கடந்த ஜூன் மாதமே அமெரிக்காவில் வந்து விட்ட ஐபோன், இன்றுதான் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இவ்வளவு காலதாமதமாக இந்தியாவுக்கு வந்திருந்தாலும், அமெரிக்காவில் 199 டாலருக்கு ( சுமார் ரூ.8,300 ) விற்கப்படும் ஐபோன் இந்தியாவில் மட்டும் ஏன் ரூ.31,000 க்கு விற்கப்படுகிறது?. ஏன் இவ்வளவு விலை வித்தியாசம் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுவது இயற்கைதான். இதற்கு பதிலளித்த ஏர்டெல் மொபிலிட்டியின் தலைவர் சஞ்சய் கபூர், இது விஷயத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது. அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன் 3 வருட லாக் இன் பீரியட்டில் வருகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. அமெரிக்காவில் ஒருவர் 199 டாலர் கொடுத்து ஐபோன் ஒன்றை வாங்குகிறார் என்றால் அவர் அதன் ஹார்ட்வேரை ( ஹேண்ட்செட் ) மட்டுமே வாங்கி இருக்கிறார் என்று அர்த்தம். பின்னர் அந்த ஹேண்ட்செட்டை ஆக்டிவேட் செய்ய அவர் 150 டாலர் செலுத்த வேண்டும். அத்துடன் முடிந்து விடாது. பின்னர் அவர் வருடா வருடம் அதன் ஏதாவது ஒரு பிளானை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அந்த கட்டணம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சென்று விடும். ஆனால் இந்தியாவில் ரூ.31,000 க்கு விற்கப்படும் ஐபோனில் எல்லாமே அடங்கி விடுகிறது. இன்னொரு விஷயத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விற்பனை மூலம் ஏர்டெல்லுக்கோ வோடபோனுக்கோ எந்த வித லாபமும் கிடைக்கப்போவது இல்லை என்றார் அவர். இந்தியாவில் ஏர்டெல் மட்டும் வோடபோன் நிறுவனங்கள், 8 ஜிபி ஐபோனை ரூ.31,000 க்கும் 16 ஜிபி ஐபோனை ரூ.36,000 க்கும் விற்பனை செய்கிறது.நன்றி : தினமலர்










