Friday, December 25, 2009

புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு

கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது.​ சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள்,​​ அமைப்புகள்,​​ இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.

இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம்.​ ​ மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது.​ இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால்,​​ ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும்,​​ முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான்.​ அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது.​ உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது.​ ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது,​​ சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது;​ பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால்,​​ அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது.​ உலக நாடுகள் அனைத்தையும்,​​ ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் -​ கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும்,​​ வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால்,​​ அவற்றோடு சேர்ந்து பூமிக்கும்,​​ கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது.​ இவை ​ -​ நிலக்கரியும்,​​ பெட்ரோலியப் பொருள்களும் -​ சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம்,​​ காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது.​ இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் ​ பெருக்கின.​ இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின.​ கூடவே,​​ காடுகள் அழிக்கப்பட்டதும்,​​ பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும்,​​ அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும்,​​ பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன.​ உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று,​​ நீர்,​​ அனைத்தும் ​ மாசுபட்டன;​ ​ மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின.​ வளர்ச்சியும்,​​ முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால்,​​ சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.

இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும்,​​ அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் ​ வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது.​ பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து,​​ மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது.​ பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின.​ இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால்,​​ மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை ​ எழுந்தது.

​ ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி,​​ அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது.​ இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.​ இதையடுத்து ஐ.நா.​ முயற்சியில் 1989,​ 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.​ கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள்,​​ கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா.​ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் ​ உருவாக்கப்பட்டன.​ ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும்,​​ 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன.​ தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது.​ இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா.​ 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.

1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா.​ கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது.​ புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும்,​​ இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்;​ வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால்,​​ அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ,​​ கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது;​ ​ என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள்,​​ வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி,​​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது.​ இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன.​ ​ இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.​ இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து -​ இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் -​ வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.​ இந்த 1992-ன் ஐ.நா.​ கோட்பாடு,​​ உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும்,​​ இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது.​ இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா.​ எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.

எனினும்,​​ இந்த ஐ.நா.​ கோட்பாடு அடுத்தடுத்த ​ பேச்சுவார்த்தைகளுக்கும்,​​ மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.​ புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும்,​​ உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக,​​ சிறு தீவு நாடுகள்;​ தாழ்நிலைக் கடலோர நாடுகள்;​ சதுப்பு நிலம்,​​ காடுகள் நிறைந்த நாடுகள்;​ ​ ​ இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்;​ வறட்சி -​ பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்;​ நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்;​ எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்;​ எரிபொருள்களை ​(நிலக்கரி,​​ எண்ணெய்)​ எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள்,​​ சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது;​ வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.

ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா.​ கோட்பாட்டுக்கு,​​ வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது.​ ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும்,​​ 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் ​ சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது.​ 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு,​​ வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் ​(கரியமில வாயு)​ வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது.​ 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே,​​ புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ ​ உடன்பாட்டின் மையக் கோட்பாடு.​ இதுவே பொதுவான -​ ஆனால் பாகுபடுத்தப்பட்ட -​ பொறுப்புகள் என்று அறியப்பட்டது.​ இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா ​ இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி,​​ இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.

இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது.​ இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும்,​​ வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து,​​ கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.

சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும்,​​ கோபன்ஹேகனில் குழுமி,​​ ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு,​​ "பூமண்டலம் காப்போம்;​ ​ புவிவெப்பம் ​ தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.

இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று,​​ ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது.​ ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ,​​ சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ​ ஏற்க மறுத்தார்.

தனிநபர் சராசரிக் கணக்கில்,​​ இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா,​​ தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல்,​​ வளரும் நாடுகள் -​ குறிப்பாக சீனாவும் இந்தியாவும் -​ கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது;​ ​ அது மட்டுமல்ல,​​ வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.

வளரும் நாடுகள் ஜி -​ 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.

சர்வதேச நிதி நெருக்கடியின்போது,​​ வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது.​ கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில்,​​ அமெரிக்காவையும்,​​ வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.​ ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,​​ பிரேசில்,​​ தென்ஆப்பிரிக்கா,​​ இந்தியா,​​ சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன;​ ​ இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.

​ கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது,​​ 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே,​​ கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள்.​ இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.

இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள ​(கரியமில வாயு ​ குறைப்புக்கான)​ பொறுப்பு என்பது,​​ வளரும் நாடுகளான இந்தியா -​ சீனாவோ,​​ இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் -​ ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல்.​ கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக,​​ சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது. ​

பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 -​ 2012-ல் 3000 கோடி டாலரும்,​​ 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.​ ஆனால்,​​ கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!
கட்டுரையாளர் : உ .ரா.​ வரதராசன்
நன்றி : தினமணி

வகுபடாத காலத்தை வகுத்த பெருமகன்!

""நீங்கள் என்னை விட்டு விலகி இருக்கும்போது விண்ணரசை விட்டு விலகியிருக்கிறீர்கள்;​ ​எனக்குப் பக்கத்திலிருக்கும்போதோ நெருப்புக்குப் பக்கத்தில் இருக்கிறீர்கள்''.

​ இது 2000 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய ஊருக்கு வந்த தாமசின் நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் ஒப்பற்ற வைரவரிகள்.​ இயேசு பேசியதெல்லாமே கவிதைதான்.

யார் யார்க்கும் விண்ணரசை அடைவதுதானே நோக்கம்.​ இயேசு நம் பக்கத்திலேதானே இருக்கிறார்;​ அவரை விட்டு விலகினால்தானே விண்ணரசு விலகிப் போகும்.​ பக்கத்திலேயே இருப்போம் என்று ஒருவன் இந்த வசதியான முடிவுக்கு வந்தால்,​​ அவனை இயேசு எச்சரிக்கிறார்:​ ""எனக்குப் பக்கத்திலிருக்கும்போது நெருப்புக்குப் பக்கத்திலிருக்கிறீர்கள்''.

பிறந்தபடியே சாவதற்கு இயேசு தேவையில்லை.​ மாற்றமுறுவதற்கும்,​​ மாசுகள் நீங்கப் பெறுவதற்குமே இயேசு தேவை.​ மாசுகள் நீங்கப் பெறுவது எளிதில்லை.​ பாடுகளை ஏற்க வேண்டும்.​ இயேசுவைத் தொட்டுக் கொண்டு திரிவதனால் மட்டுமே விண்ணரசு கிட்டி விடாது.

முதலில் மாற்றத்தை விரும்ப வேண்டும்;​ அது பாடுகளின் வழியாக அன்றி வெறும் வழிபாடுகளின் வழியாக வராது என்பதையும் தேர்ந்து தெளிந்து விட வேண்டும்.​ அந்தக் குறைந்த அளவு அறிவாவது இருந்தால்தான் இயேசுவால் உதவ முடியும்.

"கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்' என்று இயேசு சொல்வார்.​ எல்லாருக்கும்தான் காது இருக்கிறது;​ நுண்மையான ஒலிகளைக் கேட்கும் ஆற்றல் கூட அக் காதுகளுக்கு இருக்கிறது.​ இருந்தும் என்ன பயன்?​ மாற்றத்துக்கான மனவிருப்பம் பெறாதவனுடைய காதுகள் கேட்டும் கேளாத்தகையவையே.​ அவனுக்கு இயேசு பேசுவது காதில் விழாதே.​ மாறாக செவிடனுக்கும் இயேசு பேசுவது கேட்கும்,​​ அவன் மனம் திரும்ப விருப்பமுடையவனாக இருந்தால்.

கேட்கச் செவியுள்ளவர்களுக்கு இயேசு சொல்கிறார்:​ ""உங்களை நான் இளைப்பாற்றுகிறேன்;​ என் நுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்;​ என் நுகம் அழுத்தாது;​ என் சுமை எளிது;​ நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உடையவன்.​ ​(மத்:​ 11 :​ 28)

வாழ்க்கை எளிதானதில்லை;​ சிக்கலானது;​ அந்தச் சிக்கலை அவிழ்க்க முயன்று மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்வதுதான் மனித இயல்பு.​ அந்த முயற்சியில் அவர்கள் களைத்தும் போய்விடுகிறார்கள்.​ அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக உறுதி அளிக்கிறார் இறைமகன் இயேசு.​ ஆயினும் எந்தப் பாடும் இல்லாமல் உய்வு கிட்ட முடியாதே;​ பிற நுகத்தடிகளைப் போலன்றி அழுத்தாத நுகத்தடியை நான் உங்களுக்குத் தருகிறேன் என்கிறார்.

வாய்மையே வடிவானவர் இயேசு.​ என்னைப் பின்பற்றினாலே போதும்;​ உடனடியாக விடுதலை கிடைக்கும் என்று அவர் சொல்லவில்லை.​ கழுத்துப் புண்ணாகும் அளவுக்குக் கடினமான நுகத்தடிகளை விட்டுவிட்டு,​​ அழுத்தாத என் நுகத்தடிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் அழைக்கிறார்.​ ஆனால் நுகத்தடி இல்லாமல் விண்ணரசு வேண்டும் என்பார்க்கு இயேசுவிடம் விடை இல்லை.​ உயர்நிலை எய்துவது மனித முயற்சி சார்ந்ததுதான்.​ பாடுகள் தவிர்க்க இயலாதவை;​ ஆனால் குறைவான பாடுகளில் நிறைவான வாழ்வை இறைமகன் இயேசுவால் பெற்றுத்தர முடியும்.

வாழ்வின் கடைசிக்கட்டத்தில் தன்னுடைய போதனைகளையெல்லாம் சுருக்கி ஒரு கட்டளை பிறப்பிக்கிறார்;​ அதைப் புதிய கட்டளை என்று இயேசுவே சொல்கிறார்.​ இயேசுவின் நுகத்தடி எளிதானது என்பதற்கும் பின்பற்றத் தகுந்தது என்பதற்கும்,​​ ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை என்பதற்கும் அந்தக் கட்டளையே சான்று.

""ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.​ நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் பிறரிடம் அன்பு செலுத்துங்கள்.'' ​(யோவான் 13 :​ 34)

தான் வாழ்ந்து காட்டிவிட்டுப் பிறரைப் பின்பற்றச் சொல்கிறார் இயேசு.​ இயேசு வெறுப்பையே அறியாதவர்;​ அன்புதான் அவருடைய வாழ்க்கை;​ அன்புதான் அவருடைய வாழ்வின் செய்தி.

இரவு உண்பதற்கு ஒருவருக்குத்தான் உணவிருக்கிறது.​ அதை வெளிக்காட்டாமல்,​​ கணவனை உண்ணச் செய்துவிட்டுத் தான் பசி பொறுத்துத் துயிலச் செல்கிறாள் ஒரு மாதரசி.

இருக்கின்ற காசில் ஒருவர்தான் வண்டியில் செல்லலாம்.​ "உன்னால் நடக்க முடியாது;​ நீ வண்டியில் செல்;​ நான் நடந்து வருகிறேன்' என்று சிரமத்தைத் தான் மேற்கொள்கிறான் ஒரு பெருங்கணவன்.

நீ பாதி;​ நான் பாதி சாப்பிடலாம்;​ உனக்கு மட்டும்தான் வயிறு இருக்கிறதோ என்று கணவன் மனைவியையோ,​​ மனைவி கணவனையோ கேட்டால் அது சட்டப்படி உரிமைக் கொள்கைதான்;​ ஆனால் வறண்ட கொள்கை;​ ஆனால் இயேசுவின் கொள்கை ஈரமான கொள்கை.​ எல்லாரும் உரிமைக் கொள்கையைப் போதிக்கிறார்கள்.​ அது கழுத்தைப் புண்ணாக்கும் நுகத்தடி.​ இயேசு அன்புக் கொள்கையைப் போதித்தார்;​ அது அழுத்தாத நுகத்தடி.

ஆனாலும் இவ்வளவு எளிய இயேசுவின் போதனையைப் பின்பற்றி மண்ணிலே ஏன் விண்ணைக் காண முடியவில்லை என்றால் அன்பு செய்வது எளிதானதில்லை.​ அதற்குத் தன்னை இழக்க வேண்டும்.​ அதனால்தான் எனக்குப் பக்கத்திலிருக்கும்போது நெருப்புக்குப் பக்கத்திலிருக்கிறீர்கள் என்கிறார் இயேசு.

கணவனுக்கும் மனைவிக்கும் சரியாக வரவில்லை என்றால் திருமணத்தை முறித்துவிடு என்று ஏதோ பட்டத்தின் வாலை அறுத்துவிடு என்று சொல்வதுபோல் மிக எளிதாகச் சொல்வான் மோயீசன்.​ அவன் கடவுளிடமிருந்து கட்டளை பெற்றவன்;​ ஆகவே அவன் பேசியதெல்லாமே வேதம்தான்.

நான் வேதத்தை நிறைவேற்றவே வந்தேன் என்று சொல்லிக்கொண்டே அதை மாற்றிப் புதிய வேதம் படைப்பார் அறிவர்க்கெல்லாம் அறிவரான இயேசு.

மிகவும் மனத்தாழ்ச்சி உடையவரான இயேசு அதுபோன்ற இடங்களில் மிகுந்த அதிகாரத்தோடு,​​ "நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்று அறுதியிட்டுப் பேசுவார்.

""அவளுடைய ஒழுக்கக் கேட்டிற்காக அல்லாமல்,​​ வேறு எக்காரணம் கொண்டும் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரம் செய்தவனாகிறான் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' ​(மத்:​ 19 :​ 19) என்று அதட்டிச் சொல்லுவார் மனித குலத்துக்கு உய்வு காட்ட வந்த இயேசு.

""அவர்கள் இருவரும் ஒரே உடலாய் இருப்பர்;​ இனி அவர்கள் இருவரல்ல;​ ஒரே உடல்.​ கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' ​(மாற்கு 10 :​ 8)

மோயீசனையும் பழைய ஏற்பாட்டையும் இயேசு திட்டவட்டமாக மறுதலிக்கும் இடங்கள் பல;​ அதனால்தான் இயேசுவின் ஞானஉரைக்குப் புதிய ஏற்பாடு என்று பெயர்.

அறுத்துக் கொள்வதோ,​​ அறுத்து விடுவதோ கழுத்தைப் புண்ணாக்கும் கடின நுகத்தடி;​ அது மோயீசனின் நுகத்தடி.​ ஓருடலாய் அன்பில் அழுந்தி வாழ்வது அழுத்தாத நுகத்தடி;​ அது இயேசுவின் நுகத்தடி.

""என்னை நோக்கி ஆண்டவரே,​​ ஆண்டவரே என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேர மாட்டான்;​ என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேர்வான்'' ​(மத் 7 :​ 21)

""மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை;​ உங்களை எனக்குத் தெரியும்'' ​(யோவான் 5 :​ 41) என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி விடுகிறார்.​ மனிதர்கள் ஒரு சிறு நன்மை கிடைத்தால் தங்களையே விற்றுக் கொள்ளும் தன்மை உடையவர்கள்.​ இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வந்த இயேசுவுக்கு,​​ மனிதர்களின் பாராட்டும்,​​ பழிப்பும் ஒரு பொருட்டாக இருக்க முடியாது.​ ""நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்;​ தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்'' ​(யோவான் 5 :​ 29) என்று இயேசு நல்லதற்கும்,​​ கெட்டதற்கும் நம்மைப் பொறுப்பாக்குகிறார்.

மாந்தன் இயல்பிலேயே தன்னலமானவன்;​ தனக்கு நன்மை வருமென்றால் தயங்காமல் பிறர்க்குத் தீமை செய்வான்.​ தீய மனிதர்களைப் பிரளயத்தாலும் பிறவகையாலும் அழித்து அழித்துக் களைத்துப்போன இறைவன் மனித குலத்துக்கு நல்லதையும்,​​ கெட்டதையும் பாகுபடுத்திச் சொல்லி,​​ அவர்களை அறியாமையிலிருந்து விடுவித்து,​​ அவர்களுக்கு விடுதலை தேடிக் கொடுக்கத் தன் மகன் இயேசுவை அனுப்பினான்.​ உலகிலேயே அறிவான யூத இனம்,​​ ஒரு யூதப் பெண்ணான மேரியின் மகனை,​​ பேரறிவின் இரட்சியை,​​ பெருங் கருணையாளன் இயேசுவை அறிய மறுத்து அருங்குறி கேட்டது.​ கடைசியில் சிலுவையில் அறைந்து கொன்றது.

""நான் உங்களுக்குச் சொல்கிறேன்;​ தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.​ எவராவது உங்களை ஒரு கல் தொலைவு வரக் கட்டாயப்படுத்தினால்,​​ அவரோடு இரு கல் தொலைவு செல்லுங்கள்'' ​(மத் 6 :​ 39)

இயேசு தான் வாழ்நாளெல்லாம் போதித்ததற்குத் தானே இலக்கணமாய் வாழ்ந்து காட்டுகிறார்.​ பகைவர்கள் விரும்பியவண்ணம் தன்னுடைய சிலுவையைத் தானே சுமந்து கொண்டு,​​ அவர்கள் விரும்பிய தொலைவான மண்டைஓட்டு மலைக்கு நடக்கிறார்.​ சிலுவையில் உயிர் நீப்பதற்கு முன்,​​ ""தந்தையே இவர்களை மன்னியுங்கள்;​ தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்''.

எந்தக் குற்றமும் செய்யாமல் சாகடிக்கப்படுகின்ற ஒருவன் சாகடித்தவர்களை மன்னிக்குமாறு இறைவனிடம் மன்றாடுவதைவிட ஒருவன் இறைமகன் என்பதற்கு என்ன அருங்குறி வேண்டும்?​ இன்றுவரை யூதர்கள் அதை உணரவில்லையே.

ஒரு கொலைக் கருவியான சிலுவை,​​ இயேசு என்னும் புனித மகனைத் தாங்கியதால் உலகெங்கும் இரண்டாயிரம் ஆண்டுகளாக வணக்கத்திற்குரியதாகிவிட்டது!

ஒருமுறை கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி இயேசுவைப் பார்த்துக் குரலெடுத்துக் கூவினாளாம்:​ ""உம்மைத் தாங்கிய வயிறும்,​​ நீர் பாலுண்ட முலைகளும் பேறு பெற்றவை'' ​(லூக்கா 11 :​ 27)

இயேசுவின் பிறப்பால் உலகம் பேறு பெற்றது.​ அவர் பிறப்புக்கு முந்தைய காலத்தை கிறிஸ்து பிறப்பதற்கு முன் ​(கி.மு.)​ என்றும்,​​ அவருக்குப் பிந்தைய காலத்தைக் கிறிஸ்துவுக்குப் பின் ​(கி.பி.)​ என்றும் அடையாளப்படுத்திப் பெருமைப்படுத்தியது உலகம்.
கட்டுரையாளர் : பழ.​ கருப்பையா
நன்றி : தினமணி

சமாளிப்பா?​ திறமையின்மையா?

கடந்த 13 நாள்களாக ஆந்திர மாநிலம் முழுவதுமே கொதித்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலைமை மாறி,​​ தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேர பந்த் என்பதாக வரம்புக்குள் வந்துள்ளது வன்முறை.

வன்முறை வரம்பு கடந்ததற்கும்,​​ வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான்.​ தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.​ இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.

மத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன்,​​ அவஸ்தைப் படுவானேன்,​​ இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி,​​ விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்!

தெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்.​ ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார்.​ அப்படியானால்,​​ அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் ​ கொடுத்தார்கள்?​ அதுவும்,​​ காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,​​ எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன?​ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின?

தெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு,​​ தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து,​​ பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர,​​ சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.

அதிக முக்கியத்துவம் இல்லாமல்,​​ கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை,​​ காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து,​​ வெற்றி பெறவும் வைத்து,​​ அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க ​ விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி.​ தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து,​​ அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே.​ அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.

இந்தியத் தேர்தல் முறையில்,​​ நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு,​​ தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி,​​ அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும்,​​ மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.​ அதேபோன்றுதான்,​​ தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும்,​​ கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி,​​ தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும்,​​ தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது.​ ஆனால்,​​ காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி,​​ தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது.​ ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா ​ தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி,​​ மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி,​​ இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி,​​ தலைக்குனிவை ஏற்படுத்தியது.

இழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும்,​​ இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும்,​​ புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா,​​ அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா?​ தெலங்கானாவைப் பிரித்தால்,​​ ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும்,​​ பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல்,​​ அறிவிப்புச் ​ செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால்,​​ அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா?​ அல்லது எல்லாம் தெரிந்திருந்தும்,​​ நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா!​ எப்படிப் புரிந்துகொள்வது?

இதனால் ஆந்திர மாநிலம்,​​ குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது,​​ வேதனையாக இருக்கிறது.​ மருந்து உற்பத்தி,​​ தகவல்தொழில்நுட்பம்,​​ சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ.​ 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.​ மேலும்,​​ இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு,​​ சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது.​ வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.​ ​

இப்போதும்கூட,​​ ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால்,​​ புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.

இதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல.​ ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான்.​ உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.
நன்றி : தினமணி