Tuesday, June 7, 2011

நடப்பு 2011ம் ஆண்டில் இதுவரையில்புதிய பங்கு வெளியீடுகள்: 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவு



நடப்பு 2011ம் ஆண்டில், இதுவரை புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 15 நிறுவனங் களுள், 9 நிறுவனப் பங்குகளின் விலை, வெளியீட்டு மதிப்பை விட, 16 முதல் 75 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. 6 நிறுவனப் பங்குகளின் விலை, 1.40 சதவீதம் முதல் 277 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்ற 2010ம் ஆண்டிலும், நடப்பு 2010ம் ஆண்டிலும், நாட்டின் பங்கு வர்த்தகம், அதிக ஏற்ற, இறக்கத்துடனே இருந்து வருகிறது. உலகளவில், பணவீக்கம் அதிகரித்து வருவது, ஒரு சில வளர்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதாரம் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பாதது, மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வியாபாரம் சுணக்கமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு 2011ம் ஆண்டில், இதுவரை இந்தியாவில், 15 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன. இவற்றுள், அக்ரோபெடல் டெக்னாலஜீஸ் நிறுவனம், பங்கு ஒன்றை 90 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது. ஆனால், இதன் பங்கின் விலை, வெளியீட்டு விலையை விட, 75 சதவீதம் சரிவடைந்து, 22.70 ரூபாய் என்ற அளவில் கைமாறிக் கொண்டுள்ளது. அதாவது, இதன் பங்குகளில், முதலீடு செய்த முதலீட்டாளர்கள், இதன் பங்குகளை விற்கும் நிலையில், அதிக இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.இதே போன்று, ஷில்பி கேபிள் டெக்னாலஜிஸ் நிறுவனம், பங்கு ஒன்றை 69 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது.

ஆனால், இதன் பங்கின் விலை, தற்போது, பங்கு சந்தையில், வெளியீட்டு விலையைவிட 73 சதவீதம் சரிவடைந்து, 18.65 ரூபாய் என்ற அளவில் உள்ளது.மேலும், சர்வலட்சுமி பேப்பர் நிறுவனத்தின் பங்கின் விலை, வெளியீட்டு விலையான 29 ரூபாயை விட, 64 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஓம்கார் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்கின் விலை (வெளியீட்டு விலை 98 ரூபாய்) 46 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பாரமவுன்ட் பிரின்ட் பேக்கேஜிங் நிறுவனத்தின் பங்கின் விலை ( 35 ரூபாய்) 45 சதவீதமும், பி.டி.சி. இந்தியா பைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் பங்கின் விலை (28 ரூபாய்) 32 சதவீதமும், சங்வி போர்ஜிங் அண்டு இன்ஜினியரிங் நிறுவனப் பங்குகளின் விலை (85 ரூபாய்) 25 சதவீதமும், பியூச்சர் வென்சர்ஸ் இந்தியா நிறுவனப் பங்கின் விலை (10 ரூபாய்) 19 சதவீதமும், இன்னோவென்டிவ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை (வெளியீட்டு விலை 29 ரூபாய்) 16 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளன.நாட்டின் பங்கு வர்த்தகம், நன்கு இல்லாததால், பல முதலீட்டாளர்கள், ஒரே இடத்தில் முதலீட்டை மேற்கொள்ளாமல், ஆதாயம் அளிக்கும் பல்வேறு முதலீட்டு திட்டங்களில், முதலீடு செய்து வருகின்றனர்.

இதுவும், புதிய பங்கு வெளியீடுகள் மற்றும் பங்கு சந்தைகளில் முதலீடு குறைந்து போனதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.இவ்வாண்டு புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, பல நிறுவனங்களுள், பினோடெக்ஸ் கெமிக்கல் நிறுவனம் பங்கின் வெளியீட்டு விலையை 70 ரூபாய் என்ற அளவில் நிர்ணயித்திருந்தது. இதன் பங்கு ஒன்றின் விலை தற்போது, 277 சதவீதம் அதிகரித்து, 264.35 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று, மிட்வேலி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், பங்கு ஒன்றை 70 ரூபாய்க்கு வெளியிட்டது. இதன் பங்கு ஒன்று தற்போது, 79 சதவீதம் உயர்ந்து 125.40 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேற்கண்ட நிறுவனங்கள் தவிர, லவ்வபிள் லிங்கிரி நிறுவனத்தின் பங்கு ஒன்று தற்போது, வெளியீட்டு விலையான, 205 ரூபாயை விட 58 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆஞ்சநேயாலைப்கேர் நிறுவனம், பங்கு ஒன்றை 234 ரூபாய்க்கு வெளியிட்டது. அதன் பங்கு ஒன்றின் விலை தற்போது, 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

சுடர் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை, வெளியீட்டு விலையான 77 ரூபாயை விட, 36 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலையும், வெளியீட்டு விலையான 175 ரூபாயை விட, 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது.இந்நிலையில், சிறப்பு வகை ரசாயனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், கேலக்ஸி சர்பாக்டன்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, போதிய அளவிற்கு ஆதரவு கிடைக்காததால், இந்நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டை திரும்ப பெற்றுக் கொண்டது.

மென்னிரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், வாஸ்வானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கியது. இந்நிலையில், இந்நிறுவனம், பங்கு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதாக புகார் வந்ததையடுத்து, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி', இந்நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்படுவதை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்