Saturday, July 4, 2009

சுமார் 12 லட்சம் ரூபாய் விலையுள்ள சவப்பெட்டியில் மைக்கேல் ஜாக்சனின் உடல்

கிங் ஆப் பாப் ' மைக்கேல் ஜாக்சனின் உடல், ரூ.12 லட்சம் விலையுள்ள சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த வியாழன் அன்று மர்மமான முறையில் இறந்து போன மைக்கேல் ஜாக்சனின் உடல் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. செவ்வாய் அன்று அடக்கம் செய்யப்பட இருக்கும் மைக்கேல் ஜாக்சனின் உடல், 25,000 டாலர் ( சுமார் ரூ.12 லட்சம் ) விலையுள்ள தங்க தகடு பதிக்கப்பட்ட, வெண்கலத்தான் ஆன சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மைக்கேல் ஜாக்சனின் சொந்த மாகாணமான இண்டியானாவில் உள்ள பேட்ஸ்வில் கேஸ்கட் கம்பெனியில் இந்த சவப்பெட்டி தயாரிக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


கடும் பொருளாதார நெருக்கடியிலும் ஐக்கிய அரபு குடியரசுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போதும், ஐக்கிய அரபு குடியரசுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து தான் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது மூன்று சதவீதம் அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கும் மற்ற அரபு நாடுகளில் இந்த எண்ணிக்கை 18 சதவீதம் குறைந்திருக்கிறது. இதில் சவுதி அரேபியா தான் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த வருடத்தை விட 10 மற்றும் 8 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் ஐக்கிய அரபு குடியரசில் மூன்று சதவீத வளர்ச்சியும் ஆப்பிரிக்காவில் மூன்று சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


ரயில்வேயின் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கும் வேலை தொடர்பாக நிபுணர் குழு அமைப்பு

இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் பணிக்காக, இந்தியா முழுவதும் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கண்காணித்து, ஆதை மேம்படுத்த ஆலோசனை சொல்ல,மற்றும் திட்டங்கள் தீட்ட, ஒரு நிபுணர் குழு அமைக்கப் படுகிறது. அந்த குழு, இந்தியாவின் டெலிகாம் துறையில் புரட்சியை ஏற்படுத்திய சாம் பிட்ரோடாவை தலைவராக கொண்டு செயல்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். இந்த குழு, ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்றும், இதன் மூலம் நாட்டின் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கும் தகவல் தொழில் நுட்பத்தை எப்படி கொண்டு செல்லலாம் என்றும் ஆராய்ந்து ஆலோசனை சொல்லும் என்று மம்தா தெரிவித்தார். ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் அமைக்கும் பணியை ஏற்கனவே ரெயில்நெட் என்ற நிறுவனம் ஏற்று செய்து வருகிறது. இந்த நிறுவனம் தான் இந்திய டெலிகாம் துறையில் இருந்து அதற்கு தேவையான உரிமத்தை பெற்றிருக் கிறது. ஏற்கனவே ரயில் பாதைகளில் சுமார் 30,000 கி.மீ.தூரத்திற்கு அது ஆப்டிக்கல் ஃபைபர் கேபிளை அமைத்தும் இருக்கிறது. அதனை விரையில் 40,000 கி.மீ.தூரத்திற்கு விரிவு படுத்தவும் அது முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பார்தி ஏர்டெல்லுக்கு நூறு கோடி டாலர் கடன் : ஸ்டேட் பாங்க் கொடுக்கிறது

தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான எம்.டி.எம்.,ஐ வாங்கும் முயற்சியில் இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தையில் இரு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எம்.டி.எம்.,மை தன்னுடன் இணைத்துக்கொள்ள, பார்தி ஏர்டெல்லுக்கு 4 பில்லியன் டாலர்கள் ( சுமார் 19,200 கோடி ரூபாய் ) கடன் தேவைப்படும் என்று சொல்லப் படுகிறது. அதில் ஒரு பில்லியன் டாலர்கள் ( சுமார் 4,800 கோடி ரூபாய் ) கடனை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கொடுக்க முன் வந்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக் கின்றன.இந்தியாவில் கொடுக்கப்படும் மொத்த வங்கி கடனில் நான்கில் ஒரு பங்கை இந்திய அரசு நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாதான் கொடுத்து வருகிறது. பொதுவாக வெளிநாட்டு வங்கிகள் தான் இம்மாதிரியான வேறு நிறுவனங்களை வாங்க தேவையான கடனை கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டும். இப்போது அந்த வரிசையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. எம்.டி.எம்.,மை பார்தி ஏர்டெல் வாங்கி, அதை தம்முடன் இணைத்துக்கொண்டால், அது உலகின் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் நிறுவனமாகி விடும். அப்போது அந்த நிறுவனத்திற்கு 20 கோடி சந்தாதாரர்கள் இருப்பார்கள். வருடத்திற்கு 20 பில்லியன் டாலர் ( சுமார் 96,000 கோடி ரூபாய் ) வரை வருமானம் கிடைக்கும். இது குறித்து பெயர் தெரிவிக்க மறுத்த ஒரு ஸ்டேட் பாங்க் உயர் அதிகாரி, எங்களது வாடிக்கையாளர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல்லுக்கு, எம்.டி.எம்.,நிறுவனத்தை வாங்க தேவையான பணத்தில், ஒரு பில்லியன் டாலர்களை கடனாக கொடுக்க தீர்மானித்திருக்கிறோம் என்றார். மேலும் அவர் தெரிவித்தபோது, அந்த கடன் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் கொடுக்கப்படும் என்றார். ஒரு பில்லியன் டாலர் போக மீதி மூன்று பில்லியன் டாலர்களை, பார்தி எர்டெல்லுக்கு இந்த விஷயத்தில் ஆலோசகராக செயல்படும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பேங்க் கொடுக்கும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்