Thursday, December 18, 2008

சரிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தில் மெட்டல், டெலிகாம்,பவர், கேப்பிடல் குட்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதாலும், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் வேகமாக குறைந்து போனதாலும் சென்செக்ஸ் சரிந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்திருந்தாலும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கி விட்டது. ஐரோப்பிய, அமெரிக்க பங்கு சந்தைகளின் வீழ்ச்சிதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சென்செக்ஸ் 9,682.91 புள்ளிகள் வரை இறங்கி வந்தாலும் வர்த்தக முடிவில் 261.69 புள்ளிகள் ( 2.62 சதவீதம் ) குறைந்து 9,715.29 புள்ளிகளில் முடிந்திருந்தது. நிப்டி 2,943.50 புள்ளிகள் வரை இறங்கி இருந்தாலும் வர்த்தக முடிவில் 87.40 புள்ளிகள் ( 2.87 சதவீதம் ) குறைந்து 2,954.35 புள்ளிகளில் முடிந்திருந்தது.தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக அசையாமல் இருந்த மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் இன்று ஆட்டம் க்ண்டு விட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், சத்யம், பெல், எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃரா ஆகிய நிறுவனங்கள் அதிகம் பாதிப்படைந்திருந்தன. இன்று அதிகம் பாதிக்கப்பட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான். 30.22 சதவீத மதிப்பை அது இழந்திருந்தது. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி.,ஹெச்.யு.எல், ஹெச்.டி.எப்.சி.பேங்க், கிராசிம், விப்ரோ பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன.
நன்றி : தினமலர்


பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் : சர்வே

இந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.49 சதவீதமாகத்தான் இருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 10 சதவீதமும் டீசலின் விலையை 6 சதவீதமும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் என்று 11 பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு சதவீதம் பணவீக்கம் குறைந்திருக்கும் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும், 1.5 சதவீதம் முதல் 2.0 சதவீதம் குறைந்திருக்கும் என்று ஆக்ஸிஸ் வங்கியின் பொருளாதார நிபுணர் சவ்கதா பட்டாச்சார்யா சொல்கிறார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட ஜூன் ஆரம்பத்தில் இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. பின்னர் அது அதிகபட்சமாக ஆகஸ்ட் 2 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


மேடாஸ் நிறுவனங்களை வாங்கிக்கொள்வதை கைவிட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்

மேடாஸ் இன்ஃரா மற்றும் மேடாஸ் புராபர்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்ளும் திட்டத்தில் இருந்து சத்யம் கம்ப்யூட்ர்ஸ் விலகிக்கொண்டது. முதலீட்டாளர்களின் கடும் எதிர்ப்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மேடாஸ் புராபர்டீஸ் நிறுவனத்தையும் மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளையும் 1.6 பில்லியன் டாலருக்கு ( சுமார் 8,235 கோடி ரூபாய் ) வாங்கிக்கொள்வதாக சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் அறிவித்த 12 மணி நேரத்திற்குள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்ததும், அதன் பங்குதாரர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு ஐ.டி.கம்பெனி, கட்டுமான நிறுவனமான மேடாஸை வாங்குவதில் முதலீட்டாளர்களுக்கு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நியுயார்க் பங்கு சந்தையில் அதன் பங்கு மதிப்பு 55 சதவீதம் வரை குறைந்து விட்டது. செவ்வாய்க்கியமை அன்று இந்திய பங்கு சந்தை முடிவடைந்ததும், நலிவடைந்திருக்கும் மேடாஸ் புராபர்டீஸின் எல்லா பங்குகளையும் 1.3 பில்லியன் டாலருக்கும், மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளை 0.3 பில்லியன் டாலருக்கும் வாங்கிக்கொள்வதாக சத்தம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்தது. ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மன் ராமலிங்க ராஜூவுக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் மேடாஸ் இன்ஃராவில் 36 சதவீத பங்குகளும் மேடாஸ் புராபர்டீஸில் 35 சதவீத பங்குகளும் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து சத்யம் விலகிக்கொள்வதாக அறிவித்ததும், சரிந்திருந்த அதன் பங்கு மதிப்ப ஓரளவு மீண்டது.
நன்றி : தினமலர்