Saturday, June 27, 2009

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு : 11 ஆயிரம் தொட ரூ.48 தான் குறைவு

ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து சவரன் 10 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்றது. 11 ஆயிரம் ரூபாயை நெருங்க, இன்னும் 48 ரூபாய் தான் குறைவாக உள்ளது.
கடந்த மாதம் விலை குறைந்த ஆபரணத் தங்கம், தற்போது திருமண சீசன் என்பதால் கடந்த சில நாட்களாக ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 22ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,346 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 768 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 23ம் தேதி ஒரு கிராம் 1,346 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 768 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த 24ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,352 ரூபாயாக உயர்ந்தது. சவரன் தங்கம் 10 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 896 ரூபாய்க்கு உயர்ந்தது. நேற்று சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,369 ரூபாய்க்கு விற்றது. சவரன் 10 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்றது. 11 ஆயிரத்தை தொட இன்னும் 48 ரூபாய் தான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


ஜாகுவார், லேண்ட்ரோவரால் டாடா மோட்டார்ஸூக்கு நஷ்டம் ரூ.2,505 கோடி

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.2,505 கோடி நிகர நஷ்டம் அடைந்திருக்கிறது. இங்கிலாந்தின் சொகுசு கார் கம்பெனிகளான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரை கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 2.5 பில்லியன் டாலருக்கு டாடா மோட்டார்ஸ் வாங்கியதை அடுத்து, இந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களால் மட்டும் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.1,777 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. டாடா மோட்டார்ஸின் கைக்கு ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் வந்ததற்கு பின், அந்த இரு கார்களின் வருடாந்தர விற்பனை 32 சதவீதம் குறைந்து 1.67 லட்சமாகி இருக்கிறது. லேண்ட் ரோவரின் விற்பனை 1.98 லட்சத்தில் இருந்து 1.2 லட்சமாகவும், ஜாகுவாரின் விற்பனை 1,000 கார்கள் குறைந்து 47,000 ஆகவும் ஆகி விட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸ் வைஸ் சேர்மன் ரவி காந்த், கடந்த நிதி ஆண்டில் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரின் விற்பனை வட அமெரிக்காவில் 37 சதவீதமும் இங்கிலாந்தில் 31 சதவீதமும் குறைந்திருந்தது என்றார். ஆனால் இப்போது, அங்கு நிலைமை மாறி வருகிறது. விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்.
நன்றி : தினமலர்


உலகம் இதுவரை பார்த்திராத வகையில் மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்குமாம்

இளவரசி டயனாவுக்கு அடுத்ததாக, உலகம் இதுவரை பார்த்திராத வகையில், அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக, மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலம் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும், டி.வி.பார்வையாளர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இளவரசி டயனாவின் சவ ஊர்வலத்தில் தான் அதிகம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள. 12 வருடங்களுக்கு முன் இறந்த டயனாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள, சுமார் 2,50,000 பேர் ஹைடல் பார்க்கில் மட்டும் கூடி இருந்தார்கள். இது தவிர பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரஸ்லே 1977 ல் இறந்தபோது 75,000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள். ருடால்ப் வேலன்டினோ என்ற அமெரிக்க நடிகர் 1926 ல் இறந்தபோது 40,000 பேர் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலத்தில் டயனாவுக்கு அடுத்ததாக அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை மைக்கேல் ஜாக்ஸனின் சவ அடக்கத்தை குடும்ப நிகழ்ச்சியாக நடத்த தீர்மானித்தாலும் கூட ரசிகர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றும் என்கிறார்கள். மேலும் மைக்கேல் ஜாக்ஸன் ரகசியமாக முஸ்லிமாக மாறி விட்டார் என்றும் கூறப்படுகிறது. அப்படி அவர் முஸ்லீம் முறையில் அடக்கம் செய்யப்பட இருந்தால், இறந்த இரு நாட்களுக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டுமாம். அதற்கு வாய்ப்பு இல்லை. இன்னொரு செய்தியும் வெளிவருகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல், பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


பெங்களுருவில் இருந்த துபாய்க்கு தினசரி விமான சேவை : கிங்ஃபிஷர் இயக்குகிறது

Justify Fullபெங்களுருவில் இருந்து துபாய்க்கு தினசரி விமான சேவையை தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் இயக்குகிறது. ஏற்கனவே லண்டன், கொழும்பு, மற்றும் தாகா போன்ற சர்வதேச நகரங்களுக்கு விமான சேவையை நடத்திக்கொண்டிருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், இப்போது நான்காவதாக துபாய்க்கு சேவையை துவங்கியிருக்கிறது. இந்த பயணத்திற்காக ஏ320 ரக விமானம் பயன்படுத்தப்படும் என்றும் கிங்ஃபிஷர் கிளாஸ், பிரீமியம் எக்கனாமி போன்ற வகுப்புகள் அதில் இருக்கும் என்றும் அந்த கிங்ஃபிஷர் தெரிவித்திருக்கிறது. பெங்களுருவில் இருந்து தினமும் மாலை 6 : 15 க்கு புறப்படும் அந்த விமானம்,ற இரவு 8 : 55 க்கு ( அங்குள்ள நேரம் ) துபாய் சென்றடையும். அதேபோல் அங்கு இரவு 10 : 10 க்கு புறப்படும் அந்த விமானம், பெங்களுருவுக்கு அடுத்த நாள் அதிகாலை 3 : 45 க்கு வந்து சேரும் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்