Wednesday, March 11, 2009

மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக முதலீடு செய்வதை ஐ.பி.எம்.நிறுத்தவில்லை

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், பிரபல ஐ.டி.நிறுவனமான ஐ.பி.எம்., மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக செய்யும் முதலீட்டை குறைக்கவில்லை. ஐ.பி.எம்.மின் தலைமை அதிகாரி சாமுவேல் பால்மிசனோ, அதன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும் நாங்கள் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள் பின்நோக்கி பார்ப்பது இல்லை. எப்போதுமே முன்நோக்கி தான் பார்க்கிறோம். தொடர்ந்து ஆர் அண்ட் டி சென்டர்களை நிறுவுவதிலும், மற்ற கம்பெனிகளை வாங்குவதிலும், வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுவதிலும் முதலீடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த இக்கட்டான வேளையிலும் நாங்கள் ஊழியர்களை குறைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில்தான் ஐ.பி.எம். நிறுவனம், நிதி மோசடியில் சிக்கியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்திருந்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸூம் அதன் 51 சதவீத பங்குகளை விற்கும் ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
நன்றி : தினமலர்


நிதி விவகாரங்களில் இந்தியாவின் நம்பர் ஒன் நம்பகமான நிறுவனம் டாடா குரூப் தான்

நிதி விவகாரங்களை பொறுத்தவரை இந்தியாவின் நம்பகமான கம்பெனி என்ற வரிசையயில் டாடா குரூப் தான் முதல் இடத்தில் வருகிறது. இந்திய முதலீட்டாளர்களிடையே இந்தியாவின் முதல் 10 நம்பகமான கார்பரேட் நிறுவனம் எவைகள் என்று எடுத்த கருத்து கணிப்பில் இது தெரிய வந்திருக்கிறது.ரத்தன் டாடாவுக்கு சொந்தமான டாடா குரூப்பிற்கு அடுத்தபடியாக இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி.குரூப், எல் அண்ட் டி, ஆதித்த பிர்லா ஆகியவை வருகின்றன. சத்யம் கம்ப்யூட்டரில் நடந்ததாக நம்பப்படும் ரூ.7,800 கோடி அளவிலான நிதி மோசடியை அடுத்து, ஈக்குவட்டி மாஸ்டர் என்ற ஈக்குவட்டி ரிசர்ச் நிறுவனம், நிதி விவகாரத்தில் இந்தியாவின் நம்பகமான கம்பெனி எது என்று கருத்து கணிப்பு நடத்தியது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நடந்த நிதி மோசடி ஜனவரி மாதத்தில் வெளியே தெரிய வந்ததில் இருந்து மற்ற நிறுவனங்களின் நிதி அறிக்கை மீது முதலீட்டாளர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று அந்த நிறுவனம் கருத்து கணிப்பு எடுத்தது. அதில் முதல் இடத்தில் டாடா குரூப்தான் வருகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஒன்பதாகவும் அணில் அம்பானியின் நிறுவனம் பத்தாகவும் வந்திருக்கிறது. பார்தி ஏர்டெல், சுந்தரம்/டி.வி.எஸ் குரூப், மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியளை முறையே ஆறு, ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கிறது.
நன்றி : தினமலர்


மரணத்தை நெருங்கினார் ஜேடி கூடி : நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் சாக விருப்பம்

பிரிட்டனில் நடந்த டெலிவிஷன் ஷோ ஒன்றில், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியுடன் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் பிரிட்டிஷ் நடிகை ஜேடி கூடி. கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றி உடல் முழுவதும் பரவி விட்டதால் அவருக்கு அளிக்கப்பட்ட சீமோதெரபியால் பயனில்லாமல் போய்விட்டது. எனவே இனிமேல் அவர் பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இப்போது மரணத்தை நெருங்கி விட்ட ஜேடி கூடி, நான் ஆஸ்பத்திரி படுக்கையில் சாக விரும்பவில்லை; எனது வீட்டில் அதுவும் எங்கள் வீட்டுக்கு பின்பக்கம் இருக்கும் புல்வெளியை பார்த்தபடி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் சாகவே விரும்புகிறேன் என்று சொன்னதால், ஆஸ்பத்திரியில் இருந்து அப்ஷயர் என்ற இடத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு கூட்டி செல்லப்பட்டார். அவரது கண்பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதால், இனிமேல் பார்வை தெரிய வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டதால், அவரது இரண்டு குழந்தைகளை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை. வரும் ஞாயிறு அன்று தான் இவருக்கும் ஜேக் என்பவருக்கும் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருக்கும் சர்ச்சில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஜேடி கூடியின் கடைசி ஆசையாகவும் அது இருந்தது. ஆனால் அதற்குள் இவர் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு விட்டார். ஞாயிறு வரை இவர் உயிருடன் இருப்பாரா, இவருக்கும் ஜேக் க்கும் திருமணம் நடக்குமா என்று தெரியவில்லை. இவரது திருமணத்திற்கு ஷில்பா ஷெட்டியை ஜேடி கூடி அழைத்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு வரமுடியாது என்று ஷில்பா சொல்லி விட்டார். இப்போது எனது சவ அடக்கத்திற்காகவாவது வாருங்கள் என்று ஷில்பா ஷெட்டி யை ஜேடி கூடி அழைத்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


நார்வேயின் பிரபல வங்கி மும்பையில் பிரதிநிதி அலுவலகம் திறந்தது

நார்வேயை சேர்ந்த பிரபல வங்கி ' டெப் நார் ' மும்பையில் பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறது. இது தான் அந்த வங்கிக்கு இந்தியாவில் இருக்கும் ஒரே பிரதிநிதி அலுவலகம். ஆசியாவிலேயே கூட அதற்கு இருக்கும் இரண்டாவது அலுவலகம் இதுதான். ஆசியாவில் இன்னொரு அலுவலகம் சிங்கப்பூரில் இருக்கிறது.தற்சமயம் அதற்கு 18 நாடுகளில் அலுவலகங்கள் இருக்கின்றன. சர்வதேச அளவிலான அதன் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாக மும்பையில் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதாக ' டெப் நோர் ' குரூப்பின் தலைமை அதிகாரி ரூனே பெர்கே தெரிவித்தார். இந்திய ஷிப்பிங், எனர்ஜி துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கும், இந்தியாவில் இருக்கும் நார்வேயை சேர்ந்த கம்பெனிகளுக்கும் மும்பை அலுவலகம் சேவை செய்யும் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே நாங்கள் இந்தியாவை சேர்ந்த ஷிப்பிங், ஆஃப்ஷோர், லாஜிஸ்டிக், மற்றும் எனர்ஜி துறை சம்பந்தமான நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இங்கு எங்களுக்கு அலுவலகம் இல்லாமல் இருந்ததால் அவர்களுக்கு சேவை செய்வதில் நிறைய சிரமங்கள் இருந்தன. அதுனால்தான் இங்கு அலுவலகம் திறந்தோம். மற்ற வெளிநாட்டு வங்கிகளை விட, அதிகமான இந்திய ஷிப்பிங் கம்பெனிகளுக்கு நாங்கள்தான் சேவை அளித்து வருகிறோம். இந்தியாவில் இருக்கும் பெரிய ஷிப்பிங் கம்பெனிகளில் 5 முதல் 8 கம்பெனிகள் வரை எங்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்றார் ரூனே.
நன்றி : தினமலர்