Friday, February 13, 2009

குறைந்தது பணவீக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு காரணமாகவும், தேயிலை, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களின் விலைக் குறைப்பு காரணமாகவும், பணவீக்கம் 4.39 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 31ம் தேதியுடன் முடிந்த வார இறுதியில் பணவீக்கம் 5.07 சதவீதமாக இருந்தது. இது 0.68 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலைக் குறைப்பு போன் றவை கருதப்படுகிறது. ஓராண்டுக்கு முன் இதே காலத்தில் பணவீக்கம் 4.74 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் தற்போது மிகக் குறைந்த அளவாக பணவீக்கம் காணப்படுகிறது.
நன்றி : தினமலர்


கோவை, கொச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சர்வீஸ்

தமிழக தலைநகருக்கு, தென்பகுதி நகரங்களில் இருந்து தற்போதிருக்கும் விமான சேவையை அதிகப்படுத்தும் விதமாக, கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு புதிய தினசரி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய சேவைகள், அரசு அனுமதி கிடைத்ததும் செயல்படத் துவங்கும். தற்போது, கோயம்புத்தூர் - சென்னை இடையே தினசரி இரண்டு முறையும், கொச்சி - சென்னை இடையே தினசரி சேவையும் இயக்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சேவைகளும் தினசரி இயக்கப்படும். ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, காலை 8.10 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். கோயம்புத்தூரில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, 7.30 மணிக்கு கொச்சி சென்றடையும். இரவு 8 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
நன்றி : தினமலர்