Friday, December 25, 2009

சமாளிப்பா?​ திறமையின்மையா?

கடந்த 13 நாள்களாக ஆந்திர மாநிலம் முழுவதுமே கொதித்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலைமை மாறி,​​ தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேர பந்த் என்பதாக வரம்புக்குள் வந்துள்ளது வன்முறை.

வன்முறை வரம்பு கடந்ததற்கும்,​​ வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான்.​ தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.​ இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.

மத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன்,​​ அவஸ்தைப் படுவானேன்,​​ இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி,​​ விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்!

தெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்.​ ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார்.​ அப்படியானால்,​​ அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் ​ கொடுத்தார்கள்?​ அதுவும்,​​ காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,​​ எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன?​ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின?

தெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு,​​ தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து,​​ பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர,​​ சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.

அதிக முக்கியத்துவம் இல்லாமல்,​​ கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை,​​ காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து,​​ வெற்றி பெறவும் வைத்து,​​ அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க ​ விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி.​ தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து,​​ அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே.​ அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.

இந்தியத் தேர்தல் முறையில்,​​ நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு,​​ தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி,​​ அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும்,​​ மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.​ அதேபோன்றுதான்,​​ தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும்,​​ கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி,​​ தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும்,​​ தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது.​ ஆனால்,​​ காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி,​​ தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது.​ ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா ​ தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி,​​ மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி,​​ இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி,​​ தலைக்குனிவை ஏற்படுத்தியது.

இழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும்,​​ இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும்,​​ புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா,​​ அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா?​ தெலங்கானாவைப் பிரித்தால்,​​ ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும்,​​ பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல்,​​ அறிவிப்புச் ​ செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால்,​​ அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா?​ அல்லது எல்லாம் தெரிந்திருந்தும்,​​ நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா!​ எப்படிப் புரிந்துகொள்வது?

இதனால் ஆந்திர மாநிலம்,​​ குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது,​​ வேதனையாக இருக்கிறது.​ மருந்து உற்பத்தி,​​ தகவல்தொழில்நுட்பம்,​​ சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ.​ 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.​ மேலும்,​​ இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு,​​ சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது.​ வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.​ ​

இப்போதும்கூட,​​ ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால்,​​ புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.

இதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல.​ ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான்.​ உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.
நன்றி : தினமணி

No comments: