Thursday, November 27, 2008

பெட்ரோல் விலை குறைப்பு : இழுபறி பதில் தந்தார் தியோரா

எத்தனை கேள்விகள் கேட்டாலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது என்பது பற்றி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா வாய்திறக்க மறுத்துவிட்டார். கடந்த ஒருவாரமாகவே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அதிகம் பேசப்படுகிறது. மத்திய அமைச்சரவை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி ஆறு மாநிலத் தேர்தல்கள் முடிந்த பின் முடிவு செய்யும் என்ற கருத்து பேசப்பட்ட போது, நேற்று முன்தினம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விரைவில் வரும் என்ற கருத்தைக் கூறியிருந்தார் தியோரா. பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் தியோரா, அத்துறையின் செயலர் பாண்டே, துணைச் செயலர் சுந்தரேசன், ஓ.என்.ஜி.சி., தலைவர் உட்பட பலரும் சேர்ந்து நேற்று இப்பிரச்னைக்கு விளக்கமளித்தனர். குறிப்பாக பல தொழில் நுட்ப கேள்விகளுக்கு அந்தத் துறையைச் சேர்ந்த செயலர்கள் பதிலளிக்க அனுமதித்ததால், இப்பிரச்னை குறித்து ஒரு மணி நேரம் விளக்கம் தரப்பட்டது. இந்த மாநாட்டில் முரளி தியோரா தெரிவித்த கருத்துக்கள்: இன்று கச்சா எண்ணெய் பேரல் 50 டாலருக்கு கீழே குறைந்திருக்கிறது. முன், 147 டாலர் இருந்த போது நிர்ணயிக்கப்பட்ட விலையா இன்னமும் தொடர்வது என்று காங்கிரஸ் கட்சியிலேயே பலர் கேட்கின்றனர். இந்த விலை குறைப்பில் சம்பந்தப்பட்ட பெட்ரோல், டீசல், மண்ணெண் ணெய் மற்றும் சமையல் காஸ் ஆகிய நான்கில், பெட்ரோல், டீசலில் மட்டும் லாபம் கிடைக்கிறது. இன்றைய தேதியில் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ. 8.17ம், டீசலில் லிட்டருக்கு 60 பைசாவும் கிடைக்கிறது. அதேசமயம் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 21.64ம், சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.330.20ம் நஷ்டம் ஏற்படுகிறது. மூன்று எண்ணெய் கம்பெனிகளும் தினமும் 90 லட்சம் முதல் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கின்றன. ஏற்கனவே, அதிக விலையில் கச்சா எண்ணெய் விற்றதில் இருந்து தொடர்ந்த நஷ்டமும், தற்போதைய நஷ்டமும் சேர்ந்து எண்ணெய் கம்பெனிகளுக்கு லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உள்ளது. இதே அளவு கச்சா எண்ணெய் விலை நீடித்தால், அதன் நஷ்டம் குறைய இன்னமும் ஆறு மாதங்கள் ஆகும். மேலும், எண்ணெய் பத்திரங்கள் மூலம் மத்திய நிதியமைச்சகம் 50 ஆயிரம் கோடியை முன்பே தந்திருக்கிறது. எது எப்படியானாலும் எல்லா அம்சங்களையும் அரசு ஆராய்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கும் முடிவை எடுக்கும். அதே சமயம், விலை குறைப்பு பற்றி பேசியதாக வந்த செய்தியை அடுத்து தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது என்பது முற்றிலும் தவறு. அப்படி நோட்டீஸ் ஏதும் வரவில்லை. பெட்ரோலுடன், எத்தனால் கலக்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டம். அதில் 44 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் மாநில அரசுகள் பின்பற்றும் வரித்திட்டம், மற்ற சில நடைமுறைகளால் பெரிய அளவில் ஊக்கம் பெறவில்லை. இவ்வாறு முரளி தியோரா கூறினார்.
நெருக்கடியான கேள்விகள் கேட்ட போது நகைச்சுவையாக பதிலளித்து பிரச்னையை சமாளித்தார். முன்னதாக செய்தி, ஒளிபரப்பு அமைச்சர் ஆனந்த் சர்மா, 'டிவி'களுக்கு ஒழுங்கு நடைமுறைத் திட்டம் கொண்டுவருவதில் அரசுக்கு உள்ள சிக்கல்களை விளக்கினார். அதே சமயம் ஒழுங்கு நடைமுறைகளை மீறும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் உரிமை என்றார். தேர்தல் ஆணையம் நோட்டீஸ் : கச்சா எண்ணெய் விலை குறைந் துள்ளதால், டிசம்பர் 24ம் தேதிக்குப் பின், பெட்ரோல், டீசல் விலை குறைக் கப்படும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். 'அவரின் இந்த அறிவிப்பு, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல்' எனக் கூறி, பாரதிய ஜனதா கட்சியினர், தேர்தல் ஆணையத்திடம் நேற்று புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து, இது சம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி, அமைச்சர் முரளி தியோராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நன்றி : தினமலர்


மழையால் தத்தளிப்பதை போல் தத்தளிக்கிறது பங்குச் சந்தை

சந்தை 9,000 புள்ளிகளையே சுற்றி சுற்றி வருகிறது. சந்தையைக் காப்பாற்ற ஒரு நல்ல செய்தி வந்தால், இன்னொரு கெட்ட செய்தி வந்து எந்த ஏற்றமும் இல்லாமல் செய்து விடுகிறது. வரும் செய்திகளெல்லாம் நல்ல செய்திகளாக இல்லாததால் சந்தை, தமிழகம் மழையால் தத்தளிப்பது போல தத்தளிக்கிறது. புயல் கூட கரையைக் கடந்து விடும் போலிருக்கிறது; சந்தையைப் பிடித்த சனி இன்னும் கரையைக் கடக்கவில்லை.
திங்களன்று காலை சிட்டி வங்கியை காப்பாற்ற அமெரிக்க அரசு பல கோடி ரூபாய் கொடுக்கப் போவதாக செய்தி வந்துள்ளது. முக்கிய இடத்திலிருந்து சிட்டி வங்கி மூழ்குகிறது என்றால் பல இடங்களிலும் சந்தை பற்றி எரிந்திருக்கும். தற்போது வந்து கொண்டிருக்கும் செய்தி பாங்க் ஆப் அமெரிக்காவின் நிலைமையும் சரியில்லை என்பது தான். சமீப காலத்தில் தான் பாங்க் ஆப் அமெரிக்கா நலிந்த நிறுவனங்களை வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வங்கிக்கே இந்த நிலை என்றால் எங்கு போய் சொல்வது? இந்த வாரத்தில் மூன்று நாட்களுமே சந்தை ஏறி இறங்கிக் கொண்டு தான் இருந்தது. காலையில் ஒரே ஏற்றமாக இருக்கும். அப்பாடி இன்று தப்பித்தோம் என்று பல முதலீட்டாளர்கள் இருக்கும் சமயத்தில் சந்தை ஒரேயடியாக விழத்தொடங்கும். இது தான் வாடிக்கையாக இருக்கிறது. அமெரிக்காவில் கடந்த வெள்ளியன்று சந்தை மிகவும் கீழே இறங்கியே துவங்கின. அங்கு நிதி செகரட்டரியாக எல்லாரும் விரும்பிய நபர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் சந்தை யூ டேர்ன் அடித்தது. இதைத் தொடர்ந்து திங்களன்று இந்தியாவிலும் சந்தை பிரமாதமாக பரிணமிக்கப் போகின்றன என்று தான் எல்லாரும் எதிர்பார்த்திருப்பர். ஆனால் நடந்ததோ வேறு. காலை முதல் ஏறிக் கொண்டே இருந்த சந்தை முடிவாக 12 புள்ளிகள் இறங்கியே முடிவடைந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் வருமானங்கள் வருங்காலங்களில் குறைவாக இருக்கும் என்று ஜே.பி. மோர்கன் கணித்திருந்ததாக வெளிவந்த செய்திகள் அந்த வங்கியின் பங்குகளையும், மற்ற வங்கியின் பங்குகளையும் கீழே தள்ளியது. இது சந்தையை குறைத்தது.
நேற்று முன்தினமும் 207 புள்ளிகள் சரிவைத்தான் சந்தித்தது. சரிவே வாழ்க்கையாகிப் போனது. ஏன் குறைந்தது? டிரைவேட்டிவ் டிரேடிங் முடிவுத் தேதிகள் நெருங்குவதால் ப்ளூ சிப் கம்பெனிகளின் பங்குகள் அதிகம் விற்கப்பட்டதாலும், ஐரோப்பா பங்குச் சந்தைகள் அன்றைய தினம் கீழே இறங்கியே தொடங்கியதாலும் அதன் பாதிப்புகள் இங்கேயும் தெரிந்தது. ஆதலால் சந்தை இங்கும் மிகவும் இறங்கியது. சீன மத்திய வங்கி கடந்த செப்டம்பரில் இருந்து இது வரை நான்கு முறை ரேட் கட் செய்துள்ளது. இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி அது போல செய்யலாம் என்ற எண்ணத்தில், நேற்று சந்தை கடகடவென மேலே சென்றது. மும்பை பங்குச் சந்தை 331 புள்ளிகள் கூடி 9,028 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 98 புள்ளிகள் கூடி 2,752 புள்ளிகளுடன் முடிவடைந்தது. என்ன செய்யலாம்?: நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையை தொடர்ந்து கவனிக்காதீர்கள். அது உங்கள் போர்ட் போலியோவுக்கும் நல்லதல்ல, உடலுக்கும் நல்லதல்ல. வங்கியில் பிக்சட் டிபாசிடில் போட்டால் தொடர்ந்து பார்த்துக் கொண்டேவா இருப்பீர்கள். அப்படி இருந்து விடுங்கள். ரிசர்வ் வங்கியின் ரேட் கட்டை எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அது வந்தால் சந்தையை சிறிது உயர்த்தலாம்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


கட்டணத்தை குறைத்து விமான நிறுவனங்கள் அதிரடி

விமான டிக்கெட்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் புக்கிங் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளின் மீதான பரிவர்த்தனை கட்டணத்தை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் ஆகிய நிறுவனங்கள் வாபஸ் பெற்றுள்ளன. உள்ளூர் எகனாமி டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 300 ரூபாய் வரையிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 1,200 முதல் 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளதால், விமானக் கட்டணத்தைக் குறைக்கும் படி, மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல், விமான நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்ற விமான நிறுவனங்களும் விரைவில் விமான டிக்கெட் பரிவர்த்தனை கட்டணத்தை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி : தினமலர்


800 மெகாவாட் மின் உற்பத்தி: 2 திட்டங்கள் கையெழுத்து

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 8,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசின் 'பெல்' நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் இந்த இரண்டு மின் திட்டங்களையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் முதல்வர்
கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. மின்வாரியத் தலைவர் மச்சேந்திரநாதன் மற்றும் 'பெல்' தலைவர் ரவிக்குமார், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உடன்குடியில் கண்டறியப்பட்டுள்ள 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் இந்தத் திட்டங்கள் அமைகின்றன. திட்டத்தின்படி, முக்கிய இயந்திரங்களை 'பெல்' நிறுவனம் வழங்கும். திட்டத் தைச் செயல்படுத்தி, மின் நிலையத்தை இயக்குவதற்கான பணிகளை மின்சார வாரியம் மேற்கொள்ளும். மின் நிலையங்களை அமைப்பதற்குத் தேவையான பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். திட்டங்களுக்கான நிலக்கரி, கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் என்பதால், கடலில் தளம் அமைப்பதற்கான ஆய்வுப் பணியை முடித்து, சென்னை ஐ.ஐ.டி., அறிக்கை வழங்கியுள்ளது. முதல் திட்டம் 2012ம் ஆண்டு மார்ச்சிலும், இரண்டாவது திட்டம் அதே ஆண்டில் செப்டம்பரிலும் இயக்கப்படும்.
நன்றி : தினமலர்


பொது சேமநல நிதி: வங்கிகள் புறக்கணிப்பு

அரசு நிர்வகித்து வரும் பொது சேமநல நிதியில், தேசிய வங்கிகளில் முதலீடு செய்யும் போது, கூடுதல் சுமையை, தவிர்ப்பதற்காக சேமிப்பு கணக்கு ஒன்றையும் துவக்கும் படி வற்புறுத்தப்படு கிறது. இது சட்டவிரோதம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பொது சேமநல நிதி கணக்கு துவக்குவோரிடம், தனியாக சேமிப்பு கணக்கையும் துவக்கும் படி வலியுறுத்துகின்றனர். ஆனால், இது சட்ட விரோதம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. பொது சேமநல நிதி துவக்குவோரிடம், சேமிப்பு கணக்கும் துவக்க நிர்பந்தித்தால், இது குறித்து, வங்கியின் தலைமை அதிகாரியிடம் புகார் மனு அளிக்கலாம். அதன் பிறகும், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், ரிசர்வ் வங்கி நியமித்துள்ள வங்கிகள் மத்தியஸ்த அமைப்பிடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்