Wednesday, October 1, 2008

இந்திய பங்கு சந்தை வலுவானதாக இருக்கிறது : சிதம்பரம்


புதுடில்லி : இந்திய பங்கு சந்தை வலுவாகதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். உலக அளவில் பங்கு சந்தைகளில் ஏற்படும் பாதிப்பு இந்திய பங்கு சந்தையையும் பாதித்தாலும், அது வலுவானதாகத்தாகவும்,கட்டுப்படுத்தப்பட்ட சந்தையாகத்தான் இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் கலக்கமடைய தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். பங்கு சந்தையை மத்திய அரசு அக்கறையுடன் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. பங்கு சந்தை மீது இப்போது இருக்கும் கட்டுப்பாடே போதுமானதாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக வேண்டிய நடவடிக்கையை எடுக்கவும் மத்திய அரசு தயங்காது என்றார். கட்டுப்பாடுகள் இருந்தாலும் சந்தையை ஒரு லேசான சூழ்நிலையில்தான் வைத்திருக்க விரும்புகிறோம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெற்றிருக்கிறார்களா என்று அவரிடம் கேட்டபோது, கொஞ்சம் பேர் பங்குகளை விற்றிருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் விற்கவில்லை என்றார். எல்லோரும் விற்கவும் மாட்டார்கள் என்றார். நிறைய வெளிநாட்டினர் இந்தியாவில் பங்குகளை வாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால் இந்திய பங்கு சந்தை, அவர்களை பொறுத்தவரை, அவர்களை கவரும் விதமாகவும் கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் இருக்கிறது. அமெரிக்க அதிபர் புஷ் கொண்டு வந்த 700 பில்லியன் டாலர் நிதி உதவி திட்டம் அங்குள்ள காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டிருப்பதைபற்றி கேட்டபோது, ஏன் காங்கிரஸ் அதை நிராகரித்தது என்று தெரியவில்லை. ஆனால் நிதி உதவி செய்ய வேண்டியது அவசியம். அந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் அது எல்லோருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

நன்றி தினமலர்

வதந்திகளை நம்ப வேண்டாம் : ஐசிஐசிஐ வங்கி வேண்டுகோள்


மும்பை : எங்கள் வங்கிக்கு வலுவான நிதி ஆதாரம் இருக்கிறது; எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஐசிஐசிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி கடும் நிதி சிக்கலில் இருப்பதாக நேற்று நாட்டின் பல பகுதிகளில் வதந்தி பரப்பப்பட்டது. குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பல ஊர்களில் இந்த வதந்தி பரவியது. ஐசிஐசிஐ வங்கி கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக வந்த வதந்தியை அடுத்து அந்த இரு மாநிலங்களிலும் உள்ள பெரும்பாலான ஊர்களில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி ஏ.டி.எம்., களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் பணம் எடுக்க முண்டியடித்தது. எல்லோரும் அவரவர் கணக்கில் இருக்கும் எல்லா பணத்தையுமே எடுத்துக்கொள்ள முயற்சித்தனர். இøனால் ஏ.டி.எம்., முன்பு பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. இது குறித்து இன்று அந்த வங்கியின் சி இ ஓ மற்றும் மேலாண் இயக்குநர் கே.வி.காமத் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் வங்கிக்கு வலுவான நிதி ஆதாரம் இருக்கிறது. எனவே எங்கள் பற்றி பரப்பப்படும் வதந்திகள் எதையும் வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். அந்த வதந்திகள் எல்லாம் வேண்டுமென்றே கெட்ட நோக்கத்தில் பரப்பப்படுகிறது.எனவே அவைகளை கண்டுகொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.4,84,000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கிறது. எனவே யாரும் எங்களது நிதி நிலை குறித்து அச்சம் அடைய தேவை இல்லை என்றார்.எங்கள் வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய பணம் எங்களிடம் தாராளமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நன்றி தினமலர்