Thursday, February 26, 2009

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து மதியம் 2.30 மணி வரை குறைந்திருந்த குறியீட்டு எண், அதன் பின்னர் உயர துவங்கியது. மதியத்திற்கு மேல் பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்ததால் மதியத்திற்கு மேல் பங்கு சந்தை உயர ஆரம்பித்தது. ஆட்டோ, மெட்டல், டெலிகாம், ஆயில் கம்பெனிகளில் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், எஸ்.பி.ஐ., ரான்பாக்ஸி, ஹெச்.டி.எஃப்.சி, டாடா பவர், விப்ரோ, மற்றும் ஹின்டல்கோ ஆகிய நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சர்வதேச பங்கு சந்தைகளில் இருந்த ஏற்ற நிலை மற்றும் பணவீக்க விகிதம் குறைந்திருப்பதாக வந்த அறிவிப்பு போன்றவையும் சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 52.30 புள்ளிகள் ( 0.59 சதவீதம் ) உயர்ந்து 8,954.86 புள்ளிகளில் முடிந்திருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 23.15 புள்ளிகள் ( 0.84 சதவீதம் ) உயர்ந்து 2,785.65 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 3.36 சதவீதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் 3.92 சதவீதமாக இருந்தது.
நன்றி : தினமலர்


பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தில் நிர்வாகத்தின் பங்கை அதிகரிக்க திட்டம் ?

இ.பி.எஃப்., எனப்படும் எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தில்,தொழிலாளர்களுக்கு அதிக பயன்கள் கிடைக்க செய்வது எப்படி என்பதை ஆராய்ந்து அறிக்கை கொடுக்க இரண்டு கமிட்டிகளை நியமித்திருப்பதாக மத்திய அரசு இன்று பார்லிமென்ட்டில் தெரிவித்தது. பார்லிமென்ட்டில் இன்று இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்ணான்டஸ், ஆறாவது சம்பள கமிஷனுக்காக எம்ப்ளியீஸ் பென்சன் ஸ்கீம் 1995ல் மாற்றம் எதுவும் செய்யப்போவதில்லை என்றும், இ.பி.எஃப் குறித்து ஆராய்ந்து அறிக்கை கொடுக்க இரண்டு தனி குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அதில் ஒரு குழு, தனி செகரட்டரி தலைமையில் கூடி, இ.பி.எஃப்., திட்டத்தில் தொழிலாளர்களுக்கு எப்படியெல்லாம் பயனை அதிகரிக்க செய்யலாம் என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்கும் என்றார். அவர்களது அறிக்கை கிடைத்ததும், அது பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றார். இ.பி.எஃப்., திட்டத்தின் முழு பயன்களை தொழிலாளர்கள் அடைய செய்வதற்காக, இ.ப்.எஃப்.,திட்டத்தில் அரசு மற்றும் நிர்வாகம் செலுத்தும் பங்கை அதிகரிக்க செய்யலாமா என்று ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்திருக்கிறது. மன்மோகன் சிங்கிற்கு பதிலாக பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இனிமேல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி, 22 சதவீதம் கொடுக்கப்படும் என்றார். ஜனவரி 2009ல் இருந்து இது கணக்கிட்டு கொடுக்கப்படும் என்றார் அவர்.
நன்றி : தினமலர்


மார்ச் 23ம் தேதி வெளிவருகிறது டாடாவின் ' நானோ ' கார்

உலகின் மிக மலிவான காரான ' நானோ 'வை, வரும் மார்ச் மாதம் 23ம் தேதி மும்பையில் வர்த்தக ரீதியாக டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ஏப்ரலில் இருந்து அந்த காருக்கான புக்கிங் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனவரி 2008 ல் புதுடில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ வில் பொதுமக்களுக்காக நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், வர்த்தக ரீதியாக வரும் மார்ச் 23ம் தேதிதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. மும்பையில் மார்ச் 23ம் தேதி இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியா முழுவதிலும் இருக்கும் டாடா மோட்டார்ஸின் டீலர்களிடம் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் இது பார்வைக்கு வைக்கப்படும். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்துதான் அதற்கான புக்கிங் ஆரம்பமாகும். புக்கிங் விபரங்கள், 23ம் தேதி நடக்கும் அறிமுக விழாவில் சொல்லப்படும் என்று டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 2008 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ கார் ஜெனிவாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதனை பார்வையிட்ட வெளிநாட்டு கார் கம்பெனிகள், தாங்களும் இம்மாதிரி குறைந்த விலை காரை தயாரிக்க வேண்டும் என்று எண்ணின. பிரான்சின் நிஸன் - ரெனால்ட் நிறுவனம், குறைந்த விலை ஃபேமிலி காரை விரைவில் வெளியிடுவதாக அப்போது அறிவித்தது. ஆனால் பொருளாதார மந்த நிலை காரணமாக அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்