Friday, July 10, 2009

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை

கடந்த அக்டோபர் 2008 க்குப்பின் இந்த வாரம் தான் பங்கு சந்தையில் மோசமான வாரமாக இருந்தது. இந்த வாரத்தில் மட்டும் 10 சதவீத புள்ளிகளை பங்கு சந்தை இழந்திருக்கிறது. ஆயில் அண்ட் கேஸ், பேங்கிங், இன்ஃப்ராஸ்டிரக்சர் மற்றும் ரியாலிட்டி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நிப்டி 4,000 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தும் சென்செக்ஸ் 13,500 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தும் இன்று கீழே இறங்கியது. இரண்டாவது முறையாக பதவி ஏற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் பட்ஜெட்டால் ஏற்பட்ட ஏமாற்றம் இந்த வார துவக்கத்தில் சரிவை ஏற்படுத்தியது. பின்னர் மும்பையில் பெய்த கனமழையும் வர்த்தகம் சரிவர நடக்காததற்கு காரணமாக இருந்தது. இன்று முழுவதும் மந்தமாக இருந்த பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 253.24 புள்ளிகள் ( 1.84 சதவீதம் ) குறைந்து 13,504.22 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 77.05 புள்ளிகள் ( 1.89 சதவீதம் ) குறைந்து 4,003.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இந்த வாரம் பங்கு சந்தையில் ஏற்பட்ட நிலை குறித்து கருத்து தெரிவித்த டைமன்சன்ஸ் கன்சல்டிங்கின் அஜய் ஸ்ரீனிவாட்சவா, இன்னும் 6 மாதங்களுக்கு பங்கு சந்தையில் வளர்ச்சியை பார்ப்பது கஷ்டம் என்றார்.
நன்றி : தினமலர்


புதிய காலத்திற்கு ஏற்ப 'ஜீவன் சாத்தி பிளஸ்'

காலம் மற்றும் தேவை மாற்றங்களுக்கு ஏற்ப புதிது புதிதாக பாலிசிகளை அறிமுகப்படுத்தி வரும் எல்.ஐ.சி., நிறுவனம், தற்போது 'ஜீவன் சாத்தி பிளஸ்' என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த 'ஜீவன் சாத்தி பிளஸ்' திட்டத்தால், ஒரே பாலிசியின் மூலம் கணவன் - மனைவி இருவரும் ஆதாயம் பெறலாம். இத்திட்டத்தில் பாலிசிதாரர், பிரின்சிபல் லைப் அஷ்யூர்டு (பி.எல்.ஏ.,) வாகவும், அவரது கணவன் அல்லது மனைவி, ஸ்பவுஸ் லைப் அஷ்யூர்டு (எஸ்.எல்.ஏ.,)வாகவும் கருதப்படுகிறார். இந்த திட்டத்தில் ரெகுலர் பிரீமியம் முறையில் சேர்ந்துள்ள பாலிசிதாரர், ஓராண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதத் தவணைகளில் முறையாக பாலிசிக்குரிய சந்தாவை செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் சிங்கிள் பிரிமியம் முறையில் சேர்ந்துள்ள பாலிசிதாரர் ஒரே தவணையாக பாலிசிக்குரிய மொத்த பணத்தையும் கட்ட வேண்டும். இதற்கான குறைந்தபட்ச தொகையாக 40 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் சேர குறைந்தது, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிசி முதிர்வு வயது அதிகபட்சமாக 70 வயது வரையும், பாலிசியின் கால அளவு 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 'ஜீவன் சாத்தி பிளஸ்' திட்டம் கணவன் - மனைவி இருவரின் வாழ்க்கைக்கும் நிதி பாதுகாப்பு அளிக்கும் சிறந்த திட்டம்.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று மேலும் குறைந்திருக்கிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை இன்று 33 சென்ட் குறைந்து, பேரலுக்கு 60.08 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) 30 சென்ட் குறைந்து பேரலுக்கு 60.80 டாலராக இருக்கிறது. கடந்த மாதத்தில் 73 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 13 டாலர் குறைந்து விட்டதற்கு,ற உலக அளவிலான பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையிலேயே இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


இன்னும் ஒரு மாதத்தில் இரண்டு பாயின்ட்- டு -பாயின்ட் ரயில்கள் இயக்கப்படும் : மம்தா பானர்ஜி

கடந்ø மூன்றாம் தேதி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 'டுரோன்டோ ' என்ற பெயரில் புதிதாக 12 நான்-ஸ்டாப், பாயின்ட்- டு -பாயின்ட் ரயில்கள் இயக்கப்படும் என்றார். அவைகளில் இரண்டு ரயில்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள்ளாகவேஇயக்கப்படும் என்றார் அவர். செகந்தராபாத்தில் இருந்து ஒரு ரயில் புதுடில்லிக்கும், நாக்பூரில் இருந்து ஒரு ரயில் புதுடில்லிக்கும் புறப்பட்டு செல்லும் என்றார். இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் இந்த வகை நான்-ஸ்டாப் ரயில்களில் ஏர்-கன்டிஷன் மற்றும் ஏர்-கன்டிஷன் அல்லாத பெட்டிகள் இணைக்கப் பட்டிருக்கும். மம்தா அறிவித்த இன்னொரு புதிய ரயிலான டபுள்-டெக்கர் ரயில் இன்னும் ஒரு வருட காலத்தில் இந்தியாவில் ஓடத்துவங்கும் என சொல்லப்படுகிறது. ரயில்வே பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்த மம்தா, ரயில்வே பட்ஜெட்டில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் இன்னும் ஒரு வருடத்தில் செயல்பட துவங்கும் என்றார். மேலும் ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டின் ( ஆர் ஆர் பி ) செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்படும் என்றார். அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத வேலைகள் ஒதுக்கப்படும் என்றும், ரயில்வே துறை நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே கேள்விகள் கேட்கப்படும் என்றார்.
நன்றி : தினமலர்


சர்வதேச சந்தையில் விலை குறைந்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் : தியோரா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 முதல் 60 டாலருக்குள் இருந்தால், இந்தியாவில் கடந்த வாரத்தில் கூட்டிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டு விடும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் வரை வந்ததால் மத்திய அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 ம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம் உயர்த்தியது. ஆனால் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை நேற்றைக்கு பேரலுக்கு 61.58 டாலராகத்தான் இருந்தது. ஜூலை மாதத்தின் அதன் சராசரி விலை பேரலுக்கு 61.12 டாலருக்கும் குறைவான விலையில்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் பெட்ரோலிய தேவையில் 75 சதவீதத்தை நாம் இறக்குமதிதான் செய்கிறோம். இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் மானிய விலையில் கொடுக்கப்படுவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.4,870 கோடி வரை நஷ்டம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அவசியமானதுதான் என்றார் முரளி தியோரா.
நன்றி : தினமலர்