Friday, November 13, 2009

உலக(கே) ம(ô)யம்!

இடைத்தேர்தல் முடிவுகள் சாதாரணமாக ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமைவதுதான் இயற்கை. பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், மாநில ஆளுங்கட்சிகளுக்கு எதிரானதாக இந்தியாவில் அமைந்திருப்பதுகூட ஆச்சரியமில்லை. எதுவுமே செய்யாமல் நோபல் பரிசு பெறும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்கு எதிராகவும் அங்கே நடந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதுதான் ஆச்சரியம்.

அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் முதல் அமெரிக்கக் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவரான பராக் ஒபாமாவின் ஆட்சியின் மீது ஓராண்டுக்குள் மக்கள் அதிருப்தி அடைந்துவிட்டார்களோ என்கிற ஐயத்தை எழுப்புகிறது சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு மாநில ஆளுநர்களுக்கான தேர்தல் முடிவுகள். கடந்த வாரம் நடந்த வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநில ஆளுநர் தேர்தல்களில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பது பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

ஓராண்டுக்கு முன்னால் நடந்த அதிபர் தேர்தலில், யாரும் எதிர்பாராதவிதமாக வர்ஜீனியா மாநிலத்தில் அதிபர் ஒபாமா முன்னணி வகித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆளுநர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரெய்க் டீட்ஸ், குடியரசுக் கட்சி வேட்பாளரான ராபர்ட் மெக்டொனால்டிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

நியூஜெர்சி மாநிலம் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வசம் இருக்கும் மாநிலம் என்பது மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் எல்லா தளத்திலும் ஜனநாயகக் கட்சியே அதிகாரத்திலும் இருக்கிறது. நியூஜெர்சியில் குடியரசுக் கட்சி வேட்பாளரான கிறிஸ்டோபர் கிரிஸ்டி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கோர்சைனைத் தோற்கடித்து ஆளுநராகி இருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், தான் அதிபரான பிறகு நடக்கும் தேர்தல்கள் இவை என்பதால், பராக் ஒபாமா இந்த இரண்டு மாநிலங்களிலும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பதுதான். எப்படியும் இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே, தனது செல்வாக்குச் சரிந்துவிடாமல் காப்பாற்றப்படும் என்று அதிபர் ஒபாமா கருதியதில் தவறு ஒன்றுமில்லை.

இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல்களும் முக்கியத்துவம் பெற்றதன் காரணம், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 435 உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதுதான். அதுமட்டுமல்ல, அமெரிக்க மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு பெற்று, அந்த இடங்களுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநிலங்களில் பின்னடைவு ஏற்படுவது என்பது தனக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக்கூடும் என்று அதிபர் ஒபாமா பயப்பட்டதில் நியாயமில்லாமல் இல்லை.

கடந்த ஆண்டு, அதிபர் தேர்தல், மேலவைத் தேர்தல் மற்றும் மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் என்று தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த குடியரசுக் கட்சியினருக்கு, இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 2010-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களை குடியரசுக் கட்சி வென்றுவிட்டால், அதிபர் ஒபாமா பலவீனமாகி விடுவார் என்பதால் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் ஒருவித கலக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநில அளவிலான பிரச்னைகளை முன்னிறுத்தித் தேர்தல் முடிவுகள் அமைந்ததாக ஜனநாயகக் கட்சியினர் சமாதானம் சொன்னாலும், பொருளாதாரப் பிரச்னைகளை ஒபாமா நிர்வாகம் சரியாகக் கையாளாததுதான் தோல்விக்குக் காரணம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இந்த முறை சுயேச்சைகள் குடியரசுக் கட்சியை ஆதரித்திருப்பதும், அதிபர் தேர்தலில் பெரிய அளவில் தேர்தலில் கலந்துகொண்ட கறுப்பர் இனத்தவர்கள், இந்தத் தேர்தலில் உற்சாகம் இழந்து தேர்தலில் பங்கு பெறாததும்கூட, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணம் என்று கருத இடமிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, நியூயார்க் மாநகராட்சியின் மேயராக மீண்டும் கோடீஸ்வரர் மைக்கேல் ப்ளூம்பர்க் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அதிலென்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? இரண்டு தடவைக்கு மேல் ஒரு நபர் மேயர் பதவியில் தொடரக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தது. சுமார் 10 கோடி டாலர், அதாவது, 500 கோடி ரூபாய் செலவழித்து, அந்த விதியையே மாற்றி மூன்றாவது முறையாகத் தானே நியூயார்க்கின் மேயராகி இருக்கிறார் மைக்கேல் ப்ளூம்பர்க்! பணம் பாதாளம் வரை பாயும்தானே!

இடைத்தேர்தல் முடிவுகளிலும் சரி, பணம் பங்கு வகிப்பதிலும் சரி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிகிறது. யாரைப் பார்த்து யார் படித்தது? ஹும்... உலகமயம் என்பதில் இதுகூட சேர்த்தி போலிருக்கிறது...
நன்றி : தினமணி

அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்பு: டி.சி.எஸ்.,

இந்தியாவின் மிகப் பெரிய மென்‌பொருள் துறை ஏற்றுமதி நிறுவனமான டாடா கல்சல்டன்சி நிறுவனம்(டி.சி.எஸ்.,) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தனது நிறுவனத்தை விரிவுப் படுத்தும் விதமாக, அமெரிக்க நிறுவனமான டவ் கெமிக்கல் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளது. இந்த கூட்டணி காரணமாக மிட்லாந்து மற்றும் மிச்சிகன் பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டவ் கெமிக்கல் நிறுவனமும், டாடா கல்சல்டன்சி நிறுவனமும் தங்களது புதிய சர்வீஸ் சென்டரை மிட்லாந்து மிச்சிகன் பகுதியில் உள்ள டவ் குளேபல் தலையிடம் அருகே அமைக்க போவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


இதோ ஒரு புது வரி!

உலகையே இப்போது அச்சமூட்டி வரும் பிரச்னை புவி வெப்பமடைவதுதான். அதைக் குறைக்க யார் யார் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்தெந்தத் துறைகளில் இதற்கான சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும் என்றெல்லாம் விவாதங்கள் நடைபெறுகின்றன. அதே சமயம், உலகத்தின் பெரும்பாலான நாடுகளை ஆட்டிப்படைக்கும் பொருளாதார மந்த நிலையும் உலகத் தலைவர்களின் கவனத்தை அதே அளவுக்கு ஈர்த்து வருகிறது. இவ்விரு பிரச்னைகளுக்கும் ஒரு சேர தீர்வு காணும் யோசனை ஒன்று இப்போது வளர்ந்த நாடுகளில் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.

அது, அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜேம்ஸ் டோபின் என்பவர் 1970-களில் தெரிவித்த உலகளாவிய பணப் பரிமாற்றத்தின் மீது வரி விதிக்க வேண்டும் என்ற யோசனையாகும். இது இன்னமும் யோசனை அளவிலேயே இருக்கிறது, நடைமுறைக்கு வரவில்லை.

சர்வதேச அளவில், பணப் பரிமாற்றத்தின்போது மொத்தத் தொகை மீது 0.5% வரி விதித்தால் அதுவே கணிசமான அளவுக்கு நிதியாகத் திரளும். அந்த நிதியில் பாதியை அதை வசூலிக்கும் நாடுகள் தங்களுடைய பட்ஜெட் பற்றாக்குறையை இட்டு நிரப்பவும், எஞ்சிய தொகையை புவி வெப்பமடைவதைச் சுயமாகக் குறைக்க முடியாத வளரும் நாடுகளுக்கு உதவவும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüன் இதை முதலில் பரிந்துரைத்தார். அதற்கு வரவேற்பைவிட கண்டனமே அதிகம் இருக்கிறது.

""இதை நாங்கள் விரும்பவில்லை'' என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதிபர் பராக் ஒபாமா இதை ஆதரிப்பார் என்று பிரெüன் நம்புகிறார்.

""அப்படி சர்வதேச பணப் பரிமாற்றத்தின் மீது வரி விதிப்பதாக இருந்தால் அதிக விகிதத்தில் வரி விதிக்காதீர்கள், மிகக் குறைந்த அளவு விதியுங்கள்'' என்று கனடா நாட்டவர் தயக்கத்துடனேயே கூறியுள்ளனர்.

""இப்படி ஒரு வரி விதிப்பை அறிமுகப்படுத்தி அதை அமல்படுத்துவது மிகவும் கடினம்'' என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) கருத்துத் தெரிவித்திருக்கிறது.

சர்வதேச அளவில் காணப்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க கார்டன் பிரெüன் தெரிவித்த 4 யோசனைகளில் ஒன்றுதான் இந்த சர்வதேச பணப் பரிவர்த்தனை மீதான வரி விதிப்பாகும். இந்த யோசனையை ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மெர்கல், பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஆகியோரும் ஆதரித்துள்ளனர். அதேசமயம் ""ஜி-20'' நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் நிதியமைச்சர்கள் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்ப்பார்கள், அதை கார்டன் பிரெüனின் திறமையான வாதத்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பிரிட்டிஷ் நாட்டின் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகள் மீதும் 0.05% (அதாவது அரை சதவீதம் மட்டுமே) வரி விதிப்பதன் மூலம் மட்டுமே ஓராண்டில் சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்குமாம். எந்த நிதியமைச்சரும் இப்படியொரு தொகை தானாக வருவதை வேண்டாம் என்று நிராகரிக்க மாட்டார். அத்துடன் இதில் பாதியைக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் நிதிப் பற்றாக்குறையை இட்டு நிரப்பிவிடலாமாம்.

ஆனால் இந்த வரிவிதிப்பில் உள்ள பிரச்னையே இதை உலகம் முழுக்க உள்ள நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சில நாடுகளில் மட்டும் இப்படியொரு வரியை விதித்தால், அதை மக்களை ஏமாற்றி கூடுதல் நிதி திரட்டும் உத்தி என்றே அந்த நாட்டுப் பொருளாதார அறிஞர்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டுவர். எனவே இதை உலகின் அனைத்து நாடுகளும் ஏற்கச் செய்தால்தான் முழு வெற்றியைப் பெற முடியும்.

இந்த வரியை எதிர்ப்பவர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் மீண்டும் சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலையோ, நெருக்கடியோ ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றே எல்லா நாடுகளிலும் விரும்புவார்கள். எனவே அதற்கு உதவும் இந்த நிதிச் சீர்திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
இந்த நிதியைத் திரட்ட, பணப் பரிமாற்றம் நடைபெறும் நிதி நிறுவனங்களைத் தவிர உற்ற இடங்கள் வேறு இல்லை. எனவே சர்வதேச வர்த்தகம், தொழில்துறை பற்றுவரவு நடைபெறும் நிதி நிறுவனங்களிலேயே இந்த வரியை விதித்து வசூலிப்பது எளிது.

சர்வதேச பணப் பரிவர்த்தனை மீது வரி விதிப்பதில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது. ஏதோ சில காரணங்களுக்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், சில நாடுகளில் நடைபெறும் பணப் பரிமாற்றங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கின்றன. அங்கே எத்தனை கோடி பணம் புரள்கிறது, யார் யாருக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாமலேயே மூடுமந்திரமாக இருக்கிறது. இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால் அந்த நாடுகளில் திரைமறைவாக நடக்கும் பணப் பரிமாற்றம் ஓரளவுக்காவது வெளியில் தெரிய வாய்ப்பு ஏற்படும்.

புதிய வரி விதிப்பு வசூல் தொகையில் பாதி அளவு, வளரும் நாடுகளில் புவி வெப்பமடைதலுக்குத் துணைபுரியும் காரணிகளை நீக்கச் செலவிடப்படும். அதனால் சுயமாக நிதி திரட்டிச் செலவிட முடியாத வளரும் நாடுகள் பலன் அடையும். வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இரண்டும் சேர்ந்து புவி வெப்பம் அடைவதைக் குறைத்தால்தான் இந்தப் புவி நாம் வாழ்வதற்கு ஏற்றதாக மாறும். எனவே இந்த யோசனை அந்த வகையில் வரவேற்கத்தக்கது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி : தினமணி

தள்ளாடும் தலைமுறை!

ஆற்றில் மூழ்கியிருந்த கரடியை, போர்வை என நினைத்த ஒருவன், எடுப்பதற்காக அருகே சென்றான். நெடுநேரமாகியும் அவன் நடுஆற்றிலேயே நிற்பதை, கரையில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த அவனது நண்பன், ""போர்வையை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கரைக்கு வா'' என்றான். அவனோ, ""நான் அதை விட்டுவிட்டேன். அதுதான் என்னை விடவில்லை'' என்றானாம்.

ஒரு பொழுதுதான், பொழுதுபோக்குக்காகத்தான் என விளையாட்டாக மதுவைத் தொடுவோரின் நிலையும், போர்வை என நினைத்துக் கரடியைத் தொட்டவனின் நிலையும் ஒன்றுதான்.

"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பது முதுமொழி, "பாட்டில்' பழக்கமோ பல தலைமுறைகளைப் பாதிக்கும் என்பது கண்கூடு.
அறிவில் ஆதவனாக இருப்பவரைக்கூட மது அறிவில்லாதவனாக ஆக்கிவிடும் என்பதை உணர வேண்டும்.

பொதுநலவாதி ஆட்டின் ரோமத்தை நீக்குகிறான். அரசியல்வாதியோ ஆட்டின் தோலையே உரிக்கிறான் என்றார் மேலை நாட்டுக் கவிஞர் ஒருவர். இன்றைய ஆட்சியாளர்களோ "குடும்பத் தலைவன்' என்ற தோலை உரித்துவிட்டு "குடும்பம்' என்ற ஆட்டுக்குப் பல்வேறு "இலவசங்கள்' என்னும் அணிகலன்களை அணிந்து அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தங்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருந்தோருக்குப் பிரமிக்கத்தக்க வகையில் சிலைகளை நிறுவியும், அவர்களின் பெயர்களைக் கட்டடங்கள், திட்டங்களுக்குச் சூட்டியும் அழகுபார்ப்பது மட்டுமல்ல, அவர்கள் வலியுறுத்திய கள்ளுண்ணாமை, மதுவிலக்கு போன்றவற்றை இளைய தலைமுறை கடைப்பிடித்து வாழ்வில் உயர்வதற்குத் தங்களால் ஆனவற்றைச் செய்வதும் இன்றைய தலைவர்களின் தலையாய கடமைதான்.

""மறைவாய் நின்று பயந்து பயந்து குடித்துச் சாகாதே; தைரியமாய் அமர்ந்து ஆறஅமர குடித்துச் சிறிது சிறிதாக உடைமைகளையும், உயிரையும் இழ'' என மறைமுகமாகச் சொல்கின்றன இன்றைய அரசுகள்.

சாதா குடிமக்களை சதா குடிமகன்களாக மாற்றிய பெருமையும், பெரும் நகரங்களில் மட்டுமே விற்கப்பட்ட மேல்நாட்டு மதுவகைகளை கிராமப்புற இளைஞர்களுக்கும் கிடைக்கச் செய்து சமத்துவத்தை நிலைநாட்டிய பெருமையும் நம் ஆட்சியாளர்களுக்கு உண்டு.

ஆட்சியைத் தள்ளாடாமல் நடத்த வீதிக்குவீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருமானத்தைப் பெருக்குவதாக அரசுகள் கூறுகின்றன. ஆனால், ஏழைகளின் குடும்பங்களோ உள்ள மானத்தையும் இழந்து தள்ளாடுகின்றனவே! மதுகுறித்து கவலைப்படும் அரசுக்கு இதுகுறித்து கவலைப்பட நேரமேது?

மது வகைகளால் அரசுகளின் கஜானாக்கள் நிரம்பலாம். ஆனால், குடித்துக்குடித்துச் சாகும் ஏழைக் குடும்பங்களோ "விதை நெல்லை விற்று, வீட்டையும் இழந்த நிலைக்கு' உள்ளாகி விடுகின்றன.

விளைகின்ற பயிர்களைத் தொலைவிலிருந்து வரும் பெருச்சாளிகள் பிடுங்கித் தின்றால்கூடப் பாதகமில்லை. ஆனால், காக்க வேண்டிய வேலிகளே களவாடிக் கொண்டால்...? இறைஞ்சும் ஏழைகளைப் பராசக்தியாய்க் காக்க வேண்டியவர்களே பாராசக்தியாய் இருந்தால்...?

பிரமிக்கத்தக்க வகையில் வழங்கப்படும் பல்வேறு இலவசங்கள் என்னும் தாழம்பூ சூடிய கொண்டைக்குள் மது விற்பனை என்னும் பேனும், ஈறுமே நிறைந்து நாற்றமடிக்கச் செய்கிறது.

மதுவைக் குடித்துவிட்டுப் பேருந்து நிலையங்களிலும், சாக்கடை ஓரங்களிலும், பொது இடங்களிலும் விழுந்து கிடக்கும் தகப்பன், தமையன்களால் அவர்களின் குடும்பத்தினர் அடையும் அவமானங்களையும், மனஉளைச்சலையும் ஆட்சியாளர்கள் அறிவார்களா?

அவர்களின் நோக்கமெல்லாம், வெளிநாட்டில் வசித்தபோதும்கூட, தன் தாய்க்குச் செய்து தந்த சத்தியத்துக்காக மதுவைத் தொடாத மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த கரன்சி கட்டுகளே!

ஆண்டுக்கொரு முறை என கணக்குப் பார்த்ததுபோக, மாதந்தோறும், பண்டிகைகள்தோறும் என்றாகி மதுவிற்பனை அதிகரிப்பதையும், வசூலாகும் தொகையையும் எண்ணி மகிழும் ஆட்சியாளர்கள், மதுவால் ஏற்படும் விபத்துகளிலும், விலை மதிப்பில்லா உயிரிழப்புகளிலும், குடிமகன்களாக மாறும் குடிமக்களின் எண்ணிக்கையிலும் தங்களுக்கும் பங்குண்டு என எண்ணிப் பார்ப்பார்களா?

வீட்டுக்கு ஒருவர் போருக்குச் சென்றது சங்கத் தமிழ்க் காலம்; வீட்டுக்கு ஒருவர் "பாருக்கு'ச் செல்வது செம்மொழித் தமிழ்க் காலமோ?

"மதுவிலக்கு வேண்டும்' என பெரும்பான்மையினர் குரல் கொடுத்த பின்பும், இலவசங்கள் என்ற இருட்டில் மக்களை மூழ்கடித்து, தங்கள் பாதைகளை வெளிச்சமாக்கிக் கொள்ள மது "விளக்கு' வேண்டும் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்?

ஆட்சி தம் வசம் இருக்க வேண்டுமெனில், இலவசம் தந்து மக்களின் இதயங்களைக் கவர்வதில் தவறில்லைதான். ஆனால், அதைப் பாதகமில்லா பிற வழிகளில் சேரும் தொகைகளிலிருந்து தருவதுதானே உத்தமம்.

அரசுகள், வீரநடை நடந்து செல்லும் தலைமுறைகளை உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை, "விஸ்க்கி' "விஸ்க்கி' தள்ளாடி நடக்கும் தலைமுறையை உருவாக்காமல் இருந்தால்தான் வீட்டுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.
கட்டுரையாளர் : மா. ஆறுமுககண்ணன்
நன்றி : தினமணி

பிரிட்டன் நிறுவனத்தை வாங்கியது டி.வி.எஸ்.,

பிரிட்டனின் மல்டிபார்ட் ஹோல்டிங் என்ற நிறுவனத்தை டி.வி.எஸ்., குழுமத்தின் அங்கமான டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. மல்டிபார்ட் ஹோல்டிங் நிறுவனம், ஆட்​டோ​மொ​பைல் துறைக்​குத் தேவை​யான உதிரி பாகங்​க​ளைத் தயா​ரித்து அளிப்​ப​தில் முன்​ன​ணி​யில் விளங்​கு​கி​றது. ராணு​வம் மற்​றும் பிற துறை​க​ளுக்​கான உதி​ரி​பா​கங்​க​ளை​யும் இந்​நி​று​வ​னம் தயா​ரித்​த​ளிக்​கி​றது. ரூபாய் 475 கோடி வருவாய் பெற்று வரும் மல்டிபார்ட் ஹோல்டிங் நிறுவனத்தை வாங்குவதற்கு முக்கிய காரணம், டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சர்வதேச நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கே என்று அந்நிறுவன தலைவர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்​நி​று​வ​னத்​தைக் கைய​கப்​ப​டுத்​தி​ய​தன் மூலம் விற்​பனை வரு​மா​னம் 2010-ம் ​ஆண்​டில் ரூ. 1,000 கோடி​யும் 2012-ல் ரூ. 2,000 கோடி​யும் ஈட்ட இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி :தினமலர்