Wednesday, April 29, 2009

பி.பி.ஓ.வேலைக்காக 8,000 பேரை வேலைக்கு எடுக்கும் விப்ரோ டெக்னாலஜிஸ்

விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம், அதன் பி.பி.ஓ.,பிரிவுக்கு, இந்த நிதி ஆண்டுக்குள் 8,000 பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்திருக்கிறது. இந்த 8,000 பேரில் 1,300 பேர், ஐதராபாத்தில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் அதன் அலுவலகத்தில் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே அங்கு 3,150 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் அங்கு 22,000 பேர் வேலை பார்க்க முடியும். 70 வாடிக்கையாளர் களுக்கு தேவையான வேலைகளை இங்குள்ள பி.பி.ஓ., அலுவலகத்தில் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடையே பேசிய விப்ரோ பி.பி.ஓ., நிறுவனத்தின் தலைமை அதிகாரி அசுதோஷ் வைத்யா, நாங்கள் எங்களது பி.பி.ஓ., அலுவலகத்திற்கு பணியாளர்களை சேர்க்க ஆரம்பித்து விட்டோம். பெரிய நகரங்கள் மற்றும் டவுண்களில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்போம் என்றார். அங்கேயே அவர்களுக்கான கடிதம் கொடுக்கப்படும் என்றும் சொன்னார்.
நன்றி : தினமலர்


Tuesday, April 28, 2009

கொள்கையை விட பெர்சலாலிட்டியால்தான் ஒபாமா பிரபலமாகியிருக்கிறார்

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் பாரக் ஒபாமா, அதிபர் பதவியில் அமர்ந்து 100 நாட்கள் ஆகிறது. வெள்ளை மாளிகையில் 100 நாட்களை கழித்திருக்கும் ஒபாமா, அமெரிக்க மக்களிடையே அவரது கொள்கைகளால் பிரபலமாகவில்லை என்றும் அவரது பெர்சனாலிட்டியால்தான் பிரபலமாகியிருக்கிறார் என்றும் சி.என்.என்./ ஒப்பினியன் போல் ரிசர்ச் கார்பரேஷன் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 47 வயதான ஒபாமா, அதிபருக்குண்டான கடமைகளை சரியாக செய்வதாக 63 சதவீத அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். மூன்றில் ஒருவரே ஒபாமாவின் நடவடிக்கைகளில் திருப்தி கொள்ளவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. ஒரு அதிபருக்குண்டான தனிப்பட்ட தகுதிகள் ஒபாமாவுக்கு இருப்பதாக நான்கின் மூன்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அதிபர் ஒபாமாவிடம் இரண்டு விதமான தகுதிகளை அமெரிக்கர்கள் பார்க்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஒன்று தனிப்பட்ட தகுதிகள். இன்னொன்று அவரது கொள்கைகள் என்கிறார் சி.என்.என்.னின் அரசியல் ஆய்வாளர் பில் ஸ்னைடர். ஆனால் பொதுவாக அமெரிக்க மக்கள் அவர்களது அதிபரிடம், தனிப்பட்ட தகுதியை விட அவரது கொள்கைகளையே அதிகம் பார்க்கிறார்கள். ஆனால் ஒபாமாவை பொருத்தவரை, அவரது கொள்கைகளை விட பெர்சனாலிட்டியில் தான் அதிகம் பிரபலமாகி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Monday, April 27, 2009

ஐசிஐசிஐ பேங்க்கின் நிகர லாபம் 35 சதவீதம் குறைந்தது

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்கின் நான்காவது காலாண்டு நிகர லாபம், அதற்கு முந்தைய வருடத்தை விட 35.30 சதவீதம் குறைந்திருக்கிறது. மார்ச் 31, 2009 உடன் முடிந்த நான்காவது காலாண்டில் அது பெற்றிருக்கும் நிகர லாபம் ரூ.744 கோடி மட்டுமே. இது, இதற்கு முந்தைய வருடத்தில் ரூ.1,150 கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ பேங்க்கின் மொத்த வருமானமும் கடந்த வருடத்தில் ரூ.10,391 கோடியாக இருந்தது இந்த வருடத்தில் ரூ.9,203 கோடியாக குறைந்திருக்கிறது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.,வாக இருந்த ஷிகா சர்மா கடந்த வாரத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த பதவிக்கு, அதன் எக்ஸிகூடிவ் டைரக்டராக இருந்த வைத்யநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தவிர சந்தீப் பக்ஷி என்பவர் அதன் எக்ஸிகூடிவ் டைரக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐசிஐசிஐ லம்பார்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.,வாக பார்கவ் தாஸ்குப்தா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களது நியமனம் மே ஒன்றாம் தேதியில் இருந்து அமலில் இருக்கும் என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


வெளிநாட்டில் வேலைபார்க்கும் இந்தியாவுக்கு வரவழைக்கும் டி.சி.எஸ்.

இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ( டி.சி.எஸ்.,), வெளிநாடுகளில் இருக்கும் அதன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகிறது. செலவை குறைக்கும்விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. நாங்கள் ஆன்சைட் - ஆஃப்ஷோர் மாடலில் வேலை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். எனவே பெரும்பாலான வேலைகளை இந்தியாவிலேயே செய்ய தீர்மானித்திருக்கிறோம். இது எங்களுக்கு ஆகும் செலவை கணிசமாக குறைக்கிறது என்கிறார் டி.சி.எஸ்.,ஸின் சி.ஓ.ஓ. சந்திரசேகரன். இருந்தாலும் இந்த நடவடிக்கையால் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து முழுவதுமாக வெளியேறி விடுவோம் என்ற அர்த்தமில்லை என்றார் அவர். வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை இந்தியாவுக்கு அழைத்ததை அடுத்து, 2008 - 09 நான்காவது காலாண்டில் அதன் வருமானம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்த அவர்களது ஊழியர்களை இந்தியா அழைத்ததன் மூலம் அது, ரூ.121 கோடி யை செலவில் மிச்சப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் எவ்வளவு ஊழியர்கள் இதுவரை இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இருந்தாலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கு அழைக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் நித்யகண்டம் பூர்ண ஆயுசு தான்

ஐந்து வாரங்கள் தொடர்ந்து மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, திங்களின் துவக்கத்திலிருந்து தினமும் கீழேயே சென்றது. அதை மாற்றும் வகையில் வியாழனன்று சந்தைகள் ஒரேயடியாக மேலே சென்றன. வியாழனன்று துவக்கத் தில் கீழேயே இருந்த பங்குச்சந்தை நஷ்டத்தையும் சரிக்கட்டி பின் 300 புள்ளிகளுக்கும் மேலாக லாபத்திலும் முடிவடைந்தது. வியாழனன்று சாப்ட்வேர் துறைப்பங்குகளும், மெட்டல் துறைப் பங்குகளும் கொடிகட்டிப் பறந்தன. வியாழனைத் தொடர்ந்த வெள்ளியும் நல்ல வெள்ளியாகவே முடிவடைந்தது. சந்தையும் 11 ஆயிரத்தைத் தாண்டி நிலைத்து நின்றது. அதானி என்டர்பிரைசஸ் தனது அதானி பவர் கம்பெனியின் புதிய வெளியீட்டைக் கொண்டுவருவதாக அறிவித்தவுடன் அந்தக் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள் அடுத்த வாரம் வரை இருக்கலாம். மும்பையில் 30ம் தேதி ஓட்டுப்பதிவு இருப்பதால், அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, 'எப் அண்ட் ஓ' குளோசிங் புதன்கிழமை என்பதால், வரும் வாரம் சற்று சிக்கல் தான். நேற்று முன்தினம் இறுதியாக மும்பை பங்குச் சந்தை 194 புள்ளிகள் மேலே சென்று 11 ஆயிரத்து 329 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை 57 புள்ளிகள் மேலே சென்று 3,480 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. இந்த வார பணவீக்கம் 0.26 சதவீதமாகக் கூடியுள்ளது. குறைந்து கொண்டே வந்த பணவீக்கம் கூடியுள்ளது என்பது ஒரு விதத்தில் ஆறுதலான விஷயம் தான். அடுத்த ஆண்டு பணவீக்கம் 4 சதவீதத்தில் வந்து நிற்கும் என அரசு கணித்துள்ளது. ரிலையன்சின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 9 சதவீதம் குறைந்துள்ளது. ரிபைனரி லாபம் குறைந்து வருவதாலும், எண்ணெய் தேவைகள் மக்களிடையே குறைந்து வருவதாலும் காலாண்டு லாபங்கள் குறைந்ததாகக் கூறப்படுகிறது. ஹெச்.டி.எப்.சி., வங்கியின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 34 சதவீதம் கூடியுள்ளது. ஐடியா செல்லுலரின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 18 சதவீதம் கூடியுள்ளது. வங்கிகளின் லாபங்கள் இந்தக் காலாண்டில் கூடிவருகிறது. இது தொடருமா என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், வட்டி விகிதங்கள் குறைந்து வருவதாலும், வங்கிகளின் மார்ஜின்கள் குறைந்து வருவதாலும் இந்த லாபங்கள் இன்னும் ஓரிரண்டு காலாண்டுகளுக்கு நீடிக்கலாம். அதற்கு மேலும் நீடிக்குமா என்பது யோசிக்கவேண்டிய விஷயம் தான். பொதுவாகப் பார்க்கப் போனால், கம்பெனிகள் தாங்கள் வாங்கிய கடன்களுக்காகச் செலுத்திய வட்டி கூடியுள்ளது. வங்கிகளின் வராக்கடன்கள் கூடியுள்ளன. வருங்காலங்களில் வராக்கடன்கள் 5 சதவீதம் அளவிற்குச் செல்லும் என்றும் ஐயப்படுகின்றனர். மறுபடி புதிய வெளியீடுகளின் காலம்: சந்தை நிமிருவதால் பல கம்பெனிகள் இது தான் சமயம் என்று தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டுவரலாம் என முடிவு செய்துள்ளன. வருங்காலங்களில் பல கம்பெனிகளின் புதிய வெளியீடுகள் வரலாம். சரியான விலை வைத்து வரும் கம்பெனிகள் ஜெயிக்கும். வீட்டு வசதிக் கடன் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அந்தக் கம்பெனிகள் வழங்கிய கடன்கள் இந்தக் காலாண்டில் கூடியுள்ளன. அது போல லாபங்களும் கூடியுள்ளன. இது என்ன செய்தியைத் தெரிவிக்கிறது... வீட்டுக் கடன்களுக்கான தேவை கூடி வருகிறது என்பதை இதை வைத்துப் பார்க்கும் போது மறுபடி கட்டுமானத்துறை கம்பெனிகள் சிறிது சிறிதாக (செங்கல் செங்கலாக) நிமிரும் வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் கம்பெனிகளில் முதலீடு செய்வது பொல, இந்தியக் கம்பெனிகளும் வெளிநாட்டுக் கம்பெனிகளில் முதலீடு செய்து வருகின்றன. அதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதுமே பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் யார் வந்து முதலீடு செய்வர் என்று காத்துக் கொண்டிருந்த நிலை போய், நாம் வெளிநாடுகளில் சென்று கம்பெனிகளில் முதலீடு செய்வதும், கம்பெனிகளையை வாங்குவதும் பெரிய அளவில் நடப்பது நல்ல விஷயம் தானே?
தேர்தலின் இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு சதவீதங்கள் குறைவாக இருப்பதாகப் பலருக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட ஓட்டுப் பதிவில் இருந்த விறுவிறுப்பு தற்போது இல்லையோ என்ற எண்ணங்களைத் தோற்றுவித்துள்ளது. பாதி தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில் எல்லாரும் அடுத்த மாதம் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற கவலையில் உள்ளனர். பங்குச்சந்தையில் தற்போது காணும் ஏற்றம், ஓட்டுப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுக்குப் பின் சரிவில் செல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களை அடுத்து சந்தை சரிவையே சந்தித்துள்ளது. தேர்தல் முடிவு மே மாதம் 16ம் தேதி (சனிக்கிழமை) வருவதால் பங்குச்சந்தை தப்பித்தது. இருப்பினும், மே மாதம் 18ம் தேதி முதல் 29ம் தேதி வரை நித்ய கண்டம் பூர்ண ஆயுசாகத் தான் சந்தை இருக்கும். சர்வ ஜாக்கிரதை.


-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


Friday, April 24, 2009

மைக்ரோசாப்ட்டின் விற்பனை 6 சதவீதம் குறைந்திருக்கிறது

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலாண்டில், உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விற்பனை, கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் 6 சதவீதம் குறைந்திருக்கிறது.கடந்த 23 வருடங்களில் இதுவரை வேறு எந்த காலாண்டிலும், விற்பனை இந்தளவுக்கு குறைந்ததில்லை என்கிறது அது. மைக்ரோசாப்ட்டின் லாபமும் 32 சதவீதம் குறைந்து 2.98 பில்லியன் டாலராகி இருக்கிறது. விற்பனை 13.65 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் வின்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விற்பனை மூலமாகத்தான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெருமளவு லாபம் வருகிறது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மைக்ரோசாப்ட்டின் சாப்ட்வேர் விற்பனையும் குறைந்து விட்டது என்கிறார்கள். இந்த நிலை அடுத்த காலாண்டிலும் தொடரத்தான் செய்யும் என்கிறார் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிதி அதிகாரி கிரிஸ் லிட்டல். 1986 ம் ஆண்டு பப்ளிக் கம்பெனி யாக மாறிய மைக்ரோசாப்ட், செலவை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,400 பேரை உடனடியாகவும், 3,600 பேரை இன்னும் 18 மாதங்களிலும் குறைக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்தது.
நன்றி : தினமலர்


அணு உலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது எல் அண்ட் டி

இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டரக்ஸன் கம்பெனியான எல் அண்ட் டி, அணுஉலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது. இதற்காக, இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் அணுஉலை தொழிலில் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஹிட்டாச்சி என்ற நிறுவனத்துடனுன், பிரான்சின் அரேவா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள இருக்கிறது. ஏற்கனவே எல் அண்ட் டி நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த ஆட்டம்ஸ்டிராய்எக்ஸ்போர்ட் நிறுவனத்து டனும், அமெரிக்காவை சேர்ந்த டோஷிபா வெஸ்டிங்ஹவுஸ் என்ற நிறுவனத்துடனும், கனடாவை சேர்ந்த ஆட்டோமிக் எனர்ஜி ஆஃப் கனடா என்ற நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. எல் அண்ட் டி யின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதன் மூலமாக, சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் தொழிலில் வேகமாக வளர முடியும் என்று எல் அண்ட் டி கருதுகிறது. நியூக்கிளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் இந்தியா சேர்ந்ததில் இருந்து, சிவில் வேலைக்காக, அணு உலை அமைக்க, தேவையான மூலப் பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீங்கி யிருக்கிறது. வரும் 2032ம் வருடத்திற்குள் இந்தியா, அணுசக்தி மூலம் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே இதன் மூலம் சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்கள் வர இருக்கின்றன.

நன்றி : தினமலர்


Thursday, April 23, 2009

புழக்கத்திற்கு வருகிறது பத்து ரூபாய் நாணயம்

பத்து ரூபாய் நாணயங்களை, அடுத்த வாரம் முதல் சென்னையில் புழக்கத்தில் விட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மும்பை, டில்லி மற்றும் ஐதராபாத் ஆகிய ஊர்களில், 10 ரூபாய் நாணயங்கள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் சென்னையிலும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வரப் போகின்றன. இதை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.,) அதிகாரிகளும் உறுதி செய்தனர். இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப் படுத்தியதன் மூலம், அதே மதிப்பிலான நோட்டுக்களை, புழக்கத்தில் இருந்து அகற்ற திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த 10 ரூபாய் நாணயங்கள் மூன்றாண்டுக்கு முன்பே வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், தாமதமாகியது. நாணய அறிமுகத்தின் முக்கிய நோக்கம், கள்ளநோட்டுக்களை தவிர்ப்பது மற்றும் எளிதாக அடையாளம் காணுவது என ஆர்.பி. ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படும்,
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் என்.ஐ.டி., நிறுவனம், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மையக்கருத்தை கொண்டு, 10 ரூபாய் நாணயத்தை வடிவமைத்துள்ளது. இந்த நாணயத்தின் எடை 8 கிராம். இது 28 மி.மீ., விட்டம் கொண்டது. இதன் அளவு இரண்டு ரூபாய் நாணயத்தை விட பெரிது. இந்த நாணயம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இந்த நாணயத்தின் முன்பக்கத்தில், மூன்று தலை கொண்ட சிங்கம்,10 என்ற எண் மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதன் மறுபக்கத்தில், ஒன்றுக் கொண்டு குறுக்காக அமைந்து இரண்டு இரட்டை கோடுகளும், அதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு புள்ளியும் இடம்பெற்றிருக்கும்.
அதை சுற்றி நாணயத்தின் மதிப்பு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுத்தால் எழுதப்பட்டிருக்கும். இந்த நாணயத்தின் மேல் பக்கம், நிக்கல் மற்றும் பித்தளை கலவையால் உருவாக்கப் பட்டது. உள்பக்கம் பெரஸ் ஸ்டீல் உலோகத்தால் தயாரிக்கப் பட்டது.
என்.ஐ.டி., நிறுவனம், வேற்றுமையில் ஒற்றுமை, பரதநாட்டிய முத்திரைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணைப்பு ஆகியவற்றை மையக்கருவாக கொண்டு மூன்று டிசைன்களை வடிவமைத்தது. இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறினர்.
நன்றி : தினமலர்


Wednesday, April 22, 2009

லாபம் குறைந்து போனதால் 5 சதவீத ஊழியர்களை குறைக்கிறது யாகூ

உலகம் முழுவதும் இருக்கும் அதன் ஊழியர்கள் என்ணிக்கையில் 5 சதவீதத்தை குறைக்க யாகூ முடிவு செய்திருக்கிறது. செலவை குறைக்கும் நடவடிக்கையை எடுத்த பின்பும் அதன் நிகர லாபம் குறைந்திருப்பதால், மேலும் ஊழியர்களை குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. பொருளாதார நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. எங்கள் வெப்சைட்களில் வெளியிடப்படும் டிஸ்ப்ளே விளம்பரம் மற்றும் தேடுதல் மூலம் பார்க்கப்படும் விளம்பரங்கள் மூலம் வந்து கொண்டிருந்த வருமானம், இந்த முதல் காலாண்டில் குறைந்திருக்கிறது. எனவே லாபமும் குறைந்து போனது என்கிறது யாகூ. கடந்த வருடத்தின் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 537 மில்லியன் டாலர் லாபம் சம்பாதித்திருந்த யாகூ, இந்த வருடத்தில் 118 மில்லியன் டாலர் லாபம் தான் சம்பாதித்திருக்கிறது. அதன் மொத்த வருவாயும் 13 சதவீதம் குறைந்து 1.58 பில்லியன் டாலராகி இருக்கிறது. எனவே குறைந்திருக்கும் லாபத்தை சரிக்கட்ட, உலகம் முழுவதிலும் இருக்கும் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 600 முதல் 700 வரை ( அதாவது 5 சதவீதம் ) குறைக்கிறது. கடந்த வருடம் அக்டோபரில் தான் யாகூ, அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதத்தை குறைத்தது.
நன்றி : தினமலர்


வீடு, வாகனம் கடன் மீதான வட்டி மேலும் குறையும்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

வீடு, வாகனம் மற்றும் கம்பெனிகள் பெறும் கடன் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படும் வகையில் ரிசர்வ் வங்கி, தன் வருடாந்திர கடன் வசதிக் கொள்கையை அறிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ், 2009-10ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர கடன் வசதிக் கொள்கையை அறிவித்தார். தற்போது உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்த நிலையைத் தொடர்ந்து, பல்வேறு சலுகை மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வங்கிகள் அளிக்கும் கடன் வசதி மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தான், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற கருத்து தொடர்ந்து பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் 2009-10ம் ஆண்டின் கடன் வசதிக் கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், குறைந்த கால வங்கி ரொக்க கையிருப்பு (ரெப்போ) சதவீதம் 4.75 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கிகளில் வைத்திருக்கும் பணம் (ரிவர்ஸ் ரிப்போ) சதவீதம் 3.25 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இது, ஏற்கனவே இருந்த அளவில் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற வங்கிப் பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.
அதே சமயம் மொத்த வளர்ச்சி 2008-09ம் ஆண்டுக்கு 6.5 சதவீதம் இருக்கும் என்ற மதிப்பீடு, தற்போது 6 சதவீதமாகக் குறையும் என்று மாற்றி மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், பணவீக்கம் மார்ச் 2010 வரை தொடர்ந்து 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்காது என்ற நல்ல தகவலும் இதில் உள்ளது.
பணவீக்கம் பூஜ்யம் அளவிற்கு குறைந்ததால், பாதிப்பு ஏற்படாது என்றும் தேவைகள் குறைய வாய்ப்பில்லை என்றும், பெரிய அளவில் கச்சா எண்ணெய் விலைக்குறைவு இந்த அளவிற்கு பணவீக்கம் குறையக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறுகையில், 'உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிலைமையைக் கணக்கிட்டு அதற்கேற்ப ரிசர்வ் வங்கி நடவடிக்கை இருக்கும். 'உலக அளவிலான மந்தப் பொருளாதார நிலை பாதிக்காமல், அதே சமயம் வளர்ச்சி இருக்கும் வகையில் நடவடிக்கை அமையும். 'வங்கிகள் கடன் வழங்கும் போது, அதற்கான வட்டிவிகிதம் குறையும் வாய்ப்புகள் உள்ளன. அதே போல வங்கிகள் டிபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி அளவை குறைப்பதால் சிறுசேமிப்பு போன்றவை போட்டியாக வரும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. காரணம் பணப்புழக்கம் பாதிப்பின்றி இருக்கிறது' என்றார்.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓரியண்டல் வங்கி நிர்வாக டைரக்டர் எஸ்.சி.சின்கா கூறுகையில், 'ரிசர்வ் வங்கி கொள்கையைப் பார்க்கும் போது வங்கி கடன் மீதான வட்டி குறையும்' என்றார். நிதித்துறை பொருளாதார விவகாரச் செயலர் அசோக் சாவ்லா கருத்துத் தெரிவிக்கும் போது, 'ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வங்கி தரும் கடன் மீதான வட்டி விகிதம் குறையும்' என்று கருத்துத் தெரிவித்தார். வீடு, கார் மற்றும் கம்பெனிகள் வாங்கும் கடன் மீதான வட்டி அளவு இனிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு கடன் அளவு 'ஓஹோ...': மத்திய, மாநில அரசுகள் வாங்கும் கடன் அளவு கணிசமாக அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்: நடப்பு நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகள் வாங்கிய கடன் அளவு மதிப்பீடு: நான்கு லட்சத்து 34 ஆயிரத்து 647 கோடி ரூபாய். இது 2008-09ல் நான்கு லட்சத்து 2,032 ரூபாயாகும். நிதி ஊக்குவிப்பு செயல்களுக்காக செலவிடும் பணத்திற்காக கடன் வாங்கும் அளவு அதிகரித்திருக்கிறது.
முன்பு 2007-08ம் ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் இரண்டரை மடங்கு கடன் அதிகமாக வாங்கப்படுகிறது. இதில் மாநில அரசுகள் வாங்கும் கடன் அளவும் அதிகரித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Tuesday, April 21, 2009

கடந்த பத்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை 216 சதவீதம் உயர்ந்திருக்கிறது

1999-ஆம் ஆண்டில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.3,850 என்ற அளவில் தான் இருந்தது. அப்போது ஒருவர், 10 கிராம் தங்கம் வாங்கி வைத்திருந்தார் என்றால், அது இன்றைய தேதியில் 216 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்திருக்கும் என உலக தங்க கவுன்சிலின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த பத்து ஆண்டுகளில், தங்கத்தின் விலை ஆண்டுக்கு சராசரியாக 24 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. நடப்பு 2009-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்திருந்தது. அதாவது, அதன் விலை அப்போது சராசரியாக ரூ.14,180 என்ற அளவில் இருந்தது. ( பிப்ரவரி மாதம் 24-ந் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,780 வரையிலும் உயர்ந்திருந்தது ) 2006-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.8,791 ஆகத்தான் இருந்தது. அது, 2008-ஆம் ஆண்டில், அதிகபட்சமாக ரூ.12,147 ஆகத்தான் உயர்ந்திருந்தது. ஆக, இந்த இடைப்பட்ட காலத்தில், தங்கத்தின் விலை 38 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சென்ற ஆண்டு பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் விலை : சன் மைக்ரோசிஸ்டத்தை ஆரக்கிள் வாங்குகிறது

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சன் மைக்ரோசிஸ்டத்தை, பிரபல கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் வாங்குகிறது. சன் நிறுவனத்தின் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிள் வாங்கிக்கொள்கிறது. அதன் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர் ( சுமார் 35,000 கோடி ரூபாய் ) என்று சொல்லப்படுகிறது. கடந்த வெள்ளி அன்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கின் முடிவு விலை என்னவாக இருந்ததோ, அதிலிருந்து 42 சதவீதம் பிரீமியம் வைத்து அதன் பங்குகளை ஆரக்கிள் வாங்கிக் கொள்கிறது. சன் விற்கப்படுவதை அடுத்து நேற்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கு மதிப்பு 27 சதவீதம் உயர்ந்தும், ஆரக்கிளின் பங்கு மதிப்பு 5.56 சதவீதம் குறைந்தும் இருந்தது. ஏற்கனவே, சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்குகளை பங்கு ஒன்றுக்கு 9.40 டாலர் வரை கொடுத்து வாங்கிக்கொள்வதாக ஐ.பி.எம்.தெரிவித்திருந்தது. இருந்தாலும் ஐ.பி.எம்.மின் கோரிக்கையை சன் நிராகரித்து விட்டது. அதன் பின் ஒரு மாதத்திற்குப்பின் இப்போது பங்குக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிளுக்கு கொடுக்கு முன் வந்திருக்கிறது. ஆரக்கிளிடம் சன் மைக்ரோசிஸ்டத்தை விற்பதற்கு அதன் போர்டு ஆப் டைரக்டர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டனர். இருந்தாலும் பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒப்புதலை பெற்று இது விற்கப்படும் என்று சன் தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஆக்ஸிஸ் பேங்க் சேர்மன் ராஜினாமா : ஷிகா சர்மாவை எம்.டி.யாக நியமித்ததற்கு எதிர்ப்பு

ஆக்ஸிஸ் பேங்க்கின் அடுத்த மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.வாக ஷிகா சர்மாவை போர்டு நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சேர்மன் பி.ஜே.நாயக் ராஜினாமா செய்திருக்கிறார். நேற்று சுமார் 7 மணி நேரம் நடந்த ஆக்ஸிஸ் பேங்கின் போட்டு மீட்டிங்கில், அடுத்த மேலாண் இயக்குனராக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சுவந்தபோது, அதன் நியமன கமிட்டி ஷிகா சர்மாவின் பெயரை சொன்னது. ஆனால் அதற்கு நாயக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது, அதில் நாயக் மட்டுமே ஷிகா சர்மாவுக்கு எதிராக ஓட்டளித்திருந்தார். மற்ற 8 உறுப்பினர்களும் ஷிகாவுக்கு ஆதரவாக ஓட்டளித்திருந்தனர். மேலும் அந்த பதவிக்கு நாயக் சிபாரிசு செய்த ஹேமந்த் கவுல் ஐ விட, ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் இல் எம்.டி.மற்றும் சி.இ.ஓ.,வாக இருந்து நல்ல அனுபவம் பெற்றிருக்கும் ஷிகா சர்மாதான் பொருத்தமானவர் என்று போர்டு கருதியது. ஹேமந்த் கவுர், ஆக்ஸிஸ் பேங்க்கின் ரீடெய்ல் நடவடிக்கைகளுக்கு எக்ஸிகூடிவ் டைரக்டர் பொறுப்பாக இருப்பவர்.

நன்றி : தினமலர்



முன்கூட்டியே டிக்கெட் வாங்கினால் குறைந்த கட்டணத்தில் பறக்கலாம் : ஏர் இந்தியா அறிமுகம்

ஏர் இந்தியா விமானங்களின் பயணம் செய்யும் பயணிகள், அதற்கான டிக்கெட்டை முன்கூட்டியே வாங்கினால் குறைந்த கட்டணம்தான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். உள்நாட்டு விமான சேவையில் குறிப்பிட்ட 35 இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சலுகை ஏப்ரல் 17 ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அட்வான்ஸ் பர்சேஸ் எக்ஸ்கர்சன் ஃபேர்ஸ் ( அபெக்ஸ் ) என்ற இந்த திட்டப்படி, சென்னையில் இருந்து மதுரை அல்லது ஐதராபாத் அல்லது விசாகப்பட்டணம் அல்லது பெங்களுர் செல்ல விரும்பும் பயணிகள், 10 நாட்களுக்கு முன்பே அதற்கான டிக்கெட்டை வாங்கி விட்டால் ரூ.2,694 தான் கட்டணம். அதையே 20 நாட்களுக்கு முன்பு வாங்கினால் ரூ.2,494 தான் கட்டணம். இதில் பேசிக் ஃபேர், பேசஞ்சர் சர்வீஸ் ஃபீ, மற்றும் பியூயல் சர் சார்ஞ் ஆகியவை அடங்கி விடும். ஆனால் சில விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் யூசர் டெவலப்மென்ட் ஃபீ மட்டும் கட்டவேண்டியிருக்கும். மேலும் இந்த திட்டத்தில் வாங்கப்படும் டிக்கெட்களை கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெற முடியாது. கோடை காலத்திற்காக ஏற்கனவே ஏர் இந்தியா அறிமுகப்படுத்திய, 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் எடுத்தால் குறைந்த கட்டணம் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த திட்டமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


பொறுப்புள்ள செயலா...

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41-வது பிரிவுக்குத் திருத்தம் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகு, அதை அரசு கெஜட்டில் வெளியிடாமல் நிறுத்திவைப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
""மிகவும் முற்போக்கான நடவடிக்கை, மனித உரிமைகளைக் காப்பதற்கு இதைவிட வேறு வழியே இல்லை'' என்று வெகுவாகப் பாராட்டப்பட்ட ஒரு சட்டத் திருத்தம், வழக்கறிஞர்கள் சங்கத்தின் பலமான ஆட்சேபம் காரணமாகக் கைவிடப்படும் அல்லது திருத்தப்படும் நிலையை எட்டியிருக்கிறது. இந்த நடவடிக்கை அடிப்படையாகச் சில கேள்விகளை எழுப்புகிறது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் விரிவாகவும் ஆழமாகவும் விருப்பு வெறுப்பு இல்லாமலும் விவாதித்துத் தீர்வு காண்பார்கள் என்றுதான் நாடு நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த 2008-வது ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவில்லை.
எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் சட்டத் திருத்தமாக இருந்தாலும் அதன் மீது 3 கட்டங்களில் பரிசீலனை நடக்கிறது. முதலில் அந்தச் சட்டம் அல்லது சட்டத் திருத்தம் வரைவு நிலையில் தயாரித்து முடிக்கப்பட்டு அவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்துப் பார்க்கவும், விவாதத்துக்குத் தயார் செய்து கொள்ளவும் இப்படிச் செய்யப்படுகிறது.
அடுத்தபடியாக அதே சட்ட வரைவு மசோதா அல்லது சட்டத் திருத்த மசோதா அந்தந்தத் துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவில் விவாதிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக இந்த மசோதா மீது பொது விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்குப்பின் நிறைவேற்றுகிறார்கள்.
சர்ச்சைக்குரிய இந்தக் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதாவில், சில வகைக் குற்றங்களுக்கு போலீஸ் அதிகாரிக்கு இருந்த ""கைது அதிகாரம்'' நீக்கப்பட்டிருக்கிறது. அதாவது 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாகத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச் செயல்களாக இருந்தால், ""விசாரணைக்கு அழைக்கும்போது வர வேண்டும்'' என்று எழுதி வாங்கினால் போதும், கைது செய்ய வேண்டாம் என்று திருத்தம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தமே 41 (ஏ) என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் திருத்தத்தின் மூலம் போலீஸ் அதிகாரியின் வரம்பற்ற கைது அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படும் நடவடிக்கைகள் இனி குறைந்துவிடும் என்றும், மனித உரிமை ஆர்வலர்களும், சட்டக் கமிஷன்களும் நெடுநாள்களாக வலியுறுத்தி வந்த விஷயத்துக்கு இத் திருத்தம் வடிவம் கொடுத்துவிட்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எல்லா சிறைச்சாலைகளும் நிரம்பி வழிவதால், சாதாரணக் குற்றங்கள் செய்கிறவர்களையும் அடைத்தால் அவர்களைப் பராமரிப்பது கடினமாக இருக்கிறது என்பதால் இப்படித் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் கூட அப்போது கூறப்பட்டது. இப்படிக் கைது அதிகாரத்தை மட்டுப்படுத்தினால் சிறிய குற்றங்கள் பெருகிவிடும்; வரதட்சிணைக் கொடுமை போன்ற வழக்குகளில் பெண்கள் தரும் புகார்கள் மீது மாமியார், நாத்தனார், மாமனார், கணவர் போன்றோரைக் கைது செய்யத் தடை ஏற்பட்டுவிடும். அதன் பிறகு இக் கொடுமைகளைச் செய்வோருக்கு அதுவே ஊக்குவிப்பாகிவிடும் என்று பல மகளிர் அமைப்புகள் சுட்டிக்காட்டின.
பெண் சீண்டல், பெண்களைக் கேலி செய்தல், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவான தண்டனைகளே விதிக்கப்படுவதால் அத்தகைய குற்றங்கள் பெருகிவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
வழக்கறிஞர் சங்கங்கள்தான் இந்தத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்தன. ""ஜாமீன் வாங்கித்தருவதன் மூலம்தான் வழக்கறிஞர்களுக்கு நிறையப் பணம் கிடைக்கிறது; அந்த வழக்குகளில் பெரும்பாலானவை இனி அடிபட்டுப் போய்விடும் என்பதால் வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்'' என்று கூறப்பட்டது. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம்; ஆனால் வழக்கறிஞர்களுடைய ஆட்சேபத்தில் வலுவும், நியாயமும் இருக்கிறது.
""குற்றவியல் சட்டத்தின் 41-வது பிரிவு "ஏ'-வுக்கு இப்படி எதிர்ப்பு என்றதும் கைவிடுகிறீர்களே, இதை ஏன் முதலில் ஏற்றுக் கொண்டீர்கள்?'' என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேட்டதற்கு, ""மலிமத் கமிட்டி பரிந்துரைத்தது, சட்டக் கமிஷனும் இதை அமல் செய்யும்படி கூறியது'' என்று மட்டும் பதில் அளித்திருக்கிறார். இது ஏற்கும்படியான விளக்கமாக இல்லை.
""வரும்பொருள் உரைத்தல் மந்திரிக்கழகு'' என்பது முதுமொழி. இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை ஊகித்தறிய முடியாதவர்களா சிதம்பரங்களும், கபில் சிபல்களும், ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்களும்? நம்பவே முடியவில்லை.
நன்றி : தினமணி

Monday, April 20, 2009

மொரீசியஸ் வழியாகத்தான் இந்தியாவுக்கு 43 சதவீத அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது

இந்தியாவுக்கு வந்திருக்கும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 43 சதவீதம் மொரீசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. சர்வதேச அளவில், வரி கட்டவேண்டாத நாடாக மொரீசியஸ் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் பெரும்பாலான நாட்டு நிறுவனங்கள் அந்த நாட்டு வழியாகத்தான் மற்ற நாடுகளில் முதலீடுகளை செய்கின்றன என்கிறார்கள். 2000 ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை இந்தியாவுக்குள் வந்திருக்கும் 81 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டில், 35.18 பில்லியன் டாலர் பணம் மொரீசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. டிபார்ட்மென்ட் ஆப் இன்டஸ்டிரியஸ் பாலிஸி அண்ட் புரமோஷன் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், வரி கட்ட தேவையில்லை என்பதற்காக வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்படும் பணம் மீட்கப்படவேண்டும் என்று சமீப காலமாக, தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக பா.ஜ.க. சொல்லி வருகிறது.
நன்றி : தினமலர்


சத்யம் பங்குகளை வாங்குவதற்காக பத்திரங்கள் மூலம் ரூ.600 கோடி திரட்டிய டெக் மகேந்திரா

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை வாங்க முன்வந்திருக்கும் டெக் மகேந்திரா நிறுவனம், அதற்கான பணம் ரூ.1,756 கோடியை வரும் 21ம் தேதிக்குள் செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு தேவையான பணத்திற்காக, ரூ.600 கோடியை, பத்திரங்களை விற்று திரட்டி இருக்கிறது. ஏப்ரல் 17ம் தேதி, ரூ.10 லட்சம் முக மதிப்புள்ள, 6,000 நான் கன்வெர்டிபிள் ( மாற்ற முடியாத ) டிபஞ்சர்களை ( என்சிடி )டெக் மகேந்திரா வெளியிட்டு இந்த பணம் திரட்டப்பட்டதாக மும்பை பங்கு சந்தைக்கு அது அளித்த அறிக்கையில் தெரிவித்திருக் கிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகளை விற்க அந்த நிறுவனத்தின் போர்டு முடிவு செய்து ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்த்தபோது, டெக் மகேந்திராவின் இன்னொரு நிறுவனமான வெஞ்சர்பே கன்சல்டன்ட்ஸ் அளித்த விண்ணப்பமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. சத்யத்தின் பங்குகளை பங்கு ஒன்றை ரூ.58 விலையில் வாங்கிக்கொள்வதாக வெஞ்சர்பே சொல்லியிருந்ததால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 31 சதவீத பங்குகளுக்கான தொகை ரூ.1,756 கோடியை வரும் 21ம் தேதிக்குள் செலுத்துமாறு இந்திய கம்பெனி சட்ட வாரியம் தெரிவித்திருந்ததை அடுத்து அதற்கு தேவையான பணத்தை திரட்ட டெக் மகேந்திரா தீவிரமாக முடிவு செய்தது
நன்றி : தினமலர்


ஐ.பி.எல்., முதல் நாள் போட்டியின் டி.வி.ரேட்டிங் 16 சதவீதம் குறைந்துள்ளது

பெரும் பரபரப்புடன் தென் ஆப்ரிக்காவில் துவங்கிய இரண்டாவது சுற்று ஐ.பி.எல்., டுவன்டி 20 கிரிக்கெட் போட்டிகளின் முதல் நாள் ஆட்டம், அதில் தோல்வியடைந்த சென்னை சூப்பர்கிங் அணிக்கு மட்டும் ஏமாற்றத்தை அளித்ததாக இருக்கவில்லை. விளம்பரதாரர்கள் மற்றும் டி.வி.ஒளிபரப்பாளர்களுக்குமே அது கடும் ஏமாற்றத்தை அளிப்பதாகத்தான் இருந்தது. காரணம் என்னவென்றால், அன்றைய போட்டியை டி.வி.,யில் ஒளிபரப்பு செய்த செட் மேக்ஸ் டி.வி.,யின் டி.வி. நேயர்கள் ரேட்டிங், கடந்த வருட முதல் நாள் போட்டியுடன் ஒப்பிட்டால் 16 சதவீதம் குறைந்துள்ளது. முதல் நாள் நடந்த முதல் போட்டியின் போது ( மும்பை இந்தியன்ஸூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸூக்கு மிடையே நடந்தது ) டி.வி.ரேட்டிங் 3.6 சதவீதமாகவும், இரண்டாவது போட்டியின் போது ( ராயல் சேலஞ்சர் ஸூக்கும் ராஜஸ்தான் ராயல்ஸூக்கு மிடையே நடந்தது ) 3.8 சதவீதமாகத்தான் இருந்தது. ஆனால் இதுவே, கடந்த வருடம் நடந்த ஐ.பி.எல்., போட்டிகளின் முதல் நாள் ஆட்டத்தின் போது ( கோல்கட்டா னைட் ரைடர்ஸூக்கும் ராயல் சேலஞ்சர்ஸூக்குமிடையே நடந்தது ) டி.வி.ரேட்டிங் 4.3 சதவீதமாக இருந்தது. டி.வி. நேயர்களை பற்றி கணக்கெடுப்பு நடத்தி தகவல்களை வெளியிடும் ' ஆடியன்ஸ் மெஸர்மென்ட் அண்ட் அனலைட்டிக்ஸ் லிட்.,( ஏ மேப் ) நிறுவனம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறது. கேபில் கனெக்ஷன் வைத்திருப்ப வர்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய ஆறு நகரங்களில் இருக்கும் 15 க்குமேற்பட்ட வயதினரிடம் இந்த கணக்கெடுப்பை அவர்கள் எடுதிருக்கிறார்கள். டி.வி.,யில் ஒளிபரப்பப்படும் ஸ்போர்ட்ஸ் சேனல்களின் நேயர்கள் எண்ணிக்கையை கணக்கிட அவர்கள் இந்த வழிமுறையைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் 8 கோடியே 60 லட்சம் பேரிடம் கேபிள் கனெக்ஷன் இருக்கின்றன. இருந்தாலும் கடந்த வருடம் நடந்த முதல் நாள் ஆட்டத்தை 5.6 மில்லியன் மக்களே டி.வி.யில் பார்த்திருந்த நிலையில், இந்த வருடம் நடந்த முதல் நாள் ஆட்டத்தை 7 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். கடந்த வருடத்தை விட 1.4 மில்லியன் பேர் கூடுதலாக பார்த்திருந்த போதும் ஏன் ரேட்டிங் மட்டும் குறைந்திருப்பதாக சொல்கிறீர்கள் என்று ' ஏ மேப் ' பின் சி.இ.ஓ., அமிட் வர்மாவிடம் கேட்டபோது, இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், ஒவ்வொரு போட்டியையும் ஒருவர் எந்தனை மணி நேரம் பார்த்தார் என்பது தான் அது. அப்படி பார்த்தால், கடந்த வருட போட்டியை விட இந்த வருட போட்டி குறைந்த நேரமே மக்கள் பார்த்திருக்கி றார்கள். எனவே டி.வி.ரேட்டிங் குறைந்து விட்டது என்றார்.
நன்றி : தினமலர்


10 பெரிய கம்பெனிகளின் சந்தை முதலீடு ரூ.28,500 கோடி உயர்ந்தது

கடந்த வாரம் இந்திய பங்கு சந்தை நல்ல ஏற்ற நிலையில் இருந்ததால், இந்தியாவின் 10 பெரிய நிறுவனங்களின் சந்தை முதலீடு ரூ.28,500 கோடிக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை முதலீடு கடந்த வாரம் ரூ.7,228 கோடி குறைந்திருந்தும் கூட, நான்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆறு பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை முதலீடு ரூ.28,512 கோடி அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பெரிய கம்பெனிகளின் மொத்த சந்தை முதலீடு ரூ.12,19,886 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் அது ரூ.11,91,375 கோடியாக இருந்தது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை முதலீடு கடந்த வாரத்தில் ரூ.2,447 கோடியும் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை முதலீடு ரூ.4,780 கோடியும் குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஒபாமாவுக்கு பரிசளித்ததால் விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்த புத்தகம்

டிரினிடாட் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ' சம்மிட் ஆஃப் த அமெரிக்காஸ் 'மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வெனிசுலா அதிபர் ஒரு புத்தகத்தை பரிசளித்தார். உருகுவே நாட்டு எழுத்தாளர் எட்வர்டோ கேலியானோ, ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ' த ஓப்பன் வெய்ன்ஸ் ஆஃப் லத்தீன் அமெரிக்கா ' என்ற அந்த புத்தகம், இதுவரை விற்பனையில் 54,295 வது இடத்தில்தான் இருந்தது. ஒபாமாவுக்கு அந்த புத்தகம் பரிசளிக்கப்பட்டபின் அது, இப்போது அதிகம் விற்பனை யாகும் புத்தக லிஸ்ட்டில் இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டது. கடந்த ஐநூறு ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்கா வில் மற்ற நாடுகளின் தலையீடு எந்த அளவுக்கு இருந்து வருகிறது என்றும், அதனால் ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்துமே அந்த புத்தகத்தில் எட்வர்டோ எழுதியிருந்தார். மாநாடு நடந்து கொண்டிருந்த போதே திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த வெனிசுலா அதிபர் சாவஸ், நேராக ஒபாமா இருப்பிடம் சென்று, அதை அவரிடம் கொடுத்துவிட்டு கை குழுக்கினார். அந்த புத்தகத்தில் ' மிக்க அன்புடன், ஒபாமாவுக்கு ' என்று சாவஸ் எழுதியிருந்தார்.
நன்றி : தினமலர்


மாற்றம்... ஏமாற்றம்...

இன்றுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி ஓய்வு பெறுகிறார். இந்தியா சந்தித்த 15 தேர்தல் ஆணையர்களில், தேர்தல்கள் நடைபெறும்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஓய்வு பெறுவது இதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது. யாரைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று அவர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தாரோ அவர் நாளை முதல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்க இருக்கிறார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் சம்பிரதாயப்படி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோபாலசுவாமி, தனது பரிந்துரை குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட உடன் அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று கூறி பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றி இருக்கிறார். அதேநேரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதற்கான அதிகாரம் உண்டு என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோபாலசுவாமி கூறியிருக்கும் இன்னொரு கருத்து, தனிநபர் தேர்தல் ஆணையத்தைவிட, பல உறுப்பினர்கள் அடங்கிய ஆணையம்தான் நன்றாகச் செயல்பட முடியும் என்பது. இன்னும் பல பிரச்னைகளில் தனது செயல்பாடுகள் பற்றியும் கருத்துக் கூறியிருக்கும் கோபாலசுவாமியின் மூன்றாண்டுத் தலைமை முடிவடைகிறது. சில விஷயங்களில் துணிவுடனும், சில விஷயங்களில் கண்டும்காணாமலும் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற விமர்சனத்துடன் ஓய்வு பெறுகிறார் அவர்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றிக் குறிப்பிடும்போது, சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின் என்று அந்த ஆணையத்தின் சரித்திரம் எழுதப்படும் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் எத்தகையது, என்னென்ன என்பது டி .என். சேஷன் அந்தப் பதவியில் அமர்ந்த பிறகுதான் நாடு தெரிந்துகொண்டது. சேஷனின் கெடுபிடிகளும், தேர்தல் விதிமுறை மீறல்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஆளும் கட்சியால் தனது அதிகார பலத்தைப் பிரயோகிக்கவோ, பணபலம், அடியாள் பலம் உள்ள வேட்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகத் தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தவோ தடையாக இருந்தன. சேஷனின் கெடுபிடிகளால் மிரண்டுபோன மத்திய அரசு, மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தை உருவாக்கி, ஒருவருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற சிறப்பு அந்தஸ்தும், அனைத்து உறுப்பினர்களுக்கும் சம அதிகாரமும் வழங்க முடிவெடுத்தது. அன்று முதல் இன்று வரை, ஆளும் கட்சிக்குச் சாதகமான அதிகாரிகள் மட்டுமே தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்றாலும், ஆணையத்தின் முடிவுகள் பெரும்பான்மை மூலம் முடிவு செய்யப்படுவதால் ஓரளவுக்கு நியாயமாகவே இருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். அதேநேரத்தில், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது என்பது ஆணையத்தின் செயல்பாடுகளில் நடுநிலைமை கடைப்பிடிக்கப்படுமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. இது தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல், மத்திய தகவல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளுக்கும் பொருந்தும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அரசியல் சட்ட அமைப்புகளான தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளின் தலைமை ஆணையர்கள் ஆகியோர் அடங்கிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அந்த அமைப்பின் பரிந்துரைப்படி ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது.

1993-ல் அன்றைய தேர்தல் கமிஷனர் டி .என். சேஷனின் அதிகார வரம்புக்குக் கடிவாளம்போட, மூன்று பேர் அடங்கிய தேர்தல் கமிஷனை அன்றைய நரசிம்மராவ் அரசு ஏற்படுத்தியபோது, மேலே குறிப்பிட்ட கோரிக்கையை, பாரதிய ஜனதா மற்றும் எதிர்க்கட்சியில் இருந்த பல மாநிலக் கட்சிகள் முன்வைத்தன. அன்று கோரிக்கை வைத்த கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தபோது, இதே கோரிக்கை காங்கிரஸ் தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டது. ஆட்சியில் அமர்ந்தால் அதிகாரப் பகிர்வுக்கு யாரும் தயாராக இல்லை என்பதற்கு இதுவேகூட ஓர் உதாரணம். தவறான பின்னணிகள் உள்ள ஒருவர் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட இருக்கிறாரே, இதனால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. சரியான மனிதர்கள் இருந்தபோது தவறுகள் நடக்கவில்லையா என்ன? அதுபோல, தவறான மனிதர்களின் தலைமையில் நல்லதுகூட நடக்கலாம். அதுவல்ல பிரச்னை. அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டாக வேண்டும். தேர்தல் ஆணையர்களின் தேர்வு, பாரபட்சமில்லாமல் நடத்தப்பட வேண்டும். தவறு செய்பவர்களைத் தண்டிக்கவும், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் தரப்பட வேண்டும். மாநில அரசின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாத அளவுக்கு அதிகாரம் பெற்ற அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்பட முடிய வேண்டும். கூடவே, தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த அடிப்படை மாற்றங்கள் ஏற்படாதவரை, தலைமைத் தேர்தல் ஆணையராக யார் இருந்தால்தான் என்ன? தேர்தல் ஒரு திருவிழாவாக இருக்குமே அன்றி பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது!
நன்றி : தினமணி

Sunday, April 19, 2009

ஓடப்பர் உதையப்பரானால்...

வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாகச் செலவிட வேண்டிய வரம்பு லட்சங்களில் இருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் பல கோடிகள், தெருக்கோடிகளில் புரள்கின்றன என்பது ஊரறிந்த ரகசியம். பதவிக்காக பல நூறு கோடிகளை வாரி இறைத்து ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கும் அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்று, தெருவோரப் பராரிக்காகக் குரல் எழுப்புகிறதா என்று பார்த்தால், அப்படி ஒரு சிந்தனையே எந்தவொரு அரசியல் இயக்கத்துக்கும் இருப்பதாகவே தெரியவில்லை. வாக்குகளைப் பெற பிரியாணி விருந்து தரப்படுவதாக எல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வில் நிரந்தரமாக அவனது பசியைத் தீர்க்க வேண்டாம். அதற்கான திட்டங்களையாவது ஏதாவது ஒரு கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்திருக்கிறதா என்றால் இல்லை. ஓட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம், ஒரு வேளைக் கஞ்சிக்காக ஏங்கித் தவிக்கும் குடிமக்கள் மறுபுறம். இந்திய ஜனநாயகத்தின் விசித்திரமான பரிமாணங்களில் இதுவும் ஒன்று. இத்தனை கோடி ரூபாய்கள் தேர்தல் என்கிற சாக்கில் வாரி இறைக்கப்படும் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை ஒன்று வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையைப் படித்தால் திகைப்பும் வியப்பும். இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உலகில், வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு பசியைப் போக்க எத்தனிக்கும் மனிதர்களில் பாதிக்கும் அதிகமானோர் வாழ்வது இந்தியாவில்தான் என்கிறது அந்த அறிக்கை. அதுமட்டுமா? ஆண்டுதோறும் இந்தியாவில் மரணமடையும் சிசுக்களில் 50 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால்தான் மரணமடைவதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள ஆப்பிரிக்க நாடுகளில்கூட ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம்தான். ஆனால், நமது பொன்னான பாரத பூமியில் உலகில் எங்குமே இல்லாத அளவுக்கு 47 சதவிகிதம். சர்வதேச உணவு ஆராய்ச்சி நிறுவனம் என்று ஓர் அமைப்பு. இந்த அமைப்பு இந்தியப் பசிக் குறியீடு என்று அத்தனை தாலுகாவிலும் புள்ளிவிவரங்களைத் திரட்டி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு ஆகிய இரண்டு விஷயங்களிலும் ஆபத்தான நிலையில் இந்தியா இருக்கிறது என்றும், இதைப் பற்றி ஆட்சியாளர்களும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள இந்தியக் குடிமக்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை என்றும் ஆதங்கப்படுகிறது அந்த அறிக்கை. ஆட்சியாளர்களிடம் கேட்டால், பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு அரிசியும் கோதுமையும் கொடுக்கிறோம் என்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம் நிறைவேற்றப்படுகின்றன என்றும் கூறித் தப்பித்துக் கொள்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடிமக்களை முன்னிறுத்தி செயல்படுத்தப்படுவதாகக் கூறும் பொது விநியோக முறை, குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான் செயல்படுகிறது. இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இன்றும் ரேஷன் கடைகள் அடையாளம் காணப்படவோ, அமைக்கப்படவோ இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மனிதர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களும் சரி, தங்களுக்கென்று ஒரு விலாசம் இருப்பவர்கள் மட்டுமே. விலாசமே இல்லாமல் தெருவோரவாசிகளாக, குடிசைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் வாழ்பவர்களாக அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறவர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் இருப்பதைப் பற்றி பொது விநியோகத் துறையோ, அரசோ, ஏன், நாமோ கவலைப்படுகிறோமா? மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் பசி, பட்டினி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் இவையெல்லாம் இருந்தன. ஆனால், பசித்தவனுக்கு உணவு அளிப்பது புண்ணியம் என்று அறிவுறுத்தப்பட்டது. அன்னதான சத்திரங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு, வேலை இல்லாதவனும், வறுமையில் வாடுபவனும் பசியாற வழிகோலப்பட்டது. புண்ணியம் தேடுவது போய் பணம் சேர்ப்பது மட்டுமே குறியாகிவிட்டதன் விளைவுதான், பாரதத்தின் பட்டினிப் பட்டாள எண்ணிக்கை உலக சாதனையாக மாறியிருக்கிறது. அதிகரித்து வரும் பசித்திருப்போர், பட்டினி கிடப்போர் எண்ணிக்கை மக்களாட்சிக்கு மட்டுமல்ல, சட்ட ஒழுங்குக்கே சவாலாக மாறும் சாத்தியங்கள் ஏராளம். இந்த முக்கியமான பிரச்னையை முன்னிறுத்தாமல் உலகமயம் பற்றியும், கறுப்புப் பணம் பற்றியும் பேசிக் கொண்டு, பணத்தை இறைத்து வெற்றிபெற விழையும் அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. அது - ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால்...
நன்றி : தினமணி

துவங்கியது ஓட்டுப்பதிவு; சரிகிறது பங்குச் சந்தை?

சந்தை வியாழனன்று மிகவும் கீழே இறங்கியதைக் கண்டவுடன் பலரும் பயந்தனர்... மறுபடி இறக்கம் ஆரம்பித்து விட் டதோ என்னவோ என்று. பாய்ந்து செல்லும் எந்த ஒரு சந்தையிலும் நிச்சயம் லாபம் பார்க்கும் முதலீட்டாளர்கள் இருப்பர். இது தான் விற்பதற்கு நல்ல சமயம் என்று காத்துக் கொண்டிருக்கும் அவர்கள் விற்கும் போது சந்தை நிச்சயமாகக் குறையும். அது தான் வியாழனன்று நடந்தது. தொடர்ந்து எட்டு நாட்களாக ஏறி வந்த சந்தை இறக்கத்தைச் சந்தித்தது.
தேர்தல் வாக்களிப்பதும் துவங்கிவிட்டதால் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற அய்யப்பாடுகள் வேறு, சந்தையைப் பயமுறுத்தியது. அதிகம் பாதிக்கப்பட்டது கட்டுமானத்துறை பங்குகள் தாம். சந்தை கிட்டத்தட்ட 337 புள்ளிகள் கீழே சென்றது. கிருஷ்ணா கோதாவரி பேசினில் எரிவாயு உற்பத்தியால் ரிலையன்ஸ் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் அளவு மேலே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வார பணவீக்கம் 0.18 சதவீதமாகக் குறைந்துள்ளது, வரலாறு காணாத அளவு எனலாம். இப்படி குறைவதால் ரிசர்வ் வங்கி இன்னும் ரேட் கட் செய்யும் என்ற நம்பிக்கையில் சந்தை மேலே சென்றது. இந்தக் காரணத்திற்காக சந்தை பல முறை சமீப காலங்களில் மேலே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் 21ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புகள் வரும் வரை சந்தையும் சந்தோஷமாக இருக்கும். அறிவிப்புகள் ஏதும் வராவிடில் அது ஒரு இறக்கத்தைச் சந்திக்க வழி வகுக்கும். இந்தியப் பொருளாதார ரயில் தண்டவாளத்தில் ஏறிவிட்டது. ஆதலால், வருங்காலங்கள் நன்றாக இருக்கும் என்ற் அரசாங்க அறிவிப்புகளும் வந்தது. அதனால், சந்தை சுதாரித்து நேற்று முன்தினம் மறுபடியும் மேலே சென்றது.
நேற்று முன்தினம் இறுதியாக மும்பை பங்குச் சந்தை 75 புள்ளிகள் மேலே சென்று 11 ஆயிரத்து 23 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை 14 புள்ளிகள் மேலே சென்று 3,384 புள்ளிகளுடன் முடிவடைந்தது.
அடுத்த வாரம் சந்தை சிறிது சிறிதாக மேலே செல்லும். ஒவ்வொரு பெரிய சரிவிலும் வாங்குபவர்களுக்கு நிச்சயம் நஷ்டம் இருக்காது.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


Saturday, April 18, 2009

கணிப்பும், திணிப்பும்

தேர்தல் கணிப்புகளை வெளியிடலாமா கூடாதா என்கிற சர்ச்சை தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சி ஏற்படத் தொடங்கியது முதல் தொடங்கிவிட்டது. ஊடகங்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும், தொலைக்காட்சிச் சேனல்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, எப்படி எல்லாம் மக்களைக் கவர முடியும் என்று களமிறங்கியதும் கருத்துக் கணிப்புகளின் முக்கியத்துவம் அதிகரிக்கக் காரணமாக அமைந்தன. 1824-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆன்ட்ரூ ஜாக்சன் போட்டியிட்டபோதுதான் நினைவு தெரிந்து கருத்துக் கணிப்பு என்று ஒன்று நடத்தப்பட்டதாகச் சொல்வார்கள். 1916-ல் லிட்டரரி டைஜஸ்ட் என்கிற பத்திரிகை பத்து லட்சம் தபால் கார்டுகளை வாசகர்களுக்கு விநியோகித்து வெளியிட்ட அமெரிக்க அதிபராக உட்ரோ வில்சன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற கருத்துக் கணிப்பு சரியாக அமைந்தது முதல், இந்தக் கருத்துக் கணிப்பு யுக்தி தேர்தல் நடைபெறும் நாடுகளில் எல்லாம் பரவலாக வரவேற்படையத் தொடங்கியது. இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் இப்படிப்பட்ட கருத்துக் கணிப்புகளைச் சரியாகவும் விஞ்ஞான முறைப்படியும் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான். 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாக்காளர்களைக் கொண்ட மக்களவைத் தொகுதிகளில், கட்சி ரீதியாக, மத ரீதியாக, ஜாதி ரீதியாக, ஆண்கள், பெண்கள் என்று பல்வேறு உணர்வுகள் காணப்படும் நிலையில், ஒரு சில நூறு பேர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் எப்படித் துல்லியமானதாக இருக்க முடியும்? ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதும், அரசியல் கட்சிகளால் நடத்தப்படுவதும் சகஜமாகிவிட்ட நிலையில், இந்த ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள், பல சந்தர்ப்பங்களில் கருத்துத் திணிப்புகளாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சொல்லப்போனால், விஞ்ஞான ரீதியாக நடத்தப்படுவதாகக் கூறும் கருத்துக் கணிப்புகள் பல, அந்தந்த ஊடகங்கள் சார்ந்த கட்சிக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகளைக் கணித்து, அதன் மூலம் வாக்காளர்களை மூளைச்சலவை செய்ய யத்தனிக்கின்றன என்பதை, அந்த ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. அப்படியானால், கடந்த தேர்தலில் இந்தத் தொலைக்காட்சிச் சேனல், சரியாகக் கருத்துக் கணிப்பு வெளியிட்டதே, எப்படி? அந்தக் கருத்துக் கணிப்பு நிறுவனம் வெளியிட்ட கணிப்பு ஏறத்தாழ சரியாக அமைந்தது ஏன் என்றெல்லாம் கேட்கலாம். இந்தத் துல்லியக் கணக்கை, அரசியல் நோக்கர்கள் தங்கள் மேஜையில் அமர்ந்தபடிகூடச் செய்து விட முடியும். சரியாக அமைந்தால் சட்டையின் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், யாரும் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசு அமைய இருக்கும் ஆரவாரத்தில் அதை சட்டை செய்ய மாட்டார்கள். ஜோசியம் சொல்வதுபோல, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக நடத்தப்படும் இந்தக் கருத்துக் கணிப்புகளையும், கருத்துத் திணிப்புகளையும் தடை செய்வது என்பது சரிதானா? கருத்துக் கணிப்புகள் சரியாக அமைந்தன, அமையவில்லை என்பது வேறு விஷயம். அதற்காகக் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிப்பது என்பதும், தேர்தல் முடியும்வரை, ஜோசியர்கள்கூடத் தங்களது ஆருடங்களை வெளியிடக் கூடாது என்று கூறுவதும், ஏற்புடையதல்ல. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் வரம்பு மீறுகிறது என்பது மட்டுமல்ல, குடிமகனின் ஜீவாதார உரிமையையே பறிப்பதாக அமையும் செயல் என்றுதான் கூற வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர எல்லா அரசியல் கட்சிகளுமே துடிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, கடைசிக் கட்டத் தேர்தல் முடியும் வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று ஒத்த குரலில் கைகோர்க்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் ஜீவாதார உரிமை என்று குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு 19(1)(அ)வின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு உரிமைக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி சாதாரணக் குடிமகனுக்கு என்னென்ன உரிமை உண்டோ அதே உரிமைதான் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள், யார் வெற்றியோ தோல்வியோ அடைய வேண்டும் என்று ஒரு குடிமகன் விரும்புகிறான் என்பதை வெளியிடும் உரிமை ஊடகங்களுக்கும், தனிமனிதனுக்கும் உண்டு. ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட வாக்காளர், வேட்பாளர்களின் நிறை குறைகளை எடை போட்டு வாக்களிக்கும் உரிமையும் தகுதியும் உள்ள வாக்காளர், கருத்துக் கணிப்போ, கருத்துத் திணிப்போ அதையும்தான் அலசி ஆராய்ந்து, முடிவெடுக்கட்டுமே! இதனால் கவரப்பட்டு அவர் தவறான முடிவெடுக்கக் கூடும் என்று தீர்மானிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாது. அது வாக்காளரை ஒரு முட்டாள் என்று சொல்லாமல் சொல்லும் ஆணவம். கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் தடை உடனடியாக விலக்கப்பட வேண்டும்!
நன்றி : தினமணி

மே மாதத்தில் மாருதி சுசுகி வெளியிடும் இன்னுமொரு சிறிய கார்

இந்தியாவில் பயணிகள் கார் விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம், பல சிறிய கார் மாடல்களை வைத்திருக்கிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு சிறிய காரை இந்த வருடம் மே மாதத்தில் அது வெளியிடு கிறது. ஏற்கனவே ஆறு சிறிய கார் மாடல்களை வைத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம், இந்த மே மாதத்தில் ஏழாவதாக ரிட்ஸ் என்ற மாடல் காரை வெளியிடுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஸ்பிளாஸ் என்ற பெயரில் வெளிவரும் இந்த புதிய ரக கார், இந்தியாவில் ரிட்ஸ் என்ற பெயரில் வெளிவருகிறது. மாருதியின் ஸ்விப்ட் காரைப்போலவே இருக்கும் ரிட்ஸ், 3.7 மீட்டர் நீளம் உள்ள கார். ஐரோப்பிய சந்தையில் இருந்து வேகன் - ஆர் மாடலை எடுக்க திட்டமிட்டிருக்கும் சுசுகி நிறுவனம், அதற்கு பதிலாக ரிட்ஸ் ஐ அறிமுகப்படுத்துகிறது. வேகன் - ஆர் மாடலை விட இது 18 சென்டிமீட்டர் நீளமுள்ளது. மாருதி சுசுகி மாடல்களில், முதன் முதலில் கே 12 எம் இஞ்சின் பொறுத்தப்பட்டு வெளிவரும் மாடல் இதுதான்.
நன்றி : தினமலர்

விவசாய கடன்களுக்கான வட்டி குறைப்பு செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்தது எஸ்.பி.ஐ.

வேர்ஹவுஸ் மற்றும் கோல்ட்ஸ்டோரேஜ் களில் சேமிக்கப்படும் விவசாயப்பொருட்கள் மீது கொடுக்கப் படும் கடன்களுக்கான குறைந்த சதவீத வட்டி திட்டத்தை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்திருக்கிறது. வீட்டு கடனுக்கு 8 சதவீத வட்டி, கார் கடனுக்கு 10 சதவீத வட்டி என்று அதிரடி வட்டி குறைப்பு திட்டத்தை அறிவித்த இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வேர்ஹவுஸ் மற்றும் கோல்ட்ஸ்டோரேஜ்களில் சேமித்து வைக்கும் விவசாய பொருட்கள் மீது கொடுக்கப்படும் கடனுக்கும் 8 சதவீதம் தான் வட்டி என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்திருந்தது. இந்த திட்டம் ஏப்ரல் மாதம் வரை மட்டும்தான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு கிடைத்திருக்கும் அதிகப்படியான வரவேற்பை அடுத்து, இந்த திட்டம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று அறிவித்திருக்கிறது. ஒரு வருட காலத்திற்கு மட்டும் கொடுக்கப்படும் இவ்வகை கடனுக்கு ஸ்டேட் பேங்க், 8 சதவீதம் மட்டும் வட்டியை வசூலித்துக்கொள்கிறது.
நன்றி : தினமலர்


நானோ காருக்கான இதுவரை வந்த விண்ணப்பம் 5,00,000 : இதனால் டாடா மோட்டார்ஸூக்கு வந்தது ரூ.15 கோடி

உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ 'வை வாங்க விருப்பம் தெரிவித்து இதுவரை 5,00,000 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது என்றும், அதன் மூலம் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.15 கோடி ( ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.300 ) கிடைத்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை விற்க ஆரம்பித்து 15 நாட்களே ஆன நிலையில், இந்தளவுக்கு அதற்கு வரவேற்பு இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நானோ காருக்கான புக்கிங் கடந்த 9 ம் தேதி ஆரம்பமானது. வரும் 25ம் தேதி வரை புக்கிங் செய்யலாம் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. நானோ காருக்காக கடன் வாங்கினால், வட்டி 10 சதவீதம்தான் ( பொதுவாக வட்டி 11.75 சதவீதம் வசூலிக்கப்படுகிறது ) என்று அறிவித்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மட்டுமே இதுவரை ஒரு லட்சம் விண்ணப்பங்களை விற்றிருக்கிறது. மொத்தம் விற்பனை ஆன விண்ணப்பங்களில் ஐந்தில் ஒரு பங்கை ஸ்டேட் பேங்க்கே விற்பனை செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸின் உயர் அதிகாரி ஒருவர், இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புக்கிங் 25ம் தேதி வரை இருப்பதால் அதன் பின்னரே மொத்தம் வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு என்பதை சொல்வோம். அதன் பின் அவைகள் எல்லாம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, 60 நாட்களுக்குள் ஒரு லட்சம் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்றார். நாங்கள் ஏற்கனவே சொல்லியிருப்பதை போல, முதலில் ஒரு லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு, வரும் ஜூலை மாதத்தில் நானோ கார் சப்ளை செய்வது ஆரம்பமாகும் என்றார். நானோ காருக்கான விண்ணப்பங்களை ஸ்டேட் பேங்க், 850 க்கும் அதிகமான நகரங்களில் இருக்கும் அதன் 1,350 கிளைகளில் விற்பனை செய்கிறது. டாடா மோட்டார்ஸ் அதன் 30,000 அவுட்லெட்கள் மூலமாக விண்ணப்பங்களை விற்கிறது. இது தவிர நானோ காருக்காக டாடா மோட்டார்ஸூடன் ஒப்பந்தம் செய்திருக்கும் டாடா மோட்டார் பைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க்,மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவையும் விண்ணப்பங்களை விற்கின்றன. பொதுவாக வங்கிகளில், ஐந்து வருடங்களுக்கு மட்டுமே கார் லோன் கொடுக்கப்பட்டாலும், நானோ காருக்காக மட்டும் அது ஏழு வருட லோனாக மாற்றப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


தாலிபான்களில் ரேடியோ ஸ்டேஷன், வெப்சைட்களை செயல் இழக்க செய்ய அமெரிக்கா முயற்சி

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரமடைந் திருப்பதை அடுத்து, அந்த இரு நாடுகளிலும் தாலிபான்களின் ரேடியோ ஸ்டேஷன் மற்றும் வெப்சைட்களை செயல் இழக்க செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும், தாலிபான் தீவிரவாதிகளால் லைசன்ஸ் பெறாமல் நடத்தப்படும் ரேடியோ ஸ்டேஷன் மூலமாகவும் வெப்சைட்கள் மூலமாகவும்தான் அவர்கள் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுவது, பயமுறுத்துவது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இவைகளை பயன்படுத்துகிறார்கள். தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு இந்த சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாலேயே அவர்களால் எளிதாக தீவிரவாத செயல்களில் ஈடுபட முடிகிறது என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே இவைகளை செயல் இழக்க செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க ராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாகிஸ்தானிய வெப்சைட்கள் மற்றும் சாட்டிங் ரூம்களில் அடிக்கடி வெளியிடப்படும் வீடியோக்கள், தீவிரவாத செயலை நியாயப்படுத்தும் விதமாகவும் மக்களை கோபமூட்டும் விதமாகவும் அமைந்திருப்பதால், அவைகளையும் முடக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
நன்றி : தினமலர்


சிறப்பு பொருளாதார திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்வதாக டி.எல்.எஃப்.அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப்., அது உருவாக்கி கொடுக்க ஒத்துக்கொண்ட, ஐ.டி.மற்றும் ஐ.டி.சார்ந்த நிறுவனங்களுக்கான நான்கு சிறப்பு பொருளாதார திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. சோனாப்பூர், காந்தி நகர், புவனேஷ்வர் மற்றும் கோல்கட்டாவில் அது உருவாக்கி தர ஒப்புக்கொண்ட சிறப்பு பொருளாதார திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தை அணுகியிருக்கும் டி.எல்.எப். நிறுவனம், தாங்கள் அந்த திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாகவும் அதற்கான அனுமதியை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. வர்த்தக அமைச்சகம் தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி அளிக்கும். இன்றைய சூழ்நிலையில், ஐ.டி.மற்றும் ஐ.டி.தொடர்பான தொழில் பாதிக்கப்பட்டிருப்பதால், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இடங்களை பிடிப்பதற்கு டிமாண்ட் இருக்காது என்று டி.எல்.எஃப்., கருதுகிறது. எனவேதான் அது இந்த திட்ட பணிகளில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


இரண்டு வருடங்களில் முதல் முறையாக லாபம் சம்பாதித்த சிட்டி பேங்க்

அமெரிக்காவை வாட்டி எடுத்த சப்பிரைம் மார்ட்கேஜ் லோன் திட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது அங்குள்ள சிட்டி பேங்க் தான். பல இன்னல்களை சந்தித்து வந்த அந்த வங்கியில் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நஷ்டம்தான் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையை இழந்ததுடன் அதன் நிர்வாக மட்டத்திலும் பல மாறுதல்களை சந்தித்தது. இப்போது அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியால் ( அமெரிக்க அரசாங்கத்திற்கு சிட்டி பேங்கில் 40 சதவீத பங்குகள் இருக்கின்றன ) நடந்து கொண்டிருக்கும் அந்த வங்கி, இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலத்தில் முதன் முதலாக லாபம் சம்பாதித்திருக்கிறது. கடந்த வருட முதல் மூன்று மாத காலத்தில் 5.1 பில்லியன் டாலர் ( சுமார் 25,500 கோடி ரூபாய் ) நஷ்டம் அடைந்திருந்த அந்த வங்கி, இந்த வருட முதல் மூன்று மாத காலத்தில் 1.6 பில்லியன் டாலர் ( சுமார் 8,000 கோடி ரூபாய் ) லாபம் ஈட்டியிருக்கிறது. அதன் மொத்த வருவாயும் கடந்த வருடத்தை விட 99 சதவீதம் உயர்ந்து 24.8 பில்லியன் டாலர் வந்திருக்கிறது. 2007 இரண்டாவது காலாண்டிற்குப்பின் இப்போது தான் நல்ல லாபம் சம்பாதித்திருக்கிறோம் என்றார் சிட்டி பேங்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியரான விக்ரம் பண்டிட்.
நன்றி : தினமலர்


வோடஃபோன் நிறுவனத்திற்கு ஸ்டேட் பேங்க் கொடுக்கிறது ரூ.10,000 கோடி கடன்

இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனமும் இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனமும் இணைந்து நடத்தும் வோடஃபோன் நிறுவனத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.10,000 கோடி கடன் கொடுக்க சம்மதித்திருக்கிறது. மூன்றாம் தலைமுறை ( 3 ஜி ) சேவையில் நுழையும் வோடஃபோன் நிறுவனம், அதற்கு தேவையான நிதிக்காகவும், பிராட்பேன்ட் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தேவையான நிதிக்காகவும் இந்த கடன் வழங்கப்படுகிறது என்று ஸ்டேட் பேங்க் தெரிவித்திருக்கிறது. ஐந்து வருட கடனாக வழங்கப்படும் இந்த தொகைக்கு, முதல் இரண்டு வருடங்களுக்கு 13.25 சதவீத வட்டியும், அதற்கு பிறகு, அப்போதுள்ள நிலைமையை பொறுத்து, வட்டியும் வசூலிக்கப்படும். ரூ.10,000 கோடியை ஸ்டேட் பேங்க் கடன் கொடுத்தபின், அதில் ரூ.7,000 கோடி கடனை மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மாற்றி விடும் என்றும், மீதி ரூ.3,000 கோடி கடனை மட்டும் அது வைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 13.25 சதவீத வட்டி என்பதும் ஸ்டேட் பேங்க் கின் முக்கிய வட்டி விகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்டேட் பேங்க்கிடமிருந்து ரூ.10,000 கோடி கடன் வாங்கும் வோடஃபோன் நிறுவனம், அதில் ரூ.6,000 கோடியை, இப்போதிருக்கும் சேவையை விரிவாக்கம் செய்வதற்கும் பழைய கடனை அடைக்கவும் பயன்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


Friday, April 17, 2009

ஆண்டு கால பகை விலகுமா ? அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கியூபா அதிபர் தயார்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு மிக அருகின் இருக்கும் சின்னஞ்சிறு நாடு கியூபா. கம்யூனிஷ கொள்கையை விட்டு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளே விலகிக்கொண்ட போதும்கூட, கியூபா தொடர்ந்து அதிலேயே ஊறியிருந்த நாடு. இந்நிலையில், அதன் தலைவராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலமின்றி இருந்ததை அடுத்து கடந்த வருடத்தில், அவரிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய அவரது தம்பி ராவுல் காஸ்ட்ரோ, கொஞ்சம் கொஞ்சமாக, இரும்பு கோட்டையாக இருந்த கியூபாவை மாற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது அதன் பரம எதிரி நாடான அமெரிக்காவுடன் எந்த விஷயம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்திருக்கிறார். அது மனித உரிமையை பற்றியதாக இருந்தாலும் சரி, அரசியல் கைதிகளின் நிலை குறித்ததாக இருந்தாலும் சரி, பத்திரிக்கைகளின் சுதந்திரம் பற்றியதாக இருந்தாலும் சரி, எந்த விஷயமானாலும் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடந்த தயாராக இருக்கிறோம் என்றார் ராவுல். சமீபத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்காவில் இருக்கும் கியூபா நாட்டினருக்காக சில சலுகைகளை அறிவித்தார். அதன்படி, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களது உறவினர்களை பார்ப்பதற்காக கியூபா சென்று வரலாம் என்றும், அவர்களுக்கு அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை அனுப்பலாம் என்றும் சலுகை அறிவித்திருந்தார். மேலும் கியூபா மக்களுக்காக நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். இனிமேல் கியூபா அரசு தான், அமெரிக்கா - கியூபா நாடுகளுக்கிடையே நல்லுரவை மேம்படுத்த அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு தான் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்திருக்கிறார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கியூபா முன்வந்திருப்பதை அடுத்து, கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் கியூபா இடையே நிலவி வரும் பகைமை விலகி நல்லுரவு மலருமா என்று ஆவலுடன் அரசியல் வல்லுநர்கள் காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் ஈட்டிய கூகிள்

இன்டர்நெட் சர்ச் இஞ்சினான கூகிள், எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் சம்பாதித்திருக்கிறது. இந்த வருட முதல் மூன்று மாத காலத்தில் அது 1.42 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியிருக்கிறது. இது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அது ஈட்டிய லாபமான 1.31 பில்லியன் டாலரை விட 9 சதவீதம் அதிகம். அதன் மொத்த வருவாயும் கடந்த வருடத்தை விட 6 சதவீதம் அதிகரித்து 5.51 பில்லியன் டாலர் கிடைத்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அங்கு விளம்பரங்களுக்காக செலவு செய்வது குறைந்து வந்தாலும், கூகிள் நிறுவனம் இந்தளவுக்கு லாபம் ஈட்டும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை. இது குறித்து கூகிளின் தலைமை செயல் அதிகாரி எரிக் ஸ்மித் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து கொண்டிருந்தாலும் கூகிள், நல்ல ரிசல்ட்டை கொண்டு வந்திருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


இந்தியாவில் பெட்ரோலிய உபயோகம் 6.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது

நலிவடைந்திருந்த இந்திய பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருவது தெரிகிறது. முதலில் ஸ்டீல், அடுத்ததாக சிமென்ட்டின் உபயோகம் அதிகரித்தது. இப்போது பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. இது, இந்திய பொருளாதாரம் வலுவடைந்து வருவதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த ஜனவரியில் 3.4 சதவீதமும், பிப்ரவரி மாதத்தில் 2.5 சதவீதமும் அதிகரித்திருந்த பெட்ரோலிய உபயோகம், மார்ச் மாதத்தில் 6.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்திய தொழில் துறையும் பொருளாதாரமும் நலிவடைந்து வரும் நிலையில் பெட்ரோலிய உபயோகம் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ( 2008 ஏப்ரல் - பிப்ரவரியில் 8.8 சதவீதமாக இருந்த இந்திய தொழில் வளர்ச்சி, 2009 ஏப்ரல் - பிப்ரவரியில் 2.8 சதவீதமாக குறைந்திருந்தது.) மார்ச் மாதத்திற்கான வளர்ச்சி விகிதம் இன்னும் தயாராகவில்லை என்றாலும், தொழில் வாரியாக கணக்கிட்டால், ஸ்டீல் மற்றும் சிமென்ட் துறை மார்ச் மாதத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது. மார்ச் மாதத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்திருப்பதை அடுத்து, சரக்கு போக்குவரத்தும் அதிகரித்திருக்கிறது. மேலும் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் இந்த இரு மாதங்களிலும் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகமாக இருக்கும் என்கிறார் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் இயக்குநர் ( மார்க்கெட்டிங் ) தாகா.
நன்றி : தினமலர்


லேசான முன்னேற்றத்துடன் முடிந்தது பங்கு சந்தை

இன்றைய வர்த்தகத்தின் போது 3 சதவீதம் வரை உயர்ந்திருந்த பங்கு சந்தை, பின்னர் வர்த்தக முடிவில் லேசான ஏற்றத்துடன் முடிந்து விட்டது. பகல் நேர வர்த்தகத்தின் போது, பேங்கிங், கேப்பிட்டல் குட்ஸ், பிரைவேட் பவர் கம்பெனிகள், ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ், பார்தி ஏர்டெல், யூனிடெக் ஆகிய நிறுவன பங்குகள் உயர்ந்திருந்த தால் சந்தை மேலே சென்றது. இருந்தாலும் மெட்டல், ஆட்டோ, பார்மா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி., ஐ.டி.சி, டி.எல்.எப்., விப்ரோ, ஏ.சி.சி.,ஆகிய நிறுவன பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் உயர்ந்திருந்த புள்ளிகள் இறங்கி விட்டன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 11,339.47 புள்ளிகள் வரை ( 2.8 சதவீதம் ) சென்று, பின்னர் வர்த்தக முடிவில் 75.69 புள்ளிகள் ( 0.69 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 11,023.09 புள்ளிகளில் முடிந்து விட்டது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் பகல் நேர வர்த்தகத்தின் போது நிப்டி 3,489.85 புள்ளிகள் வரை ( 3.02 சதவீதம் ) சென்று, பின்னர் வர்த்தக முடிவில் 14.90 புள்ளிகள் ( 0.44 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 3,384.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


ஐசிஐசிஐ பேங்கில் இருந்து வெளியேறும் உயர்மட்ட அதிகாரிகள்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க், கூடிய விரைவில், அதன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் கடும் ஆட்டத்தை காண இருக்கிறது என்கிறார்கள். அதன் முக்கிய இரு துறைகளின் தலைவர்கள் அங்கிருந்து வெளியேற இருக்கிறார்கள் என்கிறார்கள். ஐசிஐசிஐ பேங்க்கின் பிரைவேட் ஈக்வட்டி துறை தலைவராக இருக்கும் ரேணுகா ராம்நாத் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் துறையின் தலைவராக இருக்கும் ஷிகா ஷர்மா ஆகியோர் விரைவில் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். ஏப்ரல் 20 ம் தேதி நடக்க இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் போர்டு மீட்டிங்கில் ரேணுகா ராம்நாத், ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிஐசிஐ பேங்கின் சி.இ.ஓ. மற்றும் மேலாண் இயக்குனராக, மே ஒன்றாம் தேதி சந்தா கோச்சர் பதவியேற்றதையடுத்து, இவர்கள் இருவரும் பதவி விலக முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கே.வி.காமத்திற்கு பதிலாக சந்தா கோச்சர் தான் அடுத்த சி.இ.ஓ.மற்றும் மேலாண் இயக்குனரா நியமிக்கப்படுவார் என்று கடந்த டிசம்பர் 2008ல் அறிவிக்கப்பட்டபோதே பல உயர் அதிகாரிகள் பதவி விலகுவார்கள் என்று சொல்லப்பட்டது.
நன்றி ; தினமலர்


செலவோ அதிகம் ; வரவோ குறைவு : இந்தியாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டு விமான கம்பெனிகள்

சமீப காலமாக இந்தியாவில் விமானங்களை இயக்க ஆகும் செலவு அதிகமாகிறது. ஆனால் வருமானமோ மிக குறைவாகத்தான் வருகிறது என்று பல முன்னணி சர்வதேச விமான கம்பெனிகள் அவர்களது இந்திய சேவையை நிறுத்திக்கொண்டன. அல்லது குறைத்துக்கொண்டன. இந்தியாவில் விமானங்களை இயக்கும் போது குறைந்த அளவே மார்ஜின் ( லாபம் ) கிடைக்கிறது என்று பிரபல சர்வதேச விமான கம்பெனிகளான விர்ஜின் அட்லாண்டிக், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஆஸ்டிரியன் ஏர்லைன்ஸ், டெல்டா, கே எல் எம், சிரியன் ஏர்லைன்ஸ், ஏரோஃபிளோட், ஆல் நிப்பான் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லூப்தான்ஸா, மற்றும் ஃபின்ஏர் ஆகியவை கடந்த ஆறு மாதங்களில் 100 க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ்களை கேன்சல் செய்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏர்போர்ட் கட்டணம் குறைவாக இருக்கும்போது இந்தியாவில் மட்டும் அதிகமாக இருப்பது, சர்வதேச அளவிலும் இந்தியாவிலும், விமானங்களுக்கான எரிபொருள் விலையில் அதிக வித்தியாசம் இருப்பது, டிக்கெட்களை விற்க மாட்டோம் என்று அடிக்கடி டிராவல் ஏஜென்ட்கள் மிரட்டுவது, பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் வரை குறைந்திருப்பது போன்ற காரணங்களால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து விடுகிறார்கள். மற்ற நாடுகளில் விமான கம்பெனிகளுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை மார்ஜின் ( லாபம் ) கிடைத்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் மட்டும் அவர்களுக்கு சிங்கிள் டிஜிட்டில் மட்டுமே மார்ஜின் கிடைக்கிறது. இதனால் இந்திய பயணிகளை அதிக அளவில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு ஏற்றிச் செல்லும் ஐரோப்பிய விமான கம்பெனிகள் அதிகமாக நஷ்டமடைகின்றன என்கிறது சென்டர் ஃபார் ஏசியா பசிபிக் ஏவியேஷன் என்ற அமைப்பு. இந்தியாவில் எங்களுக்கு குறைந்த அளவே மார்ஜின் கிடைப்பதால் எங்களால் இங்கு விமான சேவையை தொடர முடியவில்லை என்கிறார் கே எல் எம் நிறுவனத்தின் ஏசியா பசிபிக் துறையின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் மார்னிக் புருட்டமா. எல்லா நாடுகளிலும் விமான நிலைய கட்டணத்தை குறைத்துக்கொண்டிருக் கிறார்கள். சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் கொரியா வில் சமீபத்தில் விமான நிலைய கட்டணத்தை 10 முதல் 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், கடந்த சில மாதங்களில் கட்டணத்தை 9 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள் என்கிறார் அவர். விமான நிலைய கட்டணம் அதிகம் என்பதால், கே எல் எம் நிறுவனம், ஐதராபாத்தில் இருந்து இயக்கிக்கொண்டிருந்த விமான சேவையை நிறுத்திக்கொண்டது. அதன் பார்ட்னர் நிறுவனமான ஏர் பிரான்ஸ் சென்னையில் இருந்து விலகிக்கொண்டது. இந்தியாவுக்கு 55 விமானங்களை இயக்கிக்கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதை 45 ஆக குறைத்துக்கொண்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


மாதம் குறைந்தது ரூ.100 முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.திட்டம் : ஸ்டேட் பேங்க் அறிமுகப்படுத்துகிறது

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படும் எஸ்.ஐ.பி., திட்டத்தில், மாதம் குறைந்தது ரூ.100 செலுத்தக்கூடிய புதிய எஸ்.ஐ.பி., திட்டம் ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்துகிறது. இப்போது ஒரு எஸ்.ஐ.பி.திட்டத்தில் சேர வேண்டும் என்றால், குறைந்தது ரூ.500 செலுத்த வேண்டும் என்று இருக்கும் விதிமுறையை தளர்த்தி, மாற்றி குறைந்தது ரூ.100 கூட கட்டினால் போதும் என்று அது, புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. குறைந்த வருவாய் உள்ள ரூரல் மற்றும் செமி அர்பன் ஏரியா மக்களுக்காக அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்திற்கு ' எஸ்.பி.ஐ.சோட்டா எஸ்.ஐ.பி. ' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் எஸ்.ஐ.பி.திட்டங்களில் சேருபவர்கள் பான்கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. புதிதாக அறிமுகம் செய்யும் சோட்டா எஸ்.ஐ.பி. பிளானில் சேருபவர் களுக்கு பான் கார்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அறிவிக்க கோரி, மத்திய அரசிடம் ஸ்டேட் பேங்க் அனுமதி கேட்டிருக்கிறது. அவ்வாறு பான்கார்டு தேவையில்லை என்ற அனுமதியை மத்திய அரசு அளித்து விட்டால், இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் 10 லட்சம் வரை முதலீட்டாளர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் பாத் தெரிவித்தார். இந்த திட்டத்தில் சேருபவர்கள் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்ற ' லாக் இன் பீரியட் ' இருக்கிறது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( மே டெலிவரிக்கானது ) பேரலுக்கு 97 சென்ட் உயர்ந்து 50.22 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( ஜூன் டெலிவரிக்கானது ) 89 சென்ட் உயர்ந்து 53.33 டாலராக இருக்கிறது. எதிர்கால உபயோகத்திற்காக அமெரிக்கா சேர்த்து வைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு, எதிர்பார்த்ததையும் விட அதிகமாக இருக்கிறது. அதையும் மீறி, கச்சா எண்ணெய் விலை இன்று உயர்ந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 1990 க்குப்பின் இப்போதுதான் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் சேமிப்பு 366.7 மில்லியன் பேரல்களாகி இருக்கிறது. இது கடந்த வருடம் இருந்த சேமிப்பு அளவைக்காட்டிலும் 16.5 சதவீதம் அதிகம்.
நன்றி : தினமலர்


இனிமேல் ரிலையன்ஸ், நேரடியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும்

இதுவரை ஏற்றுமதிக்காக மட்டுமே எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஜாம்நகர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இனிமேல் ஏற்றுமதியை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குள்ளும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எனவே தற்போது பெரும்பாலும் மூடிய நிலையில் இருக்கும் 1,432 ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப்கள் மூலமாக ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்யும். முற்றிலும் ஏற்றுமதிக்காக மட்டும், வருடத்திற்கு 33 மில்லியன் டன் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வதற்காக அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி இந்த வார இறுதிக்குள் முடிகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஜூலை 1999 ல் துவக்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ரிஃபைனரி, ஏப்ரல் 16 2007 இலிருந்து முற்றிலும் ஏற்றுமதிக்கான ரிஃபைனரியாக மாற்றப்பட்டது. அதன் பெயர் ஜே - 1 என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னர் டிசம்பர் 2008ல் அதற்கு பக்கத்திலேயே இன்னொரு ரிஃபைனரி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் துணை நிறுவனமான ரிலைன்ஸ் பெட்ரோலியத்தால் துவக்கப்பட்டது. அதுவும் முற்றிலும் ஏற்றுமதிக்காக துவங்கப்பட்டதுதான். இந்த ரிஃபைனரியின் பெயர் ஜே - 2. இப்போது இங்கு பெட்ரோல் மற்றும் டீசலை விற்க அனுமதித்திருப்பது குறித்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தபோது, எங்களது ஜே - 1 ரிஃபைனரியில் தயாராகும் எரிபொருள் இனிமேலும் பெரும்பாலும் ஏற்றுமதிதான் செய்யப்படும். இருந்தாலும் அங்கு தயாராகும் மீதி பெட்ரோல் மற்றும் டீசல், உள்நாட்டு சந்தையில் விற்கப்படும். ஜே - 1 ல் தயாராகும் 2.5 - 3 மில்லியன் டன் டீசலை நாங்கள் இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிண்டுஸ்டான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு விற்போம். அது, அவர்களுக்கு 2009 - 10ல் ஏற்படப்போகும் பற்றாக்குறையை போக்க வசதியாக இருக்கும். மேலும் நாங்கள் மூடியிருந்த 1,432 பெட்ரோல் பம்ப்களை மீண்டும் திறந்து அதன் மூலமாகவும் பெட்ரோல் மற்றும் டீசலை விற்போம் என்றார்.
நன்றி : தினமலர்


Thursday, April 16, 2009

ரூ.31 கோடி வருமான வரி செலுத்தி முதல் இடத்தில் இருக்கும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்

சென்ற 2008-09-ஆம் நிதி ஆண்டில், பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களில் அதிக வருமான வரி செலுத்தியதில் அக்ஷய்குமார் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ரூ.31 கோடி முன்கூட்டிய வரி (அட்வான்ஸ் டாக்ஸ்) செலுத்தி உள்ளார். அதாவது, இவரது ஆண்டு வருமானம் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது, கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில், இவரால் செலுத்தப்பட்ட வரியான ரூ.12.50 கோடியைக் காட்டிலும் 148 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் : கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ஷாருக்கான் ரூ.31.50 கோடி முன்கூட்டிய வருமான வரியாக செலுத்தி முதலிடத்தில் இருந்தார். சென்ற நிதி ஆண்டில், இவர் செலுத்திய வரி 1.62 சதவீதம் குறைந்து, ரூ.30.90 கோடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து, 2008-09-ஆம் நிதி ஆண்டில் இவர் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார்.
பத்து முன்னணி இந்தி நட்சத்திரங்கள் சென்ற 2007-08-ஆம் நிதி ஆண்டில் மொத்தம் ரூ.107 கோடியை வரியாக செலுத்தி உள்ளனர். இதில், அக்ஷய்குமார் மற்றும் ஷாருக்கான் ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டும் செலுத்திய வரியின் அளவு மட்டும் 60 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.
இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டி பறந்த அமிதாப்பச்சன், சென்ற 2008-09-ஆம் நிதி ஆண்டில் ரூ.1.25 கோடி செலுத்தி 10 முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ரூ.4.95 கோடி முன்கூட்டிய வரி செலுத்தி இருந்தார். இது, இவரது வருமானம் குறைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ரூ.3.20 கோடி செலுத்தி எட்டாவது இடத்தில் உள்ளார். இவர் செலுத்திய முன்கூட்டிய வரியும் கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 42.80 சதவீதம் (ரூ.5.60 கோடி) குறைந்துள்ளது.
ஐஸ்வர்யா ராய் : அதேசமயம், இவர்களையெல்லாம் விஞ்சி, அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய் ரூ.4.75 கோடி செலுத்தி ஆறாவது இடத்தில் உள்ளார். முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இவர் செலுத்திய வரி 10.46 சதவீதம் (ரூ.4.30 கோடி) அதிகரித்துள்ளது.
ராஜேஷ் கன்னா : ராஜேஷ் கன்னா கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில் ரூ.11.90 கோடி வரி செலுத்தி மூன்றாவது இடத்தில் இருந்தார். சென்ற நிதி ஆண்டில், இவர் செலுத்திய வரி 42.27 சதவீதம் குறைந்து ரூ.6.87 கோடியாக சரிவடைந்துள்ளது. இதனையடுத்து 2008-09-ஆம் நிதி ஆண்டில் இவர் ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளார்.
நன்றி : தினமலர்


சத்யம் பங்குகளை வாங்க டெக் மகேந்திராவுக்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகளை வாங்கிக்கொள்ள, டெக் மகேந்திராவுக்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல் கொடுத்து விட்டது. சத்யத்தின் போர்டு, அதன் 31 சதவீத பங்குகளை டெக் மகேந்திராவுக்கு கொடுக்க சம்மதித்திருந்தாலும் அதற்கு கம்பெனி லா போர்டு ஒப்புதல் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது அதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 31 சதவீத பங்குகளுக்கான தொகை ரூ.1,756 கோடியை டெக் மகேந்திரா ஏப்ரல் 21க்குள் தனியாக ஒரு அக்கவுன்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கம்பெனி லா போர்டு கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த பணத்தை டெபாசிட் செய்தபின், புதிதாக அமைக்க இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் போர்டுக்காக அதிகபட்சம் நான்கு நபர்களை இயக்குநர்களாக நியமிக்குமாறும் கம்பெனி லா போர்டு டெக் மகேந்திராவை கேட்டுக்கொண்டிருக்கிறது. டெக் மகேந்திராவுக்காக அதன் துணை நிறுவனமான வெஞ்சர்பே கன்சல்டன்ட்ஸ் பி.லிட் தான்இந்த தொகை ரூ.1756 கோடியை டெபாசிட் செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெஞ்சர்பே இந்த தொகையை செலுத்தியதும், அவர்களுக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ரூ.10 மதிப்புள்ள பங்குகள் 30,27,64,327 ஒதுக்கப்படும் என்று கம்பெனி லா போர்டு தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


8,700 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கி

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கியான யு பி எஸ், அதன் ஊழியர்களில் 8,700 பேரை வேலையில் இருந்து நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அடுத்த வருடத்தில் இந்த ஆட்குறைப்பு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. செலவை குறைக்கும் நடவடிக்கையாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. 2009 ம் வருடத்தின் மூன்று மாதங்களில் மட்டும், அந்த வங்கி 2 பில்லியன் சுவிஸ் ஃபிராங்குகள் ( சுமார் 8,750 கோடி ரூபாய் ) நஷ்டமடைந்திருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட சப் - பிரைம் லோன் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டது யு பி எஸ் வங்கிதான் என்கிறார்கள். ஆட்குறைப்பு குறித்து அதன் பங்குதாரர்களிடையே பேசிய யு பி எஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆஸ்வால்ட் குருபெல், என்னால் இதற்கு மேல் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல முடியாத நிலையில் நான் இப்போது இருக்கிறேன் என்றார். இது குறித்து பி பி சி செய்தி நிறுவனத்திடம் பேசிய யு பி எஸ் வங்கியின் தலைவர், இதற்கு முன் இந்த வங்கியில் இருந்த நிர்வாகம் பல சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது. இப்போதுள்ள நிர்வாகம், ஒரளவு வங்கியை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற வங்கி துறையை, மீண்டும் சிறப்புடையதாக ஆக்க புது நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது என்றார். யு எஸ் பி வங்கியின் சேர்மன் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் சமீபத்தில்தான் மாற்றப்பட்டறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ; தினமலர்


நிலைத்து நிற்க துவங்கி விட்டது பங்குச் சந்தை

பங்குச் சந்தை 11,000 புள்ளிகளையும் தாண்டி பந்தயக் குதிரை போல் தான் போய்க் கொண்டிருக்கிறது. சந்தையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் இன்னும் மேலே செல்ல வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர். திங்களன்று துவக்கமே அமர்க்களமாக இருந்தது. தொடர்ந்து 7வது நாளாக சந்தை மேலே சென்றது. நான்காவது காலாண்டு முடிவுகள் கம்பெனிகளுக்கு நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில், சந்தைகள் மேலே சென்றன. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்றே இருந்தன. ஆனால், கடந்த மாதமும், இந்த மாதமும் வாங்கத் துவங்கியுள்ளன. திங்களன்று மட்டும் 580 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளன. இதுவும் சந்தை கூடியதற்கு ஒரு காரணம். முடிவாக மும்பை பங்குச் சந்தை 163 புள்ளிகள் மேலே சென்று முடிந்தது. நேற்று முன்தினம் விடுமுறையை அடுத்து, நேற்று சந்தையை வைத்து நோக்கும் போது காளைகளின் பிடியில் பங்குச் சந்தை இருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் மற்ற ஆசிய சந்தைகள் கீழேயே துவங்கியதால் மும்பை பங்குச் சந்தையும் 100 புள்ளிகளுக்கும் மேலாக சரிவில் தான் துவங்கியது.
நான்காவது காலாண்டு முடிவு அறிவிப்புகள் சாதாரணமாக இன்போசிஸ் வைத்துத் தான் துவங்கும். அப்படித்தான் நேற்று இன்போசிஸ் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அது சந்தை எதிர்பார்த்தது போல் இல்லாததாலும், மேலும் வரும் ஆண்டு வருமானம் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தது. இதனால், சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகளை கீழே தள்ளியதும் இல்லாமல், சந்தையில் உள்ள பல சாப்ட்வேர் கம்பெனியின் பங்குகளையும் கீழே தள்ளியது.
கடந்த வாரம் பணவீக்கம் 0.26 சதவீதம் அளவிற்கு கீழே சென்றதால், ரிசர்வ் வங்கி மறுபடி ஒரு ரேட் கட் செய்யும் என்ற எதிர்பார்ப்பிலும், வரும் பருவமழை குறித்த காலத்தில் வரும் என வானிலை ஆராய்ச்சி நிலைய அறிவிப்புகளும் சந்தை காலரை தூக்கி விட உதவின எனலாம்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


Wednesday, April 15, 2009

பைக் விற்பனையில் இரண்டாவது இடத்தை நெருங்குகிறது டி.வி.எஸ்.

இந்தியாவின் பைக் விற்பனையில் முதலிடத்தை ஹீரோ ஹோண்டா நிரந்தரமாக பிடித்திருந்தாலும், இரண்டாவது இடத்தை பிடிக்க தான் பஜாஜ் மற்றும் டி.வி.எஸ்., இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருந்தாலும் கடந்த வருடம் வரை பஜாஜூக்கும் டி.வி.எஸ்.ஸூக்குமிடையே விற்பனையில் அதிக இடைவெளி இருந்து வந்தது. இந்த வருடத்தில் அந்த இடைவெளி சுருங்கி இருக்கிறது. இந்தியாவில் பைக் விற்பனையில் 49 சதவீத மார்க்கெட் ஷேரை வைத்துக்கொண்டு தொடர்ந்து முதலிடத்தில் ஹீரோ ஹோண்டா இருந்து வருகிறது. 2007 - 08 நிதி ஆண்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த பஜாஜ் மற்றும் டி.வி.எஸ்.நிறுவனங்களுக்கிடையே இருந்த இடைவெளி 5,27,000 பைக்குகளாக இருந்தது. அது 2008 - 09 நிதி ஆண்டில் 1,49,000 ஆக குறைந்திருக்கிறது. அதாவது 2007 - 08 ல் பஜாஜ் ஆட்டோவுக்கு 23 சதவீத மார்க்கெட் ஷேரும், டி.வி.எஸ்.ஸூக்கு 16 சதவீத மார்க்கெட் ஷேரும் இருந்தது. அது, 2008 - 09 ல் பஜாஜூக்கு 17 சதவீதமும் டி.வி.எஸ்.ஸூக்கு 15 சதவீதமுமாக குறைந்திருக்கிறது. 2008 - 09 ல் டி.வி.எஸ்.ஸின் விற்பனை அப்படி ஒன்றும் அதிகரிக்கவில்லை என்றாலும், பஜாஜின் விற்பனை பெருமளவில் சரிந்திருப்பதால், இரு நிறுவனங்களுக்குமிடையே இருந்து வந்த இடைவெளி குறைந்து விட்டது. பஜாஜின் விற்பனை 2008 - 09 ல் 12.8 லட்சம் பைக்குகள் குறைந்திருக்கிறது. அதாவது 23 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. டி.வி.எஸ்.ஸின் விற்பனையும் குறைந்திருக்கிறதுதான். ஆனால் அது வெறும் 1.36 சதவீதமே குறைவு.
நன்றி : தினமலர்


15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, கம்பெனியை நடத்த முடியுமா முடியாதா என்று திணறிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கல். அதன் சில மாடல் கார்கள் தீ பிடிக்கின்றன என்று வந்த புகார்களை அடுத்து, அது சுமார் 15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது. ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே இம்பாலா, மான்ட கார்லோ, புய்க் ரீகல், மற்றும் போன்டாய்க் கிராண்ட் பிரிக்ஸ் மாடல் கார்களின் இஞ்சினில் தீ பிடிக்கின்றன என்று வந்த புகார்களை அடுத்து, இந்த வகை மாடல்களின் 14,97,516 கார்களை அது திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க ஹைவே டிராபிக் சேப்டி அட்மினிஸ்டிரேஷனிடம் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. திரும்ப பெறும் வேலைகள் அடுத்த மாதம் துவங்கும் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. இஞ்சினில் உள்ள எக்ஸ்ஹாஸ்ட் மேனிஃபோல்டில் ஆயில் தங்கி, அது சூடு தாங்காமல் லேசாக தீ பிடித்து, பின்னர் அது மற்ற இடங்களுக்கு பரவி விடுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்த காரணங்களுக்காக மேலே குறிப்பிட்ட கார்கள் திரும்ப பெறப்படுவதாக அது தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


நன்கு உயர்ந்தது பங்கு சந்தை

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பெரும் பங்களிப்பால் இன்று பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை ஏற்பட்டது. சென்செக்ஸ் 11 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,500 புள்ளிகளை ஒட்டியும் சென்று முடிந்திருக்கிறது. இன்ஃராஸ்டரக்சர், பார்மா, சிமென்ட், மெட்டல் மற்றும் குறிப்பிட்ட ஆயில் அண்ட் கேஸ் நிறுவன பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டதால் நிப்டியின் டி.எம்.ஏ., ( டெய்லி மூவிங் ஆவரேஜ் ) 200 ஐ தாண்டி விட்டது. நிப்டி 200 டி.எம்.ஏ.,ஐ தாண்டியிருப்பது அதிக மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்றார் பிஎஸ்பிஎல்இந்தியா.காமின் சி.இ.ஓ., விஜய் பம்ப்வாணி. மும்பை பங்கு சந்தையில் இன்று 11,337.75 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 317.51 புள்ளிகள் ( 2.9 சதவீதம் ) உயர்ந்து 11,284.73 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் 3,497.55 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த நிப்டி, வர்த்தக முடிவில் 101.55 புள்ளிகள் ( 3 சதவீதம் ) உயர்ந்து 3,484.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் தான் அதிகம் வர்த்தகம் ஆனது. இன்று மிட்கேப் இன்டக்ஸ் 3.95 சதவீதமும், ஸ்மால்கேப் இன்டக்ஸ் 5.32 சதவீதமும் உயர்ந்திருந்தது. மொத்தமாக கடந்த 8 வர்த்தக நாட்களில் மிட்கேப் இன்டக்ஸ் 25 சதவீதமும், ஸ்மால்கேப் இன்டக்ஸ் 29 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இன்றைய வர்த்தகத்தில் அதிகம் ஈடுபட்டிருந்தனர். இன்று மொத்தம் ரூ.1,00,893.68 கோடிக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப்பிறகு இன்று மீண்டும் வர்த்தகம் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் நடந்திருக்கிறது. செப்டம்பர் 25, 2008க்குப்பின் இன்று தான் இவ்வளவு அதிகமான தொகைக்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் லாபம் சம்பாதித்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பெல், எஸ்.பி.ஐ., என்டிபிசி, பார்தி ஏர்டெல், டிஎல்எஃப், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவையே.

நன்றி : தினமலர்