Friday, August 20, 2010

இது ரசிகனின் குரல்...

சென்னையிலுள்ள திரையரங்குகளில் நடைபெறும் பகல் கொள்ளை ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

மாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, துணை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரி ஒருவரைக் கொண்டு திரையரங்குகளில் நடைபெறும் சுரண்டல்களையும் பகல் கொள்ளைகளையும் விசாரித்து அதன் அடிப்படையில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. குறிப்பாக, திரைப்படம் பார்க்கவரும் ரசிகர்கள் குடிதண்ணீர், நொறுக்குத்தீனி போன்றவற்றை வெளியிலிருந்தோ தங்களது வீட்டிலிருந்தோ கொண்டு வரக்கூடாது என்று தடுப்பதும், பாதுகாப்பு என்ற பெயரில் அவற்றை அரங்குக்குள் நுழையும்போதே சோதித்துப் பறிப்பதும் தனிமனித உரிமை மீறல் என்று மாநில மனித உரிமை ஆணையம் கருதுகிறது என்பதை கரகோஷத்துடன் வரவேற்க வேண்டும்.

திரையரங்குகளில் நடைபெறும் கொள்ளைகளைத் தட்டிக் கேட்க யாருமில்லையே என்கிற மனப்புழுக்கத்துடன் படம்பார்க்க வரும் ரசிகர்கள்தான் பெரும்பாலோர். வெளியில், வெறும் 12-க்கு விற்கப்படும் மினரல் வாட்டர் திரையரங்குகளில் 30 முதல் 40. பாப்கார்ன் சிறியது 50, பெரியது 100 என்று விற்பது வெளியில் வெறும் பத்தே ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு காபி குடிக்க வேண்டுமானால் இந்தத் திரையரங்குகளில் 40 செலவழித்தாக வேண்டும். சென்னையிலுள்ள அதிநவீன திரையரங்குகளில் தொடங்கிய இந்த "தியேட்டர் கொள்ளை' இப்போது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

அதிநவீனத் திரையரங்குகள் சுமார் 10 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகின்றன. இந்தத் திரையரங்குகளில் உள்ள வசதிகள் முதலீடு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது நியாயம்தான். ஆனால், அந்தக் கட்டணம் இவ்வளவுதான் என்கிற நிர்ணய வரம்பு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் அநியாயம்.

அதிநவீனத் திரையரங்குகளில் குறிப்பிட்ட இடங்கள் சாதாரண ரசிகனுக்கும் பயன்படும்படியாகக் குறைந்த கட்டணத்தில், அதாவது பத்தே பத்து ரூபாய் என்று அமைய வேண்டும் என்பது அரசின் நிபந்தனை. அதற்காக, ஒரு கண்துடைப்புப்போல, திரையை ஒட்டிய முதல் வரிசையை மட்டும் குறைந்த கட்டணம் என்று ஒதுக்குகிறார்கள். அதை ஒட்டுமொத்தமாக வாங்கி கறுப்பு மார்க்கெட்டில் விற்றுப் பணம் சம்பாதிப்பதற்கென்றே திரையரங்கு உரிமையாளர்களின் ஆசியுடன் இயங்கும் ஒரு "தாதா' கும்பல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏனைய அத்தனை சீட்டுகளும் 100 ரூபாய் கட்டணத்துக்கு மேல். இந்த அதிநவீனத் திரையரங்குகளில் 100 அல்லது 120 என்கிற இரண்டே கட்டணங்கள்தான்.

திரையரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் பகுதி, அந்த அரங்கத்தின் தொழில்நுட்பம், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில், திரையின் அருகில் சற்று பின்னால், அதற்கும்பின்னால், அதிகம் பின்னால் அமைந்த இருக்கைகளுக்கு ஏற்பக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட காலம், எம்.ஜி.ஆரின் ஆட்சியுடன் போய்விட்டது என்பதுதான் யதார்த்த உண்மை.

திரையரங்குகளில் இருக்கைக் கட்டணம் 100 அல்லது 120 என்று நிர்ணயிக்கப்பட்ட பிறகு அந்தக் கட்டணத்தைத்தானே எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வசூலிக்க வேண்டும். அப்படியொரு லாஜிக்கும் இன்றைய திரையரங்குகளில் கிடையாது. பிரபல நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, இருக்கைக் கட்டணத்தைத் திரையரங்குகளே தீர்மானித்துக் கொள்கின்றன. சில திரைப்படங்களுக்கு 1,000 வரை கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் திரையரங்குகள் பல.

குறைந்தது 1,000 இல்லாமல் குடும்பத்துடன் திரையரங்குக்குப்போய் திரைப்படம் பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதால்தானே திருட்டு டிவிடிக்கள் கோலோச்சுகின்றன. திருட்டு டிவிடிக்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிடும் திரைப்படத்துறையினர் திரையரங்குகளின் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி வற்புறுத்தாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை.

கட்டணம் வசூலிப்பது திரையரங்குகள் தரும் வசதிக்காகவே தவிர, இன்னார் திரைப்படத்துக்கு இன்ன கட்டணம், இத்தனை நாள்களுக்கு இவ்வளவு கட்டணம் என்று திரையரங்குகளே தீர்மானிப்பது பகல்கொள்ளை என்று தெரிந்தும் அரசு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறதே அதன் காரணம்தான் புரியவில்லை. அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரிய அளவில் திரைப்படத் தொழிலில் ஏகபோக உரிமை செலுத்தத் தொடங்கியிருப்பது சமீபகாலத்தில்தான். ஆனால், இந்த நிலைமை நீண்டநாள்களாகவே தொடர்கிறது.

திரையரங்குகளின் கட்டணம், முதலீடு, தரம், வசதிகளைப் பொறுத்து 100 அல்ல, 1,000 கூட நிர்ணயிக்கப்படட்டும். வசதி உள்ளவர்கள் அங்கேபோய் திரைப்படம் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால், நடிகருக்குத் தகுந்தபடி, படத்துக்குப் படம் இந்தக் கட்டணம் வேறுபடுவது என்பது ஏற்புடையதல்ல. பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்தக் கட்டண நிர்ணயமுறை எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதன் காரணம் புரியவில்லை. ஆட்சிகள் மாறின. கட்சிகள் மாறின. கட்டணக் குளறுபடி மட்டும் மாறாமல் தொடர்கிறது.

திரையரங்குகள் வாடிக்கையாளர்களுக்கு முறையான விலையில் மட்டுமே உணவுப்பொருள்களை விற்க வேண்டும். ரசிகர்கள் கொண்டுவரும் உணவுப்பொருள்களைத் தடை செய்வது ஏற்புடையதல்ல. திரையரங்குகள் அசுத்தமாகும் என்பது அபத்தமான வாதம். அதற்காகத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள். திரைப்படக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்வது திரைப்படத்துறையினருக்கும் நல்லதல்ல; நடிகர்களுக்கும் நல்லதல்ல.

இந்தப் பிரச்னைகளை மக்கள் மன்றத்தின் விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நமது பாராட்டுகள்!
நன்றி : தினமணி