Friday, August 15, 2008

ஆறாவது சம்பள கமிஷன் குறித்த அரசு அறிவிப்புகள் என்ன?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தில் பணிபுரிவோருக்கான சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை சம்பளக் கமிஷன் அமைக்கப்படும். இதன்படி, ஆறாவது சம்பளக் கமிஷன், நீதிபதி பி.என்.ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன், கடந்த மார்ச் மாதம் தன் அறிக் கையை சமர்ப்பித்தது. ஆனால், கமிஷன் பரிந்துரைகளில் முரண்பாடுகள் இருப்பதாக, சில தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. உடன், அந்த முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற் றை களைவதற்கான யோசனைகளை வழங்கவும், கேபினட் செயலர் தலைமையில் செயலர்கள் அடங்கிய அதிகாரக் குழு ஒன்று அமைக்கப் பட்டது. அந்தக் குழுவும் தன் பரிந்துரைகளை சமர்ப்பித்து விட்டது. இதையடுத்து, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் மற்றும் செயலர்கள் குழுவின் பரிந்துரைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ராணுவ அமைச்சர் அந்தோணி, நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் நேற்று முன்தினம் விவாதித்தனர். பின்னர், நிருபர்களிடம் பேசிய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியதாவது: ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதன் மூலம், மத்திய அரசு பணியில் கீழ்மட்ட அளவில் உள்ள ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம், தற்போதுள்ள ஆறாயிரத்து 660 ரூபாயிலிருந்து ஏழாயிரம் ரூபாயாக உயர்கிறது. இதனால், கீழ்மட்ட அளவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அலவன்ஸ்களைச் சேர்த்து, மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுவார். அத்துடன், ஆண்டுக்கு 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை ஊதிய உயர்வும் கிடைக்கும். ராணுவத் துறையைப் பொருத்தமட்டில், அனைத்து படைகளிலும் பணியாற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று பதவி உயர்வு கிடைக்க வகை செய்யப் பட்டுள்ளது. திருத்தி அமைக்கப் பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த பதவி உயர்வு வழங்கப்படும். சம்பளக் கமிஷன் பரிந்துரைகளின்படி, உயர்த்தப்பட்ட புதிய சம்பளத்தை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினர் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அக்டோபர் 1ம் தேதி புதிய சம்பளம் கிடைக்கும். 2006 ஜனவரி முதல் தற்போது வரையிலான நிலுவைத் தொகை இரண்டு தவணையாக வழங்கப்படும். அதாவது, இந்த நிதியாண்டில் 40 சதவீத தொகையும், 2009-10ம் ஆண்டில் 60 சதவீத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். புதிய சம்பளக் கமிஷன் அமலுக்கு வந்தால், மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள், தலைமைச் செயலருக்கு இணையாக மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறலாம். மாற்றி அமைக்கப்பட்ட சம்பள விகிதத்தில் உள்ள சில முக்கிய அம்சங்களை, பிரதமர் மன்மோகன் சிங் தன் சுதந்திர தின உரையில் அறிவிப்பார். இந்த கூடுதல் சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, நடப்பு பட்ஜெட்டில் 15 ஆயிரத்து 717 கோடி ரூபாயும், ரயில்வே பட்ஜெட்டில் ஆறாயிரத்து 414 கோடி ரூபாயும் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள பில் தொகை இனி 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சென்று விடும். ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் தொகை 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும். ராணுவத்தினருக்காக, ராணுவச் சேவைகள் சம்பளம் வழங்க மத்திய அரசு முதன்முறையாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ராணுவ அதிகாரிகள் தங்களின் மாதச் சம்பளத்திற்கு அதிகமாக, ஒவ்வொரு மாதமும் ஆறாயிரம் ரூபாய் கூடுதலாகப் பெறுவர். அதிகாரிகள் அந்தஸ்திற்கு குறைவானவர்கள் மாதம் இரண்டாயிரம் ரூபாய் பெறுவர். மேலும், உடல் ஊனம் காரணமாக ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறுவோருக்காக குறைந்த பட்ச ஓய்வூதியமும் மாதம் மூன்றாயிரத்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தாஸ் முன்ஷி கூறினார்.

எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோருக்காக குரூப் இன்சூரன்ஸ் திட்டம் துவக்கம்

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோருக்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக 'குரூப் இன்சூரன்ஸ்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 6 மாவட்டங்களில் வசிக்கும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட 250 பேருக்கு பயனளிக்கும் வகையில் 'குரூப் இன்சூரன்ஸ் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பெறுவதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ30 ஆயிரத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் கர்நாடகாவில் உள்ள எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் அமைப்பும், சர்வதேச மக்கட் தொகை சேவை அமைப்பும் ஸ்டார் ஹெல்த் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனியுடன் இணைந்து, இத்திட்டத்தை துவக்கிவைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் எச். ஐ.வி., பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவமனை செலவுக்காக ரூ, 15 ஆயிரமும், இறப்புக்கு பின் அவரது குடும்பத்தாருக்கு ரூ15 ஆயிரமும் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் கே.சுஜாதா ராவ் துவக்கி வைத்து பேசுகையில், 'நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோர் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேர் உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை பெறுவதற்கு நிதி உதவி கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்' என்றார்.
நன்றி : தினமலர்