வெள்ளியன்று பாங்க் ஆப் ஜப்பானின் வட்டி வீதங்கள் குறைப்பு, பணவீக்கம் குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி வீதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் மேலும், கீழுமாக இருந்த சந்தையை வெள்ளியன்று மேலே தூக்கி நிறுத்தின. வியாழனன்று 361 புள்ளிகளும், வெள்ளியன்று 23 புள்ளிகளும் மும்பை பங்குச் சந்தை கூடியது.
வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 23 புள்ளிகள் கூடி 10,099 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 16 புள்ளிகள் கூடி 3,077 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தை 10,000 புள்ளிகளுக்கும் மேலாகவும், நிப்டி 3,000 புள்ளிகளுக்கும் மேலாகவும் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.
பரவலாக வாங்குவதும் நடக்கிறது. அதாவது நல்ல பங்குகள், குறைந்த விலையில் கிடைக்கிறது என்ற எண்ணத்தில் வாங்குவது தொடர்வதால், சந்தை சிறிது சிறிதாக மேலே செல்கிறது.
புதனன்று 30 சதவீதத்திற்கும் மேலே சரிந்த இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி., கம்பெனியான சத் யம், வியாழனன்று 7 சதவீதம் கூடியது. ஆனால், வெள்ளியன்று 3 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து முடிவடைந்தது. விலைகள் தடாலடியாக குறைந்துள்ளதால், கம்பெனியும் பைபேக் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறது. ஆயிலும், டாலரும்: கச்சா எண் ணெய் பேரலுக்கு 40 டாலர் அளவிலும், டாலர் ரூபாய்க்கு எதிராக 47.37 அளவிலும் வந்து நின்றது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும் என்று ஒபெக் தெரிவித்தும், விலை கூடுவது போலத் தெரியவில்லை. ஏனெனில், உலக அளவில் உபயோகங்கள் குறைந்துள்ளன. இன் னும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையுமா? இன்னும் ஒரு முறை குறைக்க வாய்ப்புகள் உண்டு என்று தான் பலரும் எதிர்பார்க்கின்றனர். அதிகம் வெளிநாட்டு பண வரவுகள் இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக கூடி வருகிறது. ஏற்றுமதியாளர்கள் குழப்பத் தில் உள்ளனர். டாலர் ஏறி/இறங்குவதால் மனதும் அதுபோல ஏறி/ இறங்குகிறது. இப்படி ஏறி/இறங்குவதால், ஏற்றுமதி கான்ட்ராக்ட்கள் போடும் போது எப்படி விலை குறிப்பிடுவது என்று தெரியாமல் சிறிய ஏற்றுமதியாளர்கள் கவலையடைகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணவீக்கம்12.91 சதவீதம் அளவில் சென்று நின்று எல்லாரையும் மலைக்க வைத்தது. அரசாங்கத்தின் முயற்சிகளாலும், மக்கள் வாங்குவதை தள்ளிப் போட்டதாலும் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது ஆச்சரியப்படத்தக்க வகையில் 6.84 அளவில் வந்து நிற்கிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் எல்லாரும் 7 சதவீதம் அளவில் வந்து நிற்கும் என நினைத்தனர். ஆனால், பங்குச் சந்தை 22,000யிலிருந்து பாதிக்கு வந்தது போல பணவீக்கமும் தடலடியாக பாதியளவில் வந்து நிற்கிறது. மக்கள் கைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பெரிய அளவில் பொருட்கள் வாங்குவது ஏதும் நடக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், அது பண வாட்டத்தில் கொண்டு செல்லும். அதாவது பணவீக்கம் மைனசில் இருக்கும். எல்லாரும் அத்தியாவசியப் பொருட்களை தவிர மற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்தால் நாட்டுக்கு நல்லதல்ல. வீட்டுக் கடன் வட்டி குறைந்தது மட்டும் சந்தையை தூக்கி நிறுத்தாது. வீடு விலைகளும் குறைய வேண் டும். கட்டுமானத்துறையின் ஜாம்பவான்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து விலைகளை சிறிது குறைப்பார்களேயானால், வீட்டுச் சந்தை மறுபடி உயிர் பெறும்.
தங்கம் ஏன் கூடுகிறது?: வீடு வாங்க ஓடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் தற்போது வெயிட் அண்ட் வாட்ச் என்ற பாலிசியில் இருக்கின்றனர். பணம் எல்லாம் பத்திரமாக பணமாகவோ அல்லது தங்கமாகவோ இருக்கிறது. இது தங்கம் விலை கூடுவதற்கு ஒரு காரணம். இரண்டாவது, இப்போது இருக்கும் சூழ்நிலையில், இது மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று பலரும் கருதுவதாலும். தங்கம் உலகத்தின் பொதுவான நாணயமாயிற்றே. அதாவது, எங்கும் தங்கத்தை கொண்டு சென்று பணமாக்கிக் கொள்ளலாம்.எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) டிசம்பரில் விற்றதை விட வாங்கியது அதிகம்.இது சந்தையை மேலே கொண்டு சென்றதற்கு ஒரு காரணி.பாங்க் ஆப் ஜப்பானின் வட்டி வீதங்களைக் குறைத்துள்ளது. அமெரிக்காவின் ஆட்டோ கம்பெனிகளின் மீட்பு முடிவுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் ரேட் குறைப்பு ஆகியவை, சந்தையின் அடுத்த வாரப் போக்கை நிர்ணயிக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்