Friday, May 29, 2009

பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் அபாரம்

இந்தியாவில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள், அவற்றின் தலைமை அலுவலகங்களை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. 2009ம் ஆண்டின் முதல் காலாண்டில், தாய் நிறுவனங்களை விட, இந்திய கிளைகளின் செயல்பாடுகளும், வருவாயும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், எப்.எம்.சி.ஜி., நிறுவனங்கள் வரை அவற்றின் வர்த்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின், வெளிநாட்டுக் கிளைகளை விட, இந்திய கிளைகளின் வர்த்தகம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சுவிஸ் சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இரண்டு இந்திய குழும நிறுவனங்களான ஹோல்சிம், ஏ.சி.சி., மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்கள், நான்காவது காலாண்டில் வருவாயை கணிசமாக அதிகரித்துள்ளன. இதில் ஹோல்சிம் நிறுவனம், இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்த வருவாயில் குறிப்பிடத்தக்க அளவு சரிவை சந்தித்துள்ளது.
தலைச்சிறந்த மருந்து பொருள் உற்பத்தி நிறுவனமான மெர்க் இந்தியாவின் லாபமும், முதல் மூன்று மாதங்களில் 47 சதவீதம் குறைந்துள்ளது. இதன் ஜெர்மன் நாட்டு தாய் நிறுவனத்தின் லாபம் 75 சதவீதம் குறைந்துள்ளது.
இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், முதல் நான்கு மாதங்களில் லாபத்தை அதிகரித்துள்ளது. ஆனால், இதன் தாய் நிறுவனத்தின் வருவாய் 40 சதவீதம் குறைந்துள்ளது. சுவிஸ் சிமென்ட் நிறுவனமாக ஹோல்சிம்மின் இரண்டு இந்திய குழும நிறுவனங்கள் ஏ.சி.சி., மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்களும் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டி உள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஏ.சி.சி., நிறுவனம், 399.34 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
நன்றி : தினமலர்


வட்டி விகிதத்தை குறைத்து வங்கிகள் நிதியுதவி தர வேண்டும் : நிதியமைச்சர் பிரணாப் யோசனை

'பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பொருளாதார சீர்திருத்தத்தை விரைவுபடுத்தவும், வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்து தாராளமான செயல் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும்' என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். பிரணாப் முகர்ஜி மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின் நடந்த முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஜூலை முதல் வாரம், 2009-10ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதிக நிதி தேவை மற்றும் அவை கிடைக்க அதிக வட்டி தர வேண்டிய நிலை போன்றவற்றால், தாழிற்சாலை மற்றும் வர்த்தகம் போன்றவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே, இது தொடர்பான முதல் நடவடிக்கையாக வங்கியாளர்களைச் சந்தித்து, கடன் வழங்கும் போது சற்று எளிமையான செயல் திட்டத்தைப் பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்ளப் போகிறேன். நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை முன்பிருந்த பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். கடன் வழங்குவதை அதிகப் படுத்தி, முதலீடுகளை அதிகரிக்காமல் இது சாத்தியமில்லை. இந்த நிலை, 2009-10ம் ஆண்டு வரை தொடர வேண்டியது அவசியம். அதே போல், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு நாட்டின் வருமானத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், பண மோசடிகளுக்கு எதிரான நடைமுறைகள் இந்த அரசால் கடுமையாக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்காக, கடந்த டிசம்பர், ஜனவரி மாதம் மற்றும் இடைக்கால பட்ஜெட்டில் அரசு அறிவித்த ஊக்க நிதிச் சலுகையால் என்னென்ன முன்னேற்றம் காணப் பட்டிருக்கிறது என்பதை அரசு ஆய்ந்து வருகிறது. மத்திய பட்ஜெட் உருவாக்கப்படும் போது, மேலும் எந்தவிதத்தில் நடவடிக்கை எடுத்தால், அது தொழில் துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதை உற்று நோக்கி செயல்படுத்தப்படும். அதனடிப் படையில், பல்வேறு நிபுணர்களிடம் ஆலோசனைகள் கேட்டு, அவர்களின் பரிந்துரைகளில் முக்கியமானவைகள் செயல் திட்டத்தில் சேர்க்கப்படும். நமக்கு வளர்ச்சியும், வேலைவாய்ப்பு அதிகரிப்பும் இன்று இன்றியமையாத தேவைகள். அதற்கு அதிக செலவு செய்யும் திட்டம் தேவை. அதற்கான நிதி கடனுதவியாகப் பெறப்படும். அடுத்த ஆண்டிலும் இந்த விஷயங்களுக்கான முன்னுரிமை தொடரும். பட்ஜெட்டில் பாமர மனிதனின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், அதில் உள்கட்டமைப்பு செலவினங்களும் வலியுறுத்தப்படும். இந்த பட்ஜெட்டில், அடுத்த ஐந்தாண்டிற்கான அரசின் நோக்கம் மற்றும் அணுகுமுறைகள் இடம் பெறும். ரிசர்வ் வங்கியின் தொடர் நடவடிக்கைகள் மூலம் அரசு பணப்புழக்கத்தை அதிகரிக்கும். இவ்வாறு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
நன்றி : தினமலர்


Wednesday, May 27, 2009

விளையாட்டு சேனலை துவக்குகிறது சோனி

சோனி நிறுவனம் விளையாட்டு சேனலை புதிதாக துவக்க உள்ளது.செய்தி, பொழுது போக்கு என எட்டு சேனல் களை தந்து கொண்டிருக்கும் சோனி நிறுவனம் புதிதாக விளையாட்டு சேனல்களை துவக்க முடிவு செய்துள்ளது. சோனி நிறுவனத்தின் 'செட் மேக்ஸ்' சேனல் மூலம் இதுவரை விளையாட்டு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப ஒன்பது ஆண்டு காலத்துக்கு சோனி நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இதே போல நியூசிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மற்றும் எப்.ஏ.,கோப்பை உள்ளிட்ட போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. தனியாக விளையாட்டு சேனலை துவக்கி, கால்பந்து, கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்யவும், அதன் மூலம் கணிசமான விளம்பரங்களை பெறவும் சோனி முடிவு செய்துள்ளது.இது குறித்து இந்நிறுவன நிர்வாக அதிகாரி என்.பி.சிங் குறிப்பிடுகையில், ' இந்த ஆண்டு இறுதிக்குள் விளையாட்டு சேனலை துவக்க உள்ளோம். தென் மாநிலங்களில் அந்தந்த மொழி சேனல்களை துவக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
நன்றி : தினமலர்


Sunday, May 24, 2009

எச்.சி.எல்., நிறுவனத்துக்கு 'எம் டிவி' ஆர்டர்

பிரபல 'எம் டிவி' நிறுவனத்தின் ஆர்டர்களை எச்.சி.எல்., நிறுவனம் பெற்றுள்ளது. இது குறித்து எச்.சி.எல்., நிறுவன இயக்குனர் ஸ்ரீராம சீனிவாசன் குறிப்பிடுகையில், 'டிவி' மற்றும் இன்டெர்நெட் மூலம் 'எம் டிவி' நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன. இனி ஆன்-லைன் மூலம் 'எம் டிவி' மற்றும் இதனுடைய மற்ற சேனல்களான வி.எச்1, காமடி சென்ட்ரல், நிக்லோடியான் போன்றவற்றை பார்ப்பதற்கு வசதியான தொழில் நுட்பத்தை உருவாக்குவதற்கு எச்.சி.எல்., நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது' என்றார். எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினித் நாயர் குறிப்பிடுகையில், 'அவுட் சோர்சிங் சேவைக்காக எச்.சி.எல்., நிறுவனத்துக்கு நிறைய ஆர்டர்கள் குவிகின்றன. பிரபல 'ரீடர் டைஜஸ்ட்' நிறுவனத்துக்கான அவுட் சோர்சிங் பணிக்கு 1,500 கோடி ரூபாய்க்கான ஆர்டர் கிடைத்துள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்


பங்குச்சந்தையை நிமிர வைக்குமா புதிய அரசின் செயல்பாடுகள்?

வியாழன் அன்று சந்தையில் லாபம் பார்ப்பவர்கள் ஓரமாகக் கொண்டு சென்று விட்டனர். ஆதலால், சந்தை ஆட்டத்திலேயே இருந்தாலும் மேலேயே வரமுடியாததாகி விட்டது. மும்பை பங்குச் சந்தை 324 புள்ளிகளை இழந்து 14,000க்கும் கீழேயும் சென்றது. சந்தை ஏறுகின்றதே என்று வாங்கியவர்கள் எல்லாம் சிறிது பயந்தது என்னவோ உண்மை தான். வெள்ளியன்று சந்தை ஆரம்பத் தில் நஷ்டத்திலேயே துவங்கினாலும், நமக்கு பின் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் ஜம்மென மேலேயே துவங்கியதால், இந்திய சந்தைகளிலும் வசந்தம் வீசத் துவங்கியது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 150 புள்ளிகள் கூடி 13,887 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 27 புள்ளிகள் கூடி 4,238 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சென்ற வாரம் வரை 12,000த்திலேயே தத்தளித்துக் கொண்டிருந்த நாம் இது வரை வந்தது கையின் மேஜிக் தான்.
பணவீக்கம்: பணவீக்கம் சிறிது வீக்கமாகத் தான் இருக்கிறது. சிறிதளவு கூடியிருக்கிறது. சென்ற வாரம் 0.48 சதவீதமாக இருந்தது இந்த வாரம் 0.61 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டில் 4 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்சூரன்சின் புதிய வெளியீடு: இன்சூரன்ஸ் கம்பெனிகள் எல்லாம் தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டு வரும் தருணம் இது. ஐ.சி.ஐ.சி.ஐ., லோம்பார்ட் இன்சூரன்ஸ் கம்பெனியா அல்லது வேறு ஏதாவது கம்பெனியா? முதலில் வெளியீடைக் கொண்டு வருவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது ரிலையன்ஸ் வர முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்கின்றனர். பல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருப்பதால் அவர்களுக்கு சந்தை மேலே செல்வது ஒரு வாய்ப்பு தான்; முதலீட்டாளர்களுக்கும் தான்.
கச்சா எண்ணெய்: தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 60 டாலர் அளவில் இருப்பதால், அரசு மானியங்களை நிறுத்திவிட்டு ஏன் மார்க்கெட் விலையை நிர்ணயித்து விற்கச் சொல்லக்கூடாது என்ற எண்ணங்கள் இருந்து வருகிறது. அப்படி வரும் பட்சத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை கூடும். எண்ணெய் கம்பெனிகளும் லாபம் பார்க்க வேண்டுமே? அமைச்சர்களின் துறைகளும் சந்தையும்: சந்தை புதிய அமைச்சரவையில் யார் யார் அமைச்சராக வரப்போகின்றனர் என்ற யூகங்கள் பலவாறாக இருக்கிறது. குறிப்பாக எரிசக்தி, போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகளைப் பற்றி. இந்த துறைகளில் வரும் ஐந்து ஆண்டுகளில் பல திட்டங்கள் நடைபெற இருப்பதால் யூகங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக மட்டும் அரசு உடனடியாக 57,000 கோடி ரூபாய் வரை செலவிடவுள்ளது. நல்ல சாலை வசதிகள் நாட்டிற்கு பல மேம்பாடுகளைப் பெற்றுத் தரும் என்பது யாருக்கும் சந்தேகம் இல்லை.
2003ம் ஆண்டும் பங்குச் சந்தையும்: கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் பங்குச் சந்தை 3000 புள்ளிகளில் தான் இருந்தது என்றால் நம்ப முடியுமா? ஆமாம். அதுதான் உண்மை. உயர்ந்து கொண்டே வந்து 2008ம் ஆண்டு அதே பங்குச் சந்தை ஜனவரி 10ம் தேதி 21,207 புள்ளிகளை அடைந்தது. அதாவது ஆறு மடங்கு லாபங்கள், ஐந்தாண்டுகளுக்குள். அதன் பிறகு வந்த சுனாமி தான் பலருக்கு தெரியும். பங்குச் சந்தை நார்நாராகக் கிழித்துச் சென்றது. கிழிந்த சந்தை மறுபடி மேலே வர முயற்சிக்கிறது. 8,000 அளவிற்கும் சென்ற சந்தை தற்போது 14,000 அளவுகளில் நிற்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. சந்தையை தொடர்ந்து கவனித்து வர வேண்டும். எப்போதெல்லாம் குறைகிறதோ அந்த சமயத்தில் நல்ல பங்குகளை வாங்கி கணக்கில் சேர்க்க வேண்டும். அது தான் புத்திசாலித்தனம். தினசரி லாப நஷ்டங்கள் பார்த்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கக்கூடாது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை ஏற்றமும் இறக்கமாகவே இருக்கும். 100 நாட்களுக்குள் பட்ஜெட் மற்றும் அரசாங்கத்தின் பல அறிவிப்புகள் ஆகியவை வரலாம். அவை சந்தை உயர்த்தும். சந்தை வருங்காலங்களில் மேலே செல்லவே வாய்ப்புகள் அதிகம். எல்லா இறக்கத்திலும் சிறிது சிறிதாக நல்ல பங்குகளில் முதலீடு செய்யுங்கள், நீண்ட நாட்கள் கழித்துப் பாருங்கள். அது உங்களை வளர்ச்சியடைய வைத்திருக்கும். அதை விட்டு விட்டு இன்று, நாளை ஏறியிருக்கிறதா என்று பார்க்காதீர்கள்; இறங்கினாலும் வருத்தப்படாதீர்கள்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


Saturday, May 23, 2009

ஆறு மாதங்களில் பொருளாதார நிலை சீராகும்: ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை

'அடுத்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதார நிலைமை சீராகும்' என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தெரிவித்தார். மும்பையில் நிதித்துறை நிர்வாக உச்சி மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற அவர் பேசியதாவது: உலகச் சந்தையில் அமைதி திரும்புகிறது, நாம் எடுத்திருக்கும் நிதித்துறை நடவடிக்கைகளும் பலன் தரத் துவங்கியிருக்கின்றன. மெர்சண்டைஸ் ஏற்றுமதி அளவு இந்தியாவைப் பொறுத்தளவில் குறைவு. அது இழப்பீட்டைக் குறைத்திருக்கிறது. வசதியான அன்னியச் செலாவணி, பணவீக்கம் அதிகரிக்காத போக்கு ஆகியவை நமக்குச் சாதகமான அம்சங்கள். இவை எல்லாம் சேர்ந்து பொருளாதார மந்த நிலையை அகற்றும்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்ற பாதிக்கப்பட்ட நாடுகளை ஒப்பிடும் போது அதிக வலி ஏற்படாத செயலாக அமைந்தது. அடுத்து வரும் 2009-2010ம் ஆண்டுகளில் மொத்த வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். உலகச் சந்தை நிலவரங்களைப் பார்த்தால் இன்னமும் அபாயம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஏற்கனவே அளிக்கப்பட்ட ஊக்குவிப்புகளை வைத்து நாம் எப்படிச் செயல்படுகிறமோ, அதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.
உலக நாடுகளில், தொழில்துறை தேக்கம் ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், திருப்பிச் செலுத்தப்படாத கடன் வங்கிகளில், தேக்கம் அதிகமாக வாய்ப்பு உண்டு. ஆனால், பெரிய அளவு நடைமுறைப் பாதிப்பை ஏற்படுத்தி விடாது.
அதே சமயம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, அதைத் தொடர்ந்து நிதி ஊக்குவிப்புச் சலுகைகள் அளித்த செயல் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியது என்று எல்லாம் சேர்ந்து கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவித்திருக்கிறது. இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்


Thursday, May 21, 2009

இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் 83 சதவீதம் குறைந்திருக்கிறது

பொருளாதார மந்த நிலை காரணமாகவும், கடுமையான விலை ஏற்றத்தாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருந்ததாலும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் 83 சதவீதம் குறைந்திருக்கிறது. வேர்ல்டு கோல்ட் கவுன்சில் ( டபிள்யூ.சி.சி.,) இந்த தகவலை தெரிவித்திருக்கிறது. உலகில் அதிகம் தங்கத்தை பயன்படுத்தும் நாடான இந்தியாவில், 2009 ஜனவரி - மார்ச் காலத்தில், தங்கத்தின் விலை 11 சதவீதம் உயர்ந்திருக் கிறது. அதிகபட்சமாக பிப்ரவரி 20 ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.16,040 ஆக இருந்தது. இதன் காரணமாக அந்த மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 83 சதவீதம் குறைந்து 17.7 டன்னாகி விட்டது. இதனால் அந்த மூன்று மாத காலத்தில் 1.7 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக் கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 62 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இப்போதுள்ள நிலையில் தங்கத்திற்கான டிமாண்ட் இன்னும் சாதகமான நிலைக்கு வரவில்லை என்றாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஆசை போகவில்லை என்று சொன்ன வேர்ல்டு கோல்ட் கவுன்சிலின் சி.இ.ஓ.,அரம் சிஸ்மணியன், மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிக்க அதிகரிக்க மீண்டும் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் தங்கத்தின் தேவை 83 சதவீதம் குறைந்திருந்த அதே மூன்று மாத காலத்தில், உலக அளவில் தங்கத்திற்கான தேவை 38 சதவீதம் அதிகரித்து 1,016 டன் ஆகி இருக்கிறது. எளிதில் மாற்றத்தக்க முதலீடு என்பதால் தங்கத்தின் மீது அவர்களது முதலீடு அதிகரித்ததே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


பணவீக்கம் சிறிது அதிகரித்தது

மே 9 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 0.61 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 0.48 சதவீதமாகத்தான் இருந்தது. தானியங்கள், இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெய், சுகர், வாசனைப்பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்திருப்ப தால் பணவீக்கம் உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் தேங்காய் எண்ணெய், மைதா, உப்பு, ஆட்டா ஆகியவைகளின் விலை குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப் படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடம் இதே கால கட்டத்தில் 8.57 சதவீதமாக இருந்தது.

நன்றி : தினமலர்