Thursday, July 2, 2009

கரூரில் அமைகிறது ஜவுளி பூங்கா

ஜவுளித்துறை நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், முக்கிய தொழில் நகரங்களில் மத்திய ஜவுளித்துறை நிறுவனம் ஜவுளி பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜவுளி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 40 முக்கிய நகரங்களில் இத்தகைய பூங்காக்களை உருவாக்க, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கரூரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. இப்பணி முடியும் நிலையில் உள்ளது. இதற்கான செலவு தொகையாக 40 கோடி ரூபாய் அளவுக்கு நிர்ணயம் செய்துள்ளது. கரூரில் அமையும் பூங்காவில் 60 உறுப்பினர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை ரோட்டில் அமையும் இப்பூங்கா கரூர் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு 110 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் 350க்கும் அதிகமான தறிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வசதிகளும் கொண்டுள்ளதால், மிக சுலபமாக தொழில்துறையினர் பணியாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இதன்மூலம் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தேவையான மின்வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கொண்டுள்ளதால், கரூர் பகுதியில் உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்வத்துடன் ஜவுளி பூங்காவில் தொழில் துவங்க உள்ளனர். இப்பகுதிக்கு அருகிலேயே தொழிலாளர் தங்குவதற்கு வசதியாக பல தனியார் நிறுவனங்கள் குடியிருப்புகள் அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளன. மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளதால், ஜவுளி பூங்கா அமைவதன் மூலம் குட்டி நகரமாக விரைவில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதேபோல், பல நகரப்பகுதிகளில் இத்தகைய பூங்காக்களை அமைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசும், ஜவுளித்துறை நிறுவனமும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், குறிப்பிட்ட அளவு நிலம் கிடைக்காததால், ஜவுளி பூங்காக்கள் அமைக்க தாமதம் ஏற்படுவதாக ஜவுளித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்


உருகியது தங்கம்: சவரனுக்கு ரூ.120 சரிவு

ஆபரணத் தங்கம் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 120 ரூபாய் வரை குறைந்தது. நேற்றைய மாலை நிலவரப்படி சவரன் 10,752 ரூபாய்க்கு விற்றது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. விலை குறையும் போது நகை வாங்கலாம் எனக் கருதிய மக்கள் குழம்பும் அளவுக்கு ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 1,420 ரூபாய்க்கும், சவரன் 11,360 ரூபாய்க்கும் விற்றது. மே 2ம் தேதி ஒரு கிராம் 1,338 ரூபாய்க்கும், சவரன் 10,704 ரூபாய்க்கும் விற்றது. ஜூன் 1ம் தேதி ஒரு கிராம் 1,392 ரூபாய்க்கும், சவரன் 11,136 ரூபாய்க்கும் விற்றது.
கடந்த மாதம் 28ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 10,904 ரூபாய்க்கு விற்றது. மறுநாள் 48 ரூபாய் குறைந்து சவரன் 10,856 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் மீண்டும் சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்தது.
நேற்று(ஜூலை 1) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 12 ரூபாய் என, சவரனுக்கு 96 ரூபாய் வரை குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி ஒரு சவரன் 10,776 ரூபாய்க்கு விற்றது. ஒரு கிராம் 1,347 ரூபாய்க்கு விற்றது.
மாலையில் சவரனுக்கு மேலும் 24 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 1,344 ரூபாய்க்கும், சவரன் 10,752 ரூபாய்க்கும் விற்றது. இதன்படி ஒரே நாளில் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்



மேலும், கீழும் ஏறி இறங்கி வரும் பங்குச் சந்தை

சந்தை, திங்கள் முதல் நேற்று வரை ஏற்ற இறக்கமாகவே இருந்தது. சாதாரணமாக பட்ஜெட் வருவதற்கு முன் (யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பது போல) சந்தையில் ஒரு கலகலப்புத் தெரியும். அது தற்போது இல்லாதது ஒரு வருத்தம் தான்.
அதாவது, பட்ஜெட்டில் இந்த சலுகை வரும், அந்த சலுகை வரும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்தே சந்தை மேலே சென்று கொண்டிருக்கும். ஒரு மஜா இருக்கும்; அது தற்சமயம் இல்லை. ஒரு வேளை சந்தை நாளையையும் (ரயில்வே பட்ஜெட்), 6ம் தேதியையும் நோக்குகிறதோ என்னவோ?
இவ்வளவு கிட்டே வந்து விட்டோம்; அதற்காகவும் காத்திருப்போம்.
திங்களிலிருந்து, நேற்று வரை பார்த்தால் மொத்தமாக சந்தை 30 புள்ளிகள் இழந்தது. பெரிய இழப்பு இல்லையென்றாலும், சந்தை ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கியதில் பல முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். காலையில் சந்தை மேலே செல்லும், பிறகு அதே அளவு கீழே வரும், பின்னர் மேலே செல்லும் என்றே இருந்தது.
முடிவாக நேற்று மும்பை பங்குச் சந்தை 151 புள்ளிகள் கூடி 14,645 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 49 புள்ளிகள் கூடி 4,340 புள்ளிகளுடனும் முடிந்தது.
சந்தை ஏறிக் கொண்டிருக்கிறது. இது தான் சமயம் என்று பல கம்பெனிகள் மூலதனங்களை திரட்ட ஆரம்பித்துள்ளன. ஒன்று ப்ரைமரி மார்க்கெட் வழியாக, இன்னொன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பதன் மூலம். இதன் மூலமாக, இந்த ஆண்டு மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கம்பெனிகள் திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மார்க்கெட்டில் பங்குகள் விற்கப்படும் சூழ்நிலைகள் ஏற்படலாம். அப்படி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தான் சந்தைகள் கடந்த சில நாட்களாகவே மேலும், கீழுமாகவே இருக்கின்றன.
சென்ற காலாண்டில் ஏறிய சந்தை: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பங்குச் சந்தை 49 சதவீதம் கூடியுள்ளது. குறிப்பாக தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிகம் கூடியுள்ளது. சரியான சமயத்தில் முதலீடு செய்திருந்தால் அதிக லாபம் பெற்றிருப்பீர்கள்.
பங்குச் சந்தையில் தனிப்பட்ட டிரஸ்ட்களும் முதலீடு செய்யலாம் என்ற முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும், அதற்கான சட்டத் திருத்தங்களும் செய்யப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது சந்தையை மேலே கொண்டு செல்லும்.
ஏனெனில், அவர்களிடத்தில் நிறைய உபரிப் பணம் இருக்கிறது.
காலாண்டு முடிவுகள்: இன்பி, ஜூலை 10ம் தேதியும், ஆக்சிஸ் வங்கி, 13ம் தேதியும் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்தக் காலாண்டு முடிவுகள் பொதுவாக நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணங்கள் என்ன? கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன, ஆதலால் வட்டிச் செலவுகள் குறையும், பொதுவாக உலக நிலைமைகளை, நடப்புகளைக் கருதி செலவுகளை கம்பெனிகள் குறைத்து வருகின்றன. உலகளவில் விலைகள் குறைந்துள்ளன. ஆதலால், செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வரும் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்க வேண்டும். மேலும் குறைந்து வரும் வட்டி விகிதங்கள்: ஸ்டேட் பாங்க் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மறுபடி குறைத்துள்ளது.
இது நிச்சயம் சந்தையில் ஒரு போட்டியை உருவாக்கும். இதனால், இன்னும் பல வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கலாம். கடன் வாங்குபவர்களுக்கு லாபம் தான்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : ரயில்வே பட்ஜெட், எகனாமிக் சர்வே, பட்ஜெட் ஆகியவை தான் வரும் நாட்களை தீர்மானிக்கும். தேர்தல் வெற்றிக்கு கடன் தள்ளுபடிகள் ஒரு பெரிய காரணமாக இருந்ததால், இந்த பட்ஜெட்டும் சாதாரண மனிதனை வைத்து அவர்களுக்கு சலுகைகள் வழங்கும் பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்


வீட்டுக் கடன் வட்டி : எல்.ஐ.சி., குறைப்பு

எல்.ஐ.சி., வீட்டுக் கடன்களுக்கு வட்டி குறைக்கப் பட்டுள்ளது. இது குறித்து, எல்.ஐ.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்.ஐ.சி., வீட்டுக் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தில் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் தேதியிலிருந்து இந்த வட்டி குறைப்பு அமல்படுத்தப் படுவதால், ஆகஸ்ட் மாத தவணையி லிருந்து, இதற்கேற்ப வாடிக்கையாளர்கள் சலுகையைப் பெறலாம். எல்.ஐ.சி.,யின் நிதி நிலை மற்றும் செயல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டதால், இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. எல்.ஐ.சி., வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரையில் தற்போதைய வட்டிக்குறைப்புடன், கடந்த ஆறு மாதங்களில் 2 சதவீத வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு முறை தலா 0.75 சதவீத அடிப்படையில் 1.50 சதவீத வட்டி குறைக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்