு அணைப் பிரச்னையின் அடிப்படை விவாதம்.
தமிழ்நாட்டில் பெரியாறு நீரினால் பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 2 லட்சம் ஏக்கராகும். அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டதன் விளைவாகத் தரிசாக மாறிய நிலப்பரப்பு 38,000 ஏக்கராகும். இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86,000 ஏக்கராகும். ஆற்று நீரை இழந்து ஆழ்குழாய்க் கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53,000 ஏக்கராகும். இதன் விளைவாக ஆண்டுதோறும் விவசாய உற்பத்தி இழப்பு ரூ. 55.80 கோடி. ஆண்டுக்கு மின்னுற்பத்தி இழப்பு ரூ. 75 கோடி. 1980-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை 29 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டிற்கு மொத்த இழப்பு ரூ. 3793.20 கோடி.
மத்திய நீர் வள ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் மதித்து தமிழக அரசு நிறைவேற்றியபோதிலும் கேரள அரசு அப்பரிந்துரைகளை மதிக்கவில்லை. அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு அனுமதிக்கவுமில்லை. இதற்கெதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதுதான் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம். பாதிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளின் சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தன. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாதென கேரள அணைப் பாதுகாப்புச் சங்கங்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தன. எனவே அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கேரள அரசும் தமிழக அரசும் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மத்திய அரசு 10 உறுப்பினர்கள் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவை நியமித்தது. இக்குழுவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அனுபவமும் திறமையும் மிக்க பொறியியல் வல்லுநர்கள் இடம்பெற்றனர். மேலும் மத்திய அரசு மத்திய மண்வள ஆய்வுக்குழு வல்லுநர்களை அனுப்பி அணையின் கட்டுமானப் பொருள்களின் மாதிரிகளை எடுத்துச் சோதனைக்கூடங்களில் சோதனை செய்து அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அளித்தது.
அணை பலவீனமாக இருக்கிறது. அது இடிந்தால் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரபிக்கடலில் பிணமாக மிதப்பார்கள். நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் பெரியாறு அணை அமைந்திருக்கிறது. எனவே இந்த நிலையில் அணை இருப்பது ஆபத்தானது என்பது போன்ற கேரளம் கூறிய 12 காரணங்களையும் ஆராய்வதற்காக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினரும் கேரளம் கூறிய காரணங்கள் அடிப்படையற்றவை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில் பத்து ஆண்டுகாலத்திற்கு மேலாக விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு வல்லுநர் குழுக்களை அமைத்து அவை அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் கடந்த 27-2-06 அன்று 142 அடி வரை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என ஆணையிட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறும் வகையில் கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்புச் சட்டத்திற்கு கேரள காங்கிரஸ் அரசு ஒரு திருத்தம் கொண்டுவந்து கம்யூனிஸ்டு கூட்டணி உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது. அதன்படி கேரளத்திலுள்ள 22 அணைகளின் முழு கொள்ளளவு மட்டத்தை வரையறுப்பதற்கு கேரள அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்றும் இதில் வேறு எந்த அரசும் அல்லது நீதிமன்றங்களும் குறுக்கிட முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் 31-3-06 அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
ஏற்கெனவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையையும் மதிக்காமல், கேரளம் பிறப்பித்த அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னையை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளும்படி இரு மாநில முதல்வர்களையும் வேண்டிக்கொண்டது.
30 ஆண்டுகாலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தப் பயனும் இல்லாமையால்தான் தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். விவசாயிகளின் இந்தக் குரலுக்கு எந்தப் பயனும் இல்லை. 29-11-06-அன்று அன்றைய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதின் சோஸ் தலைமையில் தில்லியில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு எதுவும் ஏற்படவில்லை. அடுத்தகட்டமாக இரு மாநில பாசனத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னைக்கு முடிவு காணப்படவில்லை.
இறுதியாக 20-11-06 அன்று கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் கூடி உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி 142 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்று கூறியதோடு, இப்போது இருக்கும் அணையை இடித்துவிட்டுப் புதிய அணை கட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்கள்.
புதிய அணை கட்டுவதால் முதலில் 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமை அளித்த பழைய உடன்பாடு செல்லாததாகிவிடும். அதுமட்டுமல்ல, புதிய அணையை தற்போதைய அணைக்குக் கீழே கட்டினால் கூடுதல் நிலங்கள் நீரில் மூழ்கும் என்பதுடன் கேரளத்தின் இடுக்கி அணைக்கு அதிக நீரும் கிடைக்கும். அதுவே அவர்களின் குறிக்கோள் ஆகும்.
அணையை வலுப்படுத்தும் பணியைச் செய்துவிடாமல் 21 ஆண்டுகள் இழுத்தடித்தார்கள். புதிய அணை கட்டுவதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு இழுத்தடிப்பார்களோ, யாருக்குத் தெரியும்? பணிகள் முடியும்வரை நீர்மட்டம் 136 அடியில் இருக்கும். இதனால் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 13.5 டி.எம்.சி. தண்ணீர் இழப்பு ஏற்படுவதுடன் 2 லட்சம் ஏக்கர் நிலங்களில் முழுமையான சாகுபடி செய்ய முடியாது போகும். இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
பெரியாறு அணை அருகே ரூ. 300 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் கேரள அரசு நடத்திவிட்டது. ஆனால் இப்பகுதி புலிகள் சரணாலயம் என்பதால் மத்திய வனத்துறை இப்பகுதியில் சர்வே எடுக்கத் தடை விதித்துள்ளது. ஆனாலும் அந்தத் தடையை மீறி கேரள அரசு சர்வே பணியை நடத்தியது. துபாயைச் சேர்ந்த மிடில் ஈஸ்ட் சர்வே அண்டு பொறியியல் நிறுவனத்திடம் புதிய அணை கட்டும் ஒப்பந்தத்தை கேரள அரசு செய்து கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தையோ மத்திய அரசையோ கொஞ்சமும் மதிக்காமல் கேரள அரசு செயல்பட்டு வருகிறது. தட்டிக் கேட்க தமிழக அரசுக்கும் தைரியமில்லை. மத்திய அரசுக்கும் மனமில்லை.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் ஏ.கே. அந்தோனி கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர். இதன் விளைவாக அவரின் துறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத பெரியாறு அணைப் பிரச்னையில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முற்பட்டார். 22-11-06 அன்று இந்தியக் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் 15 பேர், அவர்களுக்குத் துணையாக 10 பேர், இடுக்கி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் கேரள போலீஸ் படை ஆகியோர் பெரியாறு அணைப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். பெரியாறு அணை பலமாக இருக்கிறதா? இல்லையா? என்பதை நீரில் மூழ்கி ஆராய்வதற்காகவே இவர்கள் அனுப்பப்பட்டனர். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் அத்துமீறிய இந்த நடவடிக்கை குறித்து அறிந்த தமிழகப் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாகப் போராடி இந்த தீய முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.
இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர்கள் குழு ஒன்று பெரியாறு அணையை ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளதாக கேரள அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. யார் இந்தப் பேராசிரியர்கள்! எந்த வகையில் அவர்கள் இப்பிரச்னையை ஆராயத் தகுதி பெற்றவர்கள் என்பதைப் பற்றியெல்லாம் எதையும் கூறுவதற்குக் கேரளம் மறுத்துவிட்டது.
இப்பேராசிரியர்களின் அறிக்கையின்படி பெரியாறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 2,75,000 மில்லியன் கன அடி வெள்ளம் வரும் என்றும் அப்போது அதைத் தாங்கும் சக்தி அணைக்குக் கிடையாது என்றும் கேரள அரசு கூறியுள்ளது. எனவே புதிய அணையைக் கட்ட வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடியுள்ளது.
பெரியாறு அணையில் உள்ள வெள்ளநீர் வெளியேறும் தாம்போகி மற்றும் சுரங்கப்பாதை வழியாகவும் வெளியேற்றப்படும் வெள்ளநீர் வினாடிக்கு 1,27,000 மில்லியன் கன அடி ஆகும்.
மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரைத்தபடி வெள்ள அளவான வினாடிக்கு 2,12,000 கன அடி வெளியேறுவதற்காக கூடுதலாக 3 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே 3,39,000 மில்லியன் கன அடி நீர் வெளியேற முடியும்.
பெரியாறு அணைக்கு கீழே 34 மைல் தொலைவில் இடுக்கி அணை அமைந்துள்ளது. பெரியாறு அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதைவிட 7 மடங்கு மிகப்பெரிய இடுக்கி அணை அதை ஏற்றுக் கொள்ளும். அதனால் அந்த அணைக்கு ஆபத்து ஒன்றும் நேராதென மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு ஏற்கெனவே கூறியுள்ளது.
எந்தப் பொய்யும் எடுபடாமல் போன பிறகு 5.12.08-அன்று மற்றொரு நாடகத்தை கேரள அரசு அரங்கேற்றியது. இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ஆர்.சாம்பசிவராவ் மற்றும் உறுப்பினர்கள் பெரியாறு அணையைப் பார்வையிட்டனர். அணை பலவீனமாக உள்ளது; அணையின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்களின் அச்சம் நியாயமானது என அவர்கள் கருத்துரை வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் யாரும் நீரியியல் அல்லது பொறியியல் நிபுணர்கள் அல்லர். பத்து நிமிடங்கள் மட்டுமே அணைப்பகுதியில் இருந்த இக்குழுவினர் அதற்குள் எந்த அடிப்படையில் அணை பலவீனமாக உள்ளது என்பதைக் கண்டறிந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம். அது போகட்டும், பெரியாறு அணை குறித்து கேரள அரசின் கருத்துகளைக் கேட்டறிந்த குழுவினர் தமிழக அரசின் கருத்துகளைக் கேட்கவில்லையே, ஏன்? அதைப்பற்றி தமிழக அரசும் கவலைப்படவில்லையே, ஏன்?
அதுமட்டுமல்ல, அணை உடைவதுபோலவும் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவது போலவும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி அதனை கேரள மாநிலப் பகுதிகளில் தொலைக்காட்சிகள் மூலம் காட்டி மக்களிடையே அச்சத்தைப் பரப்பியது கேரள அரசு. பெரியாறு அணையில் இருந்து 80 கிலோ மீட்டருக்கு அப்பால் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறி, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை கேரள அரசு நியமித்து ஆய்வு நடத்தியது. அணையில் பல இடங்களில் வெடிப்புகளும், நீர்க்கசிவுகளும் ஏற்பட்டிருப்பதாக அந்தக் குழு அறிக்கையை அளித்தது. உடனடியாக கேரள முதல்வரும், அதிகாரிகளும் பிரதமரைச் சந்தித்து இதுகுறித்துப் புகார் செய்தனர்.
பெரியாறு அணை அமைந்திருக்கும் இடுக்கி மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது உண்மையாக இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள வைகை அணையும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும். அவ்வாறு எதுவும் வைகை அணைப்பகுதியில் நேரவில்லை. பெரியாறு அணைப்பகுதியில் அல்லது இடுக்கி மாவட்டத்தில் 8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வகையில்தான் இந்த அணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் 8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஒருபோதும் ஏற்படாது என நிலவியல் நிபுணர்கள் உறுதியும் கூறியுள்ளார்கள்.
பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீர் தேக்கப்பட்டிருக்கும்போது நிலநடுக்கம் வந்தாலும் அணைக்கு எந்தச் சேதமும் ஒருபோதும் வராது. மேலும் மத்திய நீர்வளத்துறையின் ஆணையின்படி தமிழக அரசு இந்த அணையில் கேபிள் ஆங்கரிங் என்ற முறையில் அதிக அழுத்த கம்பிகளும் துளையில் நிரப்பப்பட்ட காங்கிரீட்டும் இணைந்து பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அணையின் பின்புறத்தில் 33 அடி அகலத்தில் அடித்தளத்திற்குக் கீழ் 10 அடியிலிருந்து தொடங்கி மேலே 145 அடி வரை காங்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. பழைய அணையும், புதிய அணையும் மிகுந்த தொழில்நுட்ப உத்தியோடு இணைக்கப்பட்டு ஒரே கட்டுமானம்போல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரியாறு அணை புதிய கட்டுமானத்திற்கும் மேலான வலிமை பெற்றுள்ளது. எனவே எத்தகைய நிலநடுக்கமும் அணையை ஒருபோதும் பாதிக்காது.
பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஐந்தில் ஒருபகுதி தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாறில் பாய்ந்தோடும் நீரின் மொத்த அளவு 4767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒரு பகுதி நீர் அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.
பெரியாறு அணை நீரில் கேரள மாநிலத்தின் பயன்பாட்டுக்குப் போக வீணாகக் கடலுக்குச் செல்லும் நீரின் அளவு 2313 மில்லியன் கன மீட்டராகும். அணையின் நீர்மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர்தான்.
அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு கேட்கிறோம். அதுவும் தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாறில் கலக்கும் நீரில் சுமார் எட்டில் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். அதைக்கூடத் தருவதற்கு கேரள அரசியல்வாதிகளுக்கு மனமில்லை.
இந்த உண்மைகளையும், தமிழக விவசாயிகளின் பக்கம் இருக்கக்கூடிய நியாயங்களையும் மத்திய அரசுக்கும் மற்றும் அகில இந்திய தலைவர்களுக்கும் உணர்த்தி அவர்களின் ஆதரவைப் பெற தமிழக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனால் வெறும் பொய்யை மட்டுமே முதலாகக் கொண்டு கேரள அரசியல்வாதிகள் 30 ஆண்டுகாலத்திற்கு மேலாக நமக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுத்து வருகிறார்கள். இன்னமும் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டு காலமாக கேரள அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு நின்று பொய்யான புள்ளிவிவரங்களை அள்ளிவீசியும், அதேவேளையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமலும் தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறார்கள். அதிலும் தற்போது மத்திய அரசில் கேரளத்தைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
கேரளத்தைச் சேர்ந்த பலர் செல்வாக்குமிக்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வருகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி எப்படியும் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுவிட முடியும் என கேரளம் நம்புகிறது.
ஆனால் தமிழ்நாட்டின் நிலை என்ன? கடந்த 30 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டை தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகளே ஆண்டு வந்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசிலும் அமைச்சர்களாக இரு கழகங்களையும் சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்து வருகிறார்கள். ஆனாலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற மறுக்கும் கேரளத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்த இவர்களால் முடியவில்லை.
தற்போது மத்திய அரசில் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த 9 தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் என்ன பயன்?
கேரளம் தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிடுமானால் பெரியாறு பாசன விவசாயிகளின் எதிர்காலம் இருண்டுபோகும் என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி
Friday, August 7, 2009
சிக்கியது யாகூ
இணையத்தில் நவீன தேடல் தொழில்நுட்பத்தின் முன்னோடி யாகூ. இன்று அதே தொழில்நுட்பத்துக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் கையேந்தியிருக்கிறது. இதற்காக கடந்த 29-ம் தேதி இரு நிறுவனங்களும் ஒப்பந்தமும் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் தோல்விக்கான யாகூவின் ஒப்புதல்தான் இந்த ஒப்பந்தம். யாகூவிடம் தனித்து வெற்றி பெறுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதும் இதன்மூலம் வெளிப்படையாகியிருக்கிறது.
இரு நிறுவனங்களும் ஏதோ மனமுவந்து இந்தக் கூட்டுக்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன என நினைத்தால் அது தவறு. இந்த நிறுவனங்களுக்கு கைகோர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை.
கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத மைக்ரோசாஃப்ட், யாகூவைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தது. கடந்த ஆண்டில் 44 பில்லியன் டாலர்களுக்கு ஒட்டுமொத்தமாக யாகூவை விலை பேசியது. இந்த பேரம் படியாமல் போனதால், இப்போது புதிய ஒப்பந்தம் போட்டு யாகூவை வளைத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.
இந்த ஒப்பந்தப்படி, யாகூ இணையதளத்தில் இயங்கிவரும் தேடும் வசதி, மைக்ரோசாஃப்டின் "பிங்' தேடுபொறியின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும். இதற்குப் பதிலாக மைக்ரோசாஃப்டின் ஆன்லைன் விளம்பரங்களைச் சந்தைப்படுத்தும் பணியை யாகூ மேற்கொள்ளும். இதற்காக 400 பேர் கொண்ட யாகூ ஊழியர் குழுவை மைக்ரோசாஃப்ட் சுவீகரித்துக் கொள்ள இருக்கிறது. யாகூ தேடுபொறி, பிங் உதவியுடன் செயல்பட்டாலும் தேடல் வருவாயில் 88 சதவீதம் யாகூவுக்கே கிடைக்கும் என்கிறது இந்த ஒப்பந்தம்.
10 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்க இந்த ஒப்பந்தத்தின் முதல் நோக்கம், இணையத் தேடல் சந்தையில் 65 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கூகுளை வீழ்த்துவதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.
இரண்டாவது நோக்கம், வீழ்ந்து கிடக்கும் யாகூவைச் சுதாரிக்கச் செய்வது. இதற்காக யாகூவுக்கு 4 பில்லியன் டாலர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொடுத்து உதவப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. இதனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குச் சற்று முன்வரை யாகூவின் பங்குகளின் மதிப்பு சரசரவென உயர்ந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி, நிதியுதவி எதுவும் தரப்படாததால், யாகூ பங்குகள் சரியத் தொடங்கின. அதேநாளில் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை சற்று உயர்ந்தது. இதிலிருந்தே ஒப்பந்தம் யாருக்குச் சாதகமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
யாகூ முதலீட்டாளர்கள் இப்போது தலையில் கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக யாகூவை விற்றிருந்தால்கூட, ஒரு பங்குக்கு 33 டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இன்று அந்த விலையில் பாதிக்கும் கீழே பங்குகளின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது.
இருந்தாலும், இந்தப் புதிய கூட்டு மூலம் தேடுபொறிச் சந்தையிலும் பங்குகளின் விலையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை (அறிவிக்கப்படவில்லை) ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (இதுவும் அறிவிக்கப்படவில்லை) எட்ட முடியாவிட்டால் உறவை முறித்துக் கொள்ளலாம் என்னும் விதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது யாகூவுக்கு மிகச் சாதகமானது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறிய அளவில் நிதியுதவியை அளிக்க மைக்ரோசாஃப்ட் முன்வந்திருக்கிறது. இப்போதைய நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த நிதி யாகூவுக்கு உதவும்.
இன்னொரு பக்கம், இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் யாகூவை வீழ்த்தும் சதி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, யாகூ இணையதளத்தில் பிங் தொழில்நுட்பத்துடன் கூடிய தேடல் வசதி அமைக்கப்பட்டாலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது இணையதளங்களில் பிங் தேடும் வசதியைத் தொடர்ந்து இயக்கும். இதுபோக, தனியாக பிங் இணையதளமும் செயல்படும். இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் ஒப்பந்தத்தில் இல்லை. இதனால், தேடல் சந்தையில் மைக்ரோசாஃப்டின் பங்கு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும்.
அதேநேரம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமது தேடல் தொழில்நுட்பத்தை விட பிங் தொழில்நுட்பம் சிறந்தது என யாகூ மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனால் பிங் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்தப் பரபரப்பு, யாகூ இணையதளத்தில் தேடுவதைவிட பிங் இணையதளத்துக்கே சென்று தேடலாம் என்கிற மனோபாவத்தை இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் பிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆக, பிங் தேடுபொறியைப் புதிதாகப் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், யாகூவைக் கைவிட்டுவிட்டு வந்தவர்களாக இருப்பார்களேயொழிய, கூகுளிலிருந்து வந்தவர்களாக இருக்கப்போவதில்லை. இதனால், கூகுளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் போவதுடன், தனது தேடல் சந்தையையும் யாகூ இழக்க வேண்டியிருக்கும்.
எப்படியோ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆக்டோபஸ் கரங்களில் யாகூ சிக்கிவிட்டது. தூக்கி விடுவதும் போட்டு உடைப்பதும் கால மாற்றங்களைப் பொறுத்தது.
கட்டுரையாளர் : பூலியன்

இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களின் முதலீடு 25 சதவீதம் குறையும்
இன்னும் மூன்று வருடங்களில் இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டு வைத்திருக்கும் முதலீட்டில் இருந்து 25 சதவீதம் குறைந்து விடும் என்று கிரிசில் என்ற கிரிடிட் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருக் கிறது. 11 வெவ்வேறு துறைகளை சேர்ந்த 500 தொழில் நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்த கிரிசில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. கம்பெனி விரிவாக்க திட்டத்திற்காக இன்னும் மூன்று ஆண்டுகளில் ரூ.13 லட்சம் கோடியை முதலீடு செய்வோம் என்று அந்த நிறுவனங்கள் இப்போது அறிவித்திருக்கின்றன. ஆனால் அவைகள் ரூ.10.05 கோடியை தான் முதலீடு செய்யும் என்று கிரிசில் தெரிவிக்கிறது. டெக்ஸ்டைல், ஆட்டோ, ஆயில் ரீஃபைனரி போன்ற துறைகளில், அறிவித்ததை விட முதலீட்டு செலவீனம் குறைந்து விடும் என்று சொன்னாலும், பவர் துறையில் முதலீடு 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கத்தான் செய்யும் என்றார் கிரிசில் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மனோஜ் மோத்தா. கேஸ் வினியோகத்துறையிலும் முதலீடு இரட்டிப்பாகி விடும் என்றார் அவர். இது நமது பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதுதான் என்கிறார் அவர். இதற்கு முன் 1997 - 1998 மற்றும் 2002 - 2003 ஆண்டுகளில் பொருளாதாரம் வீழ்ந்திருந்த நேரத்தில் இந்திய தொழில் நிறுவனங்களின் முதலீடு வருடத்திற்கு 1 முதல் 2 சதவீதம் என்ற வகையில் குறைந்திருந்தது. அதற்கு காரணம் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாலும், உற்பத்தி பொருட்களுக்கான தேவை குறைந்து போகும் என்ற பயம் இருந்ததாலும்தான் என்கிறார் மோத்தா.
நன்றி : தினமலர்
Labels:
பொருளாதாரம்
இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஐ.டி.,கம்பெனியாக டெக் மகிந்திரா வந்தது
இந்த வருட ஆரம்பத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடியை அடுத்து, கடந்த வருடம் வரை இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய ஐ.டி.கம்பெனி என்ற பெயரை பெற்றிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டது. அந்த நிறுவனத்தை மகிந்திரா அண்ட் மகிந்திரா குழுமத்தை சேர்ந்த டெக் மகிந்ரா வாங்கி, அதை மகிந்திரா சத்யம் என்று பெயர் மாற்றி நிர்வகித்து வந்த போதிலும் இழந்த பெயரை மீண்டும் பெற முடியவில்லை. ஆனால் சத்யத்தை வாங்கியிருக்கும் டெக் மகிந்திரா நிறுவனம் இதுவரை ஆறாவது இடத்தில் இருந்து வந்தது. அது இப்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. முதல் ஐந்து இடங்களில் இருந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் விலகி விட்டதால், ஐந்தாவது இடத்தில் இருந்த அதன் போட்டி நிறுவனமான ஹெச்.சி.எல்., நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டது. முதல் மூன்று இடங்களில் முறையே டி.சி.எஸ்.,இன்போசிஸ் மற்றும் விப்ரோ தொடர்ந்து இருந்து வருகின்றன. தொழில் அமைப்பான நாஸ்காம் சமீபத்தில் வெளியிட்ட மதிப்பீட்டில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் மகிந்திரா சத்யம் நிறுவனம் இன்னும் அதன் முழு நிதி ஆண்டு தணிக்கை அறிக்கையை வெளியிடாததால், அது எத்தனாவது இடத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்
பொதுநலப் போர்வையில் சுயநலம்!
மருத்துவச் செலவுகள் பொதுவாக கைக்கு மீறியதாக இருப்பதாலும், குறிப்பாக ஏழைகளுக்கு அறுவைச் சிகிச்சை மருத்துவம் என்பது நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு செலவு மிக்கதாக மாறிவிட்டதாலும், எல்லாருக்கும் முக்கிய அறுவைச் சிகிச்சை மருத்துவத்தை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்குவது அரிது என்பதாலும், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு. கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் நோக்கம், ஏழைகள் தங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து தேவைப்படும் அறுவைச் சிகிச்சையைச் செய்துகொள்ளலாம். அதற்கான செலவை, காப்பீட்டு நிறுவனம் ஈட்டுத் தொகையாக அந்தத் தனியார் மருத்துவமனைக்கு அளித்துவிடும். இதனால் ஏழையை எந்தத் தனியார் மருத்துவமனையும் விரட்டி அடிக்காது.
ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்காக "ஸ்டார் ஹெல்த்' இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஓராண்டுக்கான சந்தா தொகையாக ரூ.517 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 320 தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் எஸ். விநாயகம், நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ""தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள 14 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒரு சிறப்பு வார்டு, தனியார் மருத்துவமனைக்கு இணையாக உயர் தரத்தில் உருவாக்கப்படும். இவ்வாறு அரசு மருத்துவமனையை மேம்படுத்தி சிகிச்சை அளிப்பதால், காப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதி அரசுக்கே திரும்பக் கிடைக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது, தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சிகிச்சையை ஏழை பெறுகிறார் என்பதோடு, ஏதோ ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போக வேண்டிய காப்பீட்டுத் தொகை அரசு மருத்துவமனைக்குக் கிடைத்துவிடுகிறது.
இதே விஷயத்தை கொஞ்சம் மாற்றிப் போட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது.
எந்தவொரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனமும், தோராயமாக அளிக்க நேரிடும் 60 சதவீத ஈட்டுத் தொகை, தனக்குக் கிடைக்க வேண்டிய 40 சதவீத லாபம் ஆகியவற்றை தோராயக் கணக்குப் போட்டுத்தான் ஆண்டுச் சந்தாவைத் தீர்மானிக்கின்றன. இதிலும் எதிர்பார்த்த அளவுக்கு நோயாளிகள் ஈட்டுத்தொகை கேட்பு இல்லையென்றால், லாபத்தின் அளவும் அதிகமாக இருக்கும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவச் செலவுக்கான ஈட்டுத்தொகையை காப்பீட்டு நிறுவனம் தந்தே ஆகவேண்டும். வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். கொடுக்காமல் இருக்கவே முடியாது. ஆனால், அரசு மருத்துவமனைகள் அப்படியல்ல. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தாமதப்படுத்தலாம். அல்லது சிறப்பு வார்டில் பத்து ஏழைகளுக்கு முக்கிய அறுவைச் சிகிச்சை நடந்தால் அதில் 5-க்கு மட்டும் காப்பீடு கோரும்படியும், மீதி 5 நோயாளிகளை வழக்கமான பொது வார்டு கணக்கில் சேர்ப்பதும் பெரிய விஷயமல்ல.
ஏழைகளுக்கான உயிர்காப்பு உயர் சிகிச்சைத் திட்டத்திற்கான ஈட்டுத்தொகை மிகமிகத் தாமதமாகக் கிடைக்கும் என்ற சூழல் ஏற்படும், அல்லது வதந்தி பரவும் என்றால், தனியார் மருத்துவமனைகள் ஏழைகள் மீது பாசத்தைப் பொழியாது. "அரசு மருத்துவமனையிலேயே சிறப்பு வார்டு இருக்கிறதே, அங்கேயே போங்கள்' என்று விரட்டி விடுவார்கள்.
ஆக, ஏழைகள் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே வந்து சேரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆண்டுச் சந்தா ரூ.517 கோடியில், காப்பீட்டு நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
அரசின் காப்பீட்டுத் தொகை, அரசு மருத்துவமனைக்கே இப்படியாகச் சுற்றி வளைத்து வருவதைவிட, அரசு நிறுவனமான எல்.ஐ.சி-க்கே இந்த காப்பீட்டுத் திட்டத்தைத் தந்திருந்தால், செலவானாலும் அரசுக்கே, மிச்சமானாலும் அரசுக்கே என்று ஆகாதா?
மருத்துவக் காப்பீட்டுக்கு சந்தா என்பதும், ஏழைகள் பலனடைவார்கள் என்பதும் சுயநலத்தில் சற்று பொதுநலமும் கலந்திருப்பது என்பதுதானே தவிர வேறென்ன?
அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளைவிடத் தரம் மிகுந்ததாக மாற்றப்படுவதற்கு முயற்சிக்காமல், தர்மத்திற்கு நடத்தப்படும் தர்மாஸ்பத்திரிகளாக்குவதுதான் அரசின் நோக்கம் போலிருக்கிறதே. கருணையின் பெயரால் நிதி தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது. அவ்வளவே!

தலையங்கம்
Subscribe to:
Posts (Atom)