Friday, October 16, 2009

பி.எஸ்.என்.எல்., தருகிறது சலுகை

சென்னை, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனம், சூப்பர் ஒன் இந்தியா, இந்தியா கோல்டன் 50 மற்றும் ஸ்டூடன்ட் பவர் பூஸ்டர் ஆகிய கார்டுகளுக்கான விலையை குறைத்துள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்தி: முன், 330 ரூபாயாக இருந்த சூப்பர் ஒன் இந்தியாவின் விலை தற்போது, 115 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 375 ரூபாயாக இருந்த இந்தியா கோல்டன் 50 கார்டின் விலை, தற்போது 123 ரூபாயாகவும், 110 ரூபாயாக இருந்த ஸ்டூடன்ட் பவர் பூஸ்டரின் விலை, 40 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா கோல்டன் 50 கார்டிற்கு, உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி., அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா வசூலிக்கப்பட உள்ளது. சூப்பர் ஒன் இந்தியா கார்டில், உள்ளூர் அழைப்புகளுக்கு பி.எஸ்.என்.எல்., போனிற்கு 50 பைசாவும், மற்ற போன்களுக்கு நிமிடத்திற்கு 80 பைசாவும் வசூலிக்கப்பட உள்ளது. ஸ்டூடன்ட் பவர் கார்டில், எந்த ஒரு இணைப்பிற்குமான உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 90 பைசா வீதமும், இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பி.எஸ்.என்.எல்., போன்களுக்கான அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா வீதமும் வசூலிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


அப்படி என்ன தேவை?

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு மத்திய அரசின் மரபீனி பொறியியல் அங்கீகாரக் குழுமம் (GEAC) அனுமதி அளித்துவிட்டது என்றும், இது குறித்து அரசு இன்னும் முடிவு மேற்கொள்ளவில்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

அங்கீகாரக் குழுமம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே இதற்கு அனுமதி அளித்துவிட்டது என்பதும், தற்போது அமைச்சர் முன்னிலையில் நடந்த கூட்டம், வெளிப்படையாக அறிவிக்கும் முன்பாக நடந்த ஆய்வுக்கூட்டம் என்பதும் சொல்லப்படாத உண்மை. இந்த அறிவிப்பை மத்திய அரசு ஏப்ரல் மாதமே அறிவிப்பு செய்திருக்கும். ஆனால், கிரீன்பீஸ் அமைப்புகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து மைக்கோ சமர்பித்த களஆய்வு அறிக்கைகளைப் பெற்று, ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன. அதில் உள்ள குறைபாடுகள் பற்றிப் பேசத் தொடங்கின. அதனால் அரசு இத்தனை மாதங்களாக இந்த அறிவிப்பைத் தள்ளி வைத்து வந்தது.

மைக்கோ சமர்ப்பித்த ஆய்வுக்கூட அறிக்கைகள் முறையாகத் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதும், பல முடிவுகள் சாதகமாக காட்டப்பட்டுள்ளன, அறிவியல்பூர்வமானவை அல்ல என்பதும் கிரீன்பீஸ் அமைப்புகளின் வாதங்கள். அவற்றில் அவர்கள் குறை சொல்லும் முக்கியமான மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை:

அ) மரபீனி மாறுதல் புகுத்தப்பட்ட இந்தக் கத்தரிக்காய், அதன் புரதத்தில் எத்தகைய மாற்றத்தைப் பெறுகிறது என்பதற்கும், இந்தப் புரதம் மனிதருக்குத் தீமையாக அமையாது; நச்சுத்தன்மை கட்டுக்குள் இருக்கிறது என்பதற்கும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

ஆ) மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயை உண்போருக்கு இனப்பெருக்கக் கோளாறுகள் ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு முடிவுகள் இணைக்கப்படவில்லை.

இ) இந்த ஆய்வு 90 நாள்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால்தான், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபீனி கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.

கிரீன்பீஸ் அமைப்பினர் சுட்டிக்காட்டிய இந்தக் குறைபாடுகள் குறித்து மறுஆய்வுகள் செய்யப்பட்டனவா இல்லையா என்ற எந்தத் தகவலும் இல்லாமல், மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மட்டுமே அமைச்சர் கூறியிருக்கிறார். அங்கீகாரக் குழுவின் பரிந்துரையை ஏற்று அனுமதிப்பதைத் தவிர அரசு செய்யப்போவது ஏதுமில்லை என்பது மட்டும் நிச்சயம்.

உலக நாடுகளில் உற்பத்தியாகும் கத்தரிக்காயில் 26 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மொத்தம் 4.72 லட்சம் ஹெக்டேரில் 76 லட்சம் டன் கத்தரிக்காய் விளைகிறது. பூச்சிகள் பாதிப்பால் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காயால் இந்திய மக்களுக்கும் இந்திய வணிகத்துக்கும் எந்த வகையிலும் லாபம் இல்லை.

அமெரிக்கா மட்டுமே மரபீனி மாற்றுப் பயிர் நிறுவனங்களை ஆதரிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த மரபீனி மாற்றப்பட்ட உணவுப்பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உலக வர்த்தக நிறுவனத்தின் சட்ட திட்டத்துக்கு எதிரானது. இருந்தாலும்கூட, தைரியமாகத் தடை விதித்துள்ளது. தடையை நீக்க வேண்டும் என்று மான்சான்டோ, மைக்கோ உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இந்தியாவில் 56 உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்றுப் பயிர் களஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நெல், சோளம், தக்காளி, உருளை ஆகியனவும் உள்ளன. இதில் முதல் வர்த்தக உற்பத்தி அனுமதியைப் பெறுவது மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்.

இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் சந்தைக்கு வரும்போது, அவற்றின் மீது லேபிள் ஒட்டப்படுமா என்பது குறித்து இன்னும் மத்திய அரசு விளக்கம் சொல்லவில்லை. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டாலும், உற்பத்தி அதிகம்; விலை மலிவு என்ற காரணத்தால் நாட்டுக் கத்தரிக்காயுடன் கலந்து விற்கப்படும் ஆபத்து நிறையவே இருக்கிறது.

மரபீனி மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு அப்படியென்ன தேவை இருக்கிறது? என்று கேட்டால் அதற்கு கிரீன்பீஸ் அமைப்பினர் சொல்லும் முதல் காரணம், இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனத்துக்கு "ராயல்டி' செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்காவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி' என்கிற கதையாகிவிட்டது இந்தியாவின் நிலைமை. திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க முனைந்து செயல்படுகிறார்கள். என்ன அரசோ? என்ன ஆட்சியோ?
நன்றி : தினமணி

ஹுரோ ஹோண்டாவின் புதிய வகை பைக்குகள் அறிமுகம்

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் மிக பெரிய நிறுவனமாக திகழும் ஹுரோ ஹோண்டா புதிய வகை மோட்டார் சைக்கிள்களை அறிமுகப் படுத்தி உள்ளது. பண்டிகை மற்றும் விஷேச காலத்தை முன்னிட்டு இந்த புதிய மாடல்கள் அறிமுகப் படுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‌ஹக் மற்றும் ஸ்பிளன்டர் என்ற வெர்சன்களில் இந்த புதிய பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஹக் வகை பைக்குகள் 56 ஆயிரத்து 675 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ப்ளாக்சிப் ஸ்பிளன்டர்+ பைக்கின் விலை ரூ. 40,000 என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


இரட்டை வசதி கொண்ட ஸ்மார்ட்போன் தமிழகத்தில் அறிமுகம்

இரட்டை வசதி கொண்ட ஸ்மார்ட்போன் தமிழகத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. ரிலையன்ஸ் வெப்ஸ்டோர் மற்றும் கூல்பேட் கம்யூனிகேஷன்ஸ் இணைந்து கூல்பேட் 2938 என்ற இரட்டை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் வெப் ஸ்டோர் தமிழக பிரிவு தலைவர் கூறும்போது, சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு மாடல் கூல்பேட் ஸ்மார்ட் போன்கள் அறிமுகப் படுத்தி உள்ளோம். இதன் விலை 10 ஆயிரத்து 999 ரூபாய். இதில் இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்தும் வசதி உள்ளது. அதனுடன் டச் ஸ்கிரின் வசதியும் உண்டு. இதில், ஜி.எஸ்.எம் மற்றும் சி.டி.எம்.ஏ., ஆகிய இரண்டு தொழில்நுட்பத்தை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும், இன்னும் நான்கு மாடல் போன்களை வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தை வாங்கியது போலாரிஸ்

சென்னையை சேர்நத சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான லேசர்சாப்ட் நிறுவனத்தை மும்பையை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான போலாரிஸ் வாங்கியுள்ளது. இதுகுறித்து போலாரிஸ் நிறுவனம் தெரிவிக்கும் போது, லேசர்சாப்ட் நிறுவனத்தின் நூறு சதவீத பங்குகளையும் வாங்கி கொள்வதற்கான ஒப்பந்தம் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்நிறுவனத்தை 52 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளது. வங்கிகளுக்குத் தேவையான சாப்ட்வேர்களை வடிவமைத்துத் தருவதில் முன்னணி நிறுவனமாக லேசர்சாஃப்ட் விளங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி தினமலர்


மூன்றில் இரு பங்கு சம்பளம் : வேண்டாம் என்றார் முகேஷ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தன் சம்பளத்தை மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு குறைந்து கொண்டுள்ளார். இனி அவர் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரபல நிறுவனங்களில் நிர்வாக அதிகாரிகள் அந்தஸ்தில் பணிபுரிவோர் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய கம்பெனிகள் விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆலோசனை தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த சம்பளம் குறித்து கம்பெனிகளின் போர்டுகளும், பங்குதாரர்களும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சரின் ஆலோசனையை நிறைவேற்றும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 2008-09ம் ஆண்டுக்கான தன் சம்பளத்தை மூன்றில் இரண்டு மடங்கு குறைத்துக் கொண்டுள்ளார். அதாவது, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் மட்டுமே அவர் சம்பளம் பெறுவார்.
இதற்கு முந்தைய ஆண்டின் அவரது சம்பளமான 44 கோடி ரூபாயை ஒப்பிடுகையில், இது 66 சதவீதம் குறைவு. கம்பெனியின் நிகர லாபத்தில் 5 சதவீதத்தை அவர் சம்பளமாக பெறலாம். அதை ஒப்பிடும் போது, 98 சதவீதம் குறைவு. அதே நேரத்தில், தங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் மாற்றி அமைத் துள்ளது. அது, தற்போது அவர்கள் பெறும் சம்பளத்தை விட கூடுதலாக இருக்கும்.
நன்றி : தினமலர்