Tuesday, August 5, 2008

இளைஞர்களிடையே பெருகி வரும் யூஸ் அண்ட் த்ரோ செல்போன் மோகம்


பெரிய சைஸ் ஸ்கிரீன், அதிக சத்தம், ஏராளமான வசதிகள், கவர்ச்சியான மாடல்; ஆனால் மிக குறைந்த விலை. கொஞ்ச காலம் தான் வேலை செய்யும். இருந்தாலும் பரவாயில்லை என்று இப்போது அம்மாதிரி யூஸ் அண்ட் த்ரோ மாடல் செல்போன்கள்தான் இப்போது இளைஞர்களிடையே அதிக அளவில் விற்பனை ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் இந்த வகை மாடல் சென்போன்கள் ரூ.2,500 லிருந்து ரூ.6,000 க்குள் விலையில் கிடைக்கிறது. சிக்மாடெல் - டி33, பானாசோனியோ, ஐபோன் - என்380,ஓய்எக்ஸ் டெல் - இ51, இசட் டி சி டி58, சி இ சி டி - கே698 போன்ற மாடல்களில் வரும் இந்த போன்களுக்குத்தான் இப்போது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக சென்னை ரிச்சி தெருவில் கடை வைத்திருக்கும் ஒருவர் தெரிவிக்கிறார். அவர் இம்மாதிரி மாடல்களை மாதத்திற்கு 25 முதல் 30 வரை விற்கிறாராம். ரூ.6500க்கே டூயல் சிம்கார்டு, பெரிய திரை, ரேடியோ, அதிக சத்தம், ஜி பி ஆர் எஸ், புளுடூத் வசதி கிடைப்பதால் எல்லோரும் இதையேதான் விரும்புகிறார்கள் என்கிறார் அவர். இதே வசதியுடன் கூடிய பிராண்டட் செல்போன் வாங்கப் போனால் அதற்கு அதிக அளவில் பணம் கொடுக்க வேண்டும்.எனவே கொஞ்ச காலம் மட்டுமே வேலை செய்தாலும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த வகை செல்போன்களைத்தான் சென்னை இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்கிறார் அவர்.

நன்றி : தினமணி


பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : நிப்டி 4,500 புள்ளிகளை தாண்டியது


இன்றைய பங்கு சந்தையில் மதியத்திற்கு மேல் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 383 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 107 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.மதியத்திற்கு மேல் அதிக அளவில் பங்குகள் வாங்கப்பட்டதாலும், ஐரோப்பிய பங்கு சந்தையில் ஏற்ற நிலை இருந்ததாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்ததாலும் ( பேரலுக்கு 118 டாலர் ) மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 383.20 புள்ளிகள் ( 2.63 சதவீதம் ) உயர்ந்து 14,961.07 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 107.50 புள்ளிகள் ( 2.45 சதவீதம் ) உயர்ந்து 4,502.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிக பட்சமாக 14,986.63 புள்ளிகளாகவும் குறைந்த பட்சமாக 14,529.21 புள்ளிகளாகவும் இருந்தது. நிப்டி அதிக பட்சமாக 4,515.15 புள்ளிகளாகவும் குறைந்த பட்சமாக 4376 புள்ளிகளாகவும் இருந்தது. இன்று ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி பங்குகள் 6.5 சதவீதமும், ஆட்டோ நிறுவன பங்குகள் 4 சதவீதமும் உயர்ந்திருந்தது. ஹெச் சி எல் டெக் 9.19 சதவீதம், ஐ சி ஐ சி ஐ பேங்க் 8.24 சதவீதம், டி எல் எஃப் 7.66 சதவீதம், யூனிடெக் 7.64 சதவீதம், மாருதி சுசுகி 7.38 சதவீதம், ஹெச் டி எஃப் சி பேங்க் 6.83 சதவீதம், கிராசிம் 6.56 சதவீதம் உயர்ந்திருந்தது. இருந்தாலும் ஸ்டெர்லைட் - 6.76 சதவீதம், கெய்ர்ன் இந்தியா - 4.14 சதவீதம், டாடா ஸ்டீல் - 2.28 சதவீதம், டாடா பவர் - 1.61 சதவீதம், ரான்பாக்ஸி லேப் - 1.52 சதவீதம் குறைந்திருந்தது.

நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை குறைந்தது


அமெரிக்காவில் பெட்ரோலுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து போனதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது. இன்றைய காலை வர்த்தகத்தில் யு.எஸ்.,லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை, நேற்றைய முடிவு விலையில் இருந்து பேரலுக்கு 1.14 டாலர் குறைந்து 120.27 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விøலை பேரலுக்கு 1.13 டாலர் குறைந்து 119.55 டாலராக இருந்தது. நியுயார்க் மற்றும் லண்டனில் கடந்த மூன்று மாதங்களில் இன்று தான் கச்சா எண்ணெய் விலை 120 டாலருக்கும் குறைவான விலையில் இருக்கிறது. அமெரிக்க வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமெரிக்க மக்களின் செலவு ஜூன் மாதத்தில் குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. அதுவும் அவர்கள் செய்யும் மொத்த செலவில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் பெட்ரோலுக்கான செலவு குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலகிலேயே அதிக அளவு பெட்ரோலை உபயோகிப்பது அமெரிக்காதான். அங்கேயே பெட்ரோலுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைகிறது என்றால் அது உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

நன்றி : தினமலர்


ஆப்ரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அரசு அனுமதிக்கலாம்


கடும் உணவு பற்றாக்குறையால் சீரழிந்து போய் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் உணவுப்பொருட்களில் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தவும், இரட்டை இலக்கத்தில் இருக்கும் பணவீக்கத்தை குறைக்கவேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தடை விதித்தது. ஆனால் உணவுப்பொருட்களின் விலை, உலக நாடுகள் அனைத்திலும் உயர்ந்துள்ளதால் பல ஆப்ரிக்க நாடுகள் போதுமான உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டும், நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அரிசி அறுவடை செய்யப்பட இருப்பதாலும் நவம்பருக்குப்பின் ஆப்ரிக்க நாடுகளுக்கு 2 - 3 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று வர்த்தகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பரில் நமக்கு 94 மில்லின் டன் அரிசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். நமக்கு தேவையோ 88 மில்லியன் டன் அரிசிதான். எனவே அப்போது நம்மிடம் 6 மில்லியன் டன் வரை அரிசி கூடுதலாக இருக்கும். அதில் 2 - 3 மில்லியன் டன் அரிசியை ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

நன்றி : தினமலர்