Wednesday, December 10, 2008

கார்களின் விலை ரூ.76,000 வரை குறைகிறது

கார் பாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த எஸ்சைஸ் டூட்டியில் 4 சதவீதத்தை குறைப்பதாக மத்திய அரசு ஞாயிறு அன்று அறிவித்ததையடுத்து, கார்களின் விலையை ரூ.6,000 இலிருந்து ரூ.76,000 வரை குறைக்கப்படுவதாக கார் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். மாருதி சுசுகி 800 இன் விலையை ரூ.6,000 குறைக்கப்படுவதாக அந்த கம்பெனி அறிவித்திருக்கிறது. அதன் எஸ்.எக்ஸ்.4 மற்றும் டிசையர் மாடலின் விலை ரூ.20,000 குறைகிறது. ஆல்டோ, வேகன் ஆர், மற்றும் ஜென் ஆகிய மாடல்கள் ரூ.9,000 முதல் ரூ.17,000 வரை குறைகிறது. சமீபத்தில் வெளிவந்த ஸ்டார் மாடலின் விலையும் குறைக்கப்படுகிறது. மத்திய அரசு சென்வாட்டை 4 சதவீதம் குறைத்திருப்பதால் கமர்சியல் வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் விலை குறையும் என்று மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் பர்கவா தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் கார்களின் விலையை ரூ.8,000 முதல் ரூ.22,000 வரை குறைக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் ரூ.8,800 முதல் ரூ.44,700 வரை விலையை குறைக்கிறது. மாடல்களை பொருத்து விலை குறைக்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் வைஸ் பிரசிடென்ட் அர்விந்த சேக்ஸ்சேனா தெரிவித்தார். டொயோட்டா கார்களின் விலை ரூ.33,000 முதல் ரூ.76,000 வரை குறைக்கப்படுகிறது. மிட்சுபிஷியின் விலை ரூ.25,000 குறைகிறது.கமர்சியல் வாகன தயாரிப்பாளரான அசோக் லேலாண்ட், அதன் டிரக் விலையை ரூ.32,000 இலிருந்து ரூ.35,000 வரை குறைக்கிறது. இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் விரைவில் விலை குறைப்பை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


8,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குகிறது சோனி

பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான சோனி, அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதத்தினரை ( 8,000 பேர் ) குறைக்க திட்டமிட்டிருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சோனி, இதன் மூலம் 1.1 பில்லியன் டாலர்களை ( சுமார் 5,390 கோடி ரூபாய் ) மிச்சப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. மோசமான நிலையில் இருக்கும் அதன் எலக்ட்ரானிக் துறையில்தான் ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள். உலக அளவில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, ஆசிய நிறுவனம் ஒன்று 8,000 ஊயியர்களை வேலையில் இருந்து நீக்குவது இதுவே முதல்முறை என்கிறார்கள். போர்டபில் மியூசிக் துறையில் ஆப்பில் ' ஐபாட் ' உடன் போட்டி போட முடியாமல் பின்தங்கிய சோனி, ஃபிளாட் பேனல் டி.வி. விற்பனையிலும் பின்தங்கி விட்டது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட சோனி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் 70 சதவீதம் குறைந்திருக்கிறது. இப்போது சோனி 8,000 பேரை வேலையில் இருந்து அனுப்பினாலும் உலகம் முழுவதும் இருக்கும் அதன் நிறுவனங்களில் 1,86,000 ஊழியர்கள் வேலையில் இருப்பார்கள். ஊழியர்கள் எண்ணிக்கையில் 4 சதவீதத்தை குறைப்பதன் மூலம், அதன் 57 தயாரிப்பு கூடத்தில் 30 சதவீத தயாரிப்பை குறைக்க சோனி முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஜப்பான் பொருளாதாரம்

இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கையை பார்த்ததும் ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது நன்றாக தெரிந்து விடும். அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பானில், எதிர்பார்த்ததை விட பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் பொருட்களுக்கு உலக அளவில் டிமாண்ட் குறைந்து விட்டதாலும் அந்நாட்டு கரன்சியான யென் னின் மதிப்பு பெருமளவு உயர்ந்து விட்டதாலும் நிறைய தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. நிறைய ஊழியர்கள் லே - ஆப் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டு பொருளாதாரம் மோசமாகிக் கொண்டுதான் வந்திருக்கிறது. அங்குள்ள பல சிறிய கம்பெனிகள் ஒவ்வொன்றாக திவாலாகிக்கொண்டிருக்கின்றன. சோனி, டொயோட்டா போன்ற நிறுவனங்கள் கடும் நிதி சிக்கலில் திணறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள். இப்போதைக்கு பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பெல்லாம் எப்போது ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பதுதான்.
நன்றி : தினமலர்