Tuesday, December 1, 2009

அறிவார்ந்த முடிவெடுக்க பல்கலை. உதவுமா?

பி.டி. கத்தரி அனுமதி மீதான முடிவு மக்களைக் கேட்டபின் இறுதி செய்யப்படும்; டிசம்பர் மாதம் முடிய ஆதரவு, எதிர் கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஜனவரி அல்லது பிப்ரவரியில் நாடு தழுவிய அளவில் பொதுக்கருத்து கேட்கப்பட்ட பின்னரே அனுமதி குறித்த முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வரும், நுகர்வோர், விவசாயிகளின் கருத்தைக் கேட்டபின் முடிவெடுங்கள் என்று பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பி.டி. கத்தரி நல்லதே; விளைச்சல் கூடும்; மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து இல்லாதது என்று எழுதியும் பேசியும் வருகிறார்.

மறுபக்கம் பரவலாக பி.டி. கத்தரி பற்றி கடுமையான விமர்சனங்கள் நெடுங்காலமாகவே வைக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பு விவரங்களையும் மக்கள் அறிந்தால்தான் அவர்கள் தெளிவுடன் பி.டி. கத்தரி தேவையா இல்லையா என முடிவெடுப்பார்கள். பல்கலை. விஞ்ஞானிகள் எல்லாமே நன்றாக உள்ளது, பி.டி. கத்தரி வந்துவிட்டால் கத்தரி விளைவிப்பதில் உள்ள பிரச்னைகள் பறந்தோடும் என்கிறார்கள்.
உண்மை தான் என்ன?

இங்கே நடப்பது மரபணு மாற்றம் அல்ல; திணிப்பு. மரபணு வலிந்து திணிக்கப்படுகிறது. திணிக்கப்படுவது மண்ணில் வாழும் நுண்ணுயிரியின் ஒரே ஒரு மரபணு மட்டுமல்ல, அதனுடன் ஆண்டிபயாடிக்கைத் தாங்கிடும் மரபணுவும், ஒரு வைரசின் மரபணுவும், ஏஏடி என்ற மரபணுவும் (மொத்தம் 4 மரபணுக்கள்) சேர்த்துக் கூட்டாக ஜீன் துப்பாக்கி என்ற கருவியால் வேகமாகச் சுடப்படுகிறது. அப்போது அத் தாவரத்திற்கேயுரிய மரபணுக் கூட்டத்தில் சிதைவுகள், மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுகிறதா, அந்த மரபணுக்கள் முன்போலவே இயல்பாக உள்ளதா அல்லது அதனால் தூங்க வைக்கப்பட்டிருக்கும் அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மரபணுக்களின் செயல்பாடுகள் மாறி உள்ளதா போன்ற ஆய்வுகள் செய்யப்பட்டதா என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் மட்டுமல்ல, ஆதரவு விஞ்ஞானிகள் எவரும் விளக்க மறுக்கிறார்கள்.

விளைச்சலை அதிகப்படுத்தவே இத்திணிப்பு என்று எவராவது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகும். இத்திணிப்பு பயிரைத் தாக்கும் பல பூச்சிகளில் ஒன்றிரண்டை மட்டும் கொல்லவே. பருத்தியிலும் கத்தரியிலும் காய்ப்புழுக்களைக் கொல்லவே. இவைகளை பூச்சிக்கொல்லிகள் கொண்டு கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே தான் மரபணுத் திணிப்பு என்கிறார்கள். மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவைகளுக்கு பூச்சிக்கொல்லிகள் தான் வழி என்கிறார்கள்.

பருத்தி,கத்தரி,நெல்,ராகி,கம்பு,சோளம்,மக்காச்சோளம், பப்பாளி,தக்காளி,கோதுமை,முட்டைகோசு,காலிபிளவர்,நிலக்கடலை, சுண்டல்கடலை, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட தற்போது மரபணு திணிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள 56 வகை உணவுப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை மூலம் காப்பாற்றலாம் என்று இந்திய வேளாண் அறிவியல் கழகம் கூறுகிறது.

நெல்,பருத்தி,கத்தரியில் வரும் பூச்சி மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளால் பூச்சிக் கொல்லியின் எஞ்சிய நஞ்சு குறைகிறது. பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பூச்சிகள் பெறுவதைத் தடுக்கிறது - மீண்டும் உச்சநிலை அடைவதைத் தடுக்கிறது. மேலும் பூச்சித் தாக்குதல் தன்மை, பாதிப்பின் அளவு, சரியான காலத்தில் பயன்படுத்துவது ஆகியவற்றால் ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறை மூலம் 20 முதல் 30 சதம் அதிக விளைச்சல் கிடைக்கிறது.

இது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற விவரம்.

இருப்பினும் துணைவேந்தரும் விஞ்ஞானிகளும் மரபணுத் திணிப்பு முறை தான் உள்ள ஒரே வழி என்கிற தொனியில் கருத்துத் தெரிவிக்கிறார்கள். எது உண்மை? துணைவேந்தரும் விஞ்ஞானிகளும் இப்போது சொல்வதா அல்லது முன்பு பல்கலை தெரிவித்ததா?

ஒரு விவசாயி பி.டி. கத்தரி பயிரிட்டால் அதிலிருக்கும் மகரந்தம் பக்கத்து விவசாயியின் கத்தரிச்செடிக்கு காற்று, தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மூலம் சேராதா? அப்படி மரபணுக் கலப்படம் நடப்பதை எப்படித் தடுப்பது? ஒரு வேளை மரபணுக் கலப்படம் நடந்துவிட்டால் பாதிக்கப்பட்ட விவசாயியின் பாதிப்பைச் சரிசெய்ய என்ன வழிகளை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பிற ரகத்தைப் பயிரிடுபவர்கள் 50-60 மீட்டர் தள்ளிப் பயிரிட்டுக் கொள்ள வேண்டுமாம்.

இதுபோன்ற மரபணுக் கலப்படத்தால் அமெரிக்காவிலும், கனடாவிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது மான்சான்டோ திருட்டுப் பட்டம் சுமத்தி பல லட்சம் டாலர்கள் ஈடு கேட்கும் வழக்குச் சம்பவங்கள் அவ்விரு நாடுகளிலும் பரவலான ஒன்று.

பதப்படுத்திய மரபணுத் திணிப்பு உணவுப்பண்டங்கள் (எ.கா-சிப்ஸ்) அனுமதிக்கப்பட்ட பின், அமெரிக்காவில் உணவு சார்ந்த அலர்ஜியும், பிற நோய்களும் 50 சதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை அலர்ஜிக்கெனவே இப்போது மருந்துகளும் உள்ளன. அமெரிக்க சுற்றுச்சூழல் மருத்துவக் கல்வியகம், தங்களிடம் வரும் நோயாளிகளை மரபணுத் திணிப்பற்ற உணவுப் பண்டங்களை உண்ண அறிவுரைக்கும்படி பரிந்துரைத்துடன் அவைகளைத் தடை செய்யவும் கேட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்டவைகளிலேயே இப்படிப்பட்ட பிரச்னைகள். இந்த நிலையில் நேரடியாக உண்ணப்படும் கத்தரி போன்றவை மனிதரைப் பாதிக்காது என்றும் மனித இரைப்பையில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு அந்த நஞ்சு உற்பத்தி செய்யும் மரபணு இடம்பெயராது என்றும் எந்த ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள் என்பது சிறிதும் புரியவில்லை. இவர்கள் கூறுவதில் உண்மை எவ்வளவு என்று ஆராயலாம் எனில் அதிலும் வில்லங்கம்.

மரபணுத் திணிப்பு பயிர்கள், கம்பெனிகளால் காப்புரிமை செய்யப்பட்டவை. அக் கம்பெனிகளின் அனுமதியின்றி எவரும் ஆராய முடியாது. இரு வகை பி.டி. பருத்தியை ஒப்பிட்டு ஆராயக்கூட முடியாது.

காப்புரிமைக் கட்டுப்பாடுகள் காரணமாக மரபணுத் திணிப்பு பயிர்களில் பூச்சித்தாக்குதல் பற்றிய ஆராய்ச்சிகளைச் சுதந்திரமாகச் செய்ய முடிவதில்லை, தங்களுக்கு எதிர்ப்பாக எழுதாதவர்களுக்கு அல்லது தங்களிடம் நிதி உதவி பெறும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே கம்பெனிகள் அனுமதி தருகின்றன. கம்பெனிகள் ஆராய்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன, ஆய்வுகளைத் தடை செய்கின்றன என அமெரிக்காவின் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க அரசிடம் புகார் செய்துள்ளனர்.

பி.டி. பருத்தி, பி.டி. கத்தரி மற்றும் சாதா ரகப் பயிர்கள் கொண்டு ரசாயன வழி, இயற்கை வழி, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை என பல வகைகளை ஒப்பீட்டு ஆய்வு செய்வது மிக முக்கியம். இந்த ஆய்வுகளை வேளாண்மைப் பல்கலை ஏன் செய்யவில்லை? இயலாமையா? முடியுமெனில் இத்தகைய ஆய்வுகளை பல்கலை உடனே செய்யட்டும். வெளிப்படையான ஆய்வாகச் செய்யட்டும். உண்மை அப்போது தெரியும். ஆனால் செய்யாது, செய்ய முடியாது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை இவ்வகையில் ஓர் அடிமை.

இதுவரை உலகில் நடந்த ஓரிரு சுதந்திரமான ஆய்வுகள், அனுமதிக்காக அமெரிக்க விவசாயத்துறையிடம் கம்பெனிகள் சமர்ப்பித்த ஆய்வுக்குறிப்புகள்,கம்பெனிகள் அனுமதியளித்து பாதிப்பு தெரிந்ததும் நிறுத்தப்பட்ட ஆய்வுகள் ஆகியவற்றால் அறியப்பட்ட பாதிப்புகளை ஜெனிடிக் ரெüலெட் என்ற பெயரில் நூலாகவே வெளியிட்டார் ஜெப்ரே சிமித் என்ற பத்திரிகையாளர்.

அனுமதிக்கப்பட்டு நடந்த கொஞ்ச நஞ்ச ஆய்வுகள் மரபணுத் திணிப்புப் பயிர்களால் ஆய்வு விலங்குகளுக்கு ஏற்பட்ட 65 உடற்பாதிப்புகளை இந்நூலில் பட்டியலிட்டுள்ளார்.

இத்தகு பாதிப்புகள் திணிக்கப்பட்ட மரபணுவால், அது சுரக்கும் நஞ்சால் மட்டுமல்ல. பயிரின், ஆய்வு விலங்கின் உடலில் இந்த மரபணுக்கள் ஏற்படுத்திய விளைவுகளாலும் இருக்கலாம். எதனால் என்பதை அறிய நீண்ட கால ஆய்வுகள் தேவை என்கின்றனர் நடுநிலை விஞ்ஞானிகள். மிகக் குறைந்தபட்சம் 2-3 ஆண்டு கால ஆய்வுகள் தேவை என்கிறார்கள். ஆனால் மகிகோ நிறுவனம் 90 நாள்கள் ஆய்வையே செய்துள்ளது.

மகிகோ அனுமதிக்காக சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது இத்துறையில் சிறந்த வல்லுநரான பேரா.செராலினி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். முடிவுகள் நன்றாக இருப்பதற்காக பல புள்ளிவிவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டுள்ளன. ஆய்வு விலங்குகளில் ரத்தம் உறைவதற்கு நீண்ட நேரமாவது, ஈரல் கெட்டுப்போய் இருப்பதும், எலிகளில் வயிற்றுப் போக்கு, ஈரல் எடை குறைந்திருப்பது போன்றவற்றை அந்த ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு விஞ்ஞானியான ஜீடி கார்மன் இத்தகு பரிசோதனைகளில் பொதுவாக 18-20 வகையான ரத்த சோதனைகள் செய்வது வழக்கம். ஆனால் இங்கோ வெறும் 7 சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்கிறார்.
மேலும் பல ஆய்வுகளில் மரபணுத் திணிப்புக் கத்தரியில் அந்த மரபணு உருவாக்கிய நஞ்சைப் பயன்படுத்தவில்லை. மாறாக செயற்கை நஞ்சையே பயன்படுத்தியுள்ளதைச் சுட்டியுள்ளார். இவ்விருவரும் தத்தமது அரசுகளுக்கு (பிரான்சு, ஆஸ்திரேலியா) திணிப்புப் பயிர்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குபவர்கள். இவர்களின் கருத்துகளுக்கு நம் பல்கலை விஞ்ஞானிகள் பதில் சொல்ல மாட்டார்கள். நாங்கள் அதையெல்லாம் ஆராயத் தேவையில்லை என்பார்கள்.

8-4-2008-ல் ஈரோட்டில் தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய விவாத அரங்கிற்கிற்காக அன்றைய துணை வேந்தர் முனைவர் இராமசாமி தலைமையில் வந்த விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறினர். அவ்விஞ்ஞானிகளின் ஆய்வுக்கருத்தை மரபணு அங்கீகாரக்குழு சொன்னதுபோல உப்புச்சப்பில்லாதவை என ஒதுக்கிக்கூடத் தள்ளுவர்.
÷ஆறு கோடி தமிழர்களின் உடல் நலன் குறித்த பிரச்னையை ஒட்டி எழுந்துள்ள சந்தேகங்கள், கேள்விகளைத் துணிச்சலுடன் விளக்க நம் விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். அப்போது தான் தமிழக மக்களும், விவசாயிகளும் பி.டி. கத்தரி தேவையா தேவையில்லையா தடை செய்ய வேண்டுமா என்கிற முடிவைப் பகுத்தறிந்து அறிவார்ந்து சீர்தூக்கி முடிவெடுக்க முடியும்.

அதற்கு உதவும் பெரும் பொறுப்பு எதிர்க்கின்ற, ஆதரிக்கின்ற இரு தரப்புக்கும் உள்ளது. எதிர் தரப்புடன் சேர்ந்து விளக்கம் தர பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.
கட்டுரையாளர் : செல்வம்
நன்றி : தினமணி

சுவிட்சர்லாந்தில் மதக் கசப்பு!

சர்வதேச அரங்கில் அரசியல் சாராநிலையையும் மதச்சார்பின்மையையும் கட்டிக்காக்கும் நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது சுவிட்சர்லாந்து. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக எந்த நாட்டுடனும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. இரு உலகப்போர்களின்போதும் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொண்டது. ஆதரவு தேடிவந்த அச்சு நாடுகளுடனும் நேச நாடுகளுடனும் வெறுப்பைச் சம்பாதித்தபோதும், நடுநிலைமை தவறவில்லை என சுவிட்சர்லாந்தைப் பற்றி வரலாறு சொல்கிறது. கூட்டாட்சி ஜனநாயகத்தை அமைத்த இரண்டாவது நாடு என்கிற பெருமையும் சுவிட்சர்லாந்துக்கு உண்டு. அரசு இயற்றும் சட்டங்களை கருத்தறியும் தேர்தல்கள் மூலமாக மக்கள் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்க முடியும். அந்த அளவுக்கு மேம்பட்ட மக்களாட்சியைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நாடாகவும் சுவிட்சர்லாந்து கருதப்படுகிறது. இப்படிப்பட்ட தனித் தன்மைகளைக் கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்து, தனது அடையாளங்களை இழக்கும் அபாயத்தில் இப்போது சிக்கியிருக்கிறது.

சுமார் 78 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் முஸ்லிம்கள். யுகோஸ்லாவியா போன்ற பால்கன் நாடுகளிலிருந்தும் துருக்கியப் பிரதேசங்களில் இருந்தும் இவர்கள் வந்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும், இதுவரையில் பெரிய அளவிலான மத வன்முறைகள் ஏதும் நிகழ்ந்திருப்பதாகத் தகவல் இல்லை. வெளிநாடுகளிடம் எப்படி நல்லபேர் எடுத்திருக்கிறதோ, அதே போல் உள்நாட்டிலும் சர்ச்சைகள் எழாவண்ணம் அடுத்தடுத்து வரும் அரசுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக அங்கு மதங்களுக்கு இடையே கசப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

சில காலம் முன்பு தனது பணியாளர்கள் தொப்பி வைத்து வருவதற்கு சூப்பர் மார்க்கெட் ஒன்றின் நிர்வாகிகள் தடை விதித்ததையடுத்து சர்ச்சை கிளம்பியது. சிறிய அளவிலான போராட்டத்திலேயே இந்தத் தடை உடைக்கப்பட்டது. இதேபோல், பள்ளிகளில் நீச்சல் பயிற்சியின்போது உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை மாணவிகள் அணிவதற்கும் போராட்டத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய அளவிலான விமர்சனங்கள் எழவில்லை. நாட்டின் பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கசப்பு ஏற்படுவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் வரை இருக்கும் முஸ்லிம்களுக்கு சுமார் 150 மசூதிகளே இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றிலும் நான்கில் மட்டுமே சிறிய வகையிலான மினார்கள் எனப்படும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் மசூதிகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தொழுகை நடத்துவதற்கான அறைகளும், கட்டங்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் மினார்கள் அமைக்க அனுமதி கோரினால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அனுமதி தருவதில்லை என்கிற புகார் தொடர்ந்து எழுந்து வந்தது. மினார்கள் என்பது மதம் பரவுவதற்கான மூலமாகவும் அடையாளமாகவும் கருதப்பட்டதே
இதற்குக் காரணம்.

இந்த நிலையில், 2004}ம் ஆண்டில் மசூதி ஒன்றில் மினார் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோதுதான் புதிய வடிவிலான பிரச்னை தலைதூக்கியது. மத அடையாளங்களை வலுப்படுத்துவதற்காகவே மினார்கள் அமைக்க திட்டமிடப்படுவதாக அந்த மசூதியைச் சுற்றியிருந்தவர்கள் சிலர் கூறியதால் விஷயம் விவகாரமானது. அரசியல் ரீதியாகவும் மத அடிப்படையிலும் மினார் அமைப்பதற்கு நெருக்கடி தரப்பட்டது.

ஒருவழியாக குறிப்பிட்ட அந்த மசூதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மினார் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. ஆனால், அதனால் எழுந்த பிரச்னையின் தீவிரம் குறையவேயில்லை. இதுவே தேசிய அளவிலான பிரச்னையாக உருவெடுத்தது. மினார்கள் அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என சில மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. மினார் கட்ட அனுமதிப்பது ஷரியத் போன்ற பிரத்யேகமான சட்டத்தை பின்பற்றச் சொல்வதற்கு முன்னோட்டமாக அமையும் என்று கூறப்பட்டது. கொஞ்ச காலத்தில் மக்களுக்கான போராட்டம் என்பது போன்ற தோற்றம் இதற்கு ஏற்பட்டது.

இதன்பிறகுதான் சுவிட்சர்லாந்து அரசு விழித்துக் கொண்டு நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க முடிவெடுத்தது. வெவ்வேறு தருணங்களில் கூடிய இரு அவைகளும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மினார்கள் தடை செய்யப்படுவதை நாட்டு மக்கள் விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை காக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து வரும் சவிட்சர்லாந்து மக்கள் கட்சி, மினார்களுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டது. அவ்வளவுதான், மினார்கள் பிரச்னை அரசியல் பிரச்னையானது. தெருக்களிலிருந்து இணையம் வரையிலும் பிரசாரம் செய்யப்பட்டது. மினார்கள் கட்டுவது உலகப் பிரச்னையானது.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை முன்பே கூறியதுபோல், மக்கள்தான் பிரதானம். மற்ற நாடுகளுடனான அரசியல் உறவுகள், பன்னாட்டு நிறுவனங்களுடனான உறவுகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிலும் மக்கள் கருத்தறியப்படுகிறது. அந்த வகையில் மினார்கள் கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டதால், இதையும் மக்கள் முடிவுக்கே விட்டுவிட சுவிட்சர்லாந்து அரசு தீர்மானித்தது. அதன்படி, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நடந்து முடிந்திருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, இஸ்லாமிய நாடுகளுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான உறவில் அதிர்வு ஏற்பட்டது. தடை விதிப்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துவிட்டால், உலக அரங்கில் சுவிட்சர்லாந்தின் மரியாதை சரிந்துபோகும் என்பதை உணர்ந்த அரசு, மினார்களுக்குத் தடை விதிக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனப் பிரசாரம் செய்தது. கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முந்தைய கணிப்புகளில், மினார் அமைக்கத் தடை கோருவதை நிராகரித்து பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பாளர்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், முடிவுகள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கின்றன. மினார்கள் கட்டுவ தற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரித்து 57% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

இந்த முடிவுக்கு மொத்தமுள்ள 26 பிரதேசங்களில் 22 பிரதேசங்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் இந்தத் தடை சட்டமாக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் அரசியலிலும் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நிகழ்வாகவே இந்தத் தேர்தல் முடிவு கவனிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளாலும், மினார் கட்டுவதற்கு விதிக்கப்படும் தடைகளாலும் இஸ்லாம் இன்னும் வீரியமாகப் பரவும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கட்டுரையாளர் : பூலியன்

நன்றி : தினமணி

யானை படுத்தால்...

2009 ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவில் உள்ள தொலைபேசி இணைப்புகளில் 92 சதவீதம் செல்போன், மீதி 8 சதவீதம்தான் லேண்ட் லைன் எனப்படும் நிலையான இணைப்புகள்.

நிலையான இணைப்புகள் இந்தியத் தொலைபேசித் துறையால் மட்டுமே அளிக்கப்பட்ட காலத்தில், அதற்காக முன்பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உடனடி இணைப்பு தேவைப்பட்டவர்கள் எம்.பி. கோட்டா போன்ற சிறப்பு ஒதுக்கீடுகளுக்காக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே தொலைபேசித் துறை, பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனமாக மாறியபிறகு, கேட்ட அதே நாளில் இணைப்பு வழங்கினாலும்கூட, இணைப்புகளைத் துண்டிப்போர் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சரி, செல்போனிலாவது பிஎஸ்என்எல் சாதனை நிகழ்த்துகிறதா என்றால், அதிலும் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது.

இந்தியாவில் இணைப்பு வழங்கப்பட்டுள்ள 44.10 கோடி செல்போன்களில், 23.81 விழுக்காடு வாடிக்கையாளர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது பாரத் ஏர்டெல். அடுத்ததாக ரிலையன்ஸ் 18.57, வோடாபோன் 17.81, பிஎஸ்என்எல் 12.67, ஐடியா 8.91, ஏர்செல் 5.23, எம்டிஎன்எல் 1.05, ஸ்பைஸ் 0.99, லூப் டெலிகாம் 0.53, சிஸ்டமா ஷியாம் 0.33, எச்எப்சிஎல் இன்போடெல் 0.09 சதவீத இணைப்புகளை அளித்துள்ளன.

பரவலாக அனைத்து ஊர்கள் மற்றும் நகரங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளன. இது அரசு நிறுவனம். எங்கு வேண்டுமானாலும் செல்போன் டவர்கள் எழுப்ப முடியும். அலுவலர்கள் எண்ணிக்கையோ தனியார் தொலைபேசி நிறுவனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஆனாலும், பிஎஸ்என்எஸ் நிறுவனம் நான்காம் இடத்தில், அதுவும் 12 சதவீத செல்போன் இணைப்புகளை மட்டுமே பெற்றுள்ளது என்றால் இதற்கு யார் காரணம்?
÷தொலைபேசித் துறை தனியார் மயமான பின்னர் அனைவருக்கும் பொதுவான சந்தை வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆனாலும் பிஎஸ்என்எஸ் பின்னடைவுக்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சர்கள் தங்கள் சுயலாபத்துக்காக தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை அடக்கி வாசிக்கும்படி செய்வதும், பிஎஸ்என்எல் அதிகாரிகள் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருப்பதும்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பி.எஸ்என்எல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் குல்தீப் கோயல் இந்த மாதத் தொடக்கத்தில் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தகவல் தொழில்நுட்ப நிலைக் குழுக் கூட்டம் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய குழு உறுப்பினர்கள் பிஎஸ்என்எல் செல்போனில் அழைப்புகள் சரிவரக் கிடைப்பதில்லை என்று குறை கூறினார்கள். டிராய்}ன் செயல்பாட்டு அறிக்கை படி நாம் தனியாருக்கு குறைவில்லாமல் செயல்படுவதை எடுத்துக் கூறியும் திருப்தி அடையவில்லை.......வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர்கள் பிரச்னை எழுப்பும் முன்பாக அந்தந்த பகுதி எம்பி}க்களை அதிகாரிகள் சந்தித்துப் பேசுங்கள். நாம் செய்துவரும் வளர்ச்சிப் பணிகளைச் சொல்லுங்கள்' என்று கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதைப் போலவே, சில அதிகாரிகள் தங்கள் பகுதி எம்பி}க்களை சந்தித்துப் பேசியும் இருக்கிறார்கள்.

அமைச்சர்கள் சொன்னபடி நடந்ததால்தான் இந்தநிலைமை என்றால், ஏன் நாடாளுமன்றத்தில் யாரேனும் கேள்விகேட்டு அம்பலப்படுத்தி விடுவார்களோ என்று அஞ்ச வேண்டும்? எதற்காக எம்பி}க்களைப் பார்த்துச் சமாதானம் செய்ய வேண்டும்? அமைச்சரே இதைச் சரிகட்டிவிட மாட்டாரா? ஏன் பயப்பட வேண்டும்?

அமைச்சர்கள் இன்று வந்து நாளை போகப் போகிறவர்கள் என்பதையும், பிஎஸ்என்எல் நிறுவனம் காலகாலத்துக்கும் இருக்கப்போகும் இந்திய அரசின் சொத்து என்பதையும் இந்த அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் புரிந்துகொண்டிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? அமைச்சர்கள் கட்டாயப்படுத்தினால் செய்ய முடியாது என்று சொல்வதற்கும், அவர்தம் ஊழலை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தவும் இந்த அதிகாரிகள் தயாராக இருந்திருந்தால், இப்போது பி.எஸ்.என்.எல். நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்குமா?

இந்த நிலைக்கு இன்னொரு காரணம், பிஎஸ்என்எல் தன்னை அரசின் அங்கமாகவே நினைத்து மெத்தனமாகச் செயல்படுவதுதான். இந்தியா முழுவதிலும் அலுவலகமும், தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் உள்கட்டமைப்பும், பல மடங்கு ஊழியர்களையும் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல், வெறும் 1 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றிருந்தாலும், இத்தனை ஊழியர்களுக்கும் சம்பளமும், உள்கட்டமைப்புபராமரிப்புச் செலவும் ஒரு சதவீதம்கூட குறையப்போவதில்லை. இருக்கவே இருக்கிறது மக்கள் வரிப் பணம். ஒரு பக்கம் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு. இன்னொரு பக்கம் மக்கள் பணம் செலவாகிறது.

வாய்ப்புகள் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் பொதுவாகிவிட்டன என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. திறமையான அதிகாரிகளை சரியான பதவியில் சரியான இடத்தில் அமர்த்தாததால், திறமையற்ற ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை. பிஎஸ்என்எல் செய்யும் விளம்பரங்கள்கூட, தனியார் விளம்பரங்களுக்கு நிகராக, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக இல்லை என்றால், அதனால் என்ன பயன்? பதிவு செய்து, பல ஆண்டுகள் காத்திருந்த காலம் போய்விட்டது. இப்போது தனியாருக்கு நிகராக களத்தில் இறங்கியாக வேண்டும். இன்னமும்கூட, கோடானுகோடி இந்தியர்களின் மனங்களில் நமது அரசு நிறுவனம்' என்ற மதிப்பு இருக்கிறது என்கிற உண்மையைப் புரிந்துகொண்டு அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற முயல வேண்டும். யானை படுத்தால் குதிரைதான் உயரம். எனவே, யானை எழுந்து நிற்க வேண்டும்.
நன்றி : தினமணி

பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு: பங்குச்சந்தையில் இன்றும் ஏறுமுகம்

பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து, பங்குச்சந்தையில் தொடர்ந்து இன்றும் ஏறுமுகம் காணப் படுகிறது. கடந்த வாரம், துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், நிபுணர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். இதனால், இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் முதல் நாள் ஏற்றம் காண தொடங்கியது. மேலும், ‌முதல் நாளான நேற்று பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டது.
இந்நிலையில்,இன்று தொடங்கிய பங்குச்சந்தையும் ஏறுமுகத்துடன் தொடங்கியது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139.37 புள்ளிகள் அதிகரித்து 17,065.59 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 34.65 புள்ளிகள் அதிகரித்து 5,067.35 புள்ளிகளோடு தொடங்கியது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பங்குகள் 1.24 சதவீதமும், ஸ்டீர்லைட் இன்டஸ்டிரீஸ் 2.06 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 1.09 சதவீதமும், ஹிந்தால்கோ 2.03 சதவீதமும், மாருதி சுசுகி 2.47 சதவீதமும், எஸ்.பி.ஐ., 0.87 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பங்குகள் 0.56 சதவீதமும் ஏற்றம் கண்டன.
ஆசிய பங்குச்சந்தையிலும் இன்று ஏற்றம் காணப்படுகிறது. ஜப்பான் பங்குச்சந்தையில் நிக்கி225, 122.28 புள்ளிகள்(1.31%) அதிகரித்து 9,467.83 புள்ளிகளோடு தொடங்கியது. ஹாங்காங் ஹாங்செங் 118.59 புள்ளிகள்(0.54%) அதிகரித்து 21,940.09 புள்ளிகளோடு‌ தொடங்கியது. சிங்கப்பூர் பங்குச் சந்தையில் 21.48 புள்ளிகள் அதிகரித்து(0.79%) 2,753.60 புள்ளிகளோடும், சீனா சாங்காய் 2.18 புள்ளிகள்(0.07%) அதிகரித்து 3,193.12 புள்ளிகளோடும், தைவான் பங்குச் சந்தை 41.01 புள்ளிகள்(0.54%) அதிகரித்து 7,623.22 புள்ளிளோடும், தென்கெரியா பங்குச் சந்தை‌ கேஸ்பி 6.51 புள்ளிகள்(0.42%) அதிகரித்து 1,562.11 புள்ளிகளோடும், ஆஸ்திரேலியா எஸ் அன்ட் பி/ஏஎஸ்எக்ஸ் 5.1 (0.11%) புள்ளிகள் அதிகரித்து 4,706.40 புள்ளிகளோடும் தொடங்கின.
நன்றி : தினமலர்


உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது?

திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை. சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான 'லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.

யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன. அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது. அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை. விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள். அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை. வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில். கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.

எப்படி திரும்ப எழுந்தது?: திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின. இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும். இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.

திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்: பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட 'கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.

இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?: கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.

உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை: உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன. இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.

இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?: சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம். ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ் வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.

துபாயில் என்ன நடந்தது?: துபாய் அரசுக்கு சொந்தமான 'துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது. ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?

துபாய் திரும்ப எழுமா?: துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கட்டுரையாளர் : சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்