Saturday, July 26, 2008

கச்சா எண்ணெய் விலை கடந்த 7 வாரத்தில் இல்லாத அளவு குறைந்தது


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவாக குறைந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக அங்கு பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து போனதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள். ஜூலை மாத துவக்கத்தில் பேரல் ஒன்றுக்கு 147.27 டாலர் வரை இருந்த யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை, இப்போது 20 டாலருக்கு மேல் குறைந்து 123.26 டாலருக்கு வந்திருக்கிறது. லண்டன் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 124.52 டாலராக இருக்கிறது. இப்போது டிமாண்டுக்கு தக்கபடி எண்ணெய் சப்ளை இருப்பதாக வர்த்தகர்களிடையே கருத்து நிலவுவதால் விலை குறைந்திருக்கிறது என்றும், அது இன்னும் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. 2009 முதல் காலாண்டில் எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் குறைவாக வந்து விடும் என்று லேமன் பிரதர்ஸ் நிறுவன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : தினமலர்


ஸ்பெயினுக்கு நேரிடையாக 100 டாலர் விலையில் கச்சா எண்ணெய் விற்கிறது வெனிசுலா


ஓபக் அமைப்பில் ஒரு உறுப்பு நாடாக இருக்கும் வெனிசுலா, நேரடியாக ஸ்பெயினுக்கு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் சப்ளை செய்ய ஒத்துக்கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை பேரல் ஒன்றுக்கு 100 டாலர் என்ற விலையில் கொடுக்க வெனிசுலா ஒத்துக்கொண்டிருக்கிறது.இதற்கு பதிலாக ஸ்பெயினில் இருந்து மருந்து உபகரணங்கள் மற்றும் பொருட்களை வெனிசுலா வாங்கிக்கொள்ளும் என்று வெனிசுலா அதிபர் ஹூகோ ஷிவாஸ் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் 400 மில்லியன் டாலர்கள் மேட்ரிட் நகரில் இருக்கும் ஒரு வங்கியில் முதலீடு செய்யப்படும். பின்னர் அது ஸபெயினில் இருந்து வெனிசுலா இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுக்கப்பட்டுவிடும் என்று ஸ்பெயின் டெலிவிஷன் டி வி இ., க்கு அளித்த பேட்டியில் ஷிவாஸ் தெரிவித்தார். இதுவரை சந்தை மூலமாக விலை நிர்ணயிக்கப்பட்டு, சப்ளை செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய், இப்போது முதல் முறையாக வெனிசுலாவால் நேரடியாக விற்கப்படுவது ஒரு புது ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது. எங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்து உபகரணங்கள், தொழில்நுட்பம், காற்றாலைக்கான தொழில்நுட்பம் போன்றவைகளை இதன் மூலம் எளிதாக நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார் ஷிவாஸ். மேட்ரிட்டில் ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகஸை நேற்று வெனிசுலா அதிபர் ஷிவாஸ் சந்தித்து பேசியபோது இருவருக்குமிடையே இது சம்பந்தமான ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது பேரல் ஒன்றுக்கு 125 டாலர் வரை விலையில் இருக்கும் கச்சா எண்ணெய், ஸ்பெயினுக்கு 100 டாலருக்கு கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே வெனிசுலா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வருகிறது.

நன்றி : தினமலர்


இன்டர்நெட் உபயோகிப்பதில் அமெரிக்காவை விஞ்சியது சீனா


சீனாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்காவை விஞ்சி விட்டது. ஜூன் முடிய எடுத்த கணக்கெடுப்பில் சீனாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியே 30 லட்சமாகி விட்டது. ஆனால் அமெரிக்காவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 23 கோடியாகத்தான் இருக்கும் என்று சீனா இன்டர்நெட் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டர் ( சி என் என் ஐ சி ) என்ற அமைப்பு தெரிவிக்கிறது. சீனாவில் கடந்த வருடம் 16 கோடியே 20 லட்சமாக இருந்த இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை இந்த வருடம் 25 கோடியே 30லட்சமாகி இருக்கிறது. இது 56.2 சதவீதம் அதிகம். அமெரிக்காவில் டிசம்பர் 2007 முடிய உள்ள காலத்தில் 21 கோடியே 80 லட்சமாக இருந்த இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்த ஜூன் முடிய உள்ள காலத்தில் 23 கோடியாகத்தான் உயர்ந்திருக்கும் என்று சொல்கிறார்கள். மேலும் சீனாவில் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் 21 கோடியே 40 லட்சமாகி விட்டது என்கிறது அந்த அமைப்பு. இது அந்நாட்டில் மொத்த இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கையில் 80 சதவீதத்திற்கும் அதிகம்.

நன்றி : தினமலர்