Sunday, August 16, 2009

கவனமாக இருக்க வேண்டிய நேரம்*தள்ளாடுகிறது பங்குச் சந்தை

கீழே செல்லும் என்று எதிர்பார்க் கப்பட்ட சந்தை வியாழன் அன்று மேலே சென்று எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஐரோப்பாவில் நிலைமை சீராகி வருகிறது என்று வந்த அறிவிப்புகளும், இந்தியாவில் வருமான வரி சீர்திருத்தங்கள் பற்றி வந்த அறிவிப்புகளும் தான் சந்தையை பெரிய அளவில் நிமிரச் செய்தது.
ஏன் கூடியது? வருமான வரிச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை 2011ம் ஆண்டு முதல் கொண்டு வர முடிவு செய்து, அது குறித்த தகவல்கள் வியாழனன்று வெளிவந்தன. ஒரு பக்கம் வருமான வரிகளைக் குறைத்தாலும், மறுபக்கம் வரிகள் கூடுவதற்காக இதுவரை வருமான வரிக்கு கீழ் வராதவைகளும் உட்படுத்தப்பட உள்ளன. இருப்பினும், தற்சமயம் வெளிவந்த தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, வரிப்பளு 2011ம் ஆண்டு முதல் குறைக்கப்படவுள்ளன என்று தெரிவதால், சந்தை அதை நன்கு வரவேற்றது.வெள்ளியன்று முதலீட்டாளர்கள் லாப நோக்குடனே செயல்பட்டனர். அமெரிக்காவில் சில்லரை விற்பனைகள் குறைந்துள்ளதாக வந்த தகவல்களை அடுத்து, சாப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகள் விலை குறைந்தன.வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தை 106 புள்ளிகள் குறைந்து, 15,411 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 24 புள்ளிகள் குறைந்து, 4,580 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
ஆயில் இந்தியாவின் புதிய வெளியீடு சப்ஸ்கிரிப்ஷன்:என்.எச்.பி.சி.,யின் புதிய வெளியீடு அபரிமிதமாகச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆயில் இந்தியாவின் வெளியீடு செப்., 7ம் தேதி முதல் வரவுள்ளது.
இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை; 1000 முதல் 1,100 ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போடத் தகுந்த வெளியீடு.அதானி வெளியீட்டின் பங்கீடு வந்துவிட்டது; விரைவில் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். ராஜ் ஆயில் மில் வெளியீடு எதிர்பார்த்தது போல, லிஸ்டிங்கில் பெரிய லாபம் கிடைக்கவில்லை. முதல் நாள் சிறிது நஷ்டத்திலேயே முடிவடைந்தது.
குறையும் வீட்டுக்கடன் வட்டி:ஸ்டேட் பாங்கைத் தொடர்ந்து வங்கிகள் பலவும், வீட்டுக் கடனுக் கான வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன. எச்.டி.எப்.சி., நிறுவனம் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரையுள்ள வீட்டுக் கடன்களுக்கான வட்டியை, அரை சதவீதம் குறைத்துள்ளது. இது தவிர, வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்க, 20 லட்சம் ரூபாய்க்குள் பட்ஜெட் வீடுகள் பல இடங்களில் பல நிறுவனங்களால் கட்டப்பட்டு வருகின்றன.
விமானக் கட்டணம் குறையுமா?:விமான எரிபொருள் விலைகள் குறைப்பது பற்றி யோசிக்கப்படும் என்ற தகவல்கள் வர ஆரம்பித்தவுடன், விமானக் கம்பெனிகளின் பங்குகள் வெள்ளியன்று சர்ரென்று உயரத் துவங்கின.
பணவீக்கம்:பணவீக்கம் இன்னும் மைனசில் தான் இருக்கிறது. சென்ற வாரத்தை விட சிறிது கூடவே இருக்கிறது. பணவீக்கம் இந்த வாரம் 1.74 சதவீதம் மைனசில் இருந்தது. இது, கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் குறைந்த அளவு.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?பருவ மழை இன்னும் தேவையான அளவு கிடைக்கவில்லை என்றாலும், சமீபத்திய அறிவிப்புகளாலும், உலகளவில் ஏற்படும் முன்னேற்றங்களாலும், சந்தை சிறிது நிமிர்ந்து நிற்கிறது. இருப்பினும், சிறிது கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்