Friday, August 27, 2010

அதிகாரச் சதுரங்கத்தில் ஆட்டம்போடும் மத்திய அரசு

சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று உலக அளவில் முதல் இடத்தைப் பெற்றிருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். சதுரங்கம் என்பது கடந்த 25 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் உருவான ஒரு விளையாட்டு ஆகும். 64 கட்டங்களைக்கொண்ட அட்டையில் இரண்டு பேர்கள் விளையாடுவதில் வெள்ளை - கறுப்பு ஆகிய வண்ணங்களில் யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நான்கு வகைப் படைகளையும் களத்தில் நிறுத்திப் போராடுவதால், அது சதுரங்கம் என்ற பெயரைப் பெற்றது. எதிரி அரசனைச் சுற்றி வளைத்து மேலும் நகர முடியாமல் கட்டுப்படுத்துவதுதான் வெற்றியின் அறிகுறி.

இந்தியாவிலிருந்து பாரசீகம் சென்று, அரபு நாடுகளில் புகுந்து, பிறகு ஐரோப்பிய நாடுகளிலும் சதுரங்க விளையாட்டு நால்வகைப் படைப் பிரிவுகளுடன் இந்தியா வகுத்த முறையில் பரவியது, ஒவ்வொரு நாட்டிலும் சதுரங்க விளையாட்டில் பிரசித்தி பெற்றவர்கள் அரண்மனை மண்டபங்களில் மன்னர்களால் பாராட்டப்பட்டனர்.

1886-ம் ஆண்டு முதல் உலக சதுரங்க அமைப்பு என ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அதன் கீழ் பல நாடுகளில் உள்ள சதுரங்க வல்லுநர்கள் போட்டியிட்டுப் படிப்படியாக முன்னேறி, கடைசியாக இருவர் ஆடும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் உலகச் சதுரங்க முதன்மையானவராகப் பட்டம் சூட்டப்பட்டார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின், 1948-1972 காலத்தில் ரஷியர்கள் முதலிடத்தை வகித்தனர். ஆதன் பிறகு அமெரிக்காவின் பாபி பிஷர் மூன்றாண்டுகள் முதலிடம் பெற்றார். 1975 முதல் 2000 வரை ரஷியாவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் முதலிடத்தைப் பெற்றனர்.

2000-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் உலகச் சதுரங்கப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றார். இந்தியாவில் தொடங்கிய சதுரங்க விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்தவர் உலக முதலிடத்தைப் பெற்றது ஆனந்த் மூலமாகத்தான்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் 1969 டிசம்பர் 11-ல் விஸ்வநாதன் - சுசீலா தம்பதியரின் மகனாக ஆனந்த் பிறந்தார். சிறு வயதிலேயே அவருடைய தாய் சதுரங்க ஆட்டத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பள்ளிப் பருவத்திலேயே சதுரங்க விளையாட்டில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றவராக, கடுமையான போட்டிகளில் எளிதாகப் பரிசுகள் பலவற்றை அவர் தட்டிச் செல்ல ஆரம்பித்தார்.

சென்னையில் டான் பாஸ்கோ பள்ளியிலும், பிறகு லயோலா கல்லூரியிலும் அவர் படித்தார். அப்பொழுதும் அவருடைய சதுரங்க விளையாட்டுத் திறமை பலரும் பாராட்டும் அளவுக்கு வளர்ந்து வந்தது. 15-ம் வயதில் உலக முதல்வர் என்ற தகுதியைப் பெற்றார், 16-வது வயதில் இந்திய தேசிய சதுரங்கப் போட்டியில் முதலிடத்தை அடைந்தார், 1987-ல் 17-வது வயதில் உலக இளைஞர் (ஜூனியர்) சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டில் உலக அளவில் மாமுதல்வர் என்ற பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியராக அவர் ஆனார்.

1993 முதல் 2000 வரை உலகச் சதுரங்கப் போட்டிகளில் பிரசித்திபெற்ற சதுரங்க மேதைகள் பலரை அலைமோதச் செய்யும் அளவுக்கு ஆனந்த்தின் திறமை வேகமாக வளர்ந்துவிட்டது.

2000-ம் ஆண்டு டெஹ்ரான் நகரில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் ரஷியக் கூட்டாட்சியைச் சேர்ந்த லாட்வியா பகுதியில் பிறந்து பிறகு ஸ்பெயின் நாட்டுக் குடிமகனாக ஆன அலெக்சி ஷிராவ் என்பவருடன் இறுதிக் கட்டத்தில் ஆனந்த் விளையாடினார். எதிர்ப்பட்ட அலெக்சி ஷிராவை 3.5 - 0.5 என்ற வலிவான முறையில் தோற்கடித்து, உலக சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார். சதுரங்கப் போட்டியில் உலக முதன்மையாளர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஆனந்த் அடைந்தார்.

ஆயினும், 2002 உலகச் சதுரங்கப் போட்டியில் அரையிறுதிக் கட்டத்தில் ஆனந்த் தோல்வி அடைந்தார், இருப்பினும் மனம் தளராமல், தொடர்ந்து ஊக்கத்துடன் வளர்ச்சி அடைந்து, 2007-ல் உலகச் சதுரங்க முதன்மையாளராக ஆனந்த் ஆனார்.

2008-ல் நடைபெற்ற போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த விளாடிமிர் கரமிக்கைத் தோற்கடித்து தமது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 2010-ல் நடைபெற்ற உலகப் போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலாவைத் தோற்கடித்து, உலகச் சதுரங்க விளையாட்டு அரங்கில் தனிப்பெரும் மாமன்னராக முதலிடத்தில் ஆனந்த் இருக்கிறார்.

சதுரங்க ஆட்டத்தில் உலகப் புகழும் முதலிடமும் பெற்ற ஆனந்தைப் பாராட்டும் வகையில் சிறப்பு டாக்டர் பட்டம் தர, ஐதராபாத் பல்கலைக் கழகம் முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை கடந்த ஓராண்டு காலமாக மேற்கொண்டது. ஆனந்த்தின் ஒப்புதலையும் பெற்று, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், நிர்வாக மேற்பார்வை அமைப்பினர்களும், ஆனந்த்துக்கு 2010 ஆகஸ்ட் 23-ல் ஒரு சிறப்புப் பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடும் செய்துவிட்டனர். ஆனால், இதற்கு இடையில் எதிர்பாராத ஓர் இடையூறு குறுக்கிட்டது.

ஐதராபாத் பல்கலைக் கழகம் ஒரு மத்தியப் பல்கலைக் கழகமாக மத்திய அரசாங்கத்தினரால் உருவாக்கப்பட்டது. அதனால், சிறப்புப் பட்டங்களைத் தருவதற்கான ஏற்பாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகரத்தின் அனுமதியைப் பெற வேண்டும். உலகப் புகழ்பெற்ற ஆனந்த்துக்கு டாக்டர் பட்டம் தருவதற்கான விவரங்களை மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய கல்வி அமைச்சரகத்துக்கு ஐதராபாத் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அனுப்பிவிட்டார். அனுமதி கிடைப்பதில் சிக்கல் எதையும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் முறையான அனுமதியை விரைவுபடுத்தும்படி பல்கலைக் கழகம் கடிதங்களையும், வேண்டுகோள்களையும் அடிக்கடி அனுப்பியபடி இருந்தது.

இடையில் மத்திய கல்வி அமைச்சரக அதிகாரி ஒருவருக்கு ஓர் ஐயப்பாடு தோன்றியதாம். விஸ்வநாதன் ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி எழுந்தது. உடனே அங்கிருந்த கல்வி நிபுணர்கள் அது பற்றி ஆராய ஆரம்பித்தார்கள். வெளிநாட்டுக்காரருக்குப் பட்டம் தருவதென்றால், வெளிவிவகார அமைச்சரகத்தின் ஒப்புதலையும் வாங்கவேண்டும் என்று மற்றோர் அரசாங்க விதிமுறை உள்ளது.

இந்தியக் குடியுரிமை பற்றிய விவகாரம் எழுந்ததும், ஆனந்தின் மனைவி அருணா ஆனந்த், கணவரின் பாஸ்போர்ட் பக்கங்களின் நகல்களை அனுப்பி வைத்தார். அத்துடன் உலகக் கணித மாநாடும் ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனந்த்துடன் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியர் டேவிட் மம்போர்டுக்கும் சேர்த்து சிறப்பு டாக்டர் பட்டங்களை அளிக்க ஐதராபாத் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்தது. அதில் கலந்துகொள்ளும் கணிதப் பேராசிரியர்கள் 40 பேருடன் தொடர்ச்சியாக ஆனந்த் சதுரங்கம் ஆடுவதற்கும் நாள் ஒதுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 23 ஞாயிறு அன்றே ஆனந்த், மம்போர்டு இருவரும் ஐதராபாத் வந்துவிட்டனர். மறுநாள் பல்கலைக் கழகச் சிறப்பு டாக்டர் பட்டங்களை வழங்க ஐதராபாத் பல்கலைக் கழகம் தயாராகிவிட்டது, பட்டம் பெறுபவர்களும் வந்துவிட்டனர். ஆனால், ஞாயிறு இரவு வரை மத்திய கல்வி அமைச்சரகத்தின் அனுமதி மட்டும் வரவில்லை. தில்லியில் ஞாயிறு. பிறகு திங்கள் (ஓணம்,) செவ்வாய் (ரக்ஷô பந்தன்) விடுமுறை நாள்கள். மூன்று மாதங்கள் தூங்கிக் கிடந்த அமைச்சரகம் மூன்று நாள்களில் விழித்துக் கொள்ளுமா? அனுமதி வரவில்லை என்பதால், சிறப்புப் பட்டம் அளிப்பது நின்றது. திங்கள்கிழமை தனது விடுதியில் ஆனந்த் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

எதனையும் பொருள்படுத்தாமல், தாம் ஏற்றுக்கொண்டபடி 40 கணிதப் பேராசிரியர்களுடன் ஒருங்கிணைந்த தொடர் சதுரங்க ஆட்டங்களை செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்த் நடத்தினார்.

ஆனந்த்துக்குச் சிறப்புப் பட்டம் வழங்கும் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தி நாடெங்கும் பரவியது. பரவலாகக் கண்டனக்குரல்கள் எழுந்தன.

வெளியில் கிளம்பிய கூக்குரல்களின் ஓசை கேட்டு, உறங்கிக்கிடந்த கல்வி அமைச்சரகம் கண்விழித்தது. நடந்த தவற்றுக்கு மன்னிக்கும்படி மத்திய கல்வி அமைச்சர் கபில்சிபல், ஆனந்த்திடம் மன்னிப்புக் கேட்டார். ஏதோ நடந்தது நடந்துவிட்டது அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் ஆனந்த் அமைதியாக இருந்தார்.

ஆனந்த்திடம் மட்டுமல்ல, இந்திய மக்களிடமும் மத்தியக் கல்வி அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும். நீங்கள் அவமதித்தது தனிப்பட்ட ஒருவரை மட்டுமல்ல; கோடானு கோடி இந்திய மக்களை, இந்தியாவை!

ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி ஏன் எழுந்தது என்பது தெரியவில்லை. சதுரங்கச் சக்ரவர்த்தி ஆனந்த் பற்றி கணிப்பொறியில் ஒரு தட்டுத் தட்டினால் அவருடைய வாழ்க்கை வரலாறு பல பக்கங்களுக்கு வருகின்றனவே! அவர் பிறந்த இடம், படித்த இடம் எல்லாம் தமிழ்நாட்டில்தானே! தமிழ்நாட்டையே வேறு நாட்டாருக்குத் தாரை வார்த்து விட்டார்களா?

1987-ல் ஆனந்துக்கு பத்மஸ்ரீ பட்டத்தை இந்திய அரசாங்கம் வழங்கியது. 1991-ல் அவருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டில் பத்மபூஷண் வழங்கியது.

தாம் கலந்துகொள்ளும் ஓவ்வோர் உலகப் போட்டியிலும் இந்திய தேசியக் கொடியை முன்வைத்து இந்தியாவுக்காக வெற்றிகளைக் குவித்தவர். அவருக்கு இந்திய அரசாங்கம் செய்த பெருமை, மரியாதை இவ்வளவுதான்.

சிலருக்குப் பட்டம் கிடைப்பதால் பெருமை வரலாம். ஆனால், சிலருக்குப் பட்டம் தருவதால், தரும் அமைப்புக்குப் பெருமை கிடைக்கலாம். அந்தப் பெருமையை அடைய விரும்பிய ஐதராபாத் பல்கலைக் கழகத்தை மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது.

இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்று முன்பு பலர் கூறியிருக்கிறார்கள். இப்பொழுது அதையும் தாண்டி இந்தியா என்ற பாரத் என்ற உத்தரப்பிரதேசம் என்ற டெல்லி என்று ஆகிவிட்டதா? தெற்கு வாழ்கிறது. அதைச் சகிக்க வடக்கு மறுக்கிறது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டால் மட்டும்போதாது. அமைச்சர் கபில் சிபிலும் அவரது அமைச்சரகத்தின் பொறுப்பான உயர் அதிகாரிகளும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரவர் மனசாட்சியையே கேட்டுக் கொள்ளட்டும்!
கட்டுரையாளர் : இரா.செழியன்
நன்றி : தினமணி