Wednesday, June 24, 2009

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய எல்.ஐ.சி.,திட்டம்

பங்கு சந்தையில் ரூ.50,000 கோடியை இந்த நிதி ஆண்டில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.,ஆஃப் இந்தியா திட்டமிட்டிருக்கிறது. கடந்த வருடம் நாங்கள் ரூ.40,800 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தோம். இந்த வருடம் ரூ.50,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம் என்றார் எல்.ஐ.சி.,யின் மேலாண் இயக்குனர் தாமஸ் மேத்யூ. இந்த நிதி ஆண்டில் இதுவரையிலும் எல்.ஐ.சி., ரூ.8,000 கோடியை பங்கு சந்தையில் முதலீடு செய்திருக்கிறது. இது தவிர அரசுத்துறை பத்திரங்களிலும், கார்பரேட் கடன் பத்திரங்களிலும் எல்.ஐ.சி., முதலீடு செய்திருக்கிறது. நேற்று எல்.ஐ.சி.,யின் சேர்மன் விஜயன் இது குறித்து பேசியபோது, இந்த நிதி ஆண்டில் நாங்கள் 20 சதவீத கூடுதல் பிரீமியம் வருவாயை எதிர்பார்க் கிறோம். புது பிரீமியம் மூலம் கிடைக்கும் வருவாயை பொறுத்தவரை, 2008 - 09 நிதி ஆண்டில் 10 சதவீதம் குறைந்திருந்தது. அது இந்த நிதி ஆண்டில் 25 சதவீதம் உயரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். 2008 - 09 நிதி ஆண்டில் எல்.ஐ.சி.,பிரீமியம் வருவாயாக ரூ.1,55,000 கோடியை பெற்றிருந்தது. அதில் புது பிரீமியம் வருவாய் ரூ.52,000 கோடியும் அடங்கும்.
நன்றி :தினமலர்


பஜாஜ் அறிமுகப்படுத்திய 220 சிசி பல்சர்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், அதன் புதிய 220 சிசி பல்சர் மாடல் பைக்கை நேற்று டில்லியில் அறிமுகம் செய்தது. 21.4 பிஎஸ் பவருடன் வெளிவரும் இந்த புதிய பைக்கின் விலை ரூ.70,000. இதன் அறிமுக விழாவில் பேசிய பஜாஜ் ஆட்டோவின் சி.இ.ஓ.,( இரு சக்கர வாகனம் ) ஸ்ரீதர், நாங்கள் அதிக மைலேஜ் கொடுக்க கூடிய இஞ்சின்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். அவைகளை கொண்டு இந்த வருடத்திற்குள் மேலும் இரண்டு பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார். மேலும் பல்சர் பிரியர்களுக்காக, அதில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி அதன் மேம்படுத்தப்பட்ட மாடல்களை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறோம் என்றார். இப்போது வெளியிட்டிருக்கும் பல்சர் 220 சிசி பைக் தான் இப்போதைக்கு இந்தியாவில் அதிக வேகமாக போகக் கூடிய பைக்காக இருக்கும் என்று சொன்ன அவர், உலகிலேயே அதிக மைலேஜ் கொடுக்க கூடிய டிடிஎஸ் -எஸ்ஐ 2.0 பைக்கை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறோம் என்றார். பஜாஜ் ஆட்டோவின் மேலாண் இயக்குனர் ராஜிவ் பஜாஜ் இது பற்றி பேசுகையில், நாங்கள் வருடத்திற்கு 2.50 லட்சம் பைக்குகளை விற்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


டாடாவின் நானோ காரை பெறுவதற்காக 1.55 லட்சம் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பு

உலகின் மிக மலிவான கார் என்று சொல்லப்படும் டாடா மோட்டார்ஸின் நானோ காரை பெறுவதற்காக, 1.55 லட்சம் வாடிக்கையாளர்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு அடுத்த மாதத்தில் இருந்து நானோ சப்ளை செய்யப்படும். அடுத்த மாதத்தில் துவங்கும் சப்ளை, அடுத்த வருடம் மார்ச்சுக்குள் முடியும். அடுத்த கட்டமாக 55,021 பேருக்கு அதன்பின்னர் நானோ சப்ளை செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. டாடாவின் நானோவுக்காக மொத்தம் 2,06,703 பேர் புக் செய்திருந்தார்கள். அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டிய கார் தயாரிக்கப்பட்டு விட்டது என்றும், அவர்கள் மட்டும் நாங்கள் மார்ச் 23ம் தேதி அறிவித்த எக்ஸ் - ஷோரூம் விலையில் நானோவை பெறுவார்கள் என்றும் சொன்னார்கள்.
நன்றி : தினமலர்



மகிந்திரா சத்யத்திற்கு புது சி.இ.ஓ.,வாக குர்னானி நியமனம்

மகிந்திரா சத்யம் என்று பெயர் மாற்றம் செய்ப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஒ.,வாக சி.பி.குர்னானி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சய் கர்லா என்பவர் டெக் மகிந்திராவின் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே போல் மகிந்திரா சத்யத்தின் புதிய சி.எஃப்.ஓ.,வாக சுப்ரமணியம் துர்கா சங்கரும், டெக் மகிந்திரா மற்றும் மகிந்திரா சத்யத்தில் வைஸ் பிரசிடென்ட் ஆக வினீத் நய்யாரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மகிந்திரா சத்யத்தில் இடைக்கால சி.இ.ஓ.வாக இருந்த ஏ.எஸ் மூர்த்தி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் குர்னானி நியமிக்கப்பட்டிருக்கிறார். குர்னானி இதற்கு முன் டெக் மகிந்திராவின் சர்வதேச நடவடிக்கைகளின் தலைவராக இருந்தவர். ஆனால் ஏ.எஸ்.மூர்த்தி தொடர்ந்து மகிந்திரா சத்யத்தில்தான் இருப்பார். துர்காசங்கர் இதற்கு முன் மகிந்திரா அண்ட் மகிந்திராவின் எம் அண்ட் ஏ பிரிவில் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஆக இருந்தார். நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் நேற்று செவ்வாய் கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்