Monday, November 30, 2009

துபையில் தேள் கொட்டினால்...

கடந்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இப்போதுதான் சற்று குறைந்து, உலக நாடுகள் தட்டுத் தடுமாறி மீண்டும் தங்களைச் சுதாரித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், துபை அரசாங்கத்தின் பல்வேறு பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்களையும், வியாபாரம் மற்றும் கட்டுமானத் தொழில்களையும் நிர்வகிக்கும் "துபை வொர்ல்ட்' அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம்வரை தான் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுவது போலவும், தனது நிதி நிலைமை சீரும் சிறப்புமாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்த "துபை வொர்ல்ட்' கடனில் மூழ்கித் தத்தளிக்கும் உண்மை திடுக்கிட வைத்திருக்கிறது.

அடுத்த ஆறு மாத காலத்துக்குத் தான் திருப்பிச் செலுத்த வேண்டிய தவணைகள், வட்டிகள் என்று அனைத்தையும் முடக்கி இருப்பதாக "துபை வொர்ல்ட்' அறிவித்திருக்கிறது. இந்த அரசு நிறுவனத்தின் மொத்தக் கடன் சுமார் 520 கோடி டாலர் என்று கூறப்படுகிறது. இந்த 520 கோடி டாலர் உள்பட துபை அரசு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் 800 கோடி டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழில், சிறப்புப் பொருளாதார மண்டலம், கப்பல் மற்றும் துறைமுகக் கட்டுமானத் துறை என்று எதையுமே விட்டு வைக்காமல் உலகம் முழுவதும் முதலீடு செய்து வந்தது "துபை வொர்ல்ட்' நிறுவனம். கடந்த வாரம் வரை 200 கோடி டாலர்கள் கையிருப்பு இருப்பதாகவும், அபுதாபி 100 கோடி டாலர்கள் தர இருப்பதாகவும் கூறிவந்தது இந்த நிறுவனம்.

உலக நிதி நிறுவனங்களின் பயமெல்லாம் "துபை வொர்ல்ட்' போல ஏனைய துபை நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்குமோ என்பதுதான். இந்தப் பிரச்னைக்கு எல்லாம் மூல காரணம், துபை என்கிற குட்டி நாட்டின் அதிபரான ஷேக் முகம்மது பின் ராஷித்-அல்-மக்கோடம்தான். வானளாவிய கட்டடங்கள், வியாபார நிறுவனங்கள், மால்கள் என்று துரித கதியில் துபையை சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் போட்டியாக உருவாக்கிக் காட்டுவது என்று திட்டமிட்டதுடன் நில்லாமல், தனது வெற்றியைப் பற்றிய அதீதக் கற்பனையில் உலகளாவிய முதலீடுகளிலும் கால் வைக்க முற்பட்டார் அவர்.

துபையின் திடீர் நிதிநிலைச் சரிவுக்குக் காரணம் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் எனலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பீப்பாய் 140 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது பாதிக்குப் பாதியாகக் குறைந்து 75 முதல் 78 டாலர்களாக இருக்கிறது. இப்போது துபையில் பாதி கட்டப்பட்ட நிலையில் நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், மால்களும், விற்பனை வளாகங்களும் ஏராளம். துபையில் முதலீடு செய்து வந்தவர்கள் உலகப் பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு முதலீடு என்பதை நிறுத்தி விட்டது இன்னொரு காரணம்.

"துபை வொர்ல்ட்' மற்றும் துபை அரசின் நிதி நெருக்கடியால் இந்தியாவுக்கு நேரிட இருக்கும் உடனடிப் பிரச்னைகள் மூன்று. வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படும் சுமார் 250 கோடி டாலரில் ஏறத்தாழ பாதிக்குப் பாதி வளைகுடா நாடுகளிலிருந்து அனுப்பப்படுபவைதான். அந்த வரவு கணிசமாகக் குறையக் கூடும். இரண்டாவதாக, துபையுடன் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும், துபையில் முதலீடு செய்திருக்கும் இந்திய நிறுவனங்களின் முதலீடு அல்லது வர வேண்டிய பணம் தடைபடுவதால், பல நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். இந்தியாவில் துபை செய்திருக்கும் முதலீடுகள் திரும்பப் பெறப்படும் அபாயம் மூன்றாவது.

"துபை வொர்ல்ட்' மற்றும் அரசின் பொருளாதாரப் பின்னடைவு இந்திய வங்கிகளையும் பாதிக்கக்கூடும். இந்திய வங்கிகள் சுமார் ரூ. 6,500 கோடி வரை வளைகுடா நாடுகளில், குறிப்பாக, ஐக்கிய அரபுக் கூட்டாட்சியில் பற்று வரவு நடத்தி வருகிறது.

சிக்கனம் சார்ந்த பொருளாதாரம் கைவிடப்பட்டு செலவழிப்பதும், கடன் வாங்குவது ஊக்குவிக்கப்படுவதும், வரைமுறையற்ற வளர்ச்சி வரவேற்கப்படுவதும், உலகப் பொருளாதாரப் பின்னடைவு அல்லது துபையில் ஏற்பட்டிருப்பதுபோலப் பொருளாதாரத் தகர்வு ஏற்பட்டால் நம்மை நிலைகுலைய வைத்துவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

முந்தைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டியும், தற்போதைய கவர்னர் சுப்பாராவும் மிகுந்த எச்சரிக்கையுடனும், பலத்த கட்டுப்பாடுகளுடனும் இந்தியாவில் நிதி நிர்வாகத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஓரளவுக்கு நம்மைக் காப்பாற்றி வருகிறது. துபையைத் தாக்கியிருக்கும் நிதி நெருக்கடி சுனாமி, நம்மை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமா என்று கேட்பவர்கள், உலகமயத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள்!
நன்றி : தினமணி

ஹைபிரிட் நானோ காரை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டம்

ஹைபிரிட் நானோ காரை அறிமுகப் படுத்த டாடா குரூப் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டாடா மோட்டார் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த “நானோ” என்ற கார்களை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த கார்கள் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டு வருகின்றன. மிக குறைந்த விலை என்பதால் இந்த கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், விற்கப் பட்ட நானோ கார்களில் சில தீப்பிடிப்பதாக தகவல்களும் வெளியாகியது.
இந்நிலையில், தென்கொரிய செய்தி நிறுவனத்திடம் போட்டியளித்துள்ள டாடா நிறுவன தலைமை அதிகாரி, விரைவில் உலகிலேயே குறைந்த விலை கொண்ட காரை அறிமுகப் படுத்த உள்ளதாகவும், இந்த கார் நானோ வகையை சேர்ந்ததாக இருக்கும் என்றும் இது நானோ காரை விட தொழில்நுட்பம் கொண்டதாக ஹைபிரிட் வெர்ஷனாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கார் எளிய விதத்தில் பயன்படுத்த கூடியதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


துபாய் பொருளாதார நெருக்கடி: அதிகளவு பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கருத்து

துபாய் பொருளாதார நெருக்கடியால் அதிகளவு பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தகவல் தெரிவித்தனர் . இதன் காரணமாக இன்றைய பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் தொடங்கியது. நேற்று ஐக்கிய அரபு குடியரசின் ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை, நிதி சந்தை, வங்கிகள் ஆகியவற்றின் பணப்புழக்கம் பாதிக்காத வகையில் அந்நாட்டு நாணயமான தினாரை வங்கித் துறையில் புழக்கத்திற்கு விடுவதாக அறிவித்தது. இந்நிலையில் எடில்விஸ் இன்ஸ்டிசனல் ஈக்விட்டிஸ் என்ற முதலீடு நிறுவனத்தின் துணை தலைவர் விகாஸ் கிமானி இதுகுறித்து கூறும் போது, இந்திய பொருளாதாரத்திற்கு துபாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்பு குறைந்த அளவே இருக்கும். துபாய் நிறுவன கடன் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். துபாய் வேர்ல்ட் நிறுவனத்தை பாதுகாக்க துபாய் அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு குடியரசு, நெருக்கடியில் உள்ள நிறுவனத்திற்கு உதவும் வகையில் உதவிக்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு நிலவுவதாக மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


2வது காலாண்டுக்கான ஜி.டி.பி., 7.9 சதவீதமாக அதிகரிப்பு

இரண்டாவது காலாண்டு நிதியாண்டிற்கான நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி., ) 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தையிலும் ஏறுமுகம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக தான் இருந்தது. முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.2 ஆக இருந்தது. தற்போது யாரும் எதிர்பாராத நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி மற்றும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதத்தை எட்டியுள்ளது. சுரங்கத்துறை 9.5 சதவீத வளர்ச்சியும் , உற்பத்தித் துறை 9.2 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக தான் இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
நன்றி ; தினமலர்