Thursday, August 21, 2008

எலக்ட்ரிக் காரை வெளியிடுகிறது ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி, 2013ல் எலக்ட்ரிக் காரை தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்கிடையில் பேட்டரியில் ஓடும் மூன்று சக்கர வாகனம் ஒன்றையும் அது வெளியிட இருக்கிறது. மேலும் அதன் இ பைக் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்த நிதி ஆண்டில் புதிதாக இரண்டு ஹைஸ்பீடு இ பைக்களை அறிமுகப்படுத்துகிறது.சோலார் எனர்ஜியில் ஓடும் வாகனங்களை தயாரிக்கும் முயற்சியிலும் ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனி ஈடுபட இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். எனவே வாகனங்களை எலக்ட்ரிக் மயமாக்கும் ஆராய்ச்சிக்கு அதிக அளவு முதலீடு செய்கிறோம். எலக்ட்ரிக் வாகன சந்தையில் நாங்கள் முன்னணியில் இருக்க விரும்புகிறோம் என்றார் ஹீரோ எலக்ட்ரிக் கம்பெனியில் தலைமை செயல் அதிகாரி சோகிந்தர் கில். அவர் மேலும் தெரிவித்தபோது, இன்னும் ஐந்து வருடங்களில் மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் காரை இங்கு அறிமுகப்படுத்தி விடுவோம் என்றார். இப்போது அவர்கள் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே இருக்கும் பேட்டரி காருக்கு செலவு அதிகமாகிறது. எனவே அது நமக்கு லாபகரமாக இருக்காது. எனவேதான் நாங்கள் கெப்பாசிடர்களை பயன்படுத்த இருக்கிறோம். அதன் மூலம் உடனுக்குடன் சார்ஜ் செய்து கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம் என்றார் கில். இந்திய கண்டிஷனுக்கு ஒத்து வரக்கூடிய வகையிலும் நாங்கள் காரை வடிவமைக்கிறோம் என்றார் அவர். இவர்களின் மூன்று மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் கார்கள் லூதியானாவில் இருக்கும் அவர்களது தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட இருக்கிறது.
நன்றி : தினமலர்

கடும் சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

பணவீக்க விகிதம் மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இன்றைய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்கு சந்தையில் காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைய துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 434.50 புள்ளிகள் ( 2.96 சதவீதம் ) குறைந்து 14,243.73 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 131.90 புள்ளிகள் குறைந்து 4,283.85 புள்ளிகளில் முடிந்துள்ளது. சிஎன்பிசி - டிவி 18 எடுத்த கணிப்பில், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 12.44 சதவீதத்தில் இருந்து 12.62 சதவீதமாக உயர்ந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இன்று பங்கு சந்தை சரிவை சந்திக்க வேண்டியதாகி விட்டது. மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையிலும் வீழ்ச்சியே காணப்பட்டது. சீனாவின் ஷாங்கை - 3.63 சதவீதம், ஹாங்காங்கின் ஹேங் செங் - 2.46 சதவீதம், ஜப்பானின் நிக்கி - 0.77 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெரியிட்ஸ் டைம்ஸ் - 1.49 சதவீதம், கொரியாவின் கோஸ்பி - 1.83 சதவீதம் மற்றும் தைவானின் தைவான் வெயிட்டட் - 1.74 சதவீதம் குறைந்திருந்தது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தது


சர்வதேச சந்தையில் இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர ஆரம்பித்து விட்டது. நியுயார்க் மெர்கன்டைல் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.14 டாலர் ( அல்லது 1 சதவீதம் ) உயர்ந்து 116.70 டாலராக இருக்கிறது.லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 89 சென்ட் ( அல்லது 0.8 சதவீதம் ) உயர்ந்து 115.25 டாலராக இருக்கிறது. போலந்தில் ஏவுகணை தடுப்பு கருவி ஒன்றை நிறுவ அமெரிக்கா போலந்து அரசுடன் ஒப்பந்தம் செய்திருப்பதை அடுத்து ரஷ்யா கோபமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் இருந்து சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவு குறையும் என்கிறார்கள். மேலும் ஜார்ஜியா மீது ரஷ்யா படையெடுத்ததால் காஸ்பியன் கடல் பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் 1.1 மில்லியன் பேரல்கள் குறைந்திருக்கிறது. இது தவிர அமெரிக்காவின் எண்ணெய் சப்ளையிலும் கடந்த வாரம் 6.2 மில்லியன் பேரல்கள் குறைந்திருப்பதாக சொல்கிறார்கள்.ஜூலை 11ம் தேதி, வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவாக 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 21 சதவீதம் குறைந்திருக்கிறது.

நன்றி : தினமலர்


ஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்களுக்கு கொழுத்த வருமானம்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியால் அங்குள்ள ஹோட்டல்கள் பார்வையாளர் களால் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்குள்ள ஹோட்டல்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பெய்ஜிங்கில் இருக்கும் ஹோட்டல்களில், ஒரு ரூமில் இருந்து கிடைக்கும் வருமானம் ( ரெவன்யூ பெர் அவெய்லபிள் ரூம் ) 546 சதவீதம் உயர்ந்திருந்தது. ஹோட்டல்களில் ரூம் தேவைப்படுவோர் எண்ணிக்கை 86.3 சதவீதமும், ரூம் கட்டணம் 421 சதவீதமும் உயர்ந்திருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி சராசரியாக 87 டாலராக இருந்த ரூம் கட்டணம், இந்த வருடம் ஆகஸ்ட் 8ம் தேதி 451 டாலராக உயர்ந்து விட்டது. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமான நாட்களை ஒட்டிய இரு தினங்களில் மட்டும் அங்குள்ள ஹோட்டல்களில் ரூம்களுக்கான தேவை ( டிமாண்ட் ) அதிகரித்ததோடு ரூம் வாடகையும் அதிகரித்திருக்கிறது. ஆகஸ்ட் 24ம் தேதிதான் ஒலிம்பிக் முடிவடைகிறது என்பதால் அதுவரை அங்குள்ள ஹோட்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்.
நன்றி : தினமலர்

தங்கத்திற்கு சென்றது பங்குச் சந்தைக்கு போக வேண்டிய பணம்

சந்தைக்கு இந்த வாரத்துவக்கமே நஷ்டமாகத்தான் இருந்தது. திங்களும், நேற்று முன்தினமும் சந்தை கீழேயே இருந்தது. நேற்று தான் காப்பாற்றியது என்றே கூற வேண்டும். அமெரிக்க சந்தைகளில் மறுபடி சிறிது பயம் தெரிகிறது. அதாவது, அங்கு மறுபடி கொடுத்துள்ள கடன்களில் இருந்து ஏதும் பூதம் கிளம்புமோ என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. அது, உலகளவில் பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மை. மறுபடி ஒரு சப்-பிரைம் ப்ராப்ளமா? தாங்காது உலகம். இது தவிர பணவீக்க பயம் யாருக்கும் தெளியவில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக இறங்கி வந்த வங்கிப் பங்குகள் நேற்று முன்தினம் சிறிது ஏற்றம் கண்டன. சர்க்கரை பங்குகளும் இனித்தன. இருந்தும் மும்பை பங்குச் சந்தை நேற்று முன்தினம் 102 புள்ளிகள் குறைந்தது. பெர்ட்டிலைசர் மானியங்களுக்காக 22,000 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட முடிவுகள் மத்தியில் எடுக்கப்பட்டதால் நேற்று பெர்ட்டிலைசர் கம்பெனி பங்குகள் மேலே சென்றன. தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த சந்தைக்கு நேற்று தான் சிறிது உயிர் வந்தது. குறிப்பாக ரிலையன்ஸ், கிராசிம், பி.எச்.இ.எல்., ஆகிய கம்பெனிகள் மேலே சென்றன. நேற்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 134 புள்ளிகள் கூடி 14,678 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 47 புள்ளிகள் கூடி 4,415 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பிரேசிலும், பங்குச் சந்தையும்: ஒரு காலத்தில் யாருக்கும் வேண்டாத நாடாக இருந்த பிரேசில் இன்று உலகளவில் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. ஒரு காலத்தில் (1990) அங்கு பணவீக்கம் 6,800 சதவீதம் அளவு இருந்தது. தற்போது 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கிறது. கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற நாடு என்று தற்போது அழைக்கப்படுகிறது. ஏனெனில், அங்கு தான் தோண்டுமிடமெல்லாம் எண்ணெய் வளமும், இரும்பு தாது வளமும் கிடைக்கிறது. கூடிவந்த எண்ணெய், இரும்பு தாது விலைகளால் அங்கும் பங்குச் சந்தை கடந்த வருடம் உயர்ந்து கொண்டே சென்றது. ஆனால், இவ்வளவு இருந்தும் இந்த வருடம் அங்கும் பங்குச் சந்தை கீழே செல்ல ஆரம்பித்தது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தங்கம் வாங்கலாமா தங்கம்?
தங்கம், டாலர் மதிப்பில் பார்த்தால் கடந்த மாதம் அதிகபட்சமாக அவுன்ஸ் 1,030 டாலரில் இருந்தது. கடந்த வாரம் குறைந்தபட்சமாக 770 டாலர் அளவு சென்று தற்போது 815 டாலர் அளவில் வந்து நிற்கிறது. அதே சமயம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு டாலர் 42.30 அளவில் இருந்தது. தற்போது, 43.73 அளவு நேற்று இருக்கிறது. அதாவது, டாலருக்கு ஒரு ரூபாய் 43 பைசா கூடியுள்ளது. ஒரு ஆச்சரியமான உயர்வு இது. இந்த அளவு உயர்வு ஆச்சரியம் அளித்தாலும், தங்கம் விலை டாலர் மதிப்பிலேயே அளவிடப்படுவதால், விலை 11,400 முதல் 11,900 அளவிலேயே இருந்து வருகிறது (10 கிராம், 24 காரட் தங்கம்). தங்கத்தின் சமீபத்திய ஏற்ற, இறக் கத்திற்கு டாலர், ரூபாய் மதிப்பும் ஒரு காரணம். இன்னொரு காரணம் டிமாண்ட். விலை குறைகிறது, இது தான் வாங்குவதற்கு சமயம் என்று மக்கள் சென்ற வாரமெல்லாம் கடைகளில் அலை மோதினர். பங்குச் சந்தைக்கு வரவேண்டிய பணத்தில் பாதியளவாவது தங்கத்தில் சென்றிருக்கும். ஒரு டாலருக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு ரூபாய் 43 பைசா வரை கூடியிருந்தாலும், அது பங்குச் சந்தையில் ஏற்றுமதி, சாப்ட்வேர் கம்பெனியின் பங்குகளை மேலேற்றாதது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்?:
சந்தையில் பல பங்குகள் மலிவாகக் கிடைக்கின்றன. ஆனால், மலிவாகக் கிடைக்கிறதே என்று வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இது தங்கம் போல் இல்லை. தங்கம் விலை குறைந்ததும் பலர் வரிசையில் நின்று வாங்கினர். ஆனால், பங்குச் சந்தை குறைந்தால் வாங்குபவர்கள் சிலரும் காணாமல் போய்விடுவர். ஏனெனில் கடந்த வருடத்தில் எல்லாரும் குறைந்த காலத்தில் அதிகம் பங்குச் சந்தையில் சம்பாதித்தனர். அதுவே ரீபிட் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்தக் காலம் திரும்பி வருமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், பங்குச் சந்தையை நீண்ட காலம், அதாவது ஒரு தென்னம் கன்றையோ அல்லது ரப்பர் கன்றையோ நடும் போது சில வருடங்களுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நட்டு பாதுகாப்போம் அல்லவா, அதுபோல பாதுகாத்தால் பங்குச் சந்தையும் நீண்டகாலத்தில் பலன் தரும். கடந்த 11ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தை 15,303 புள்ளிகளில் இருந்தது, தற்போது கிட்டதட்ட 825 புள்ளிகள் குறைந்து 14,678 புள்ளிகளில் இருக்கிறது. இருந்தாலும் வாங்குபவர்கள் அதிகம் இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற கதை தான்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்