Tuesday, July 29, 2008

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : பேங்க் பங்குகள் 8 சதவீதம் வீழ்ந்தது


ரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கையின் முதல் காலாண்டு மதிப்பீடு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதமும், சி ஆர் ஆர் எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு பண விகிதத்தை 0.25 சதவீதமும் உயர்த்தியதை அடுத்து இன்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் சராசரியாக 8 சதவீதம் சரிந்தன. மாலை 3 மணி அளவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 546.58 புள்ளிகள் குறைந்து 13,802.53 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 140.05 புள்ளிகள் குறைந்து 4,192.05 புள்ளிகளாக இருந்தது. ஐ சி ஐ சி ஐ. 8.19 சதவீதம், ஹெச் டி எஃப் சி. 9.27 சதவீதம், பேங்க் ஆஃப் இந்தியா 12.70 சதவீதம், இந்தியன் பேங்க் 13.80 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 11.53 சதவீதம் குறைந்திருந்தது.


நன்றி : தினமலர்


ரெபோ ரேட், சி ஆர் ஆர்., உயர்த்தப்பட்டது : ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை


வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதம் உயர்த்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. அதே போல் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பையும் ( சி ஆர் ஆர் ) 0.25 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. நிதி கொள்கை குறித்து ரிசர்வ் வங்கி இன்று கூட்டிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரெட்டி தெரிவித்தார். பணவீக்கத்தை குறைக்கவே நாங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதற்காகத்தான் ரெபோ ரேட் மற்றும் சி ஆர் ஆர் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார் ரெட்டி. சி ஆர் ஆர்., ஆகஸ்ட் 30ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. பணவீக்கம் விரைவில் 5 சதவீதத்திற்கு குறைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை காரணமாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் சரிந்தன. 14 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போனது. பொதுவாக வங்கிகளின் பங்குகள் அதிகம் சரிந்து விட்டன. பகல் 12.04க்கு சென்செக்ஸ் 431.11 புள்ளிகள் குறைந்து 13,918.00 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 114.90 புள்ளிகள் குறைந்து 4,217.20 புள்ளிகளாக இருந்தது.

நன்றி : தினமலர்


2008ல் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க ஹூண்டாய் இந்தியா முடிவு


ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2008ம் ஆண்டில் அதன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க திட்டமிட்டிருக்கிறது. 2007ல் 1.26 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்திருந்த அந்த நிறுவனம் 2008ல் 2.4 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறது. மேலும் 2013ல் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை இங்கு முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. ஹூண்டாய் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் கம்பெனியாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் 45 சதவீதம் ஏற்றுமதி மூலம் நடக்கிறது. இது 2007ம் ஆண்டு 38 சதவீதமாகத்தான் இருந்தது. 2012 - 13ல் நாங்கள் இங்கு 250 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம். இதன் மூலம் எங்களின் மொத்த முதலீடு ஒரு பில்லியன் டாலரை தாண்டிவிடும் என்று ஹூண்டாய் நிறுவன செய்தி தொடர்பாளர் ராஜிவ் மித்ரா தெரிவித்தார். ஏற்கனவே நாங்கள் இங்கு 733 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்திருக்கிறோம் என்றார் அவர். இந்த வருடத்தில் நாங்கள் 2.4 லட்சம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதில் சுமார் 1.5 லட்சம் கார்கள் சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்களாக இருக்கும் என்றும் மற்றவை கெட்ஸ் மற்றும் ஆக்ஸன்ட் மாடல்களாக இருக்கும் என்றும் மித்ரா தெரிவித்தார். ஏற்கனவே எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ஐ10 கார்களுக்கு ஆர்டர் இருக்கிறது என்று சொன்ன மித்ரா, நாங்கள் இங்கிருந்து சுமார் 95 நாடுகளுக்கு எங்களது கார்களை ஏற்றுமதி செய்கிறோம் என்றார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக சேர்த்து இந்த வருடத்தில் நாங்கள் 5.3 லட்சம் கார்களை விற்க திட்டமிட்டிருக்கிறோம். இது 2007 விற்பனையான 3.37 லட்சம் கார்களை விட 60 சதவீதம் அதிகம் என்றும் மித்ரா தெரிவித்தார்.

நன்றி : தினமலர்