Wednesday, April 15, 2009

15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, கம்பெனியை நடத்த முடியுமா முடியாதா என்று திணறிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கல். அதன் சில மாடல் கார்கள் தீ பிடிக்கின்றன என்று வந்த புகார்களை அடுத்து, அது சுமார் 15 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது. ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே இம்பாலா, மான்ட கார்லோ, புய்க் ரீகல், மற்றும் போன்டாய்க் கிராண்ட் பிரிக்ஸ் மாடல் கார்களின் இஞ்சினில் தீ பிடிக்கின்றன என்று வந்த புகார்களை அடுத்து, இந்த வகை மாடல்களின் 14,97,516 கார்களை அது திரும்ப பெற்றுக்கொள்வதாக அமெரிக்க ஹைவே டிராபிக் சேப்டி அட்மினிஸ்டிரேஷனிடம் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. திரும்ப பெறும் வேலைகள் அடுத்த மாதம் துவங்கும் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது. இஞ்சினில் உள்ள எக்ஸ்ஹாஸ்ட் மேனிஃபோல்டில் ஆயில் தங்கி, அது சூடு தாங்காமல் லேசாக தீ பிடித்து, பின்னர் அது மற்ற இடங்களுக்கு பரவி விடுவதாக ஜெனரல் மோட்டார்ஸ் விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்த காரணங்களுக்காக மேலே குறிப்பிட்ட கார்கள் திரும்ப பெறப்படுவதாக அது தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: